சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பரிசுகள் தருகிற சுவையை விட அது யாருக்குக் கிடைக்கும் என எதிர்வு கூர்வதில் சுவை அதிகம். பரிசுகள் ஏன் வழங்கப்படுகின்றன என்ற கேள்வி ஒருபுறம் பதில்களைத் தேடியபடி இருக்கையில், மறுபுறம் அது யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதைத் பொறுத்து பரிசின் நோக்கமும் போக்கும் விளங்கப்படுகின்றன. அங்கீகாரத்துக்கான ஆவல் பரிசுகளின் பெறுமதியை உயர்த்துகின்றன. இது உள்ளுரில் வழங்கப்படும் பரிசுகள் தொட்டு உலகளாவிய பரிசுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். இதனாலேயே பரிசுகள் யாருக்குக் கிடைத்தன என்பதை விட யாருக்குக் கிடைக்கும் என்பதை அறியும் ஆவல் மிகுகிறது.

நாளை 2016 ஆம் ஆண்டின் சமாதான நொபெல் பரிசு அறிவிக்கப்படவிருக்கிறது. இம்முறை அதை வெல்வது யார் என்பதற்கு ஏராளமான எதிர்வுகூறல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இதிலிருந்து விலகி, நொபெல் பரிசுக் குழு பரிசை யாருக்கு வழங்கக்கூடும் என விசாரிப்பது இன்னொரு பரிமாணத்தை வழங்கலாம். இக்கட்டுரை அதன் சாத்தியங்களை ஆராய விழைகிறது.

இம்முறை இப்பரிசுக்கு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகளவாக 376 பரிந்துரைகள் வந்துள்ளன. இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு 278 பரிந்துரைகள் வந்தன. உலகம் மென்மேலும் அமைதியற்றதாக மாறுகையில் சமாதானத்திற்கான பரிந்துரைகள் அதிகளவில் வருகின்றன. இப்பொழுதுள்ள 376 பரிந்துரைகளில் பரிசு கிடைக்கக்கூடியன எனக் கருதும் ஐந்து பரிந்துரைகளையும் அதற்கான காரணங்களையும் சற்று விரிவாக ஆராய இப்பத்தி முயற்சிக்கின்றது.

இதுவரை இப்பரிசை வெல்ல முன்னிலையில் இருந்தவர்கள் கொலம்பியாவின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர்களாவர். கடந்த 52 ஆண்டுகளாக கொலம்பிய அரசாங்கத்துக்கெதிராக விடாது போராடிய ஃபார்க் போராளிகள் நான்காண்டுப் பேச்சுக்கட்குப் பிறகு சமாதான உடன்படிக்கையொன்றை எட்டியுள்ளார்கள். உலகின் மிக நீண்ட போராட்டமாகவும் தென் அமெரிக்காவில் எஞ்சிய அதி உயிர்ப்புள்ள போராட்டங்களில் இறுதியானதான ஃபார்க் அமைப்பின் போராட்டம் இவ்வுடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் வரலாற்று முக்கியத்துவமும் உலகளாவிய வகிபாகமும் பெரியன. அவ்வகையில் இதை இயலுமாக்கிய கொலம்பிய ஜனாதிபதி ஹுவான் மனுவல் சான்தொஸும் ஃபார்க் போராளிகள் அமைப்பின் தலைவர் திமொலெயோன் ஹிமெநெஸ் இருவரும் இப் பரிசைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

ஏனைய நொபெல் பரிசுகள் அனைத்தும் சுவீடனில் வழங்கப்படுகையில் சமாதானப் பரிசு மட்டும் நோர்வேயில் உள்ள நொபெல் பரிசுக் குழு வழங்குகிறது. எனவே, அமைதிக்கான நொபெல் பரிசுக் குழுவை நோர்வே நாடாளுமன்றம் தெரிவுசெய்கிறது. இதனால் சமாதான நொபெல் பரிசுக்கும் நோர்வேக்கும் நேரடியாக இல்லாவிட்டாலும் வலுவான மறைமுகத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன.

