சிரிய அகதிகள்: அடுப்புக்கும் பானைக்கும் நடுவே

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அகதி வாழ்வின் அவலம் சொல்லி மாளாது. போரின் முதற்பலி, உண்மை. ஆனால், அதன் இறுதிப் பலி அகதி. வீடு திரும்ப இயலாது, அந்நிய மண்ணில் அலைதலே வாழ்க்கையாகி, நிச்சயமின்மையே நிச்சயமாகிவிடும் துயரத்தை யாரிடம் சொல்ல முடியும். அகதி என்ற அடையாளம் அனைத்தையும் அழித்துத் துடைத்துவிட்ட பின், வாழ்க்கை என்னவோ திரிசங்கு நிலைதான். சிரியாவிலும் சூழவும் ஏற்பட்டுள்ள போரும் பேரழிவும், பல இலட்சக்கணக்காணோரை அகதிகளாக்கியுள்ளன. மத்திய-கிழக்கு, வட-ஆபிரிக்க நாட்டவர்கள் தங்கள் உயிர்களைக் காப்பதற்காகச் சொந்த இடங்களிலிருந்து பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர். அவர்களிற் பெரும்பாலோர் சிரியாவைச் சேர்ந்தவர்கள்.

சிரிய அகதிகளில், கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் சிறார்களும் குழந்தைகளும் ஆவர். இது அகதி நெருக்கடிக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. சிறார்கட்கான உணவு, அவர்களுடைய போசாக்கை உறுதிப்படுத்த இயலாமை, கல்வியின்மை என, ஏனையோரை விட அதிகம் பாதிப்புக்குள்ளாவோராக இச்சிறார்கள் உள்ளனர். சிரியாவைப் பொறுத்தவரை, இது மோசமான நீண்டகால விளைவுகளை உண்டாக்க வல்லது. அகதிகள் நெருக்கடியில் சிறார்களின் பக்கம் பொதுவாகக் கவனம் பெறுவதில்லை.

2011ஆம் ஆண்டு தொடங்கிய சிரிய யுத்தத்தின் விளைவாக, இதுவரை 48 இலட்சம் சிரியர்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். ஜோர்தான், லெபனான், ஈராக், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளில் 45 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரிய அகதிகள் உள்ளார்கள். ஐரோப்பாவினுட் புகுந்த சிரிய அகதிகளின் தொகை ஒரு இலட்சத்தினுங் குறைவாகும். மத்திய கிழக்கின் பலம் பொருந்திய ஐந்து வளைகுடா நாடுகளான சவூதி அராபியா, கட்டார், குவைத், பஹ்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன ஓர் அகதியையேனும் ஏற்கவில்லை.

மேலும், ஐ.நாவின் அண்மைய அறிக்கைப்படி, சிரியாவினுள் 70 இலட்சம் சிரியர்கள் இடம்பெயர்ந்து அகதிகளான வாழ்கிறார்கள். எல்லாமாக, 135,000 சிரியர்கட்கான அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. சர்வதேச மன்னிப்புச் சபைப் புள்ளிவிவரப்படி, இதுவரை, சிரிய அகதிகளில் எல்லாமாக, 162,151 பேர் மட்டுமே பல்வேறு நாடுகளில் அகதித் தகுதி பெற்றிருக்கிறார்கள். இது சிரியாவினின்று வெளியேறிய அகதிகளில் 3.6 சதவீதம் மட்டுமே.

மத்திய கிழக்கு அகதிகளின் தொகையால் இன்று ஐரோப்பிய ஒன்றியம் ஆட்டங் கண்டுள்ளது. ஆனால், இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகட்குட் புகுந்தவர்களின் தொகை, மொத்த அகதிகளின் தொகையில்; 10 சதவீதத்துக்கும் குறைவானது. கடந்தாண்டு மட்டும் ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றுள் நுழைய, ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு இறந்தவர்களின் தொகை 3,811 ஆகும். இதற்கிடையில், ஐரோப்பாவினுள் நுழைந்த அகதிகளைத் திருப்பி அனுப்புவது பற்றிய வாதங்கள் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளன. இவை, ஐரோப்பிய நாடுகளின் பொதுவான அகதிக் கொள்கையில் மாற்றத்தைக் குறிப்பதோடு, ஐரோப்பிய மக்களின் பொதுப்புத்தியிலும் கணிசமான தாக்கஞ் செலுத்தியுள்ளன.

புதுவருட நள்ளிரவில், ஜேர்மனியின் கொலோன் நகரிலும் பிற நகரங்கிலும் பெண்கள் மீது அகதிகள் பாலியல் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இது அகதிகள் மீதான இரக்கவுணர்வை வெறுப்பாக மாற்ற முற்பட்டது. இச்சம்பவம் ஜேர்மனியில் மட்டுமன்றி, முழு ஐரோப்பாவிலும் அகதிகளுக்கு ஆதரவான மனநிலையை மாற்றப் பெரும் பங்காற்றியதுடன் பாசிஸ சக்திகள் மேலும் எழுச்சிபெறவும் அகதிகளை வரன்முறையன்றுத் தாக்கவுமான நியாயத்தைக் கட்டமைத்தது. இதையடுத்து, அகதிகளைத் திருப்பி அனுப்புவது பற்றிய கொள்கைகளைப் பலநாடுகள் ஆலோசித்து வருகின்றன.

