சிறுபான்மை மக்களை அரவணைத்து நடந்தாலே சிறிசேன ஆட்சியும் நிலை பெற்று நீடிக்கும்!

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை சிறுபான்மை மக்களே கவிழ்த்தனர், அதே போல நல்லாட்சி அரசாங்கம் நிலைக்கப் பெறுவதும், கலைக்கப்படுவதும் சிறுபான்மை மக்களின் மனங்களை அது வெற்றி கொள்வதிலேயே தங்கி நிற்கின்றது, ஆகவே தமிழ் பேசும் மக்களை நல்லாட்சி அரசாங்கம் அரவணைத்து நடக்க வேண்டும் என்று ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தேர்தல் தொகுதி அமைப்பாளரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளரும், பிரபல அறிவிப்பாளருமான ஏ. ஆர். எம். ஜிப்ரி தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்படுகின்ற முஸ்லிம் கூட்டமைப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அங்கம் வகிக்குமா?
பதில்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வீழ்த்துதல், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றுதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக வைத்து கொண்டே முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது என்பது எனது அவதானம் ஆகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வீழ்த்த வேண்டிய தேவை மக்கள் காங்கிரஸுக்கு இல்லை. எமக்கான மக்கள் பிரதிநித்துவத்தை பெற்று மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும். நாம் கடந்த பொது தேர்தலில் தனித்து அம்பாறை மாவட்டத்தில் முதல் தடவையாக போட்டியிட்டு எடுத்த எடுப்பிலேயே 33,000 வாக்குகளை பெற்றமை மாபெரும் சாதனை ஆகும். அத்துடன் எமக்கான மக்கள் ஆதரவை இது காட்டி நிற்பதோடு எமது எதிர்கால வெற்றிகளை கட்டியமும் கூறுகின்றது. எமது தலைவர் றிசாத் பதியுதீனின் வழிகாட்டல், அறிவுறுத்தல் ஆகியவற்றுக்கு அமைய கடந்த இரு வருடங்களாக மகத்தான மக்கள் சேவைகளை கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வருகின்றோம். ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த 17 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்ட பணிகளை காட்டிலும் இரு வருடங்களிலும் நாம் ஆற்றி இருக்கின்ற பணிகள் பல மடங்கு அதிகமானவை. இதனால் குறுகிய கால பகுதிக்குள் மிக பெரிய அங்கீகாரம் எமக்கு கிடைக்க பெற்று உள்ளது. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் கூட்டணியில் தேர்தல் கேட்க வேண்டிய அவசியம் மக்கள் காங்கிரஸுக்கு கிடையாது.
ஆனால் இது வரை காலமும் ஏமாற்றப்பட்டு விட்டதாக மக்கள் தெரிவித்து அவர்களுக்கான விடுதலையை பெற்று தர ஒன்று சேருங்கள் என்று ஒருமித்து குரல் கொடுக்கின்ற பட்சத்தில் நாம் கூட்டமைப்பில் சேர்வது குறித்து பரிசீலிக்க, ஆலோசிக்க முடியும்.
கேள்வி:- முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குகின்ற முன்னெடுப்புகளில் ஈடுபட்டு உள்ள முக்கியஸ்தர்கள் உங்கள் தலைவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர் என்றும் அவை நம்பிக்கை ஊட்டின என்று பின்னர் தெரிவித்து உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளனவே?
பதில்:- எமது தலைவரும், கூட்டமைப்பை உருவாக்குகின்ற முயற்சிகளில் ஈடுபட்டு உள்ள முக்கியஸ்தர்களும் நிந்தவூரில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சேவை நலன் பாராட்டு விழாவில் விருந்தினர்களாக கலந்து கொண்டு ஒரே மேடையில் காணப்பட்டனர். இதை அடுத்தே சமூக இணைப்பு தளங்களில் படங்களுடன் பரபரப்பு செய்திகள் வெளியாகின. கூட்டமைப்பில் இணைகின்ற தீர்மானத்தை மக்கள் காங்கிரஸ் எடுக்கவே இல்லை. மக்கள் காங்கிரஸின் உயர்பீடத்தில் அவ்வாறான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவே இல்லை.
