கொரோனாவுக்கு முடிவு கட்டுமா இலங்கை?

போக்குவரத்து, தொடர்பாடல் வசதிகளால் இன்றைய உலகம் சுருங்கி விட்டுள்ள நிலையில் இந்த நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தவதற்கான வழிமுறைகள் தெரியாமல், நாடுகளின் அரசாங்கங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

பொருளாதார ரீதியாக வல்லமை வாய்ந்த அரசாங்கங்கள் கூட, என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.

சீனர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் தான் இந்த நோய்க் கிருமி உருவாகக் காரணம் என்று, மேற்குலக நிபுணர்கள் கூறிக் கொண்டிருந்த நிலையில், இது அமெரிக்க இராணுவத்தின் சதி வேலை என்றும் அவர்களே, சீனாவில் இந்த நோயைப் பரப்பியதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லிஜியன் சாவோ பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

சீனாவில் தான் இந்த நோய் விருத்தியடைந்து ஏனைய நாடுகளுக்குப் பரவத் தொடங்கியிருந்தது. எனினும் சீனா இதனைக் கட்டுப்படுத்தி விட்டதாகக் கூறுகிறது.

இந்த நோய்ப் பரம்பலைக் கட்டப்படுத்த, சீனா கொடூரமான வழிமுறைகளைப் பின்பற்றியதாகக் குற்றச்சாட்டுகள் பல இருந்தாலும், தற்போதைய நிலையில் இந்த நோய் பரவுவதைக் கணிசமாகக் கட்டுப்படுத்துவதில் சீனா வெற்றி கண்டிருக்கிறது.

இந்த நோய் எங்கிருந்து, எப்படி, யாரால் தோன்றியது என்ற விவாதங்களைக் கடந்து, இந்த நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளில் தான் உலகம் மூழ்கியிருக்கிறது.

ஏனென்றால், இந்த நோய் கிட்டத்தட்ட உலகில் வாழுகின்ற பெரும்பாலான மக்கள் மத்தியில் மரண பயணத்தை தோற்றுவித்து விட்டது.

இப்போதுள்ளதைப் போன்ற நிலை தொடருமானால், மனித குலம் அழிந்து விடுமோ என்று பலரும் சிந்திக்கின்ற நிலை உருவாகியிருக்கிறது.

நவீன மருத்துவம், தொழில்நுட்ப வசதிகளால் மனிதன் தனது சராசரி ஆயுட்காலத்தை அதிகரித்துக் கொண்டதாக நம்பிக் கொண்டிருந்த நிலையில் தான், கொரோனா என்ற வைரஸ் அனைத்து மக்களுக்கும் மரணத்தின் வாயிலைத் திறந்து காட்டியிருக்கிறது.

அரசனும் ஆண்டியும் பயந்து நடுங்குகின்ற நிலை, மிகநீண்ட காலத்துக்குப் பின்னர் தோன்றியிருக்கிறது.

தற்போதைய உலகில் வாழுகின்ற எவரும், இப்போது உலகம் எதிர்கொள்வதைப் போன்ற பீதியை, பயத்தை, நோய் அச்சுறுத்தலை எதிர்கொண்டதில்லை.

கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் மிகமோசமான போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. கொடூரமான இனப்படுகொலைகள், மனிதப் பேரழிவுகள், அவலங்கள், பட்டினிச் சாவுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இவை உலகம் முழுமைக்குமான அச்சுறுத்தலாக இருக்கவில்லை.

முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் பரவலாக இடம்பெற்றிருந்தும், போரில் நேரடியாகப் பங்கேற்காத பல நாடுகளின் மக்கள், எதைப் பற்றிய அச்சமும் இன்றிக் கழித்திருக்கிறார்கள்.

அப்போதைய தொடர்பாடல் வசதிக் குறைவும் அவர்கள் மத்தியில் பயம், பீதி தொற்றிக் கொள்வதைத் தவிர்த்திருந்தது. இப்போது. எந்த நாடும் கொரோனா அச்சத்தில் இருந்து விடுபடவில்லை. கொரோனா தொற்று ஏற்படாத நாடுகள் கூட, அச்சத்தில் மிரண்டு கொண்டிருக்கின்றன.

ஏனென்றால், யாராவது ஒருவர் தெரியாமல் உள்நுழைந்து விட்டால் கூட, அவர் நோயைப் பரப்பி விடக்கூடிய ஆபத்து உள்ளது. கடந்த வாரத்துக்கு முந்திய வாரம் வரை, இலங்கை பாதுகாப்பான நாடு என்று மார்தட்டிக் கொண்டிருந்த நிலைமை இருந்தது. கடந்த வாரம், அந்த நிலை திடீரென மாறியது. இந்த வாரம், அது மோசமான நிலைக்குச் சென்று விட்டது.

இலங்கையில் எத்தனை பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்ற எண்ணிக்கை, நாளுக்கு நாள் என்பதை விட, நேரத்துக்கு நேரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், அரசாங்கம் எடுக்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போதுமானவை என்று கூறமுடியாது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், கொரோனாவைக் கையாளுவதை, பிரகடனப்படுத்தப்படாத ஒரு போராகவே முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

இராணுவத் தளபதியின் தலைமையில், கொரோனா தடுப்புக்கான செயலணி அமைக்கப்பட்டிருக்கிறது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்கு உள்ளாகாதவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே இராணுவ ஆட்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட நாடு, இப்போது கிட்டத்தட்ட இராணுவப் பிடிக்குள் சென்று கொண்டிருக்கிறது.