சுவீடன், புகலிட மனு மறுக்கப்பட்ட 80,000க்கும் மேற்பட்ட அகதிகளைத் திருப்பி அனுப்புவதாகக் கடந்தமாதம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு முதல், புகலிடங் கோரல் விதிகளையும் எல்லைக் கட்டுப்பாட்டையும் சுவீடன் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

அகதிகளை உள்வாங்குவதில் மனிதாபிமானத்துடன் நடக்கும் ஒரு நாடாக நீண்டகாலமாக அறியப்பட்ட சுவீடனின் இக்கொள்கை மாற்றம், வெறுமனே சுவீடனுக்கு மட்டும் பொருந்துவதல்ல. இது, பலவாறான நெருக்கடிகளை எதிர்நோக்கும் ஐரோப்பிய நாடுகளின் அச்சங் கலந்த நிச்சயமின்மையின் வெளிப்பாடே.

ஐரோப்பா முழுவதும் எதேச்சாதிகாரத்தை நோக்கிக் திரும்புவதாகவும், ஐரோப்பிய அரசாங்கங்கள் இதனை அகதி நெருக்கடிக்கான பதிலாக நியாயப்படுத்துவதாகவும் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அகதிகளின் வருகை, இவ்வளவு காலமும் நடைமுறையில் இருந்த மனித உரிமைப் பாதுகாப்புக்களை மீளப்பெறுமாறு அரசுகளை உந்தியிருக்கிறது எனவும் அது மேலுங் கூறியுள்ளது.

ஐரோப்பாவில் உள்ள சிரிய அகதிகளின் நிலையினும் அண்டை நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் அகதிகளின் நிலை மோசமானது. அண்டை நாடுகளிற் தஞ்சமடைந்த அவர்கள், அகதி முகாம்களிலும் தற்காலிகக் கூடாரங்களிலும் மாட்டுத் தொழுவங்களிலும் களஞ்சிய அறைகளிலும்; என எங்கே இடம் கிடைக்குமோ அங்கெல்லாம் வதிகிறார்கள். கடுங் குளிர், அவர்கள் எதிர்நோக்கும் பெரிய சவால். லெபனானில் வாழும் சிரிய அகதிகளில் 75சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மிகு வறுமையில் வாடுவதாகத் தெரிகிறது. பெரும் தொகையான சிரிய அகதிகள், ஜோர்தானில் அமைந்துள்ள அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். இப்போது அங்கு தண்ணீர்ப் பற்றாக்குறை பெரிய நெருக்கடியாயுள்ளது.

இம் முகாங்களில் வாழும் மக்களுக்கு அன்றாட உணவே பெரிய போராட்டமாயுள்ளது. வேலை வாய்ப்புக்கள் இல்லாமல், ஒரு வேளை உணவை உறுதிப்படுத்தற்கே அவர்கள் போராடுகிறார்கள். வாழ்வாதாரங்களையும் சேமிப்புக்களையுயும் இழந்து வந்த இவர்களிடம் வாழ்வைத் தொடர்தற்கான எதுவித மூலங்களும் இல்லை.

அதே வேளை, பெற்றோரைப் பிரிந்த 500 சிறார்களைத் தங்கவைத்துள்ள பிரான்ஸின் ‘கிளாசில் காட்டில்’ சிறார்கள் பாலியல் துன்புறுத்தல்கட்கு ஆளாகியுள்ளதாக வெளியாகியுள்ள அறிக்கைகள், இந்நெருக்கடியை இன்னொரு கோணத்தில் நகர்த்தியுள்ளன. அதேவேளை, தனித்துள்ள சிறார்கள் தாக்குதல்களுக்கும் கடத்தலுக்கும் ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகமென, ஐக்கிய நாடுகள் சிறார் அமையம் கவலை தெரிவித்துள்ளது. இதைப்பற்றி பெல்பாஸ்ட் டெலிகிராப் வெளியிட்டுள்ள நீண்ட புலனாய்வுக் கட்டுரை, யாருமற்றுத் தனியே ஐரோப்பாவுக்குள் நுழைந்த அகதிச் சிறார்களில்; 10,000 பேர் வரை காணாமற் போயுள்ளனரெனும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரத்தை வழங்கியுள்ளது.