தனிப்பட்ட முறையில், உத்தியோகபூர்வம் அற்ற வகையில் கருத்து பரிமாற்றங்கள் ஒரு வேளை இடம்பெற்று இருக்க கூடும், ஆனால் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவே இல்லை என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
கேள்வி:- அம்பாறை மாவட்டத்துக்கு தேசிய பட்டியல் வழங்குவார் என்று கடந்த பொது தேர்தலில் றிசாத் பதியுதீன் வாக்குறுதி வழங்கி இருந்தார். இவ்விடயத்தில் இவரும் ரவூப் ஹக்கீம் போலவே நடந்து கொள்கிறாரா?
பதில்:- எமது கட்சியின் செயலாளராக இருந்த வை. எல். எஸ். ஹமீத் அவசரப்பட்டு விட்டார். தலைமையை நெருக்குவாரம் செய்யாமல் ஜமீல் பொறுமையுடன் காத்திருக்கின்றார். எமது தலைவர் உரிய நேரத்தில் அம்பாறை மாவட்டத்துக்கான தேசிய பட்டியலை யாரோ ஒருவருக்கு வழங்குவார் என்பதில் சந்தேகப்பட தேவை இல்லை.
கடந்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸுக்கு பாராளுமன்ற ஆசனம் ஒன்று கிடைத்திருந்தால், இன்னொரு தேசிய பட்டியலும் கட்சிக்கு கிடைத்து இருக்கும். அப்போது இக்கேள்வியை நீங்கள் கேட்கும்படி நேர்ந்திருக்காது.
அம்பாறை மாவட்டத்துக்கான தேசிய பட்டியலை தலைவர் இன்னமும் வழங்கி இராதபோதிலும் அவருடைய அமைச்சுக்கு உட்பட்ட நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளை வழங்கி இருப்பதன் மூலம், அவற்றின் மூலமான சேவைகளை அம்பாறை மாவட்ட மக்களுக்கு கிடைக்க செய்து உள்ளார்.
கேள்வி:- கிடைத்த தேசிய பட்டியலை புத்தளம் மாவட்டத்துக்கு வழங்கி விட்டாரே?
பதில்:- புத்தளம் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் நிறைய சந்தர்ப்பங்களில் தவற விடப்பட்டிருக்கின்றது. எனவே எமது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலை புத்தளத்துக்கு கொடுப்பதை நியாயமாகவே எமது கட்சியின் உயர்பீடம் கண்டு கொண்டது. உயர்பீட உறுப்பினர்கள் எந்தவொரு எதிர்ப்பும் காட்டி இருக்கவில்லை.
கேள்வி:- முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் வடக்குக்கான விஸ்தரிப்பு, வன்னி விஜயம் ஆகியன குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- அதாவுல்லா கடந்த காலங்களில் அதிக அதிகாரங்களுடன் விளங்கிய ஒரு அமைச்சர். மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திலும் மிகுந்த செல்வாக்குடன் காணப்பட்டவர். அப்போதெல்லாம் இவர் அக்கரைப்பற்றுக்கு அப்பால் சிந்தித்து இருக்கவில்லை. கடந்த பொது தேர்தலில் இவரின் வாக்கு வங்கி சரிந்து இருந்தது. இந்நிலையில் புதிய தேர்தல்களுக்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டு உள்ள நிலையில் அவரின் பேரம் பேசும் சக்தியை கூட்டுவதற்காகவும், பிரசித்தி அடைவதற்காகவும் உடனடியாகவே படங்கள் காட்ட தொடங்கி உள்ளார்.
கேள்வி:- தேர்தல் முறைமை மாற்றப்படுகின்றபோது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியிலும், றிசாத் பதியுதீனின் எழுச்சியிலும் தளர்ச்சி நேரும் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனரே?
பதில்:- இது சிறுபான்மை கட்சிகள் எல்லாவற்றுக்கும் ஏற்பட கூடிய பொதுவான பிரச்சினையே ஆகும், மக்கள் காங்கிரஸுக்கு மாத்திரமான பிரச்சினை அல்ல. சிறுபான்மை மக்களுக்கான பிரதிநிதித்துவம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதே கருத்திலும், கவனத்திலும் கொள்ளப்பட வேண்டிய விடயம் ஆகும். எனவே சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் கருத்தொருமித்து இவ்விடயத்தில் செயற்பட வேண்டி உள்ளது.
