ஜூலை 9 உம் கற்கவேண்டிய வலிநிறைந்த பாடங்களும்

“மைனா கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது மே 09 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன்பின்னர் நாடளாவிய ரீதியிலுள்ள மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்களுக்கு தீ வைத்தமை கறைபடிந்த வரலாற்றுக்குள் சேர்ந்தது.

“கொழும்புக்குள் நாடு” எனும் தொனிப்பொருளில் ஜூலை 09 ஆம் திகதியன்று நடத்தப்பட்டது வரலாற்று முக்கியதுவமிக்க போராட்டமாகும். அப்போராட்டத்தை முடக்குவதற்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் யாவுமே தோல்வியடைந்தன.

கரும்புலிகள் வாரத்தில், வடக்கு, கிழக்கில் குண்டுகள் வெடிக்கப்படலாமென வெளிநாட்டு புலனாய்வு சேவைகளை ஆதாரமாகக் குறிப்பிட்டு, பகிரப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களும் பொய்த்துவிட்டன. இதனிடையே இறுதி அஸ்திரமாக பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

மக்கள் எழுச்சிக்கு மேல் எதுவுமே இல்லை என்பதை ஆட்சியாளர்களுக்கு கற்பிக்கும் வகையில், ஜூலை 09 போராட்டம் வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டது. எனினும், ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை கைப்பற்றியிருக்கும் போராட்டக்காரர்கள், அவற்றுக்குள் இருந்து செய்யும் ஒருசில அட்டகாசமான செயல்கள் கறைபடிந்த வரலாற்றுக்குள் இணைந்துவிடும்.

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல, “மே 09 எழுச்சி”யும் இரண்டு பக்கங்களை சமப்படுத்திவிட்டது. மக்கள் எழுச்சியே அரசாங்கத்தை மண்டியிடச் செய்தது என்பதற்கு மாற்றுக்கருத்து இடம்இல்லை. ஆனால், பொதுச்சொத்துக்களுள் இருந்து செய்வதை உலகமே கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஜூலை 9 இன் ஊடாகக் கற்கவேண்டிய வலிநிறைந்த பாடங்கள் உள்ளன. இது இன்றுடன் முடிந்துவிடும் காரியமல்ல. நாளை, எதிர்காலம் உள்ளிட்டவற்றை பற்றியும் சிந்திக்கவேண்டும். “மே 9 எழுச்சிக்கு” கிடைத்த முதல்வெற்றியாகும். முழுமையான வெற்றியை அடையவேண்டுமாயின், இன்னும் பயணிக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்க.

காலக்கெடு விதித்து கூறியிருப்பதைப் போல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜூலை 13ஆம் திகதியன்று இராஜினாமா செய்து, பதில் ஜனாதிபதி நியமிக்கப்படுவாராயின். ஜனாதிபதி செயலகத்துக்கும், ஜனாதிபதி மாளிகைகக்கும் அவர், செல்லவே வேண்டும். ஆக புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கவேண்டும்.

அதற்கான செலவுகள் யாவும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து செல்லும். ஆக, மக்களின் மீதான சுமைகள் மெம்மேலும் கூடிக்கொண்டே போகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய காலம் நிறைவடைந்ததன் பின்னர், பொதுச் சொத்துக்களுக்கு சொந்தம் கொண்டாடவே முடியாது. அவையெல்லாம் மக்கள் சொத்துக்களாகும்.

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் சொத்துக்களாகும் என்பதை நினைவில் கொள்வதே, எதிர்கால சிந்தனையாகும் என்பதுடன், எதிர்காலத்தில் ஆட்சிபீடமேறுபவர்கள், தவறு செய்யக்கூடாது என்பதை ஜூலை 9 நினைவூட்டி நிற்கிறது.