ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சியை உறுதி செய்வோம்

(டக்ளஸ் தேவானந்தா)

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அவர்கள் எமக்கு அழைப்பு விடுத்தமை ஓர் நல்லெண்ண சமிக்ஞையாகும். அத்தோடு மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் சேர்ந்து ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற எமது அரசியல் இலக்கை வெற்றிபெறவைக்கும்.

நாம் எதிர்வரும் தேர்தலில் தனித்துவமாக எமது வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றோம். இந்நிலையிலும் தமது நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் எமக்கு அழைப்பு விடுத்திருந்தமையானது ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற எமது அரசியல் இலக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புரிந்து கொண்டதன் வெளிப்பாடேயாகும்.
மத்தியில் யார்? ஆட்சியில் இருக்கின்றார்களோ அவர்களுடனேயே எமது பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும்.

தமிழ் மக்கள் தரப்பில் இருந்து யார் மக்களின் ஆணையைப் பெறுகின்றார்களோ அவர்களே எமது மக்களுக்காக ஆட்சியாளர்களை உரிய முறையில் கையாள வேண்டும்.

கடந்த காலங்களில் மக்கள் எமக்கு வழங்கிய அரசியல் அங்கீகாரத்திற்கு ஏற்றவாறும், எமது முயற்சிக்கு ஏற்றவாறும் அச்சூழலில் எம்மால் முடியுமானவற்றை நாம் சாதித்திருக்கின்றோம். இதற்கு எமது மண்ணும் மக்களும் சாட்சி.

ஆனாலும், எமது மக்களின் முழுமையான ஆணையை அபகரித்து அரசியல் பலத்தோடு இருப்பவர்கள், இந்த அரசை தாமே உருவாக்கியவர்கள் என்று கூறி அரசில் மறைமுகமாகவும், நேரடியாகவும் பங்கெடுத்துவரும் நிலையிலும், தமிழ் மக்களுக்கு தேர்தல்களின்போது வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் இதுவரையும் இவர்கள் நிறைவேற்றவில்லை.

மத்திய அரசின் ஊடாகவும் நிறைவேற்றவில்லை. மாகாணசபைக்கு ஊடாகவும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசோ, அன்றி ஆளும் தேசிய கட்சிகளோ தாமாக முன்வந்து எமது மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு தரப்போவதில்லை. அதுவே நாம் கண்ட அனுபவம். எமக்கான தீர்வுகளுக்காக நாமே முயற்சிக்க வேண்டும்.

ஆற்றலும், அனுபவமும், அக்கறையும் மிக்க வினைத்திறன் கொண்ட தமிழ் தலைமையினால் மட்டுமே தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அத்தகைய அர்ப்பணிப்பு மிகுந்த தலைமை நாமே என்பதை எமது மக்கள் இன்று உணர்ந்து வருகின்றார்கள்.

மக்கள் எமக்கு வழங்கும் ஆணையையும், மத்திய அரசுடனான எமது நல்லெண்ண உறவுமே தமிழ் மக்களை நிரந்தர விடியலை நோக்கியும், மீள் எழுச்சியை நோக்கியும் வழி நடத்திச் செல்லும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற எமது அயசியல் இலக்கும் அதன் மூலமே நிறைவேறும்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் மக்களின் ஆணையை ஈ.பி.டி.பியாகிய நாம் பெற்று மத்திய அரசுடன் பலமுள்ள அரசியல் சக்தியாக பேசுவதன் மூலம் எமது மக்களின் அபிவிருத்தி, அன்றாட பிரச்சினை, அரசியலுரிமை அனைத்திற்கும் தீர்வு காண்போம்.

(ஜனாதிபதி அவர்களின் விசேட அழைப்பை ஏற்று இன்றைய தினம் (28.12.2017) கொழும்பில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டது தொடர்பாக விடுத்த அறிக்கை)