ஜனநாயகம் பிழைத்திருக்கிறது தற்காலிகமாகவேனும்!

கர்நாடகத்தில் முதல்வராகப் பதவியேற்ற வேகத்தில் ராஜினாமா செய்திருக்கிறார் எடியூரப்பா. ஜனநாயகம் தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்திருக்கிறது. 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்ட மன்றத்தில் 222 இடங் களுக்குத் தேர்தல் நடந்தது. 104 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தாலும், ஆட்சி அமைப்பதற் கான எண்ணிக்கை அதனிடம் இல்லை. மாறாக, 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸின் ஆதரவுடன், 37 தொகுதிகளில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதற்குப் போதிய எண்ணிக்கையுடன் ஆளுநரை அணுகியது. மஜத தலைவர் குமாரசாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்திருக்க வேண்டியதே ஆளுநர் வஜுபாய் வாலா எடுத்திருக்க வேண்டிய சரியான முடிவு. ஆனால், குமாரசாமியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, அந்த வாய்ப்பை பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு வழங்கினார் ஆளுநர். கூடவே, பெரும்பான்மை வலுவை நிரூபிக்க தாராளமாக 15 நாட்கள் அவகாசமும் எடியூரப்பாவுக்கு அளித்தார் ஆளுநர்.

எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அடாவடியான நடவடிக்கை இது. எதிர்க்கட்சிகளிலிருந்து தங்கள் தரப்புக்கு ஆட்களை இழுக்க, பாஜகவுக்கு வெளிப்படையாக ஆளுநர் உருவாக்கிக்கொடுத்த வாய்ப்பு இது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக அல்லாமல், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக் கிறதோ, அந்தக் கட்சியின் முகவராகவே பெரும்பாலும் ஆளுநர் பதவியானது பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதற்கான மேலும் ஒரு உதாரணமாகவும் இது அமைந்தது. குதிரை பேரம் வெளிப் படையாகவே நடந்தது. ஆளுநரின் முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி கள் உச்ச நீதிமன்றப் படியேறின. எடியூரப்பாவுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தை இரண்டு நாட்களாகக் குறைத்தது உச்ச நீதிமன்றம். இரண்டு நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஆட்களை ஏனைய அணிகளிலிருந்து இழுக்க முடியாததால், ராஜினாமா செய்திருக்கிறார் எடியூரப்பா.

ஆட்சிக்கு வருவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய லாம் என்கிற வரையறையைத் தேர்தலுக்குத் தேர்தல் விரித்துக்கொண்டேபோகும் பாஜக, கூடவே ஜனநாயக விழுமியங்கள் எதையும் பொருட்படுத்தாத ஓரிடத்துக்குச் சென்றுகொண்டிருக் கிறது. எடியூரப்பாவின் ராஜினாமா ஆளுநரின் முடிவு தவறானது என்பதற்கான சான்றாக மட்டும் அல்ல; பாஜகவின் கூச்சமற்ற பதவி வேட்கைக்குமான அடியாகவே பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைக் கொண்ட கட்சி, நாட்டை ஆளும் கட்சி என்பதோடு, நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களை ஆளும் கட்சி என்கிற நிலையில் இன்று இருக்கிறது பாஜக. மேலே செல்லச் செல்ல மேன்மை கூட வேண்டும். ஆனால், கீழ்மையை ஆரத்தழுவிக்கொள்கிறது பாஜக. நேற்று ஆட்சியிலிருந்தபோது செய்த சாதனைகளுக்காக மட்டும் அல்ல; பெருந்தவறுகளுக்காகவும் காங்கிரஸ் ஒவ்வொரு தருணத்திலும் நினைவுகூரப்படுகிறது என்பதை பாஜகவின் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கர்நாடக ஆளுநர் இனியேனும் தன்னைப் பொதுவான ஓரிடம் நோக்கி நகர்த்திக்கொள்ள முனைய வேண்டும்!