கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்? மீண்டும் காட்டுமிராண்டி நிலைக்கே செல்வோமா?

பிரிட்டனிலிருந்து இதை நான் எழுதுகிறேன். இங்கே எனக்கு சுயவேலைவாய்ப்பு தேடிக்கொண்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அடுத்த பல மாதங்களுக்கு தங்களுக்கு வருமானம் இருக்காது என்ற நிலையை அவர்களால் பார்க்க முடிகிறது. பல நண்பர்கள் வேலையை இழந்துவிட்டனர். தற்போது எனக்கு என் ஊதியத்தில் 80 சதவீதத்தைத் தரும் இந்த வேலை ஒப்பந்தம் வரும் டிசம்பரில் முடிகிறது. கொரோனா வைரஸ் பொருளாதாரத்தை மோசமாகப் பாதிக்கிறது. எனக்குத் தேவை எனும்போது எனக்கு வேலை கிடைக்குமா?

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதற்குப் பலவித சாத்தியங்கள் உள்ளன. கொரோனா வைரசையும், அதன் பொருளாதாரப் பின் விளைவுகளையும் அரசுகளும், சமூகங்களும் எப்படிக் கையாளப் போகின்றன என்பதைப் பொறுத்தே எதிர்காலம் செல்லும் பாதை அமைந்திருக்கும். இந்த சிக்கலை மறுகட்டுமானம் செய்யவும், மேம்பட்ட, மனிதத்தன்மை கொண்ட விஷயங்களை உருவாக்கவும் நாம் பயன்படுத்திக் கொள்வோம் என்று நம்பலாம். ஆனால், இதைவிட மோசமான நிலைமைக்கு நாம் சரியவும் வாய்ப்பிருக்கிறது.

பிற சிக்கல்களை உற்று நோக்குவதன் மூலம் நம்முடைய சூழ்நிலையை, நம் எதிர்காலத்தை நாம் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்.

உலக அளிப்பு சங்கிலிகள் (global supply chains), கூலி, உற்பத்தித் திறன் போன்ற நவீன பொருளாதாரத்தின் அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்துகிறது. பருவநிலை மாற்றம், தொழிலாளர்களின் உடல், உள்ள நலன்களில் தாழ்ந்த நிலை போன்ற சவால்களுக்குப் பொருளாதார இயங்கியல் எப்படிக் காரணமாக இருக்கிறது என்பது குறித்து நான் ஆராய்கிறேன்.

சமூகரீதியாக நீதியான, சூழலியல் ரீதியில் வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் நமக்கு மிகவும் வேறுவிதமான பொருளாதாரம் வேண்டும் என்று நான் வாதிட்டுள்ளேன். கோவிட்-19 வைரஸ் சிக்கலை நாம் எதிர்கொண்டுள்ள இந்த நிலையைவிட வேறெப்போதும் இந்த உண்மைகள் மேலதிகத் துலக்கமாகத் தெரிந்ததில்லை.

எந்த வகை விழுமியத்துக்கு முன்னுரிமை தருவது என்பதைத் தீர்மானிக்கிற இயக்கமே பிற சமூக, சூழலியல் சிக்கல்களுக்குக் காரணமாகிறது. கோவிட்-19 உலகத் தொற்றுக்கு ஆற்றுகிற எதிர்வினைகள் இந்த இயக்கத்தைத் தீவிரப்படுத்துவதாகவே உள்ளன. எனவே வைரசுக்கான எதிர்வினைகள் பரிணமிக்கும்போது நம் பொருளியல் எதிர்காலம் எப்படி உருவாகும்?

பொருளாதாரப் பார்வையில் நான்குவிதமான எதிர்காலத்துக்குச் சாத்தியங்கள் உள்ளன. காட்டுமிராண்டி நிலைக்குத் தாழ்ந்துபோகலாம், வலுவான அரசு முதலாளித்துவத்தை நோக்கிச் செல்லலாம், தீவிர அரசு சோஷியலிசத்தை நோக்கிச் செல்லலாம், பரஸ்பர உதவிகளின் மீது கட்டப்படும் பெரிய சமூகமாக மாற்றமடையலாம். இந்த நான்கு வகை எதிர்காலத்தின் மாறுபட்ட வடிவங்கள் அனைத்தும் சாத்தியமே.

