சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நலன்கள்

(சட்டத்தரணி எஸ்.மோகனராஜன்)

கர்ப்பகால கொடுப்பனவுகள் மற்றும் அதனோடு தொடர்புடைய கர்ப்பிணிப் பெண்கள் நலன் சம்பந்தமான விடயங்ளை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான சட்டமாக பிரசவ நலக் கட்டளை சட்டம் காணப்படுகிறது. 1981 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் திருத்தங்களுக்குட்பட்ட இச்சட்டம், சர்வதேச தராதரத்துடன் ஒப்பிடும் போது இன்னும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய தேவை இப்பொழுது காணப்படுகிறது.

சட்டத்தின் உறுதிப்பாடு

கருத்தரித்த ஒரு பெண் முதலாம், இரண்டாம் பிள்ளைகளின் பிரசவத்துக்கு முன் இரண்டு வாரங்களுக்கும் பிரசவத்தின் பின் 10 வாரங்களுக்கும் விடுமுறையுடன் கூடிய கர்ப்பகால கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள உரித்துடையவர்.

அதேவேளை, இரண்டு அல்லது இரண்டுக்கு மேலான குழந்தைகளையுடைய பெண் பிரசவத்துக்கு முன் இரண்டு வாரங்களும் பிரசவத்தின் பின் நான்கு வாரங்களும் கொடுப்பனவுடன் கூடிய விடுமுறையைப்பெற உரித்துடையவர்.

குழந்தை பிறந்து இறத்தல், குழந்தை இறந்து பிறந்தல் போன்ற சந்தர்ப்பங்களில் ஆறு வாரங்கள் பிரசவச் சலுகைக் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள உரித்துடையவராவார். 12 வாரகாலத்துக்குள் அல்லது ஆறு வாரகாலத்துக்குள் இப்பெண் இறந்தால், இறந்த நாள் வரை கர்ப்பகால கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனச் சட்டம் கூறுகின்றது.

தொழில் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யும் சந்தர்ப்பம்

தொழில் ஆணையாளர், தொழில் தருநர் ஒருவருக்குத் தனது பெருந்தோட்டத்தில் வேலைசெய்யும் தொழிலாளியின் கர்ப்பகால சலுகைக்கு பதிலாக மாற்று வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனச் சான்றிதழ் வழங்கலாம்.

ஒரு தொழிலாளி, தனது தோட்டத்தில் வதிவிடத் தொழிலாளியாக இருக்கும் பட்சத்தில், அல்லது அவ்வாறு அவர் தோட்டத்தில் வதியாத ஆனால், தகுந்த அறிவித்தல் வழங்கியிருக்கும் பெண் கர்ப்பவதித் தொழிலாளி, கர்ப்பகால கொடுப்பனவுக்குப் பதிலாக மாற்று வசதிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யலாம். அவ்வாறு மாற்று வசதிகளைக் கற்பவதிப் பெண் பெற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், வேறு விதமான கர்ப்பகாலச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள உரிமை இழந்தவராகக் கருதப்படுவார்.

ஆனால், தொழில் ஆணையாளருக்கு வழங்கும் முறைப்பாட்டின்படி, அவர் விசாரணை செய்து, சான்றிதழை வறிதற்றதாக்கும் பட்சத்தில், தொழில் தருநர் (தோட்ட முகாமையாளர்) பெண்ணுக்குரிய கர்ப்பகால வசதிகளை வழங்க வேண்டும்.

கர்ப்பகாலக் கொடுப்பனவுடன் மாற்று வசதிகளும் செய்து கொடுக்கத் தீர்மானிக்கப்படும் பட்சத்தில் செலுத்த வேண்டிய சலுகை கொடுப்பனவில் 4/7 பங்கு பணமாகச் செலுத்தப்பட வேண்டும்.

தொழில்தருநருக்கு முறைப்படியான அறிவித்தல்

கர்ப்பிணிப் பெண் தனது பிரவசத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு அறிவித்தல் வழங்க வேண்டும். பிரசவத்தின் பின் ஒரு வாரத்தில் (அவள் எவ்வளவு காலத்துக்கு விடுமுறை எடுப்பார் என்பது பற்றிக் கணக்கிட உதவியாக) தொழில் தருநருக்குப் பிரசவத் தகவல் வழங்க வேண்டும். பிரசவக் கால கொடுப்பனவு பெற்றுக்கொள்ள ஒருவரை நியமித்து அவரிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்யலாம்.