கடந்த வாரம் உலக வங்கி வெளியிட்ட அறிக்கை, சந்தைப் பொருளாதார உலகில் அகதிகள் எவ்வாறு ஒரு பண்டமாக நோக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஜோர்தானில் உள்ள அகதி முகாம்கட்கு அருகாகத் தனியார் முதலீடுகளை நிறுவப் பல்தேசியக் கம்பெனிகள் முன்வர வேண்டும் என்றும் அதன்மூலம் அகதிகளின் உழைப்பை மலிவாகப் பெறலாம் என்றும் அதனால் அகதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த உலக வங்கித் தலைவர் ஜிம் யொங் கிம், ‘நானும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனும் ஜோர்தான் அரசர் அப்துல்லாவும், ஜோர்தானில் சிறப்புப் பொருளாதார வலயங்களை உருவாக்குவது பற்றிக் கலந்துரையாடினோம். பெருங் கம்பெனிகள் இங்கு தொழிற்சாலைகளை அமைக்க வசதிகள் மேற்கொள்ளப்படும். அவற்றுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படும். இது இடம்பெயர்ந்த அகதிகட்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்கும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பொருளாதார வலயங்கள் உருவாவது புதிதல்ல. ஆனால், இத்தகையவற்றில் இடம்பெறும் வன்முறை, உழைப்புச் சுரண்டல், தொழிற்சட்டங்கள் இன்மை, குறைந்த ஊதியம் என்பன நன்கறிந்தவை. மனிதாபிமான உதவி செய்யத் தனியார் துறையைத் தூண்டல் என்ற போர்வையில் மிக நொடிந்துள்ள அகதிகளைச் சுரண்டப் புதிய உபாயங்கள் உருவாகின்றன.

இவை யாவும் சிரியப் போர் ஏன் நடக்கிறது என்ற கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன. சிரியப் போரை அமெரிக்கா ஏன் தொடக்கி நடாத்துகிறது என்ற காரணத்தை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கெனடியின் சகோதரின் மகனான ரொபெட் கெனடி அண்மையிற் தெரிவித்திருந்தார். அவரது விளக்கம் இந்நெருக்கடியை விளங்குதற்கான இன்னொரு பரிமாணத்தை வழங்குகிறது.

அரபு வசந்தம் ஏற்படப் பலகாலத்துக்கு முன்பு, 2000ஆம் ஆண்டளவில் அமெரிக்கா தனக்கு நெருக்கமான மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், சவூதி அரேபியா, ஜோர்தான், சிரியா, துருக்கி ஆகியவற்றினூடாக தனது எண்ணெயைக் கொண்டுபோதற்கான எண்ணெய்க் குழாய்வழித் திட்டமொன்றை முன்மொழிந்தது. இது ஐரோப்பியச் சந்தையில் கட்டாரின் எண்ணெயை விற்பதற்கான அடிப்படைகளைக் கொண்டிருந்தது.

இத்திட்டத்துக்கு சிரியா உடன்படவில்லை. சிரியா உடன்பட மறுத்ததால் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாகவிருந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, ஜிகாதிகளை உருவாக்கி, சிரியாவில் ஆட்சி மாற்றமொன்றை கொண்டு வர அமெரிக்க நினைத்ததாக ரொபேட் கென்னடி தெரிவிக்கிறார். திட்டம் நிறைவடைந்திருந்தால் எண்ணெய் கடத்தும் மத்திய நிலையமாக அமையவிருந்த துருக்கிக்கும் அதனால் வருமானம் இருந்திருக்கும்.

சிரியாவின் மறுப்பு, துருக்கியின் வருமானம் ஈட்டும் கனவை தகர்த்ததுடன், ரஷ்யா, ஈரான் ஆகியவற்றுக்கு மாற்றான ஒரு எண்ணெய் விநியோக நாடாக கட்டார் உருவாவதை மறித்துள்ளது. எனவே, சிரியாவில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்த அமெரிக்கா, கட்டார், துருக்கி போன்ற நாடுகள் முயல்கின்றன என்ற முடிவை எட்டலாம்.

இப்போது, சிரியாவில் நடைமுறைக்கு வந்துள்ள யுத்த நிறுத்தம் சிரியாவின் தோல்வியின் விளைவல்ல. மாறாக, ரஷ்ய விமானத் தாக்குதல்களின் உதவியுடன் சிரியப் படைகள் ஜ.எஸ்.ஜ.எஸ் கைப்பற்றிய பல நகரங்களை மீட்டுள்ளன. ஜ.எஸ்.ஜ.எஸ் மெதுமெதுவாக தனது இறுதியை எட்டுகிறது. களச் சமநிலையில் இவை குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதுவே சிரியாவில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரக் களமமைத்தது.

யுத்த நிறுத்தம் அகதிகள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாரம் இடம்பெறவுள்ள தீர்வு நோக்கிய நகர்வுக்கான பேச்சுக்களே அவர்களின் மீளலையும் வாழ்வையும் உறுதிப்படுத்தும். பூகோள அரசியல் எனும் சூதாட்டத்தில் காய்களாய் உருட்டப்படுவோர் அப்பாவி மக்கள்தான். சிரிய அகதிகள் விலக்கல்ல.