சீமானும் லீகுவான்யூ உம்

சிங்கப்பூரில் புலிகளின் பெயரை சொல்லி நிதி சேகரித்த நாம் தமிழர் கட்சியினர் நாடுகடத்தப் பட்டனர்! ஆனாலும் அடிமைகளிடம் மானத்தை எதிர்பார்ப்பது மடமைத்தனம். சிங்கப்பூர் சர்வாதிகாரி லீகுவான்யூ மறைந்த நேரம், சீமான் அவரை “தமிழர்களின் நண்பன்” என்று புகழ்ந்து அஞ்சலி செலுத்தினார்.

இறுதிப்போருக்கு முன்னரே புலிகள் இயக்கத்தை தடைசெய்து, ஆயுதக் கப்பல்களையும் காட்டிக் கொடுத்த லீகுவான்யூவை போற்றிப் புகழ்பாடும் போலித் தமிழ்தேசியவாதிகள் பற்றி அப்போதே ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். சிங்கப்பூர் அரசின் சுயரூபம் தெரியாமல் சென்று மாட்டிக் கொண்ட, “நாம் வெகுளித் தமிழர்” கட்சியினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்று நான் எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:
//லீகுவான்யூ “தமிழர்களுக்கு ஆதரவாக” பேசி விட்டாராம். மகிந்த ராஜபக்சே பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேசியதைப் போன்று தான் இதையும் பார்க்க வேண்டும். தங்களது நாடுகளில் மக்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கும் சர்வாதிகாரிகள், பிற நாட்டுப் பிரச்சினையில் நடுநிலையாளராக காட்டிக் கொள்வார்கள். இவர்கள் முன்வைக்கும் “தீர்வுகளும்” ஏகாதிபத்திய நலன்களுக்கு உட்பட்ட தீர்வுகள் தான் என்பதை சொல்லத் தேவையில்லை.

லீகுவான்யூ தமிழர்களின் நண்பன் என்று சொல்லிப் பெருமைப்படும் போலித் தமிழ்த் தேசியவாதிகள், இதே லீகுவான்யூ தான் புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்தார் என்ற உண்மையை மறைப்பது ஏனோ? புலிகளை அழிப்பதற்கான இறுதிப்போர் நடந்த காலத்தில், புலிகளின் ஆயுதக் கடத்தல் கப்பல்களை காட்டிக் கொடுத்ததில் சிங்கப்பூர் கடற்படைக்கும் பங்கிருந்ததை மறந்து விட்டார்களா? புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்த சிங்கப்பூர் பிரஜையை அமெரிக்காவில் பிடித்துக் கொடுக்க உதவிய விடயம் தெரியாதா?

(Kalai Marx)