‘சலோ ஊனா’ நெடும்பயணம் வலியுருத்தும் அரசியல் பாடம் . . .!

தலித் மக்களின் சுயமரியாதைக்கான மாபெரும் எழுச்சி போராட்ட பயணம் (சுயமரியாதை பயணம்) குஜராத்தில், அகமதாபாத்தில் ஆகஸ்ட் 5ம் நாள் தொடங்கி பல கிராமங்களை கடந்து கிட்டத்தட்ட 81கி.மீ தொலைவு பயணித்து இன்றைய நாளில் (ஆகஸ்டு 15, 2016) ஊனாவை அடைகிறது. இது மதசார்பற்ற இந்திய நாடு, இந்து நாடு அல்ல என்று உணர்த்தும் வண்ணம் இந்திய கொடியை ஏற்றுகின்றனர். இதுகாறும் வன்கொடுமைகளுக்கும், இழிவாழ்விற்கும் ஆளான மக்கள் தன் விதியை தானே தீர்மானிக்க விடுதலை பாதையை நோக்கி வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுவும் இந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைப்பதாய் சொன்ன 56அங்குலம் மார்பை கொண்டிருக்கும் மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில்.

இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றதற்கு பிறகு வன்கொடுமைகளும், மத பாசிசப் போக்குகளும் வெளிப்படையாகவே நடக்க தொடங்கி இன்று நாட்டையே உலுக்கி கோரத்தாண்டம் ஆடுவதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ‘ஊனா’ என்ற இடத்தில் தலித் இளைஞர்கள் 7 பேர் பசுவை கொன்று அதன் தோலை எடுத்து சென்றதாக கூறி அவர்களை நடுவீதிவில் வைத்து பசு ஆர்வலர்கள் (மனித நேயமற்றவர்கள்) என்ற பெயரில் இருக்கும் இந்துத்வா அமைப்பினர் மிகக்கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் நம்மை கொதிப்படையை செய்கிறது. அவர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டதோடு மட்டுமல்ல, ஒரு காரில் கட்டி இழுத்து வரப்பட்டு, ஊனா காவல் நிலையம் எதிரில் உள்ள மெயின் மார்க்கெட்டில் அவர்களை நிற்க வைத்து அவமானப்படுத்தியுள்ளனர். இரும்புக் கம்பிகளாலும், ஸ்டீல் இரும்புக் குழாய்களாலும் அவர்களை அடித்திருக்கின்றனர். அதை வீடியோ படம் எடுத்து, முகநூலிலும் போட்டு மாட்டிறைச்சி விற்பவர்களுக்கும் உண்பவர்களுக்கும் இதே கதிதான் என்று அச்சுறுத்தியிருக்கின்றனர். இந்த சம்பவத்தால், தலித் இளைஞர்கள் பலர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனால் தான் ஜிக்னெஷ் மேவானி போன்ற இளைஞர்கள் ஒருங்கிணைந்து புரட்சிகர பேரணியும், மாநிலம் தழுவிய jignesh_mewani_0கடையடைப்புக்கு தலித் மக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலித் இளைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல கிராமங்களில் “தலித் சமூகத்தை சேர்ந்த மக்களாகிய நாங்கள், எங்களுக்கு இழிவு ஏற்படுத்தும் செத்த விலங்குகளின் பிணங்களை அகற்றும் தொழிலை இனி செய்யமாட்டோம்” என்று உறுதி எடுத்து வருகின்றனர். வரலாற்றின் தொடர்ச்சியாக ஆண்டாடு காலம் அடிமை வேலை செய்த மக்களின் ஒரு பகுதியான பரந்து பட்ட இச்சமூகம் இன்று தன் மீதான ஒடுக்குமுறையை கண்டு வெகுண்டெழுந்துள்ளது. இந்த புரட்சிகரமான போராட்ட பயணத்திற்கு ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் மக்கள் திரள்கிறார்கள். உறுதிமொழி ஏற்று வருகின்றனர். இந்த பயணத்திற்கு உழைக்கும் மக்களிடத்தில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. படேல் சமூகத்தை சார்ந்தவர்கள், இஸ்லாமியர்கள் என பலர் ஆதரித்து வருகின்றனர். இது அதிகாரவர்க்கத்தை குலை நடுங்க வைத்துள்ளது. அதன் எதிரொலி தான், குஜராத்தின் முதல்வர் மாற்றமும், மோடியின் கண்ணீர் நாடகமும். மோடி பதவியேற்றதிலிருந்து தலித் மக்கள் மீதான தாக்குதலை மோடி கண்டித்ததும் கிடையாது பேசியதும் கிடையாது. சுயமரியாதைக்கான போராட்டப்பயணத்தை அறிவித்து அப்பயணத்தின் 2-வது நாள் தான் மோடி என்னை சுடுங்கள், என்னை தாக்குங்கள் என்று சென்டிமென்ட் வசனம் பேசினார். இருந்தாலும் பாஜகவின் சுய ரூபம் மாயாவதியை கொச்சைப்படுத்தியதில் வெளிப்பட்டது. நாடாளுமன்றத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல கண்டித்து குரல் கொடுத்துள்ளன.