ஆனால் இந்த நான்கு வகைகளையும் சம அளவில் விரும்ப முடியாமல் போகலாம்.

பருவநிலை மாற்றத்தைப் போலவே கொரோனா வைரஸும் ஓரளவு நம் பொருளாதாரக் கட்டமைப்பின் பிரச்சனை. இவை இரண்டும் சுற்றுச்சூழல் பிரச்சனையாகவும், இயற்கைப் பிரச்சனையாகவும் தோற்றமளித்தாலும் இவை இரண்டுமே சமூகக் காரணிகளால் உருவாகிறவையே.

சில வகை வாயுக்கள் வெப்பத்தை உறிஞ்சிக்கொள்வதால்தான் பருவநிலை மாற்றம் நிகழ்கிறது என்பது உண்மையே. ஆனால், இது மிகவும் மேம்போக்கான விளக்கம். பருவநிலை மாற்றத்தைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், நாம் பசுமை இல்ல வாயுக்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பதற்குக் காரணமான சமூகக் காரணிகளைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அதைப் போலவே கோவிட்-19 நோயும் வைரசால்தான் உருவாகிறது என்பது உண்மையே. ஆனால் இந்நோயின் விளைவுகளைச் சமாளிக்க வேண்டுமானால் மனித நடத்தையையும், அதன் விரிந்த பின்னணியையும் புரிந்துகொள்ளவேண்டும்.

தேவையற்ற பொருளாதார நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டால் கோவிட்-19 மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டையும் சமாளிப்பது எளிதுதான். பொருள் உற்பத்தியைக் குறைத்து, அதன் மூலம் ஆற்றல் பயன்பாட்டைக் குறைத்து, அதன் மூலம் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதைக் குறைத்தால் பருவநிலை மாற்றத்தைத் தணிக்கமுடியும். கோவிட்-19 பெருந்தொற்று வேகமாகப் பரவுகிறது. ஆனால் இதன் மையமாக உள்ள தர்க்கம் எளிமையானது. மக்கள் ஒன்று கலந்து வைரசைப் பரப்புகிறார்கள். பணியிடங்களில், வீடுகளில், பயணங்களில் இது நடக்கிறது. இந்த ஒன்று கலப்புகளைக் குறைத்தால் ஆட்களுக்கிடையில் வைரஸ் தொற்றுவது குறைந்து மொத்தத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை குறையக்கூடும்.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளோடு, மக்கள் மத்தியில் தொடர்புகளைக் குறைப்பதும் பிரச்சனையைச் சமாளிக்க உதவும். தொடர்புகளின் பாதையைக் கண்டறிவதும், தனிமைப்படுத்துவதும் தொற்று நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பொதுவான உத்திகள். நோய்த் தொற்று கண்டறியப்பட்ட ஒருவர் யாருடனெல்லாம் தொடர்பிலிருந்தார் என்பதைக் கண்டறிந்து, அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்காக அவர்களைத் தனிமைப்படுத்துவதே இந்த நடவடிக்கை.

அதிக அளவிலான தொடர்புகளைக் கண்டறிந்தால் இந்த நடவடிக்கை அதிகப் பலனளிக்கும். எத்தனை சதவிகித தொடர்புகளைக் கண்டறிகிறீர்கள் என்பது முக்கியம். நோய்த் தொற்றிய நபர் குறைவான நபர்களோடு தொடர்பிலிருந்தால், குறைவான நபர்களைக் கண்டறிந்தாலே அதிக சதவீதம் தொடர்புகளைக் கண்டறிய முடியும்.

சீனாவின் வுஹான் நகரில் சமூக விலகலும், முடக்கமும் மிகுந்த பயனளித்ததைக் காணமுடியும். ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாகப் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் முன்னதாக இவை ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அரசியல் பொருளாதாரம் எங்களுக்கு உதவியது.