‘கொலம்பிய சமாதான உடன்படிக்கை’யை உருவாக்க, அனுசரணையாற்றிய நோர்வேயின் பங்களிப்பு முக்கியமானது. நோர்வே ஒரு ‘சமாதான தேசமாக’ தன்னைக் கட்டமைத்துக் கொள்வதற்கு இவ்வுடன்படிக்கையின் வெற்றி முக்கியமானது. கடந்த மாதம் 26 ஆம் திகதி எட்டிய சமாதான உடன்படிக்கை நோர்வேயின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான மைல் கல்லாக் கருதப்படுகிறது. நோர்வே அரசாங்கம் இவ்வுடன்படிக்கையைக் கொண்டாடியதோடு நோர்வேயின் பங்களிப்பு சர்வதேச ரீதியாக மெச்சப்பட்டது. கொலம்பியத் தலைநகர் பொகோடாவில் உடன்படிக்கை கைச்சாத்தான போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன், நோர்வே வெளியுறவு அமைச்சர், கியூப ஐனாதிபதி ஆகியோர் பங்குபற்றினர். உடன்படிக்கைக்கு உத்தரவாதமளித்த ஒரு தரப்பாகக் கியூபாவின் பங்கு பெரிது. பேச்சுகள் கியூபா தலைநகர் ஹவானாவில் நடந்தன. இறுதி உடன்படிக்கையும் அங்கேயே எட்டப்பட்டது. இவ்வளவில் கொலம்பிய ஜனாதிபதி, ஃபார்க் அமைப்பின் தலைவர், நோர்வே, கியூபா அனைத்தையும் சேர்த்துப் பரிசை வழங்கலாம். ஏனெனில் கடந்த ஐந்து முறையும் ஏதோ ஓர் அமைப்பையோ கூட்டையோ சில தனிமனிதர்களை ஒரு கூட்டாகவோ தெரியும் நடைமுறையை நொபெல் பரிசுக் குழு கையாண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவான பராக் ஓபாமாவுக்கும் 2010 ஆம் ஆண்டு சீன அரச எதிர்ப்பாளர் லியு ஷயாபோ ஆகியோருக்கு வழங்கிய பரிசுகள் பாரிய சர்ச்சைகளை எழுப்பின. இவற்றைத் தொடர்ந்து நொபெல் பரிசுக் குழு பாதுகாப்பான தெரிவுகளைச் செய்து வந்தது. அது இம்முறையும் நிகழலாம்.

சமாதான உடன்பாடுகளுக்குச் சமாதான நொபெல் பரிசை வழங்குவது தொடர்ச்சியான ஒரு நடைமுறையாக இருந்துள்ளது. 1973இல் வியட்னாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையை எட்டியமைக்குக்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிசிஞ்சருக்கும் வியட்னாமிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் லே டுக் தோவுக்கும் வழங்கவிருந்த வேளையில் லே டுக் தோ பரிசை நிராகரித்தார். 1978 இல் எகிப்தும் இஸ்ரேலும் எட்டிய “காம்ப் டேவிட் உடன்படிக்கை”க்காக எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத்துக்கும் இஸ்ரேலியப் பிரதமர் மெனாசெம் பெகீனுக்கும் 1993இல் தென்னாபிரிக்காவில் நிற ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை இயலுமாக்கியமைக்கு நெல்சன் மண்டேலாவுக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி பிரட்ரிக் டி கிளாக்குக்கும் 1994இல் பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் ‘ஒஸ்லோ உடன்படிக்கை’யை எட்டியமைக்காக யாசீர் அரபாத், ஜிட்ஷாக் ராபின், கடந்த வாரம் காலமான ஷிமோன் பெரெஸ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. 1996 இல் கிழக்குத் திமோரில் உடன்படிக்கை மூலம் அமைதியை உருவாக்கியமைக்காக ஜோஸே ரமோஸ் ஓர்த்தாவுக்கும் கார்லொஸ் பிலிப்பி ஷிமேனெஸ் பேலொவுக்கும் வழங்கப்பட்டது. பின்பு 1998இல் வட அயர்லாந்தில் ‘பெரிய வெள்ளி உடன்படிக்கை’யை எட்டியமைக்காக ஜோன் ஹியூம், டேவிட் ட்ரிம்பிள் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

