சுந்தர் எனும் தோழனாய்

ஒரு வருசம் கடந்து போனது உன் நினைவில்.எப்படி இன்னும் நம்ப மறுக்கிறது மனம் ,கடந்து செல்லும் நினைவுகள் ,காலம் எனும் கடலில் நாம் கரைந்து போகும் என்பார்கள்.எல்லாம் நிஜமாய் எப்போதும் நம்முள். 1974 முதல் சந்திப்பு தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து ”ஈழ விடுதலை இயக்கம் ” (தமிழீழ விடுதலை இயக்கமல்ல) மகிழ்த்த நேரம்,சேனையூர் மகாவித்தியாலய ஆசிரியர் விடுதியில் ஆசிரியர் புலோலியூர் .தா.ஜெயவீரசிங்கம் அவர்களோடு அன்னலிங்க அய்யா,தங்க மகேந்திரன் அத்தோடு சுந்தரும்.ஈழவிடுதலை இயக்க பரப்புரைக்கு புறப்படுகிறோம் .சம்பூரில் தோடம் பழம்,கிளிவெட்டியில் தவகுமார்,கங்கு வேலியில் கிருபா,பட்டித்திடலில் கவிஞர் ,வீரப்பா,மல்லிகைத்தீவில் சுரேஸ்,பள்ளிகுடியிருப்பு,பச்சநூல் ,கூனித்தீவு ஈச்சலம்பத்தை, என கொட்டியாரத்தின் கிராமங்கள் தோறும் பலநூறு பேரின் அணி சேர்ப்பு.நடந்தே கழிகிறது எங்கள் பயணம் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் எங்களோடு இணைகின்றனர்.

ஒவ்வொரு கூட்டத்திலும் சுந்தரின் கரகரத்த குரல் ஒலிக்க தொடங்கும் ”1936ம் ஆண்டு பரன் ஜயதிலகாவின் தனிச் சிங்கள மந்திரி சபை ” என இன வெறி அரசியலை அறிமுகப் படுத்தும் அவர் பேச்சு அனைவரையும் கட்டிப்போடும் அழகு எல்லாம் இப்போது போல் உள்ளது.இதே நாட்களிலேயே தோழர் புஸ்பராஜாவும் அறிமுகமாகிறர்.அத்தோடு தோழர் முத்துக் குமாரசாமி,தோழர் பத்மநாபா,தோழர் வரதராஜப்பெருமாள் அறிமுகங்கள் நீண்டன.
திருகோனமலையில் நமக்கு திருமதி பிலோமினா லோரன்ஸ் மிகுந்த உதவியாக இருந்தார் .திருகோணமலை மாவட்டத்தின் எல்லா கிராமங்களுக்கும் நம் பயணம் தொடர்ந்தது, தம்பலகாமம் ஆலங்கேணி திரியாய் தென்னமரவாடி என எங்கும் நீயும் நானும் பயணித்தோம் தோழா.

அது உன்மையான ஈழவிடுதலைக்கான பயணம்.சுய நலமற்ற, போலித்தனமற்ற அர்ப்பணிப்புடனான பயணங்கள்.பின்னாளில் பலர் அதனை இலகுவாக அறுவடை செய்தனர். ஆரம்ப விதைகளை நாம் ஊன்றினோம். ஈழவிடுதலை இயக்கம் ஈழப் புரட்சியமைப்பாய் தோற்றம் பெற்ற போது மூதூர்பிரதேசம் நம் இயக்கத்தின் தொட்டிலாய் உருமாறுகிறது.பல நூறு இளைஞர்கள் அணி திரள்கிண்றனர். ஆணித்தரமான உன் பேச்சு எல்லோரையும் ஈர்க்கிறது. இராசகிளி, சிவானந்தராஜா, நாகேஸ்வரன், இரத்தினசிங்கம், தருமன், சுதா, ஜெகன், மொட்டையன், காளி, என நீளும்நம் தோழர்கள் கூட்டம்

தோழர் இரத்தின சபாபதி,பாலகுமார் மூதூர் வருகின்றனர் அவர்களுடன் நீயும்.. ”எரிமலை ”பத்திரிகை நம் கொள்கை விளக்கங்களை தாங்கி வருகிறது. தொடர்ந்து ”தர்க்கீகம்”அதன் வரவு தோழர்களிடமும் பொது மக்களிடமும் புதிய தாக்கத்தை உருவாக்குகிறது.”நாம் ஈழவர் நமது மொழி தமிழ் நம் நாடு ஈழம்” என்ற கோசம் வலுப் பெறுகிறது இதன் பின்னணியில் உன் பெரும் பங்களிப்பு. களம் மாறுகிறது நீ இந்தியா செல்கிறாய் பல்கலைக்கழகம் செல்கிறேன் நான். அங்கும் நம் தோழமை நீள்கிறது.

(Balasigam Sugumar)