ஜனாதிபதி – மஹிந்த – ரணில் ஏன் கூட்டாட்சி நடத்த முடியாது

– வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடனான நேர்காணல்…

(சுமித்தி தங்கராசா)
தான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. இது எமக்கிடையிலான ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும். பிரிவினைகளை மேலும் ஏற்படுத்தும் என்கின்றார் வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி விக்கினேஸ்வரன். அவ்வாறு தான் பக்கச் சார்பாகச் செயற்படுவது தமிழ் மக்கள் பேரவைக்குள் பிளவை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.தினகரன் வாரமஞ்சரிக்கான அவரது நேர்காணலிலேயே அவர் அவ்வாறு கூறினார். நேர்காணல் வருமாறு…..

கேள்வி: நீங்கள் எதிர்பார்த்து மேற்கொண்ட நகர்வு மாகாண சபைத் தேர்தலை நோக்கி. ஆனால் வரப்போவதோ பொதுத்தேர்தல் மாதிரித்தான் தெரிகிறது. உங்கள் வியூகத்தில் ஏற்பட்ட பின்னடைவாக இதைக் கருதுகிறீர்களா அல்லது பொதுத்தேர்தலோ மாகாண தேர்தலோ எல்லாம் ஒன்றுதான் எனக் கருதுகிறீர்களா? உங்கள் வியூகத்தை பற்றிப் பேசுவோமா?

பதில்: இரு தேர்தல்களிலும் வேட்பாளர் தெரிவில் வித்தியாசம் இருக்கின்றது. பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படுகின்றவர்கள் அங்கு போய் தமிழில் பேசிவிட்டு அதனைத் தமிழ்ப் பத்திரிகையில் போடுபவர்களாக இருக்கக்கூடாது. மும்மொழிகளும் அல்லது ஆகக் குறைந்தது இரு மொழிகள் தெரிந்தவர்களே எம்மைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். வெறும் மொழிபெயர்ப்பின் மூலம் மற்றவர்கள் கூறுவதை அறிந்து மற்றைய சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்த முடியாது. எமக்கு உரிமைகள் கிடைக்க நாம் சிங்கள மக்கள் பிரதிநிதிகளுடன் அவர்கள் மொழியில் பேசி எமது பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். எமது கருத்துக்களின் உண்மையை உணர்த்த வேண்டும். அதற்கு ஏற்ற வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலுக்கு மக்களோடு மக்களாய் இருந்து அடி மட்டத்தில் இருந்து உறவாடக் கூடிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எது முதலில் வந்தாலும் அதற்கேற்றவாறு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். இதில் பின்னடைவு என்ன வேண்டியிருக்கின்றது?

கேள்வி: இன்றைய தேசிய அரசியல் நெருக்கடியை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்: எம் நாட்டைக் காப்பாற்றக் கூடிய ஒரு சந்தர்ப்பம் வந்துள்ளதாகக் கருதுகின்றேன். சிறிசேன 40 வருடங்கள் சுதந்திரக் கட்சியில் இருந்து விட்டு ரணிலுடன் ஒப்பந்தம் வைத்து 2 வருடங்கள் கூட்டாட்சியை நடத்த முடியுமென்றால் ரணிலும் மஹிந்தவும் சேர்ந்து ஏன் ஒரு கூட்டாட்சி நடத்த முடியாது? ஜனாதிபதி சிறிசேன தலைமையில் ரணிலும் மஹிந்தவும் ஒரு கூட்டரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியும். அது எமது நெருக்கடிகளைத் தீர்க்க ஒரு வழியாகும். தமிழர்கள் பிரச்சினை, பொருளாதாரக் கடன் பிரச்சினைகள், வெளிநாட்டு உறவுகள், ஜெனிவா பொறுப்புக் கூறல் யாவும் இரு தரப்பாராலும் பேசித்தீர்க்க முடிந்தால் அவ்வாறான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது அவசியமாகின்றது. அவ்வாறு செய்தால் ஒரு win – win situation ஏற்படலாம். அதாவது எவருக்கும் தோல்வி இல்லாத சுமுக நிலையை அடையலாம். முரண்பாடுகள் உடைய பிரச்சினைகளைத் தள்ளி வைத்துவிட்டு அவசரமும் அவசியமும் கலந்த பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

கேள்வி: -இந்தநெருக்கடி தொடர்பாக நேரடி நகர்வுகளை மேற்கொள்ளக்கூடிய நிலையில் உள்ள கூட்டமைப்பு எடுத்துவரும் அரசியல் நகர்வுகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: – அவர்கள் தங்கள் கடந்த கால பின்னணிக்கு ஏற்றவாறு நடந்து கொள்கின்றார்கள். அதைப்பற்றி நான் கூற என்ன இருக்கின்றது? என்னுடைய கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கேள்வி: – இன்றைய Dead lock நிலை நீடிக்குமானால் ஏற்படக்கூடிய விளைவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: – அவ்வாறு நீடிக்கவிடக்கூடாது. நான் முன்னர் கூறியதைச் செய்ய எத்தனிக்கலாம். சுதந்திரமான மூன்றாம் நபர்கள் இதில் பங்கெடுத்து சுமூக நிலையைக் கொண்டுவர வேண்டும். ஏற்கனவே பல கோடி ரூபாய் நட்டங்களை நாடு அடைந்துள்ளது. நாட்டின் நலன் கருதி நல்தொரு தீர்வு பிறக்க வேண்டும்.

