சர்வ தேச பெண்கள் தினம்

(Saakaran)

என் சகோதரி கண்டியிலும், அம்பாறையிலும், ஏன் ஏனைய இலங்கை பிரதேசம் எங்கும் தன் குழந்தைகளை அணைத்தபடி பயத்துடன் கடந்து செல்லும் இந்நாட்களில் நான் எவ்வாறு பெண்கள் தினவாழ்த்துகள் சொல்வேன். பல திசைகளில் இருந்தும் தரை, ஆகாய மார்க்கமாக இடைவிடாது ஆண்டுகளாக குண்டுகளைப் பொழியும் சிரிய தேசத்தின் சகோதரி என் மனக் கண் முன் வருபோது நான் எவ்வாறு பெண்கள் தின வாழ்த்து சொல்வேன். உலகமே திரும்பி பார்க்க மறுக்கும் ரோங்கியா பிரதேசத்திலும் யேமன் கந்தகப் பூமியில் எனது தாய் தனது குழந்தைகளை அணைத்தபடி மர ஓலத்தில் இருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கும் போது நான் எவ்வாறு பெண்கள் தின வாழ்த்து சொல்வேன்.

ஆபிரிக்க தேசத்தில் வறுமையிலும், அடிப்படை நீர்த் தேவைக்காக குழந்தையை ஒரு தோளி்லும், மறு தோளில் தண்ணீர் பாத்திரத்தையும் சுமந்து வலிகளுடன் வாழும் அந்த கறுப்பு தேவதையை நான் மறந்து பெண்கள் தினவாழ்த்து கூற முடியவில்லை. மதம் என்றும் மார்க்கம் என்றும் கட்டுப்பாடு என்றும் முகத்தை மூடி முழு உலகையும் மறைத்து சம உரிமை மறுக்கப்படும் என் இஸ்லாமிய சகோதரியை மறந்து பெண்கள் தின வாழ்த்து கூற என் மனம் இடம் கொடுக்கவில்லை. என் நண்பி வீதியில் பயமின்றி நடமாட முடியாத ‘ஜனநாயக’ தேசத்தின் தினசரி நிகழ்வுகளும் பெண்ணுரிமையை வென்றெடுக்கப் போராடிய பெரியாரின் சிலைகளை உடைப்போம் என்று புறப்பட்ட இந்து மத வெறியர்களின் செயற்பாடுகளை தகர்த்தெறியாமல் நான் எவ்வாறு பெண்கள் தின வாழ்த்துகள் கூற முடியும்.

 
பெண்களின் விசேட தேவை தினங்களிலும் ஓய்வு எடுக்க முடியாமல் அட்டைக் கடிகள் மத்தியில் மழை, வெயில், குளிர் பாராமல் தேயிலை கூடை சுமக்கும் நவீன அடிமைகளாகவாழும் எனது மலையகப் பெண்களை மறந்து நான் பெண்கள் தின வாழ்த்து கூறமுடியவில்லை. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று பாகுபாடின்றி ஆதி குடிகளை ‘முதல்தரக் குடிகள்’ என்று மகுடம் சூட்டி அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் இயற்கை வாழ் பெண்களை மறந்து எப்படி என்னால் பெண்கள் தினவாழ்த்து கூற முடியும்.
 
இறுதியாக 30 வருட யுத்தத்தின் போதும் யுத்தம் நிறுத்தப்பட்ட பின்பும் தனி ஆளாக குடும்ப சுமையை சுமக்க முடியாமல் அவச் சொற்களுக்கும், அவதூறுகளுக்கும், ஏன் ஒடுக்கு முறைக்குள் உள்ளாகும் இனத்திற்குள் இன்னும் ஒரு சமூக ஒடுக்கு முறைக்கு முகம் கொடுக்கும் என் இனத்து சகோதரிகளை நான் மறந்து பெண்கள் தின வாழ்த்துகள் கூற முடியுமா…?
 
ஏய் நவீனப் பெண்ணே கைத் தொலை பேசியும் நவநாகரீக உடையும் வீதியில் பவனி வருவதற்கு அனுமதியும் என்ற சுதந்திரம் உனக்கு இந்த சமூகம் வழங்கியிருக்கின்றது என்றால்….? அது உன்னை போதையூட்டும் பண்டமாக பார்பதினாலே! சக மனுஷியாக பார்பதினால் அல்ல!! விழித்தெழு நானும் உன்னுடன் கரம் கோர்க்கின்றேன் உன்னையும் இந்த சமூகத்தில் சக மனுஷியாக அங்கீகரிக்க கோரி போராடுவதற்கு……!