கேள்வி:- வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து என்ன சொல்கின்றீர்கள்?
பதில்:- 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஜே. ஆர் – ராஜிவ் ஒப்பந்தத்தின்படி நிரந்தர இணைப்பு, பிரிப்பு ஆகியன சம்பந்தமாக ஒரு வருடத்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கடைசியாக நீதிமன்ற தீர்ப்பின்படி இரண்டாக பிரிக்கப்பட்டு இரு மாகாண சபைகள் தனித்தனியாக இயங்குகின்றன.
இதன் மூலம் சேவைகள் வினைத்திறன்கள் ஆக்கப்பட்டு உள்ளன. நிர்வாக கட்டமைப்புகளில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் விசேடமானவையும், தனித்துவமானவையும் ஆகும். இரு மாகாணங்களும் நீதிமன்ற தீர்ப்பின்படி பிரிக்கப்படுவதற்கு முன்பே பிரிப்பை வலியுறுத்துகின்ற பல அடிப்படைச் சம்பவங்கள் நடந்தேறி விட்டன.
கடந்த கால பிரச்சினைகளுக்கும் இதுவே தீர்வாக இருக்கும். இதுவே முஸ்லிம் மக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. அத்துடன் எமது கட்சியின் நிலைப்பாடும் இதுவே ஆகும். ஆகவேதான் வடக்கு வடக்காகவே இருக்கட்டும், கிழக்கு கிழக்காகவே இருக்கட்டும் என்று எமது தலைவர் பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றார்.
நாட்டில் உள்ள ஏனைய மாகாணங்கள் அனைத்தும் தனித்து இயங்குகின்றபோது ஏன் வடக்கும், கிழக்கும் தனித்து இயங்க முடியாது? இணைப்பு பற்றி பேசுவது பெரும்பான்மை மக்கள் மத்தியில் பல கிலேசங்களை உருவாக்கி விடும். மேலும் நாட்டில் உள்ள உள்ளூராட்சி அலகுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாகாணங்களின் இணைப்பு பற்றி பேசுவது அர்த்தம் அற்றது.
கேள்வி:- வில்பத்தில் உள்ள முஸ்லிம் குடியிருப்புகளை வனத்துக்குள் உள்வாங்குகின்ற விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டு இருந்தாரே?
பதில்:- ஜனாதிபதியுடன் எமது தலைவர் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளார். இப்பேச்சுக்களில் தலைவரால் முன்வைக்கப்பட்ட நியாயங்களை ஏற்று கொண்ட ஜனாதிபதி விரைவில் நல்ல தீர்வு தருவார் என்றும் வில்பத்து முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவார் என்றும் உறுதிமொழி அளித்து உள்ளார். இதை நாம் அம்மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.
மேலும் பெரும்பான்மை மக்களின் சிறிய கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி போன்றவற்றுக்கும், சிறுபான்மை மக்களின் சிறிய கட்சிகளான டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி போன்றவற்றுக்கும் வில்பத்து முஸ்லிம்கள் தொடர்பான தெளிவூட்டல்களை நாம் மேற்கொண்டு உள்ளோம்.
கேள்வி:- பொதுபலசேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து நீங்கள் கூறுவது என்ன?
பதில்:- இன விரோத செயற்பாடுகளை பொதுபலசேனா ஆரம்பித்த உடனேயே, குறிப்பாக தர்ஹா நகர கலவரத்தை தொடர்ந்தேனும் அந்த அமைப்பை அன்றைய அரசாங்கம் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். அவ்வாறு நடந்து இருந்தால் இவரின் தலையீடு இவ்வளவுக்கு நீடித்து இருக்காது.
பெரும்பான்மை மக்களை கவர்வதற்காக இவர்களுக்கு மஹிந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆதரவு வழங்கினார்கள். இதனாலேயே இவ்வமைப்பு பெரிதாக வளர்ந்தது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் சில அமைச்சர்கள் இவர்களுக்கு பின்புலத்தில் உதவிகள் செய்வதாக தோற்றப்பாடுகள் தெரிகின்றன.