நொறுங்கும் தன்மையுள்ள பொருளியல்

பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை, உலகப் பொருளாதாரத்துக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. மிகத் தீவிரமான மந்த நிலையை நாம் எதிர்கொள்கிறோம். இந்த நெருக்கடி காரணமாக, முடக்க நடவடிக்கைகளைத் தளர்த்தும்படி பல உலகத் தலைவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

சரிவுக் காலப் பொருளாதாரம் என்ன என்பது தெளிவானது. லாபம் சம்பாதிப்பதற்காகவே வணிக நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றால் உற்பத்தி செய்ய முடியாவிட்டால் விற்க முடியாது. அப்படியானால் லாபமும் வராது. அப்படியானால், அவர்களால் உங்களுக்கு வேலை தர முடியாது.

தங்களுக்கு உடனடியாகத் தேவைப்படாத தொழிலாளர்களைக்கூட வணிக நிறுவனங்களால் -குறுகிய காலத்துக்கு – தக்கவைத்திருக்க முடியும். தக்கவைத்திருப்பார்கள். ஏனெனில் பொருளாதாரம் மீண்டெழும்போது தேவைகளைச் சமாளிப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் நிலைமை மிகவும் மோசமாகத் தோன்றினால் அவர்கள் தக்கவைத்துக்கொள்ள மாட்டார்கள். தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். அதனால் அவர்கள் வாங்குவதைக் குறைத்துக்கொள்வார்கள். இதன் விளைவாகப் பொருளாதாரம் மந்த நிலையின் நீண்ட சுழற்சியில் சிக்கிக்கொள்ளும்.

வழக்கமாக ஏற்படும் இதுபோன்ற மந்த நிலை சிக்கல்களில் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான யோசனை எளிமையானது. மக்கள் நுகரவும், வேலை செய்யவும் தொடங்கும் வரை அரசு மீண்டும் மீண்டும் செலவிடும்.

ஆனால் இதுபோன்ற வழக்கமான தீர்வுகள் இங்கு உதவாது. ஏனெனில் குறைந்தபட்சம் உடனடியாக பொருளாதாரம் மீண்டெழக்கூடாது என்று நாம் நினைக்கிறோம். முடக்க நிலை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் மக்கள் வேலைக்கு சென்று அங்கே நோயைப் பரப்பிவிடக்கூடாது என்பதுதான். சீனாவின் வுஹான் நகரில் விரைவில் முடக்கநிலையைத் தளர்த்தும்போது, பணியிட மூடல்கள் முடிவுக்கு வரும்போது, மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும்போது நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் இதே ஆண்டில் இரண்டாவது உச்ச நிலைக்கு செல்லும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

பொருளியல் அறிஞர் ஜேம்ஸ் மீட்வே இப்படி எழுதுகிறார்:

கோவிட்-19 நோய்க்கான சரியான எதிர்வினை என்பது உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்கிற போர்க் காலப் பொருளாதாரமல்ல. அதற்குப் பதிலாக நமக்கு போர்க்கால நிலைமைக்கு எதிர்நிலைப் பொருளாதாரம் தேவை. அதாவது உற்பத்தியைப் பெருமளவில் குறைக்கவேண்டும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளவிலான தொற்றுகளால் நாம் கலங்காமல் இருப்பதற்கு (பருவநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கும்) வாழ்வாதார இழப்பு ஏற்படாத வகையில் உற்பத்தி குறைப்பு செய்யவல்ல ஓர் அமைப்பு முறை நமக்குத் தேவை.

எனவே நமக்குத் தேவை மாறுபட்ட பொருளாதார மனநிலை நமக்குத் தேவை. பொருள்களை, குறிப்பாக நுகர்வுப் பண்டங்களை, வாங்குகிற, விற்கிற முறை என்பதாகவே பொருளாதாரத்தைப் பற்றி நாம் கருதுகிறோம். ஆனால் பொருளாதாரம் என்பது இதுவல்ல. அல்லது அது இப்படி இருக்கவேண்டியதில்லை. வளங்களை எடுத்து அவற்றை நாம் வாழ்வதற்குத் தேவையான பொருள்களாக மாற்றும் முறையே பொருளியலின் மையக் கரு. இப்படிப் பார்ப்பதன் மூலம், துன்பத்தை அதிகரித்துக்கொள்ளாமல், குறைவான பண்டங்களை உற்பத்தி செய்து மாறுபட்ட முறையில் வாழ்வதற்கான நிறைய வாய்ப்புகளை நம்மால் பார்க்கத் தொடங்க முடியும்.