மாட்டிறைச்சி விற்றதற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள், ஆண்கள் என்று செய்திகள் பல வந்தவண்ணம் உள்ளன. இந்த தாக்குதல்கள் எல்லாம் மாட்டிறைச்சி என்ற பெயரால் மீண்டும் மனுதர்ம ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க முயன்று வருவதையே அப்பட்டமாய் காட்டுகிறது. வடமாநிலங்களில் மட்டுமல்ல தமிழகத்தில் சாதிவெறி இருப்பதை அனைவரும் அறிவோம். சமீபத்தில் “எங்களை திருவிழாவிலிருந்து ஆண்டாண்டு காலமாக புறக்கணிக்கும் சாதி இந்துக்களையும் இந்து மதத்தையும் நாங்கள் நம்ப விரும்பவில்லை. அதனால் மதம் மாறுகிறோம்” என்று 180 தலித் குடும்பங்கள் அறிவித்துள்ள செய்தியை நாம் அறிந்திருப்போம். இதேபோல கரூர் மாவட்டம் நாகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 70 தலித் குடும்பங்களும் இதேபோன்ற காரணத்திற்காக மதம் மாற முடிவு செய்துள்ளனர்.

மதம் என்பதே மனிதனுக்கு நல்ல வாழ்வியல் நெறிமுறைகளை சொல்லிக்கொடுப்பது தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்து மதம் அப்படி சொல்லித்தருகிறதா? என்றால் நிச்சயம் இல்லை. அதனால் தான் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் கூட “நான் பிறக்கும் போது இந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் இறக்கும் போது இந்துவாக இறக்கமாட்டேன்” என்று உறுதியேற்றார். அதன்படியே இந்து மதத்திலிருந்து வெளியேறினார்.

மதமும் அரசியலும் வேறு, மதம் அரசியலில் குறுக்கீடு செலுத்தாமல், மதச் சார்பின்மை, சகோதரத்துவம், சமத்துவம் கொள்கையை உட்கிடைக்கையாக கொண்ட உயரிய நோக்கில் தான் இந்திய அரசியல் அமைப்புச்சட்டம், உருவாக்கப்பட்டது. அதனால் தான் முன்னுரையில் (Preamble) கூட Secular State என்று வரையறுத்து வைத்துள்ளோம். ஆனால் இந்த  நடைமுறையில் இருக்கிறதா? 70 ஆண்டுகளாகியும் சமத்துவ சமூகத்தையும், சகோதரத்துவமான சூழலையும் உருவாக்க முடிந்துள்ளதா என்றால் நிச்சயம் இல்லை.

ஏட்டுச்சுரைக்காயாக இருக்கும் சட்டத்தில் இருக்கும் சமத்துவத்தை கூட சகிக்க முடியவில்லை காவி இயக்கங்களால். இந்துத்வாவிற்கு ஆதரவாக சட்டங்களை இயற்றுவதும், மாற்றுவதுமாய், இந்தியாவை இந்துத்வா நாடாக மாற்ற துடிக்கின்றனர் பா.ஜ.கவினர்.

இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்று விடுதலைக்காக பாடுபட்ட போராட்டவீரர்களை நினைவுபடுத்தி அவர்களை போற்றுகிறோம். ஆனால் அந்த சுதந்திர காற்று சக மனிதர்களுக்கு கிடைக்கிறதா? காற்று சாதி பார்ப்பதில்லை. ஆனால், இந்து சமூகம் மலம் அள்ளும் இழிதொழிலைக் கூட சாதி பார்த்து குறிப்பிட்ட சமூகத்தின் மீது திணித்து வருகிறது. (பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்த பணியாளர்கள் குறித்த எண்ணிக்கை நமக்கு தெரியுமா?) உழைக்கும் மக்களின் உணவு உரிமையில் கூட தலையிட்டு மாட்டிறைச்சி சாப்பிடாதே என்று கடும் தாக்குதல் செலுத்தி வருகிறது. பன்முக தன்மைவாய்ந்த நாட்டில் ஒரு சாராரின் கருத்தை மற்றவர்களின் மீது திணித்து, சாதிய ஏற்றத்தாழ்வுகளை உயர்த்தி பிடிக்கும் பாஜகவிற்கும் இந்துத்வா அமைப்புகளுக்கும் சுதந்திரத்தைப்பற்றி பேச தகுதி இல்லை.

