ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை: ஆதரிக்கிறேன்; மகிழ்ச்சி.

திரள்வதற்குப் பல காரணங்கள் தேவை இல்லை. ஒன்றேயொன்று போதும். அந்த ஒன்று அரசியல் கொள்கையென்றால், அதை ஏற்காத கட்சிகள் பங்கேற்காது. பொருளாதாரக் காரணமென்றால், அதனால் பலன் கிடைக்காது என நினைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நழுவிவிடுவார்க்ள். சமுதாயப்பிளவுகளில் ஒன்று காரணமாக இருந்தால்,அதற்கு வெளியிலிருக்கும் கூட்டம் விரோதமாகச் செயல்படும்.

பண்பாட்டு அடையாளம் என்றால் அதன் இயங்குநிலையே வேறு.ஒவ்வொருவரின் மூளைக்குள் -மனதிற்குள் – நினைவுக்குள் அலைந்துகொண்டிருக்கும். நிகழ்கால வாழ்வில் அந்த அடையாளத்திலிருந்து வெளியேறியவர்களாகக் கூட இருக்கலாம். ஆனால் அதைப் பார்க்கும் -பங்கேற்கும் – கொண்டாடும் விருப்பம் இருக்கவே செய்யும்.

ஏறுதழுவலாக – மஞ்சிவிரட்டாக -சல்லிக்கட்டாக அலைந்துகொண்டிருப்பது தமிழ் அடையாளமாக – பண்பாட்டுக் கூறாக அலையத்தொடங்கிவிட்டது. அதன் எதிர்நிலையில் – விலங்குகளை அறவுணர்வுடன் கையாளும் மனிதர்களுக்கான அமைப்பு[People for the Ethical Treatment of Animals (PETA)] இருப்பதால் அந்நியக் கரங்களின் நுழைவை எதிர்க்கும் வடிவமாக இருக்கிறது. இந்த அமைப்பின் புரிதலற்ற வாதத்தை ஏற்றுத் தடைவழங்கிய நீதிமன்றமும், அதில் தலையிடாமல் தவிர்க்கும் மத்திய, மாநில அரசுகளும் எதிர்மைகளாகவே ஆகிவிட்டன.

நட்புசக்திகளை வைத்துமட்டுமே போராட்டத்தை மதிப்பிட வேண்டும் ; ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. எதிர்க்கப்பட வேண்டிய தொகுப்பொன்றின் ஒரு கூறை எதிர்க்கிறார்கள் என்பதே போதும். ஆதரிக்கலாம். இந்தப் போராட்டம் ஆதரிக்கப்படவேண்டிய ஒன்று.

(அ. ராமசாமி)