சமாதான உடன்படிக்கைகளை எட்டியமைக்காக வழங்கிய நொபெல் பரிசுகளின் சரியான காரணங்களும் தவறான காரணங்களும் நன்கறிந்தவை. சமாதானத்திற்கான நொபெல் பரிசுகளை உலகறிய இவ்வாறு வழங்கிய பரிசுகள் முக்கிய காரணமாகின. ஆனால் கடந்த 18 ஆண்டுகளாக எச்சமாதான உடன்படிக்கைக்காகவும் பரிசு வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. கடந்த இரு தசாப்தங்களாக அல்பிரட் நொபெலின் விருப்புறுதியை முரண்படும் வகைகளில் விளக்கி இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வரை, கொலம்பிய சமாதான உடன்படிக்கையை எட்டியவர்களுக்கே இம்முறை பரிசு என்று உறுதியாகச் சொல்லிய நிலையில் கடந்த ஞாயிறன்று சமாதான உடன்படிக்கையை ஏற்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க கொலம்பியாவில் நடந்த சர்வசன வாக்கெடுப்பில் கொலம்பிய மக்கள் அற்பப் பெரும்பான்மையால் இல்லை எனத் தீர்த்து அதிர்ச்சியளித்தனர். இது இவ்வுடன்படிக்கைக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தி அதற்குச் சட்டரீதியான பெறுமதியை மறுத்தது. எனவே, மக்கள் நிராகரித்த ஓர் உடன்படிக்கையை எட்டியமைக்கு நொபெல் பரிசுக்குழு பரிசு வழங்காது என எதிர்வுக் கூறப்படுகிறது. மாறாக, உடன்படிக்கையை மேலும் வலுப்படுத்தவும் அதற்குச் சர்வதேச அங்கீகாரத்தை வழங்கவும் அதனூடாக உடன்படிக்கையைத் தக்கவைக்கவும் உடன்படிக்கையை எட்டியவர்களுக்குப் பரிசு கிடைக்க வாய்ப்புண்டு. இன்னொரு வகையில் மக்கள் எட்டிய அமைதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான இப்பரிசு மேலும் முக்கியமானதாகும்.

இவ்வாண்டின் நொபெல் பரிசுத் தெரிவில் அடுத்து முன்னிலையில் இருப்போர் சிரியாவில் மனிதாபிமானச் செயற்பாடுகளில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டுப் பணியாளர்களாவர். ‘வெள்ளைத் தலைக் கவசக்காரர்கள்’ எனத் தங்களை அழைக்கும் இவர்கள் சிரியாவில் தொடரும் யுத்தத்தில் மக்களைக் காக்கும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வோராவர். தாக்குதல்களில் காயப்பட்டோரை மீட்பதும் சிகிச்சையளிப்பதும் போன்ற அடிப்படை மனிதாபிமானச் செயல்களை உயிராபத்துக்கு நடுவில் இவர்கள் செய்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மேற்குலக ஊடகங்களில் இவர்கள் சிலாகிக்கபடுகிறார்கள். இவர்களது உருவாக்கத்தையும் செயற்பாட்டையும் ஆழ்ந்து நோக்கின் சில உண்மைகள் தெரிய வரும். இவர்கள் தங்களை அரசியல் சார்பற்ற நடுநிலையாளர்கள், தாங்கள் யாரிடமும் நிதியுதவி பெறவில்லை எனச் சொன்னாலும் இவர்கள் அமெரிக்க உதவி நிறுவனமான யுஎஸ்எய்ட் மற்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் நிதியுதவியாக இதுவரை 40 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளார்கள். இந்த வெள்ளைத் தலைக்கவசக்காரர்கள் சிரியாவில் சிரிய அரசுக்கெதிராகப் போரிடும் அல்நுஸ்ரா, அல்கைடா அமைப்புக்களுக்கு உதவி செய்தது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிரிய அரசுக்கெதிரான முக்கிய பிரசாரக் கருவியாக இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். இதில் முரண்நகை யாதெனில் ஒருபுறம் இவர்களுக்கான நிதியுதவியை வழங்கும் அமெரிக்கா, மறுபுறம் இவ்வமைப்பின் தலைவர் ரயிட் சாலே; இவர் அண்மையில் அமெரிக்கா சென்ற வேளை ‘பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புண்டு’ எனக் காரணங்காட்டி அமெரிக்கா திருப்பியனுப்பியுள்ளது. மேற்குலகின் நவீன வகை ஏவலாளர்களாக இந்த வெள்ளைத் தலைக்கவசக்காரர்கள் சிரியாவில் செயற்படுகிறார்கள். எனவே, நொபெல் பரிசு இவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் என்பதால் இவர்களுக்கு இப்பரிசை வழங்கச் சொல்லி பாரிய பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

நோர்வேயின் சர்வதேச உதவிக் கொள்கை வகுப்பில் தற்போது முதனிலை வகிப்பது மனிதாபிமான உதவியென்பதால் இவ் வெள்ளைக் கவசக்காரர்களுக்கு வாய்ப்புண்டு. நோர்வே அரசாங்கக் கொள்கைக்கும் இப் பரிசுக்கும் பொதுவாக நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. நோர்வே சர்வதேச உதவியின் பிரதானமான இலக்காகச் சிறுமியரின் கல்வி அறிவிக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டு சமாதான நொபெல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது.