களையிழந்த அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரம்

சமூக ரீதியில் நீதியான வழிமுறையில் எப்படி குறைவாக உற்பத்தி செய்வது என்ற கேள்வி குறித்து நானும் பிற சூழலியல் பொருளியலாளர்களும் நீண்டகாலம் யோசித்து வருகிறோம். ஏனெனில் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் பிரச்சனையின் மையமாக உள்ள சவால்களில் குறைவாக உற்பத்தி செய்வதும் ஒன்று.

மற்றவை சமமாக இருக்கும்போது நாம் எவ்வளவு அதிகம் உற்பத்தி செய்கிறோமா அவ்வளவு அதிகமான பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகிறோம். மக்களை வேலையில் வைத்துக் கொண்டே, நாம் உற்பத்தி செய்கிற பொருள்களின் அளவைக் குறைப்பது எப்படி?

இதற்குப் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள்: ஒவ்வொரு வாரத்திலும் வேலை செய்யும் நேரத்தின் அளவைக் குறைப்பது. என்னுடைய சமீபத்திய கட்டுரையில் ஆராய்ந்திருப்பதைப் போல, ஆட்களை மிக மெதுவாக, குறைவான அழுத்தத்துடன் வேலை செய்ய அனுமதிக்கலாம். இந்த இரண்டு வழிமுறையுமே கோவிட் – 19 தொற்றை சமாளிக்க உகந்த முறைகள் அல்ல. ஏனென்றால் இந்தத் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்கு உற்பத்தியைக் குறைப்பது உதவாது. பதிலாக, தொடர்புகளைக் குறைப்பதே உதவும். ஆனால் இந்தப் பரிந்துரைகளின் உட்கரு ஒன்றுதான். மக்கள் தாங்கள் வாழ்வதற்குக் கூலியை, ஊதியத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவேண்டும்.

பொருளாதாரம் எதற்காக?

கோவிட்-19 நோய்க்கான எதிர்வினைகளைப் புரிந்துகொள்வதற்கான வழி பொருளாதாரம் என்பது எதற்காக என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்வதுதான். தற்போது உலகப் பொருளாதாரத்தின் முதன்மை நோக்கம், பணப் பரிமாற்றத்தைச் சாத்தியப்படுத்துவதுதான். இந்தப் பணத்தைத்தான் பொருளியலாளர்கள் பரிமாற்ற மதிப்பு என்று அழைக்கிறார்கள்.

பயன் மதிப்பு என்பதும் பரிமாற்ற மதிப்பு என்பதும் ஒன்றே என்ற எண்ணமே தற்போதைய அமைப்பு முறையில் ஆதிக்கம் செலுத்துகிறது.

தங்களுக்கு வேண்டுமென்ற, அல்லது தேவைப்படும் பண்டங்களை வாங்க மக்கள் பணத்தை செலவு செய்கிறார்கள். அந்தப் பொருளை அவர்கள் எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதை, அவர்கள் பணத்தைச் செலவிடும் இந்த நடவடிக்கை நமக்கு சொல்லும். இதனால்தான் சமுதாயத்தை வழிநடத்துவதற்கு சந்தையே சிறந்த வழி என்று பார்க்கப்படுகிறது. சந்தை நீங்கள் தகவமைய அனுமதிக்கும், அத்துடன் பயன் மதிப்பையும், உற்பத்தித் திறனையும் சமநிலைப் படுத்திப் பொருத்தும்.

சந்தைகளைப் பற்றிய நம்பிக்கைகள் பொய்யானவை என்பதைத்தான் கோவிட் – 19 முற்றாக அம்பலப்படுத்தியுள்ளது.

