சொன்னதைச் செய்யாத இடதுசாரிகள்

(க. திருநாவுக்கரசு)
கொள்கைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படும் கட்சி என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பத்திரிகை கிண்டல் செய்தது. இப்போது அந்தக் கஷ்டத்திலிருந்து அந்தக் கட்சியும் வெளியே வந்துவிட்டது. மாநிலக் கட்சிகளுடன் கைகோத்து தேசியக் கட்சியான காங்கிரசை பலவீனப்படுத்துவது பொதுவாக, மார்க்ஸிஸ்ட்களின் அரசியல் உத்தி. இன்று திரிணமூல் கட்சியைத் தோற்கடிக்க காங்கிரசுடன் கைகோர்க்கும் அவலமாய் அது தலைகீழாகியிருக்கிறது. 1930-களில் பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறையால் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக இயங்க முடியாமல் காங்கிரசுக்குள்ளிருந்து செயல்பட்டார்கள். அதோடு ஒப்பிட்டால் ஒரு வகையில் முழுச் சுற்று சுற்றிவந்திருக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள்.

இடதுசாரிகள் 2009 நாடாளுமன்றத் தேர்தல் முதலாக தொடர்ந்து சரிவுகளைச் சந்தித்துவருகின்றனர். இது இடதுசாரிகளாக இல்லாதவர்களுக்கும் கவலை தரும் விஷயம். ஆனால், மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வருவ தற்காக இதுவரை தனது பரம எதிரியாகக் கருதிவந்த காங்கிரஸ் கட்சியுடனும் மேற்கு வங்கத்தில் கைகோக்க மார்க்சிஸ்ட் கட்சி தயங்கவில்லை என்பது அந்தக் கட்சி மேற்கொண்டுள்ள ஏற்றுக்கொள்ள முடியாத சமரசம்.

திமுக பாணி சமரசம்

2004-ல் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்காக காங்கிரசுக்கு இடதுசாரிகள் ஆதரவு தந்தபோது அதை யாரும் சமரசமாகவோ, தவறானதாகவோ பார்க்கவில்லை. மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதில் பிற கட்சிகளைவிட இடதுசாரிகள் அதிகம் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், திரிணமூல் காங்கிரசுக்கு எதிராக காங்கிரசுடன் மார்க்சிஸ்டுகள் கைகோத்திருப்பது என்பது அதிமுகவை எதிர்க்க பாஜகவுடன் திமுக கைகோத்ததற்கு எந்த வகையிலும் வேறுபட்டதல்ல.

ஆனாலும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகியுள்ள மம்தா பானர்ஜியின் பெரும் வெற்றியை இந்தக் கூட்டணியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இடதுசாரிகள் எவ்வளவு பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சி இது. இந்தக் கூட்டணி ஒருக்கால் வெற்றியைத் தந்திருந்தாலும் அது சந்தர்ப்பவாதக் கூட்டணி என்ற உண்மையை மாற்றி விட முடியாது.

கண்ணை விற்று சித்திரம்

மேற்கு வங்கத்தின் இடதுசாரித் தலைவர்களில் பலர் மேற்கு வங்கம்தான் அவர்களது உலகம் என்பதுபோலச் செயல்படுவதை சமீபத்தில் மறைந்த சிறந்த பத்திரிகையாளரும் அறிவுஜீவியுமான பிரபுல் பித்வாய் இடதுசாரி கட்சிகளின் எதிர்காலம் பற்றிய தனது புத்தகத்தில் கூறியிருப்பது முற்றிலும் உண்மை என்பதையே இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி நிரூபிக்கிறது.

விசாகப்பட்டினத்தில் நடந்த மார்க்ஸிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ‘புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், இந்துத்துவா சக்திகள் ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போராடுவது, இவற்றைக் பிரதிநித்துவப் படுத்தும் காங்கிரஸ், பாஜக கட்சிகளை எதிர்த்துப் போராடுவது’ என்று முடிவு செய்தது. அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு நடந்த கொல்கத்தா சிறப்பு மாநாட்டில் ‘விசாகப்பட்டின மாநாட்டின் அரசியல் உத்தியின் அடிப்படையில் அரசியல் சூழலில் ஏற்படும் வேகமான மாறுதல்களுக்கு ஏற்றவாறான நெளிவுசுளிவான உத்திகளைக் கடைபிடிப்பது’ என்று முடிவெடுத்தார்கள்.

இந்த இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் இந்திய அரசியலில் எந்த வேகமான மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால் மார்க்ஸிஸ்ட் கட்சியின் மேற்கு வங்கக் கிளை இது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறது. சுவரிருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்; கட்சியின் இருப்பே ஆபத்துக்குள் ளாகியிருக்கும்போது இத்தகைய சமரசங்கள் தவிர்க்க முடியாதவை என்று மார்க்ஸிஸ்ட்கள் சொல்லக்கூடும்.