இருப்பினும் இவர்களின் செயற்பாடுகளை நிரந்தரமாக முடக்குவதில் சாதுரியமாக அரசாங்கம் செயற்படும் என்று நாம் நம்புகின்றோம்.
கேள்வி:- நல்லாட்சியின் போக்கு குறித்து என்ன சொல்கின்றீர்கள்?
பதில்:- இது ஒரு புதிய ஆட்சி முறைமையை கொண்டிருப்பதால் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. பாரம்பரியமாக இருந்து வந்த ஆட்சி முறைமையுடன் ஒப்பிடுகின்றபோது சில பாதகமான அம்சங்களை அவதானிக்க முடிகின்றதுதான்.
ஆனால் இந்நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம், எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றை அடைய வேண்டுமாயின் சவால்களை வெற்றி கொண்டு நல்லாட்சி நீடித்து நிலைக்க வேண்டும். நல்லாட்சி நீடிப்பதற்கு இரு கட்சிகளும் புரிந்துணர்வோடு செயற்படுதல் வேண்டும். இக்கூட்டாட்சி நீடிக்கின்றபோது இன முறுகல்கள், அரசியல் குழப்பங்கள் போன்றன இல்லாமல் போய் புரிந்துணர்வு, நல்லிணக்கம், ஐக்கியம், சக வாழ்வு, சகோதரத்துவம், நீடித்த சமாதானம் ஆகியவற்றுடன் கூடிய அமைதி சூழல் நிலவும். அனைத்து நல்ல விடயங்களுக்கும் அமைதி சூழலே அடிப்படை ஆகும்.
நல்லாட்சியில் ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து ஞானசார தேரரின் காரசாரம் குறைந்து போய் உள்ளது. சட்டம், ஒழுங்கு, நீதி ஆகியன உண்மையாகவே நிலைநாட்டப்படுகின்றபோது பொதுபலசேனா நிலை குலைந்து படிப்படியாக செயல் இழந்து விடும்.
நல்லாட்சி இப்போதுதான் ஆரம்ப நிலையில் உள்ளது. தவழ்கின்ற நிலையில் இருந்து தற்போதுதான் எழுந்து நடக்க தொடங்கி உள்ளது. மிகுதி கால செயற்பாடுகளிலேயே இதன் எதிர்காலம் உள்ளது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவின் மீளெழுச்சியும் சரி, நிரந்தர வீழ்ச்சியும் சரி நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை சார்ந்தே உள்ளது.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை சிறுபான்மை மக்களே கவிழ்த்தார்கள். அதே போல இந்நல்லாட்சி நிலைக்கப் பெறுவதும், கலைக்கப்படுவதும் தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் அரவணைத்து நடப்பதிலேயே தங்கி உள்ளது.
கேள்வி:- நீதிமன்றத்துக்கு கல் எறியப்பட்டாலும் சரி, போதைப் பொருள் கடத்தப்பட்டாலும் சரி உங்கள் சத்திய தலைவர் மீதுதானே குற்றம் சுமத்தப்படுகின்றது?
பதில்:- முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினைகள் வருகின்றபோது பதவிகளை துச்சம் என்று மதித்து எந்த இடத்திலும் நிமிர்ந்து நின்று துணிந்து குரல் கொடுப்பவராக எமது தலைவர் றிசாத் பதியுதீனே உள்ளார். தலைவர் அஷ்ரப்புக்கு பிற்பாடு துணிச்சலான தலைவர் இவர்தான் என்று இனம் காணப்பட்டு உள்ளார். காய்க்கின்ற மரத்துக்கு கல்லெறிகள் விழுவது இயல்பான விடயம்தான்.
சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை இவரை போன்ற ஒருவராலேயே தீர்த்து கொடுக்க முடியும். கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற ஏனைய இடங்களில் இவருக்கான மக்கள் ஆதரவு பல்கி பெருகி வருகின்றது. அம்பாறை மாவட்ட முஸ்லிம்களும் இவரின் தலைமைத்துவத்தையே ஏற்று அங்கீகரிக்க வேண்டியது மிக மிக அவசியம். அம்பாறை மாவட்டத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மக்கள் காங்கிரஸ் மூலமாக பெற்று பயன் அடைதல் வேண்டும்.

(ரி. தர்மேந்திரன்)