செவ்விந்தியக் காந்தி.

லட்சக்கணக்கில் வாழ்ந்துவந்த
பல்வேறு செவ்விந்திய இனக்குழு மக்கள் – வெள்ளையன் கால்வைத்த
இருபத்தைந்து ஆண்டுகளில்
ஆயிரங்களாய்க் குறுகி அருகிப்போனார்கள்.

கொத்துக்கொத்தாய்க் செத்துவீழ்ந்த வெள்ளந்திமக்களின் பூமியை –
வாழ்க்கையை – உரிமைகளைப் பறித்துத் தமதாக்கிக்கொண்டார்கள் ஐரோப்பியர்கள்.

ஐரோப்பியர்களை எதிர்த்துப் போரிடமுடியாத அப்பாவிச் செவ்விந்தியர்கள் ஒரு கட்டத்தில் பணிந்தும், அனுசரித்தும் போகவேண்டிவந்தது .

ஏறத்தாழ நாம் வெள்ளைக்காரனிடம் மண்டியிட்ட கதைதான்.

அங்கும் ஒரு காந்திதான்
தோன்றினான் என்பேன்.

செவ்விந்தியக் காந்தி.

அந்த மனிதனின் பண்பும் நடைமுறையும் தீர்க்கதரிசனச் சிந்தனையும் எனக்கு காந்தியையே நினைவூட்டுகின்றன.

அந்தத் தலைவன் பெயர் ஸீயாட்டில் .

CHIEF SEATTLE என்று வரலாறு குறிக்கிறது.

அமெரிக்காவின் செவ்விந்தியப்
பழங்குடிக் குழுக்களின் தலைவன்.

அவன் பழங்குடி மக்களைச் செழுமைப்படுத்தினான். அமெரிக்க ஆதிக்கவாதிகளுடன் நல்லெண்ணப் பேச்சுவார்த்தைகள் நடத்தினான்.
செவ்விந்திய ரத்தம் மென்மேலும் பூமியில் வீழக்கூடாது என்று தவித்தான்.

தம் நிலங்களை வந்தேறிகளுக்கு எழுதித்தர ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயம் நேர்ந்தபோது –
அந்த மாதலைவன் ஆற்றிய உரை வரலாறின் தங்கப் பக்கங்களில் இருக்கிறது.

“ஆறுகளிலும், நதிகளிலும் தாவி வரும் தண்ணீர் வெறும் நீரல்ல. அது எங்கள் முன்னோர்களின் இரத்தம். நாங்கள் உங்களுக்கு நிலத்தை விற்றால் – இந்த நீர் புனிதமானது என்ற நினைவு உங்களுக்குத் தொடர்ந்து இருக்க வேண்டும் ”

என்று குருதியும் கண்ணீரும் தோய உரைக்கப்பட்ட அவ்வுரை பூமியை நாம் எப்படி அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச்செல்லவேண்டுமென இன்றைய மனிதர்களான நமக்கும் வகுப்பெடுக்கிறது.

“மனிதன் என்பவன் இந்த பூமியின் உயிரிகளில் ஓர் இழை மட்டும்தான். இந்த பூமிக்கு மனிதன் இழைக்கும் ஒவ்வொரு செயலையும் அவன் தனக்கேதான் இழைத்துக் கொள்கிறான் என்பதை மறந்துவிடக்கூடாது”

-என்று 1800ஆம் ஆண்டுகளில் சொல்லிவிட்டுப்போன
‘ சீஃப் ஸீயாட்டில் ‘
தலைவனுக்கான ஓர் சரித்திர சாசனம்.
மண்ணை எவ்வாறு நேசிக்கவேண்டும்
என்பதற்கான மானுட ஆவணம்.


நீங்கள் இங்கே பார்க்கிற புகைப்படம்தான் ஸீயாட்டிலின் ஒரே புகைப்படம்.
1884 இல் சம்மிஸ் என்பவரால்
எடுக்கப்பட்ட புகைப்படம்.