சிரித்துச் சிரித்தே செத்தொழிகிறது சிறுபான்மை இனம்

கண்டிக்கலவரத்தின் தொடர்ச்சியாய்
உயிரோடு ஒரு முஸ்லிம் வாலிபன் சிங்களக்காடையர்களால் எரித்துக்கொல்லப்பட்டிருக்கிறான் இதைக்கண்டு சில தமிழர்கள் சந்தோசமடைந்து பதிவுபோடுகின்றனர். முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டு எரியூட்டப்படுவதைக்கண்டு சிலர் கைகொட்டி ரசிக்கின்றனர். சபாஷ் இப்பிடித்தான் செய்யோனும் சோனிக்கு என்று சிங்களவனுக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

1958 ஆம் ஆண்டுதொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரை தமிழர்களுக்கு எதிராக இந்தச்சிங்களம் எத்தனை கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டு எத்தனை ஆயிரம் மக்களை துடிக்கத்துடிக்க கொன்று குவித்ததென்று நீங்கள் மறந்துவிட்டீர்களா?

குட்டிமணி தங்கதுரையின் கண்களை உயிரோடு பிடிங்கியதும் தமிழ்ப்பெண்களின் மார்பில் பழுக்கக்காச்சிய கம்பிகளால் சிங்கள சிறீ குத்தப்பட்டதும் பச்சைக்குழந்தையை கொதிக்கும் தார்ப்பீப்பாய்க்குள் தோய்த்தெடுத்து வெறியாட்டம் ஆடியதும் இதே சிங்களம்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

2006 ஆம் ஆண்டு திருகோணமலையிலும் காலியிலும் தமிழர்களின் கடைகள் வீடுகள் தேடித்தேடி சூறையாடப்பட்டதே அதற்குள் மறந்துவிட்டீர்களா? 2009 இல் கைகள் கட்டப்பட்ட நிலையில் அம்மணமாக்கி முள்ளிவாய்க்காலில் எம்மவர்களை சுட்டுக்கொன்றதும் எம் இனப்பெண்களின் மார்பை அறுத்து மானபங்கப்படுத்தி கூட்டுவன்புணர்வு செய்து துடிக்கத்துடிக்க கொன்றதும் இதே சிங்கள வம்சம்தானே?

நேற்று நீங்கள் இன்று முஸ்லிம்கள் நாளை நீங்கள் இப்படியே தொடர்ச்சியாய் மாறி மாறி சிங்களம் தன் வல்லாதிக்கத்தை சிறுபான்மை இனத்தின் மீது செழுத்திக்கொண்டேதான் இருக்கும் முள்ளிவாய்க்காலில் தமிழன் அழிக்கப்பட்டதை காத்தான்குடியில் வெடிகொளுத்தி கொண்டாடினான் முஸ்லிம். இன்று கண்டியில் முஸ்லிம் எரிக்கப்படுவதை கைகொட்டி ரசிக்கிறான் தமிழன் நாளை தமிழன் எரிக்கப்படுவான் முஸ்லிம் சிரிப்பான் இலங்கைத்தீவில் சிறுபான்மை இனங்கள் இப்படிச்சிரித்துச்சிரித்தே செத்தொழிந்துபோகும்…

வேதனையுடன்:- சு.பிரபா!