இவ்வாறு, தகுந்த முறையில் அறிவித்தல் வழங்கப்படும் பட்சத்தில், பிரசவம் பற்றிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், 48 மணித்தியாலங்களுக்குள் தொழில் தருநர் கொடுப்பனவு வழங்க வேண்டும். மிகுதிக் கொடுப்பனவை இரண்டு தவணைகளில் வழங்க வேண்டும்.

கர்ப்பிணிப்பெண் இறக்கும் பட்சத்தில், அவரின் வாரிசு அதை பெற்றுக்கொள்ள உரிமையுடையவராவர்.
கர்ப்பிணிப் பெண் கர்ப்பம் காரணமாக வேலைக்குச் சமூகமளிக்காத காரணத்தினால், வேலையிலிருந்து நீக்கப்பட முடியாதவாறு சட்டம் கர்ப்பிணித் தாய்மாருக்குப் பாதுகாப்பு வழங்குகின்றது.

கர்பிணிகளுக்கு தீங்குதரும் தொழிலைத் தவிர்த்தல்

தான், கருத்தரித்திருப்பதாகத் தகுந்த அறிவித்தல் வழங்கிய பின்பு, அக்காலப்பகுதியினுள் குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்தும் தொழிலில் கர்பிணித்தாயை ஈடுபடுத்தாமலிருக்கத் தொழில் தருநர் கடப்பாடுடையவர்.

அமைச்சர் வரையறை செய்யும், இலக்கத்துக்கு மேலாகப் பெண்களை வேலைக்கமர்த்தும் தொழில் தருநர்கள் அங்கு பணியாற்றும் பெண்களின் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கவென சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நடாத்த வேண்டும். வேலை நேரங்களில் அச்சிறுவர்கள் அங்கு நேரத்தைச் செலவிட வசதிகள் செய்து கொடுக்கவும் வேண்டும்.

சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், அதன் வசதிகள், பராமரிப்புச் சுத்தம், சுகாதாரம் தொடர்பில் அமைச்சர் விதிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்டுள்ளார்.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு 8-9 மணித்தியாலங்களுள் இரு இடைவேளைகள் பணியாற்றும் தாய்க்கு குறுகிய நேர இடைவேளை வழங்க வேண்டும். இவ் இடைவேளை 30 நிமிடங்களுக்குக் குறையாததாக இருத்தல் வேண்டும்.

பராமரிப்பு வசதிகள் செய்து கொடுக்காத தொழில் நிலையங்களில் ஒரு மணித்தியால இடைவேளைகள் இரண்டு வழங்க வேண்டும்

இவ்விடைவேளைகள், தனது ஓய்வு நேர, உணவு நேர விடுமுறைக்கு மேலதிகமாக வழங்க வேண்டியது என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.

பிரசவ கால நலன் தொடர்பாகத் தொழில் ஆணையாளரின் பரிசீலனை செய்யும் அதிகாரம் ஓவ்வொரு தொழில்தருநரும், பெண் ஊழியர் தொடர்பான பதிவேட்டினைப் பேண வேண்டும். யார் யார் பிரசவ கால நலனுக்கு உரித்துடையவர்? எவ்வாறான நலன்கள் வழங்கப்பட்டுள்ளன? என்பது பற்றிய தகவல்களை வைத்திருத்தல் வேண்டும்.

பொய்யான தகவல்களை வைத்திருத்தல், சமர்ப்பித்தல் மற்றும் பரிசீலனைக்கு இடமளிக்காமை, விதிகளுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுதல் விதிகளை ஒழுகாமை குற்றமாகும்.

பிரசவ நலச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சலுகை, நலன்கள் தொடர்பில் ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்து, உரிமைகளைக் கையுதிர்க்க, விட்டுக்கொடுக்க முடியாது என்பதோடு, இச்சட்ட ஏற்பாடுகளில் வழங்கியுள்ள நலன்களை வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் மட்டுப்படுத்தவியலாது. எனவே இச்சட்டமே மேலோங்கும்.

கடைகள், அலுவலகங்கள் கட்டளைச்சட்டம், தொழிற்சாலை கட்டளைச்சட்டம் என்பவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நலன்களுக்கு மேலதிகமாக அவற்றினை மேலோங்கி நிற்கும் சட்ட ஏற்பாடாகவே இது பார்க்கப்படுகிறது. கர்ப்பிணிகள் அனைவரும் இச்சட்ட ஏற்பாட்டின்படி நலன் பெற உரித்துடையோராவர்.