ஆனால் உண்மை நிலை அதுவல்ல. மேற்கு வங்கத்தில் பலமான வாக்கு பலத்துடன் இருப்பவை இடதுசாரிக்கட்சிகள். கட்டுக்கோப்பான கட்சியமைப்பையும் கொண்டவை. இந்த அளவுக்கு வலிமை இருக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் இருப்பே ஆபத்துக்குள்ளாகிவிட்டதாகச் சித்தரிப்பது அவர்கள் மேற்கொள்ளும் நியாயப்படுத்த முடியாத சமரசத்தை மறைப்பதற்கான முயற்சி மட்டுமே. சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்று வாதிடலாம். அது உண்மையும்கூட. ஆனால் கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்குவது என்பது அபத்தத்தின் உச்சம்.

1980-களிலிருந்தே கம்யூனிஸ்டு கட்சிகள் தங்களது அரசியல் செயல்பாடுகளில் தேர்தல்களுக்கு அதீதமான முக்கியத்துவத்தை அளித்துவருகின்றன. மார்க்ஸிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை 1970-கள் வரை அக்கட்சி தனது தொழிற்சங்க, விவசாய அணிகள் மூலம் கொள்கைகளின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டிப் போராட்டங்கள் நடத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.

ஆனால், இன்று எல்லா முதலாளித்துவக் கட்சிகளையும் போலத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வருவது என்பதையே மார்க்ஸிஸ்ட்களும் தங்களது லட்சியக் கொள்கையாகக் கடைபிடிப்பது தெரிகிறது. கட்சிக்காக கொள்கைகள் என்பது கிடையாது. கொள்கைகளுக்காகத்தான் கட்சி. கட்சிக்காகத்தான் கொள்கை என்றால் அந்தக் கட்சிக்கும் லாபத்தையே நோக்கமாகக் கொண்ட கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

லெனினை மறந்தவர்கள்

சில சமயங்களில் சில சமரசங்கள் அவசியமே. சமரசங்கள் பற்றி லெனின் பேசியுள்ளார். ‘‘ஒரு புரட்சிகரமான கட்சியின் பணி என்பது எந்தவொரு சமரசத்தையும் செய்துகொள்ள மாட்டோம் என்று பிரகடனப்படுத்துவது அல்ல. மாறாக சமரசங்கள் தவிர்க்கப்பட முடியாத நிலையில், எல்லாச் சமரசங்களுக்கும் நடுவில் தனது கொள்கைகளுக்கும், தனது வர்க்கத்துக்கும், தனது புரட்சிகரமான நோக்கத்துக்கும், புரட்சிக்கு வழிகோலுவதற்கான தனது பணிக்கும், புரட்சியில் வெற்றியடைய மக்கள் திரளுக்குக் கற்பிப்பதற்கும் அந்தக்கட்சி உண்மையாக இருப்பதே’’ என்றார் அவர் லெனினை மறந்துவிட்டார்கள் கம்யூனிஸ்ட்கள்!

கடந்த 30 ஆண்டுகளில் பல சமரசங்களால் ஏற்கெனவே நீர்த்துப்போயிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இத்தகைய மோசமான சமரசங்களால் மேலும் மேலும் நீர்த்துப்போகவே செய்யும். திமுக, அதிமுக, சமாஜவாதி போன்ற மாநிலக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்ததன் மூலம் கம்யூனிஸ்ட்கள் பலவீனப்பட்டது மட்டுமே மிச்சம். இத்தகைய கூட்டணிகள் மூலம் மக்களுக்கான உண்மையான ஜனநாயகப் புரட்சியை வென்றெடுக்க முடியாது என்பதே கடந்த 50 ஆண்டு கால அரசியல் படிப்பினை.

வரும் காலகட்டங்களில் கம்யூனிஸ்ட்கள் செய்யக் கூடியது ஒன்றே. கேரளத்தில் கிட்டியிருக்கும் வெற்றி மார்க்ஸிஸ்டுகளுக்குச் சற்று ஆசுவாசத்தை அளிக்கலாம், ஆனால் அதுவும் நிரந்தரமானதல்ல என்பதை அவர்கள் மனதில் நிறுத்த வேண்டும். தேர்தல் லாபங்களுக்காக முஸ்லிம் மத அடிப்படைவாத சக்திகளுடன் அவ்வப்போது கைகோப்பது, இந்துக்களின் ஆதரவைப் பெற கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது போன்ற அரசியல் உத்திகளை இடதுசாரிகள் பின்பற்றுவது கேரளாவில் பாஜக வளரவே உதவும். கேரளத்திலும் சரி மேற்கு வங்கத்திலும் சரி இடதுசாரிகளின் ஆட்சியால் தலித் மக்கள் அடைந்த பலன்கள் சொற்பம் என்பதையும் மனதில் கொண்டு இடதுசாரிகள் தங்கள் எதிர்காலத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

தங்களது தனிப்பட்ட வலிமையைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்காக மக்களை அணி திரட்டி இயக்கங்கள் நடத்துவதன் மூலமே இது சாத்தியம். இதைத்தான் மார்க்ஸிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் அரசியல் உத்தி பேசியது. ஒன்றும் செய்ய வேண்டாம். தனது சொந்த வார்த்தைகளையே இடதுசாரிக் கட்சிகள் குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கட்சி பின்பற்றினால் போதும். அது அந்தக் கட்சிக்கும், மக்களுக்கும் நல்லது!

– க. திருநாவுக்கரசு. சமூக-அரசியல் விமர்சகர்,