சிறுமி ஆசிபா குறித்துகள் பற்றி ஜானகி

Dharani Akil அவர்களின் பதிவிற்கு பதிலளிக்க முயன்றேன். நீண்டதானாலோ, வேறு காரணத்தினாலோ பதிவேற்ற முடியாததால் இங்கு பதிவு செய்கிறேன்.

நியாயமான கருத்துக்கள் அடியுண்டு போய்விடாமல் இருக்கவும், பிழையான விளக்கங்களைத் தவிர்ப்பதற்கும், Dharani உங்கள் பதிவிற்கு சில மாற்றுக் கருத்துக்களை பகிர வேண்டிய அவசியத்தை உணர்கிறேன்.

முக்கியமாக சிறுமி ஆசிபாவினது கோரப் படுகொலைதான் அதிகளவில் பரபரப்பான ஊடக செய்திகளையும், முகநூல் பதிவுகளையும் ஏற்படுத்தியது. எனது பதிலும் அதைச் சார்ந்தே இருக்கும்.

நான் வெளிநாட்டில் வாழ்பவள், இந்தியாவின் முந்நாள் பிரஜையல்ல, ஆனால் ஆசிபா போல் சிறுமியாக இருந்து, வளர்ந்து பெண்ணாகி, இன்று வயதில் முதிர்ந்தவளானவள். ஆசிபாவிற்கு நடந்தது கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாத கோர சம்பவம், மனச்சாட்சியுள்ள எவராலும் ஜீரணிக்க முடியாத ஒன்று. அச்சம்பவம் பெண்களுக்கு கவலை ஏற்படுத்தியது என்பதற்கு மேலாக ஆத்திரத்தையே மூட்டியுள்ளது.

//சமீப காலங்களில் நடந்த கொடூரங்களுக்கு இந்தியாவின் அனைத்து ஆண்களும் காரணம் இல்லையே? இந்தியாவின் ஜனத்தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே செய்யும் கொடும் பாதகச் செயல்களுக்கு இந்திய நாடு முழுமையும், மீதம் உள்ள தொண்ணூற்றொன்பது சதவீதமும் அவப்பெயர் வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. // என்பது உங்கள் கருத்தாக இருந்தது.

பகிரப்பட்ட பல கருத்துகளும், ஊடகச் செய்திகளும் ஆசிபாவின் சம்பவம் மூடி மறைக்கப்பட்டது பற்றியும், குற்றவாளிகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காதது பற்றியும் அதிகளவில் இருந்தன. இதற்குப் பொறுப்பாக இருந்த அரசின் பிரதிநிதிகள், அநேக நாடுகளில் உள்ளது போல், அதிக எண்ணிக்கையான ஆண்களின் வாசஸ்தலமாக இருந்தும், இந்த வன்முறையில் ஈடுபட்டவர் அனைவரும் ஆண்களாக இருந்ததாலும் கருத்துக்களும், எதிர்ப்பும் ஆண்களைக் குறிவைத்து இருந்திருக்கலாம். இதற்குப் பொருத்தமான ஆண்கள் தொப்பியை மாட்டிக் கொள்ளலாம். ஆனால் சில பொருத்தமற்ற ஆண்கள் சினங் கொள்வதும், வரிந்து கட்டி எதிர்க்கணை தொடுப்பதும், தாமும் குற்றவாளிகளாகப் பார்க்கப் படுகின்றனர் என நினைப்பதும் அநாவசியம்.

//மற்ற நாடுகளில் இது போல் எந்த செயலும் நடைபெறுவது இல்லை என்பது மட்டும் சாத்தியமா?//

ஏனைய நாடுகளிலும் நடந்தால், சட்டம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்துவார்கள்.

//இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வெளி நாடுகளில் பலர் கூச்சலிடுவது வருத்தம் தரும் விஷயமாக உள்ளது.//

சில நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்துவது, ஒழுங்குதாரருக்கும், பங்கேற்பவருக்கும் பாதுகாப்பு இல்லையென்பதால், வெளிநாடுகளில் தம்முடன் கருத்தில் இணைந்தவர்கள் ஊடாக அதைக் கொண்டு நடத்துவது சகஜம். ஆசிபாவின் கேஸை எடுத்து நடாத்த முன்வந்த பெண்மணிக்கு பாதுகாப்பில்லை என்று அறியப்பட்டது. அவர் சந்தித்த தடைகள், இடர்கள் அதிகம்.

இந்திய அமைச்சர் இச்சம்பவம் பற்றி வெளியே தெரிந்தால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என்று சில மாதங்களாக அதை மூடி மறைக்கத் தீர்மானித்துள்ளார். அவருக்குப் புரிந்துள்ளது அதன் கனதியும், எதிர்த்தாக்கமும். உலகமயமாக்கலில் பெரும்வர்த்தகர்கள் பலனடையும் போது, சிறுமி ஆசிபாவிற்கான நியாயத்திற்கும் உலகமயமாக்கிய எதிர்ப்பு கொஞ்சம் பொசியட்டுமே! ஆசிபாவிற்கும் அதற்கு முன்பும், பின்பும் தொடர்ந்து நடந்த, நடக்கும் நிகழ்ச்சிகளும், அதற்குக் கூறப்படும் காரணங்களும், சட்டத்தின் அசட்டையான தன்மையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனும் பிரதிபலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. இந்தியாதான் அதைத் திருத்த வேண்டும்.

//நமது சட்டங்களில் ஒரு மென்மைத்தனம் இருப்பது இந்த சமூக விரோதிகளுக்கு சாதகமாய் போனது மட்டுமே உண்மை.//

இதுவரை கருத்துகளும், செய்திகளும் சட்டங்களில் உள்ள மென்மைத்தனத்தைவிட, அரசியல் பிரதிநிதிகளினதும், வேறு பொறுப்பானவர்களினதும் பொய்மைத்தனத்தைத் தான் காரசாரமாக கண்டித்தன.

ஆரம்பத்தில் எனது கருத்து ஆசிபா எனும் சிறுமி, குரூரமான காடையர்களினால் வன்முறைக்குள்ளாகி கொலையுண்டார். மனிதர்களை மனிதர்களாக வாழ மனிதர்கள் அனுமதிக்கிறார்கள் இல்லை. இந்த வரையறைக்குள்ளே இல்லாமல், அரசியலையும், மதத்தையும் திணித்து நியாயத்தின் கோரிக்கையை மறுப்பவர்கள் அனைவரும் விமர்சனத்திற்குள்ளாவர். அதை மறுப்பவர்களும் விமர்சிக்கலாம். ஆனால் அதற்கான காரணம், நியாயத்தின் கோரிக்கையை மறுப்பதாக இருக்கக் கூடாது.

அரசியல் மக்களுக்கானது. சிலருக்கு அதன் அனுகூலங்கள் வாழ்க்கையில் நேரடியாக தேவையில்லாதது போல் இருந்தாலும், மறைமுகமாக ஏதோவொரு தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும்.

(Janaki Karthigesan Balakrishnan)