சர்வதேச தராதரம்

ILO பிரசவ பாதுகாப்பு சமவாயத்தின் படி ஒழுகுவதற்கு இலங்கை தவறியுள்ளது என்பதை ILO சுட்டிக்காட்டுகின்றது. இதன்படி, குழந்தை பிறப்பு, சுகாதாரம் தொடர்பில் நிதி முதலீடு, விடுமுறை உரிமை, பிரசவ விடுமுறை கொடுப்பனவு பற்றிச் சமவாயம் கவனம் செலுத்துகின்றது.

1919,1952 என இரு சமவாயங்களும் சீர்செய்யப்பட்ட 2000 ஆம் ஆண்டின் பிரசவ பாதுகாப்பு சமவாயம் கர்ப்பிணி பெண்களுக்கு 14 வார விடுமுறை, கொடுப்பனவு வழங்கும் ஏற்பாட்டினைக் கொண்டுள்ளது.

பிரசவ விடுமுறையிலுள்ள கர்ப்பிணித்தாய், தான் தனது குழந்தைக்கான ஒழுங்கான சுகாதார ஏற்பாடு, பொருத்தமான தராதரத்திலான வாழ்க்கை முறையை வாழ்வதற்கு போதுமான, தான் பெற்ற சம்பளத்தில் 2/3 குறையாத பிரசவக் கொடுப்பனவைப் பெற உரித்துடையவர் என ஏற்பாடு செய்துள்ளது.

கர்ப்பகாலத்திலான பாரபட்சமான நடாத்துகையிலிருந்தான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரசவத்தின் பின் அத்தாய் முன்னர் வகித்த அதே நிலை, அதே சம்பளம் வழங்கப்பட வேண்டும் என ஏற்பாடு செய்கின்றது.
இதேவேளை, 2000 ஆம் ஆண்டின் ILO பிரசவ கால பாதுகாப்பு பரிந்துரைகள் மூலம் கர்ப்பிணித் தொழிலாளர் நலன்பற்றி கவனம் செலுத்துகின்றது.

இதன்படி பிரசவ விடுமுறையை ஆகக்குறைந்தது 18 வாரங்களாக அதிகரிக்கவும் விடுமுறையினை பல குழந்தைகள் பெற்ற பிறகும் பெற்றுக்கொள்ள வசதியாகச் சட்ட ஏற்பாடுகளைத் திருத்தம் செய்ய வலியுறுத்துகின்றது.

கர்ப்பிணிப் பெண்களுக்கான வைத்திய நலன்கள், அதற்கான விசேட நிபுணத்துவ வைத்தியரை நாடுதல், தகுதியுடைய செவிலித்தாய் பாதுகாப்பு, வீட்டில் இருந்தவாறு தேவையான மருந்துகள் பெறுதல் போன்ற வசதிகளை ஏற்படுத்த தொழிலாளர்களும் தொழில் தருநர்களும் சேர்ந்து அரசாங்கத்தின் உதவியுடன் ஏற்படுத்துவதற்கான பரிந்துரையும் காணப்படுகின்றது.

பிரசவ காப்புறுதி திட்டம் (Maternity Protection Insurance) சுகாதாரம், பாதுகாப்பு குறிப்பாக பிரசவப்பெண்கள் தனக்கும், குழந்தைக்கும் ஏற்படும் பாதிப்பினை தடுக்கும் நோக்கத்துடன் வேறு வேலைகளில் ஈடுபடுத்தல், கொடுப்பனவுடனான விடுமுறை, மாற்று ஏற்பாடுகள், இரவு நேர வேலைகளில் ஈடுபடுத்தாமை அதிக நேரம் அமர்ந்திருத்தல், நின்று கொண்டிருந்தல் போன்ற கடினமான தொழிலில் ஈடுபடுத்தாமை, அதிக வெப்பமான, அதிர்வான சூழலில், மருந்து வகைகள், இரசாயனங்கள், வெடிப்பு ஏற்படக்கூடிய சாத்தியகூறுடைய இடங்களில் வேலைக்கமர்த்தாமை, சுமை சுமத்தல், தள்ளுதல், இழுத்தல் போன்ற வேலைகளில் கர்ப்பிணிப் பெண்கள் ஈடுபடாமலிருத்தல் தொடர்பான ஏற்பாடு செய்ய ILO வலியுறுத்துகின்றது.