அளிப்பு சங்கிலி, சமூகப் பராமரிப்பு அதிலும் முக்கியமாகச் சுகாதார சேவை உள்ளிட்ட இன்றியமையாத அமைப்புகள் சீர்குலையும் அல்லது அவை அதிக சுமையை ஏற்கவேண்டிவரும் என்று உலகம் முழுவதும் அரசுகள் அஞ்சுகின்றன. இதற்குப் பங்களிக்கும் பல காரணிகள் உள்ளன. ஆனால் நாம் இரண்டினை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

முதலில், மிக அத்தியாவசியமான சமூகப் பணிகளில் பணம் சம்பாதிப்பது மிகக்கடினம். ஏனெனில் தொழிலாளர் உற்பத்தித் திறன் வளர்ச்சியே லாபத்தைப் பெருக்கும் முக்கிய வழி என்பது இதற்கு ஒரு பகுதியளவு காரணமாக இருக்கிறது. கொஞ்சம் பேரை வைத்து நிறைய செய்வது. மனித வளமே பல வணிகங்களில், குறிப்பாக நேரடி தலையீடுகள் தேவைப்படும் மருத்துவப் பணி போன்றவற்றில், மிக முக்கிய செலவுக் காரணியாக இருக்கிறது. எனவே, பொருளாதாரத்தின் மற்றத் துறைகளைக் காட்டிலும் மருத்துவத் துறையில் உற்பத்தித் திறன் வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கும். எனவே மருத்துவத் துறையில் செலவு, விலை சராசரியைவிட அதிவேகமாக உயரும்.

இரண்டாவதாகப் பல இன்றியமையாத துறைகளில் உள்ள வேலைகள் சமூகத்தில் உயர் மதிப்புடையவையாக இல்லை. பெரும்பாலான உயர் ஊதியம் பெறும் வேலைகள் பணப் பரிமாற்றத்துக்கு, அதாவது பணம் சம்பாதிக்க, உதவக்கூடிய வேலைகளே. அவற்றால் சமூகத்துக்கு விரிவான பயன் ஏதும் இல்லை.

ஆனாலும், மிகப் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் நம்மிடையே ஏராளமான ஆலோசகர்கள், பெரிய விளம்பரத் துறை, பிரும்மாண்ட நிதி மூலதனத் துறை ஆகியவை இருக்கின்றன.

அதே நேரம், சுகாதாரம், சமூகப் பராமரிப்பு ஆகிய துறைகளில் சிக்கல்கள் இருக்கின்றன. இத்துறைகளில் இருக்கிற சமூகத்துக்குப் பயனளிக்கும் வேலைகளில் இருந்து வெளியேறும் நிர்ப்பந்தம் அவற்றில் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. ஏனெனில் வாழத்தேவையான அளவு ஊதியத்தை இந்த வேலைகள் தருவதில்லை.

பொருளற்ற வேலைகள்

ஏராளமான ஆட்கள் பொருளேதும் இல்லாத வேலைகளில் இருக்கிறார்கள் என்பதால்தான் கோவிட்-19 சிக்கலை எதிர்கொள்ள நம்மால் உரிய முறையில் தயாராக முடியவில்லை. பல வேலைகள் தேவையற்றவை என்பதை இந்த உலகளாவிய தொற்று எடுத்துக்காட்டியுள்ளது. ஆனால் சிக்கல் ஏற்பட்டால் அதற்கு எதிர்வினையாற்றக்கூடிய முக்கியப் தொழிலாளர்கள் போதுமான அளவில் இல்லை.

வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள் சந்தை மூலம்தான் கிடைக்கிற, பறிமாற்று மதிப்பே வழிகாட்டு நெறியாக இருக்கிற சமூகத்தில் பொருளற்ற வேலைகளை செய்யும்படி மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஏனெனில் அத்தியாவசியப் பொருள்களை சந்தையில் வாங்க வேண்டும், வாங்குவதற்குப் பணம் தேவை, வேலைதான் அந்தப் பணத்தை அளிக்கிறது.

இந்த நாணயத்துக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. கோவிட்-19 பிரச்சனைக்கு வந்த மிகத் தீவிரமான, மிகுந்த பயனளிக்கும் எதிர்வினைகள், சந்தை மற்றும், பயன் மதிப்பின் மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கிறவையாக இருக்கின்றன. ஒரு மூன்று மாதம் முன்பு சாத்தியமே இல்லாததாகத் தோன்றிய நடவடிக்கைகளை உலகெங்கும் அரசாங்கங்கள் எடுக்கின்றன. ஸ்பெயினில் தனியார் மருத்துவமனைகள் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. பல போக்குவரத்து முறைகள் தேசிய மயமாகும் சாத்தியம் உருவாகியுள்ளது. மிகப் பெரிய வணிக நிறுவனங்களை தேசியமயமாக்கத் தயாராக இருப்பதை பிரான்ஸ் அறிவித்துவிட்டது.