மாடு புனிதம் என்றால், வேத காலங்களில் மாட்டிறைச்சியை சாப்பிட்டார்களே பிராமணர்கள்.. அப்போது அவர்களுக்கு தெரியவில்லையா அவர்களுக்கு மாடு புனிதம் என்று? வேதங்களில் மாட்டிறைச்சி பாடல்கள் வருகிறதே.. வேதங்களில் தவறாக சொல்லப்பட்டிருக்கிறதா? இந்துமதத்தின் ஆணி வேரான வேதங்களே பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை நெய்யில் வறுத்து ருசித்து சாப்பிட்டதாக சொல்கிறது. ஆனால் இந்த 21ம் நூற்றாண்டிலோ உழைக்கும் மக்களான தலித் மக்களிடத்தில் வந்து மாட்டிறைச்சி சாப்பிடாதே என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று நாம் கேள்வி கேட்க வேண்டாமா?

குஜராத்தில் ஆரம்பித்த தலித் மக்களின் மீதான தாக்குதல், வெறும் மனிதர்கள் மீதான தாக்குதல் அல்ல! இது இந்த நாட்டின் மீது நிகழ்த்த எத்தணிக்கும் இந்துத்வாவின் பண்பாட்டு திணிப்பு. சாதி மாறி காதலிக்கக்கூடாது, கல்வி கொள்கையில் சமஸ்கிருத திணிப்பு, மாணவர்களுக்கு இந்துத்வா பண்பாட்டைத் திணிப்பு இவையெல்லாம், இந்த நாட்டை இந்து நாடாக மாற்றத்துடிக்கும் வெளிப்பாடு. அது மெல்ல மெல்ல மற்ற மாநிலத்திற்கு பரவ முயற்சிக்கிறது. தமிழகத்திலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. நாடு முழுதும் இஸ்லாமிய மக்களை எதிர்களாக சித்தரித்து இந்த வேலைகள் நடந்து வருகின்றன.

அதை தமிழகத்தில் உள்ள தலித் மக்கள் உணரவேண்டும். தமிழகத்தில் கம்யூனிச இயக்கங்களை, பெரியாரிய அமைப்புகளை, தலித் இயக்கங்களை, பிரித்தாளும் சூழ்ச்சியை நாம் அவதானிக்கலாம். இதற்கு பலியாகாமல் சுயமரியாதை போராட்டங்கள் முளைத்த தமிழகத்தில் மீண்டும் சுயமரியாதைக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

இந்து மதம் நம்மை அடிமை என்று சொல்லும் மதம். இவர்கள் இந்த வேலைகள் தான் செய்ய பணிக்கப்பட்டவர்கள்என்ற கொள்கையை கொண்டிருக்கும் மதம். அதை உணர்ந்து அடிமைத் தளையை அறுப்போம். எத்தனை நாட்கள் தான் அடிமை வாழ்வை வாழ்வது. ஓர் அடிமை, தான் அடிமை என்று உணராத வரை விடுதலை இல்லை.

எங்களுக்கான சமூக நீதி கிடைக்காவிட்டால், நாங்கள் எங்கள் பணிகளை செய்யமாட்டோம், என்று தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் வேளை நிறுத்தத்தில் ஈடுபட்டும் குரல் கொடுத்தால் இந்த நாடு என்னவாகும்? தங்கள் உழைப்பின் பலத்தை அறியாமல் ஒடுக்கப்பட்ட சமூகம் தன் உரிமை இழந்து கிடக்கிறது.

குஜராத்தின் போராட்ட சுடரை நம் நெஞ்சில் ஏற்றுவோம்.. நம்மையும் அந்த விடுதலை சுடரில் அர்ப்பணித்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்து சமூக விடுதலையை வென்றெடுப்போம். தெலுங்கானாவின் எழுச்சி போல, ஊனாவின் முழக்கம் நாடெங்கும் பரவட்டும்!

– வேந்தன்.