குழந்தையின் தாய் இறக்கும் பட்டசத்தில் தந்தைக்கு விடுமுறை

குழந்தையின் தாய், பிரசவ விடுமுறை காலத்தில் இறக்கும் பட்சத்தில், அக்குழந்தையின் நலன் கருதி மிகுதிக் காலத்துக்கு தந்தை விடுமுறை பெற்றுக்கொள்ள வசதியாக சட்டத்திருத்தம், நோயினால் பீடிக்கப்பட்டால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அக்காலப் பகுதியில் கணவன் விடுமுறை பெற்றுக்கொள்ள வசதியாக சட்டத்தில் திருத்தம் செய்ய ILO தனது உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்துகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில், அரசாங்க, தனியார் துறைகளில் பணிபுரியும் 46 சதவீதமான கர்ப்பிணிப் பெண்கள் மாத்திரமே சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நலனைப் பெறுகின்றனர். வீட்டு வேலை செய்வோர் மற்றும் ஏனைய தொழில் புரிவோர் பிரசவ விடுமுறையினை அனுபவிப்பதில் தடங்கல்கள் உள்ளன.

சட்டப்பாதுகாப்பைப் பெறமுடியாத பிரிவினர்

இது சட்டத்தின் பாதுகாப்பைப் பெற முடியாத ஒரு பிரிவினரை உருவாக்கியுள்ளது. சமூகப் பாதுகாப்பில் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் மக்கள் நலன்களைச் சமமாகப் பாதுகாக்கத் தவறியுள்ளது.

பிரசவப் பாதுகாப்பு சமவாயத்தின் ஏற்பாடுகளை இலங்கை ஏற்றுள்ள போதும் 84 நாட்கள் பிரசவ விடுமுறையினையே வழங்கின்றது. குழந்தைக்கு முதல் 6 மாதம் தாய்ப்பால் மாத்திரமே வழங்க வேண்டும் எனக் கூறும் அரசு, 84 நாட்கள் மாத்திரமே பிரசவ விடுமுறை, கொடுப்பனவுடன் வழங்குகின்றமை முரண்பாடானது.

இதேவிதமான விடுமுறை நலன்களைக் தனியார் துறையினர் அனுபவிக்கின்றனரா? என பார்த்தால் இல்லை என்பது புலப்படும்.

இச்சட்டம் விவசாயத்துறை, பெருந்தோட்டத்துறை பெண்களை உள்வாங்கினாலும் Casual Workers, Domestic Workers அதனுள் உள்வாக்கப்பட வில்லை என்பது குறைபாடாகும்.

அரசாங்க சேவையாளர்களுக்கு மூன்று நாள் paternity leave வழங்கப்படுகின்றது. எனினும், இது தனியார் துறையினருக்கு வழங்கப்படுவதில்லை.

பிரவச நலன் கட்டளை சட்டத்தின் கீழ் தாயொருவருக்கு கடைகள் மற்றும் அலுவலக கட்டளை சட்டத்தின் கீழ் 84 வேலை நாள் விடுமுறையும் வழங்கப்படுகின்றது. இதேவேளை அரசாங்க சேவையாளர்கள் 84 வேலை நாள் விடுமுறை பெறுகின்றனர். இது முரண்பாடுடையதாகும்.

சட்டத்திருத்தத்தின் அவசியம்

மூன்று குழந்தைகளுக்கு மட்டுப்படுத்தப்படும் பிரவச விடுமுறை, எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். பிரசவக் கொடுப்பனவு நலன் திட்டம், விவசாய, பெருந்தோட்ட கர்ப்பிணிகள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் ஏற்புடையதாகச் சட்டத்திருத்தம் அல்லது சமூக நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

புடைவைக் கைத்தொழிற்துறை ஏனைய கைத்தொழிற்துறைகள், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் அனைத்துத் தனியார் துறைகளாலும் பிரசவ நலன் சட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என ஆய்வு செய்வதும் 2000 ஆம் ஆண்டின் ILO சமவாயத்துக்குப் பின் எமது சட்டம் திருத்தம் செய்யப்படுவதும் காலத்தின் தேவையும் தொழிலுரிமைகளை உறுதி செய்வதற்கான மிக முக்கியமாக முனைப்பும் ஆகும்.

இதன் மூலம் நாட்டின் தொழிற்துறையை வளர்ச்சியடையச் செய்வதனூடாக நாட்டை அபிவிருத்தியடைச் செய்யலாம்.