கேள்வி: – ஒரு முன்னாள் நீதியரசர் என்ற வகையில், பாராளுமன்ற கலைப்பு வழக்கில் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என அனுமானிக்கின்றீர்கள்?

பதில்: – நீதிமன்றத் தீர்ப்புக்களை வைத்து அனுமான சூதாட்டங்களில் இறங்கக் கூடாது. நடப்பவை நல்லவையாக நடக்கும் என்று எதிர்பார்ப்போம். நவரத்தினராஜா என்று ஒரு இராணி வழக்குரைஞர் இருந்தார். மிகக் கெட்டிக்கார வழக்குரைஞர் அவர். நாம் சேர்ந்து பணியாற்றிய வழக்கொன்றில் கட்சிக்காரர் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்று நவரத்தினராஜாவிடம் கேட்டார். “உன்னுடைய சாதகத்தைக் கொண்டு வந்தனியோ?” என்று கேட்டார் அவர். “சாதகம் எதற்காக?” என்று கேட்க “நான் தோற்கப் போகின்றேன் என்று கருதி வழக்கை வென்று வந்துள்ளேன். கட்டாயம் வெல்வேன் என்று நினைத்த வழக்குகளைக் கோட்டைவிட்டு விட்டு வந்துள்ளேன். அது ஏன் என்று பார்த்த போது கட்சிக்காரரின் சாதகத்தில்தான் முடிவு தங்கியிருந்ததை அவதானித்தேன். அது தான் சாதகத்தைக் கேட்டேன்” என்றார். அவர் சோதிடம் நன்றாக அறிந்த ஒருவர். ஆகவே நீங்கள் எமது நாட்டின் சாதகத்தைப் பாருங்கள். சோதிடம் தெரிந்த ஒருவரிடம் கேட்டு அறிந்து விட்டு எனக்கும் அதைத் தெரிவியுங்கள்!

கேள்வி: – யார் வெற்றி பெற்றாலும் பொதுத்தேர்தல் வரவே செய்யும் எனக் கூறப்படும் சூழலில் உங்கள் தமிழ் மக்கள் கூட்டணி கட்சி அமைத்து களத்தில் இறங்குமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் உங்களுடன் இணையும் சாத்தியம் உண்டா?

பதில்: – களத்தில் இறங்குவோம். கொள்கை அடிப்படையில் எம்முடன் பயணிக்கக் கூடியவர்களை முடியுமெனில் சேர்த்து முன்செல்வோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எம்முடன் சேர வெட்கப்படுவார்கள். அவர்கள் செய்யாது விட்டதையே நான் செய்ய எத்தனிக்கின்றேன்.

கேள்வி: – தமிழர் பிரச்சினையை தென்னிலங்கை சிங்களக் கட்சிகளும் சரி தமிழர் தரப்பும் சரி தீர்த்து வைப்பதற்கு உண்மையாகவே முயற்சிக்கவில்லை என்றும் அவ்வாறு தீர்த்துவைத்தால் தொடர்ந்தும் உணர்வுபூர்வ அரசியல் செய்வதற்கான கொழுகொம்பு அற்றுப் போய்விடும் எனப் பயப்படுவதாக ஒரு கருத்து பரவலாக உள்ளது. உங்கள் பார்வையைச் சொல்லுங்கள்.

பதில்: – அது உண்மை. சுய நன்மைகளுக்காக அரசியலில் நுழைந்தால், பணஞ் சேர்க்க மற்றும் பதவி நோக்கோடு அரசியலில் நுழைந்தால் இவ்வாறான சூழல் எழுவதைத் தடுக்க முடியாது. நாமாகப் பார்த்து நம்மைத் திருத்தாவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது.

கேள்வி: – உண்மையைச் சொல்லுங்கள், சுமந்திரனுக்கும் உங்களுக்கும் இடையே என்னதான் அப்படிப் பிரச்சினை? இது எங்கே முதன் முதலாக வேர் விட்டது?

பதில்: – எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. ஆனால் என்னைப் பற்றிய அவரின் பிழையான அனுமானங்களால் அவர் என்னைப் பகைத்து நிற்கின்றார். என் மாணவர் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். இறைவன் அவருக்கு நல் வழி காட்டுவார்.

நான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. இது எமக்கிடையிலான ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும். பிரிவினைகளை மேலும் ஏற்படுத்தும். தமிழ் மக்கள் பேரவைக்குள் பிளவை ஏற்படுத்தும். அதனால் தான், எந்தக் கட்சிக்கும் சார்பாகச் செயற்படாமல் ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுறுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும் EPDP தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளை அழைக்கிறேன் என்று கூறி முடித்த முன்னாள் முதல்வர் மீண்டும் மீண்டும் எமக்குள்ளேயே குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு தொடர்ந்தும் எமக்குள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு இடங்கொடாமல் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு ஊடாகத் தேர்தல் அரசியலை பயன்படுத்திக்கொள்வதற்கு என்னுடன் கைகோர்க்க வேண்டும் என்றார்.