சிரிய நிலவரம், இன்று உலக முக்கியத்துவமுள்ள ஒரு கவனப் புள்ளியாகும். மேற்குலகு வெல்லமுடியாத போரொன்றைக் கடந்த பல ஆண்டுகளாக சிரியாவில் நடாத்தி வருகிறது. ரஷ்யாவின் பங்கு இதில் பிரதானமானது. இந் நிலையில் சிரியாவை நோக்கியதொரு பரிசு மேற்குலகிற்கு ஆறுதலானதும் இந்நிலையில் தேவைப்படுவதுமாகும். மேற்குலகு நெருக்கடியில் இருக்கையில் அதற்குப் பரிசு வழங்குவது சில சமயங்களில் நொபெல் கமிட்டியின் நடைமுறையாயிருந்துள்ளது.

அண்மைய ஓர் உதாரணம்: 2012 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கிய சமாதான நொபெல் பரிசாகும். இப்பரிசை அறிவித்த போது பொருளாதார ரீதியில் ஜரோப்பிய ஓன்றியம் தடுமாறியது. வேலையின்மைக்கும் தமது சமூகப் பாதுகாப்பைக் காவுகொள்ளும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான மக்கள் போராட்டங்களைக் பொலிஸ் துறையினர் வன்முறையால் அடக்கி, மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு எதிராக அராஜகம் கட்டவிழ்க்கப்பட்டது. ஜரோப்பிய ஓன்றியம் நொடித்த உறுப்பு நாடுகளை பிணையெடுத்தும் நெருக்கடி தொடர்ந்து மோசமாகுகையில், நொபெல் பரிசு தன் பங்குக்கு ஜரோப்பிய ஓன்றியத்தைப் பிணையெடுத்தது.

அவ்வாறே நெருக்கடியில் உள்ளவொன்றின் மீது கவனம்குவிக்கும் நோர்வே சர்வதேச உதவிக் கொள்கையின் முன்னிலை அம்சமாயுள்ள மனிதாபிமான உதவியை முன்னிறுத்தி இப்பரிசு வெள்ளைத் தலைக்கவசக்காரர்களுக்குப் போகலாம். கவனிக்க வேண்டியது யாதெனில், ரஷ்யா நோர்வேயின் எல்லை நாடாகும். ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பரிசை வழங்க நொபெல் பரிசுக் குழு துணியுமா என்பது கேள்விக்குரியது. 2010இல் சீன அரச எதிர்ப்பாளருக்கு வழங்கிய விருது சீன-நோர்வே உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தி, நோர்வேக்குப் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தியது. அதையொத்த இன்னொரு விரிசலை எல்லை நாட்டுடன் ஏற்படுத்த நோர்வே விரும்பாது. எனினும் இன்று நோர்வேயில் வலதுசாரி அரசாங்கம் ஆட்சியில் இருப்பதையும் அதற்கும் அமெரிக்காவுக்கும் கோட்பாடு ரீதியான நெருக்கம் அதிகம் என்பதையும் நினைவில் இருத்தல் தகும்.

ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பரிசை வழங்க நொபெல் பரிசுக் குழு தீர்மானித்தால் அதைப் பெரும்பாலும் ரஷ்ய மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஸ்வெட்லானா கனுஷ்கினா ஆவார். பல ஆண்டுகளாக ரஷ்ய அரசுக்கெதிரான மனித உரிமைப் போராளியாக மேற்குலக ஊடகங்கள் சித்தரிக்கும் இவர், அண்மைக் காலமாக அகதிகள் பிரச்சினையில் அகதிகளுக்காகப் பாடுபடுகிறார். அகதிகள் நெருக்கடி இன்று மொத்த ஐரோப்பாவையும் பாதிப்பதால் இவருக்குப் பரிசை வழங்குவதன் மூலம் பரிசுக் குழு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்த இயலும். முதலாவது அகதிகள் பிரச்சினையை முன்னிலைப்படுத்துவது; இரண்டாவது அகதிகளின் பெயரில் ரஷ்யாவைச் சங்கடப்படுத்துவது.

சமாதான நொபெல் பரிசுக்கு அடுத்தபடியாக வாய்ப்பு உள்நாட்டு யுத்தங்களால் பாதிக்கப்படும் பெண்கள் பற்றிய அக்கறையுடன் தொடர்புடையது. உள்நாட்டு யுத்தங்களில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்பட்டாலும், சமூகப் பாதிப்புகள் கருதி அது சர்வதேசக் கவனம் பெறுவதில்லை. பெண்கள் மீதான வன்முறை நோர்வே தனது கொள்கையாக உலகளாவிய கவனம் செலுத்தும் ஒரு விடயமாகும். எனவே கொங்கோ ஐனநாயகக் குடியரசில் கடந்த இரண்டு தசாப்தங்களாகப் பலத்த சவால்களுக்கு நடுவே பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகப் போராடிவருபவர்களுக்குப் பரிசு கிடைக்கலாம்.