இதை விரும்பியோ விரும்பாமலோ, ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இராணுவ ஆட்சி பீதியை விட, கொரோனா பீதி அவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது என்பது, எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது.

அரசாங்க மருத்துவர்கள் சங்கமும் வேறு பல துறை சார் நிபுணர்களும், நாடு முழுவதையும் முடக்கி, தனிமைப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அதே கோரிக்கையை விடுத்திருந்தார். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அதற்கு உடன்படவில்லை.

செவ்வாய்க்கிழமை (17) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், புலிகளுக்கு எதிரான போர்க் காலத்திலேயே நாட்டை முடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றும், நிலைமைகளைக் கையாண்டதாகவும் கொரோனாவுக்காக நாட்டைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

சில அமைச்சர்கள், நாட்டை முடக்கித் தனிமைப்படுத்தும் யோசனைகள் குறித்து அரசாங்கம் ஆராய்வதாகக் கூறியிருந்த போதும், அவ்வாறான முடிவுக்குச் செல்லப் போவதில்லை என்று ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால், இந்தப் பத்தி வெளியாகின்ற போது, ஜனாதிபதி எவ்வாறான முடிவை எடுத்திருக்கிறார் என்று கணிக்க முடியாது. ஏனென்றால், நாளுக்கு நாள் நிலைமைகள் மோசமடைகின்றன; நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில், நாட்டை முடக்கும் யோசனையைச் செயற்படுத்த முடியாது என்ற பிடிவாதத்தில் அரசாங்கம் இருக்க முடியாது. அதேவேளை, அரசாங்கம் தேர்தலை நடத்துவதிலும் உறுதியாக இருப்பதாகக் கூறியிருக்கிறது.

தேர்தலைக் குழப்பாமலும், மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தாத வகையிலும் நடந்து கொள்வதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க முனைகிறது.

நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்கினால், சாதாரண மக்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகி விடும். அவர்களின் அடுத்த வேளைக்கான உணவு, ஏனைய அடிப்படை வசதிகளைப் பெற முடியாமல் போகும்.

அது மிகப்பெரிய மனிதப் பேரவலங்களுக்கு வழிகோலும். அவ்வாறான நிலை ஏற்பட்டால், அது அரசாங்கத்துக்குப் பெரும் அவமானத்தையும் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

எனவே தான், ஐரோப்பிய நாடுகள் பல எடுத்துள்ளதைப் போன்று, நாட்டை முடக்கி வைக்கும் முடிவை எடுப்பதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பின்னடிக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்கி வைத்து, தனிமைப்படுத்துவதன் மூலம், கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தி விடலாம் என்பது, சாத்தியமானதொரு வழிமுறையாக இருக்கலாம்.

ஆனால், அது நிரந்தரமான தீர்வாக இருக்க முடியாது. ஏனென்றால், அதற்குப் பின்னரும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு, அனைவரையும் தனிமைப்படுத்தி வைத்திருக்கக் கூடிய வசதிகளும் இலங்கை அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை.

இன்னொரு சிக்கலும் எழுந்திருக்கிறது. சுகதேகிகளாக, தொற்று இல்லாதவர்களாக நாட்டுக்குள் பிரவேசிக்கின்றவர்கள், தனிமைப்படுத்தல் முகாம்களுக்குள் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பும் சூழலும் ஏற்படுகிறது.

கொரோனா காவிகள் மத்தியில் தனிமைப்படுத்தப்படுபவர்கள், இலகுவில் அந்தக் கிருமிகளின் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். தனிமைப்படுத்தல் முகாம்களும் கூட, இப்போது அச்சுறுத்தலுக்கு உரியவையாகத் தான் இருக்கின்றன.

பதின்னான்கு நாள்கள் தனிமைப்படுத்தலின் மூலம், வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுடன் வருபவர்களைத் தான் அடையாளம் காண முடியுமே தவிர, தனிமைப்படுத்தல் முகாம்களில் தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிய, அதற்கும் மேற்பட்ட நாள்கள் தேவைப்படும்.

தனிமைப்படுத்தல் நாள்களின் பிற்பகுதியில், முகாம்களில் தொற்றுக்கு உள்ளானவர்கள் வெளியே சுதந்திரமாக நடமாடக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

எனவே, தனிமைப்படுத்தல், நாட்டை முடக்குதல் என்பன, இந்த ஆபத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முழுமையான வழிமுறைகளாக இருக்கப் போவதில்லை. மனிதனுக்கு மரணத்தின் வாசத்தை நுகர வைத்திருக்கின்ற இந்த கொரோனா பீதி, இலங்கையில் இருந்து இப்போதைக்கு ஓயப் போவதில்லை.

ஏனென்றால், வெளிநாடுகளில் தங்கியிருக்கின்ற பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளுக்கு, கொரோனாவைக் கட்டுப்படுத்துதல் என்பது கடினமான சவாலான காரியம் தான்.