அதைப்போல தொழிலாளர் சந்தைகள் உடைந்து நொறுங்குகின்றன. ஆட்கள் வேலைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் டென்மார்க், பிரிட்டன் போன்ற நாடுகள் வருமானத்தை தருகின்றன. வெற்றிகரமாக முடக்க நிலையை செயல்படுத்துவதற்கு இது ஒரு அத்தியாவசியமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கைகள் செம்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தங்கள் வருவாயை ஈட்ட மக்கள் வேலைக்கு செல்லவேண்டும் என்ற கொள்கையில் ஏற்பட்ட பெயர்ச்சி இது. தங்களால் வேலை செய்ய முடியாவிட்டாலும் மக்கள் வாழத் தகுந்தவர்கள் என்ற எண்ணத்தை நோக்கிய நகர்வும்கூட இது.

கடந்த 40 ஆண்டுகளாக நீடித்திருந்த போக்கினை இது தலைகீழாகத் திருப்பியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் சந்தையும், பறிமாற்ற மதிப்புமே ஒரு பொருளாதாரத்தை நடத்துவதற்கான சிறந்த வழிகளாகப் பார்க்கப்பட்டன. இதன் விளைவாக, பொது அமைப்புகளை சந்தைமயமாக்க, பணம் சம்பாதிப்பதற்கான வணிக நிறுவனங்களைப் போல அவற்றை நடத்த மேலும், மேலும் அதிக அழுத்தங்கள் தரப்பட்டன.

தொழிலாளர்கள் மேலும் மேலும் சந்தைக்கு ஆட்பட்டவர்களாக ஆகியுள்ளனர். ஜீரோ அவர் காண்ட்ராக்ட் எனப்படும் தேவை ஏற்படும்போது மட்டும் தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான பணி ஒப்பந்தங்கள், நெகிழ்வான நியதிகள் கொண்ட வேலைவாய்ப்புகள் நிரம்பிய கிக் பொருளாதாரம் (Gig economy) ஆகியவை, சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து நீண்டகால, நிரந்தர வேலைகள் அளித்துவந்த பாதுகாப்பு என்ற மூடியை அகற்றிவிட்டன.

வீட்டிலிருந்து வேலை செய்யும் லட்சக்கணக்கானோருக்கு, வழக்கம் போல அலுவலக வாழ்க்கைக்கு திரும்புவது கடினமாக இருக்கலாம்.

தற்போது கோவிட்-19 இந்தப் போக்குகளை தலைகீழாகத் திருப்புவதாகத் தோன்றுகிறது. சுகாதாரப் பராமரிப்பு, தொழிலாளர்கள் தேவைக்கான பண்டங்கள் ஆகியவை சந்தையில் இருந்து அகற்றப்பட்டு, அவை அரசின் கைகளில் தரப்படுகின்றன. அரசுகள் பல காரணங்களுக்காக உற்பத்தியில் ஈடுபடுகின்றன.. அவற்றில் சில நல்ல காரணங்கள், சில மோசமான காரணங்கள். ஆனால் அரசுகள், சந்தையைப் போல பரிமாற்று மதிப்புக்காக உற்பத்தி செய்யவேண்டியது இல்லை.

இந்த மாற்றங்கள் எனக்கு நம்பிக்கையைத் தருகின்றன. இந்த மாற்றங்கள் பல உயிர்களைக் காப்பதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன. நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க நமக்கு உதவும் நீண்டகால மாற்றங்கள் நிகழ்வதற்கான குறிப்புகளையும் இவை கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த இடத்துக்கு வந்து சேர நமக்கு ஏன் இவ்வளவு நாள்கள் ஆனது? ஏன் இன்னும் பல நாடுகளுக்கு உற்பத்தியை மெதுவாக்க உரிய முறையில் இன்னும் தயாராகவில்லை? இதற்கான விடை, உலக சுகாதார நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்த சமீபத்திய அறிக்கையில் இருக்கிறது: They did not have the right “mindset”.

