ஜனநாயகம் வாழ வாழ்த்திடுவோம் 

தோழர் விஸ்வலிங்கம் சிவலிஙக்த்திற்கு  (16.03.17)அகவை 70வது இன்றைய மனிதகுலத்தின் தேவைக்கு அப்பால் தனிபட்ட சுயநலத்திற்காக  ஜனநாயகம் என்ற சொல்லை பயன்படுத்துகின்ற இக்கால கட்டத்தில் ஜனநாயகத்திற்காக வாழ்கின்ற தோழர் சிவிலிங்கத்திந்கு எங்கள் பிறந்த தின வாழ்த்துக்கள்.

விஸ்வலிங்கம் சிவலிங்கம் மெல்லிய உடல்வாகு. குரலும் அப்படியே. தொனி மெலிதானாலும், சொல்லும் கருத்தில் வலுவிருக்கும், பிடிவாதமுமிருக்கும். சைவக்கடவுளின் பெயராக இருந்தாலும், வைதீக சைவ வேளாள உயர்குடிக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவர். கம்யூனிஸ்ட்டு. நினைப்பிலும் செயலிலும் ஒரு இடதுசாரி. மறுபுறம் ஒரு ஜனநாயகப் போராளியும் கூட.
 எமது ரிபிசி 90களில் ஆரம்பித்தவேiளை வானொலியின் ஏற்ற, இறக்க காலங்களில் என்றும் உடனிருந்தவர். தனக்கென ஒரு பாணியை வகுத்து இறுதிவரை தனது அரசியல்கருத்துக்களை உரத்துப் பேசிவந்தவர். போருடன் போர் தொடுத்தவர், சமரசத்தை சமரசம் செய்யாதவர்.
 தனது இடது சாரிச் சிந்தனைகளுக்கூடாக போரினால் எமது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் அழிவுகளையும் இறுதிவரை வலியுறுத்தியவர். போருக்கு எதிரானகருத்துக்களை கூறி வானொலி நடத்திய என்னை விட எனது வானொலியின் நேரலைகளில் அதிகம் விமர்சனத்துக்குள்ளானவர், நிந்திக்கப்பட்டவர். ஆனால், அதற்காக தனது கருத்தில் இருந்து என்றும் விலக அவர் முன்வரவில்லை. அதில் சமரசம் எதுவும் செய்யவில்லை. மாறக தனது கருத்தினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.
 பல கேளிக்கை நிகழ்ச்சிகளுக்காக ரிபிசி வானொலி ஆயிரக்கணக்கில் நேயர்களை கவர்ந்திருந்த காலம் அது. ஆனால், சிவலிங்கம் அவர்களின் வியாழக்கிழமைகளில்அரசியல் கலந்துரையாடல்களுக்கும், ஞாயிற்றுகிழமைகளில் ஒலிபரப்பாகிய  அரசியல் ஆய்வை செவிமடுப்பதற்கும்   அப்போது பல ஆயிரக்கணக்கான நேயர்கள்ஐரோப்பாவில் இருந்தனர்.
 ஆதரவானவர்களை விட அன்று இவரது நிகழ்ச்சிக்கு எதிரிகள் அதிகம். அவரது நிகழ்ச்சிகளை நிறுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தங்களும் பல. ஆனால், இவர் சொன்ன உண்மைகள் உறைத்ததாலும், அவர் கருத்தின் ஆழத்தாலும் கவரப்பட்ட வானொலி நிர்வாகம் என்றும் அதற்குஉடன்படவில்லை. போர் புனிதமானதாக வாதிட்ட பலர் இவருக்கு கொடுத்த பட்டப்பெயர் ”துரோகி”.
 அவருக்கு வந்த அழுத்தங்களைப் பார்த்து கலையகமே மனதில் அழுதிருக்கிறது. நேரடி நிகழ்ச்சிகளில் இவர் நிந்திக்கப்பட்ட வேளைகளில் எங்கள்அனைவரின் இதயத்திலும் இரத்தம் வடிந்த நாட்கள் பல. இவரை எதிர்த்து கருத்துக் கூறவந்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பெருங்குரல் கொடுத்து கத்துவார்கள், திட்டுவார்கள். ஆனால், இவர் என்றும் அதிர்ந்து பேசியது கிடையாது.
 எந்த நிந்தனைக்கும் மிகவும் ஆறுதலாக, அடக்கமாக பதில் சொல்வார். ஆனால், அசையமாட்டார். பலரது சினம் கண்டு, அறியாமை கண்டுமெதுவாக புன்முறுவல் பூப்பது இவரது இயல்பு. எந்த விவாதத்தின் போதும் தனது கருத்துகளை, ஒழுங்குபடுத்தி, ஒவ்வொன்றாக வரிசைக்கிரமமாக விபரிப்பார்.
 இவரது கருத்துக்களின் ஆழம் எவ்வளவு பேருக்கு புரிந்தது என்று எமக்கு தெரியாது. ஆனால், அவரின் கருத்துக்கள் உண்மையான நாளும் ஒருநாள் வந்தது. அதே போரின் உக்கிரத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்து மடிந்தபோது, அதேவானொலி நிகழ்ச்சியில் நேரலையில் வந்தநேயர்கள், இவர் சொன்னவை யதார்த்தமாகியுள்ளதை நேரடியாக ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.  ஆனால் அன்று சிவலிங்கம் அண்ணர் அழுதார். கலையகத்தில் ஒலிவாங்கியின் முன்பாக அமைதியாக அமர்ந்து நேயர்களின் கருத்தைகேட்டுக்கொண்டிருந்த அவரது கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.
தனது கருத்து உணரப்பட்டதற்காக அழுதாரா அல்லது அழிந்துபோன மக்களுக்காக அழுதாரா தெரியாது. ஆனால், அதுதான் மக்களுக்காக சிந்தித்து, பேசிய ஒரு வானொலி கலைஞனுக்கு கிடைத்த மரியாதை. கடந்த 3 வருடங்களாக வெளிறாடு வாழ் இலங்கைத் தமிழர் அமைப்பை ஏற்படுத்தி கடுமையாக செயற்பட்டு வருகின்றோம் .இவ்வமைப்பு ஊடாக பல்வேறுபட்ட அரசியல் தலைவர்களைச் சந்திக்கின்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கிற போதெல்லாம் எம் மக்கள் சந்தித்த அழிவுகள் பற்றியும்  ஒரு அரசியல்  தீர்வுக்கான விடயங்களை எமது அமைப்பு சார்பாக முன் வைக்க என்றுமே தவறியதில்லை.
கடந்த 16 வருடங்களாக வியாழக்கிழமைகளில் இடைவிடாத ரீ பி சியில் ஒலிபரப்பாகிய அரசியல்  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது போலவே இப்போதும் அதே வேகத்துடன் அரசியல் சந்திப்புகளில்  கலந்து கொண்டு செயற்படுவது எமக்கு மிக மகிழ்ச்சியைத் தருகின்றது. உங்களை என்றும் ரிபிசி மறக்காது சிவலிங்கம் அண்ணன். எமதுஉறவுகளின் சார்பில் 70வது பிறந்ததின வாழ்த்துக்கள்.
— வீ. இராம்ராஜ்
16.03.17