கடந்த பத்து ஆண்டுகளில் சமாதானத்துடன் நேரடித் தொடர்பற்ற முக்கிய விடயங்களைக் குறிப்பாகப் பெண்கள் தொடர்பானவற்றை நொபெல் பரிசுக் குழு அங்கீகரித்துள்ளது. இவ்வகையில், கொங்கோ வைத்தியர் டெனிஸ் முக்வெகே கொங்கோ உள்நாட்டு யுத்தத்தின் போது பாலியல் வன்கலவிக்குட்பட்டு உறுப்புகள் சிதைந்த 40,000 க்கும் மேற்பட்ட பெண்களைச் சத்திரசிகிச்சை மூலம் காப்பாற்றி வாழ்வளித்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்காக இவருக்கு நொபெல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்தனர்.

நொபெல் பரிசுக் குழு, இம்முறை பாதுகாப்பான தெரிவுக்குச் செல்வதாயின் பரிசுக்கான வாய்ப்பு டெனிஸ் முக்வேகேக்கு அதிகம். நோர்வேயின் வெளியுறவுக் கொள்கையில் ‘யுத்தத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை’ முக்கிய இடம்பிடிப்பதால் கடந்த ஆண்டுகளை விட இவ்வாண்டு இவர் இப் பரிசைப் பெறும் வாய்ப்பு அதிகம். எனினும் அவருக்குத் மட்டும் பரிசை வழங்காது கொங்கோவின் தேவாலயங்களின் உதவியோடு இரண்டாயிரமாமாண்டு முதல் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பணிபுரியும் அன்னை ஜீன், அன்னை ஜெனட் எனும் ஜீன் நட்காசே பன்யேரி, ஜெனட் ககிண்டோ பிந்து ஆகிய இருவருக்கும் வைத்தியர் முகவெகேக்கும் இவ்விருது கிடைக்கலாம்.

இறுதி எதிர்வுகூறல் யாதெனில் நொபெலின் விருப்புறுதியில் ஆயுதக் கட்டுப்பாடு, ஆயுதக்குறைப்பு முயற்சிகள், பாதுகாப்பான எதிர்காலத்துக்கான முயற்சிகள் என்பன முக்கியமானவை என்பதால் ஈரானுடன் அணுசக்தி உடன்படிக்கை ஏற்பட வழிவகுத்த ஈரானிய அணுசக்தி நிறுவனத் தலைவர் அலி அக்பர் சலேஹிக்கும் அமெரிக்க வலுச்சக்தி செயலாளர் ஏர்னெஸ்ட் மொனிற்ஸுக்கும் வாய்ப்புண்டு என்பதாகும்.

மேற்சொன்ன ஜந்து தெரிவுகளில் ஒன்றுக்குப் பரிசு கிடைக்கும் வாய்ப்பு அதிகம். எனினும், பெரும்பாலும், பரிசை அறிவிக்க சில வாரங்களுக்கு முன்னரே பரிசுக்குரியோர் தெரிவாகிவிடுவர். அவ்வாறு கொலம்பியா தெரிவாகி கடந்தவார மக்கள் தீர்ப்பின் விளைவாக நொபெல் பரிசுக் குழு, தனது முடிவை மாற்ற நேர்ந்தால் பாதுகாப்பான தெரிவுக்கோ தனி ஒருவரின் தெரிவுக்கோ வாய்ப்பு அதிகம். அவ்வகையில் பாப்பரசர் பிரான்சிஸ் அல்லது அகதிகள் பிரச்சினையை மையப்படுத்தி மத்திய கிழக்கில் இருந்து வரும் அகதிகளைக் காக்கும் கிரேக்க குடியிருப்பாளர்கள், ஜேர்மன் அதிபர் அங்கெலா மேக்கல் ஆகியோரில் ஒருவர் தெரிவாகலாம்.

கடந்தாண்டு எதிர்பாராதவாறு, துனிசியாவின் தேசிய உரையாடலுக்கான நால்வர் குழுவுக்கு நொபெல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. அவ்வகையில் யாருமே எதிர்பாராத வகையில் பரிசு அமையலாம். நாளை மாலை இம்முறை இப்பரிசு யாருக்குரியது என்பது தெரிந்த பின் விவாதங்கள் சூடுபிடிக்கலாம். ஆனால், அவை குதிரைப் பந்தய முடிவின் பின்பான ஆய்வுகள் போன்றவை. பந்தயத்துக்கு முந்திய விவாதங்களின் சுவை அதில் இல்லை.