நமது பொருளியல் கற்பனைகள்

கடந்த 40 ஆண்டுகளாக, மிகப் பெரிய விரிவான பொருளாதாரக் கருத்தொற்றுமை நீடித்து வருகிறது. இந்த அமைப்பு முறையில் இருக்கிற விரிசல்களை பார்ப்பதற்கான, அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆலோசகர்களின் வல்லமையை இந்த கருத்தொற்றுமை சுருக்கிவிட்டது. அவர்கள் மாற்றுகளை கற்பனை செய்து பார்க்கமுடியாதபடியும் செய்துவிட்டது. இந்த மன நிலை இரண்டு கற்பனைகளால் கட்டமைக்கப்பட்டது. அந்த கற்பனைகள்:

1.சந்தை நல்ல வாழ்க்கைத் தரத்தை அமைத்துத் தருகிறது.

2.குறுகிய கால சிக்கல்களுக்குப் பிறகு சந்தை எப்போதுமே பழைய நிலைமைக்குத் திரும்பும்.

இந்த நம்பிக்கைகள் மேற்கத்திய நாடுகளுக்குப் பொதுவானவை என்றபோதும் ஐக்கிய அமெரிக்க நாட்டிலும், பிரிட்டனிலும் இவை மிக வலுவாக இருக்கும். இந்த இரண்டு நாடுகளுமே கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராட சரிவர தயாராகாதவை.

கோவிட்-19 நோயைப் பற்றி பிரிட்டன் பிரதமரின் மிக மூத்த உதவியாளர் ஒருவரின் அணுகுமுறை பற்றி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்கள் இப்படித் தொகுத்துக் கூறினார்கள்: “சமூக நோயெதிர்ப்பு சக்தி (herd immunity), பொருளாதாரத்தைப் பாதுகாக்கவேண்டும், ஆனால், அதனால் சில ஓய்வூதியக்காரர்கள் இறக்க நேர்ந்தால், அது மோசம்.” ஆனால் அரசு இதை மறுத்துவிட்டது. ஆனால இது உண்மையாக இருக்குமானால், அது ஒன்றும் ஆச்சரியமல்ல. இந்த உலகளாவியத் தொற்று பரவத் தொடங்கியபோது நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், ஒரு மூத்த குடிமைப் பணி அலுவலர் என்னிடம் கூறினார் “பொருளாதாரத்தை சீர்குலைக்கும் அளவுக்கு அது முக்கியமானதா? நிதியமைச்சகத்துக்கு மனித உயிரைப்பற்றி இருக்கும் கருத்தை வைத்துப் பார்த்தால் அது முக்கியமல்ல.”

இதுபோன்ற பார்வை குறிப்பிட்ட மேல்தட்டு மக்களிடம் பரவியிருக்கிறது. இந்தப் பார்வையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண அதிகாரி ஒருவர் இப்படி வாதிட்டார்: அமெரிக்கா பொருளாதார மந்த நிலையில் மூழ்குவதைப் பார்ப்பதைவிட பல முதியோர்கள் மகிழ்ச்சியாக சாவார்கள்.

இந்தப் பார்வை பலவீனமான மக்கள் பலரை (வயோதிகர்கள் மட்டுமே பலவீனமானவர்கள் இல்லை) அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இது ஒரு போலியான தேர்வு என்பதை இங்கே முயன்றிருக்கிறேன்.

கோவிட்-19 சிக்கல் செய்யப்போகிற பலவற்றில் ஒன்று பொருளாதாரம் பற்றிய பார்வையை விரிவுபடுத்துவதாக இருக்கும். அரசாங்கங்களும், குடிமக்களும், மூன்று மாதத்துக்கு முன்பு சாத்தியமில்லை என்று தோன்றியிருக்கக்கூடிய அடிகளை எடுத்துவைத்திருக்கும் நிலையில் இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றிய நமது கருத்துகளும் தீவிரமாக மாற்றமடையலாம். இந்த மறுசிந்தனை நம்மை எங்கே கொண்டு செல்லும் என்று பார்ப்போம்.