ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சியின் 50ஆவது ஆண்டு நிறைவு!

ஜே.வி.பியின் இருப்பை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். புலிகளை முற்றாக அழித்தது போல ஜே.வி.பியை இலங்கை அரச இயந்திரத்தால் முற்றாக அழிக்க முடியாமல் போனதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று, இலங்கையில் நிலவுகின்ற முதலாளித்துவ ஜனநாயகம். ஆனால் அதையும் விட முக்கியமான இரண்டாவது காரணம், ஜே.வி.பி. புலிகள் போல நாட்டுப் பிரிவினை கோரிய ஒரு இயக்கமாக இல்லாமல், ஏனைய சிங்கள முதலாளித்துவக் கட்சிகளைப் போல, சிங்களத் தேசியவாதத்தையே தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருப்பது.

அதனால்தான், சிங்களத் தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பனவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது சக்தியாக ஜே.வி.பியால் இருக்க முடிகிறது. ஜே.வி.பியை விட பல ஆண்டுகள் மூத்த இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியாலோ அல்லது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியாலோ மூன்றாவது நிலையை அடைய முடியாமல் இருப்பதற்குக் காரணம், அவை தமது அடிப்படைக் கொள்கையாக சிங்கள தேசியவாதத்தை (இனவாதத்தை) கொண்டிருக்காததே.

ஆனால் ஜே.வி.பி. ஒரு குட்டி முதலாளித்துவ சிங்கள தேசியவாதக் கட்சியாக இருந்த போதிலும், சிவப்புக் கொடியை அசைத்துக்கொண்டு, மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் படங்களை ஏந்திய வண்ணம், தன்னை ஒரு சோசலிஸக் கட்சியாகப் பிரகடனம் செய்து வருகிறது. ஆனால் அது சொல்வது போல அதன் நடைமுறைகள் சோசலிஸ அடிப்படையில் நடைபெற்று வந்துள்ளனவா என்றால், “இல்லை” என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தக் கட்டுரை ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி பற்றி மட்டும் ஆராய்வதால், அதன் பின்னரான அதன் நடைமுறைகள் பற்றி ஆராய்வது நோக்கமல்ல. இருப்பினும், அதற்குப் பின்னர் ஜே.வி.பி. நாட்டின் மிக மோசமான தரகு முதலாளித்துவ வலதுசாரிக் கட்சயான ஐ.தே.க. உடன் கூட அரசியல் கூட்டு வைக்குமளவுக்குச் சென்றுள்ளதால், ஜே.வி.பியை ஒரு சோசலிஸக் கட்சி என்ற கோணத்தில் வைத்து ஆராய வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் ஜே.வி.பி. தன்னை முற்றுமுழுதாக அம்பலப்படுத்தாத 1971 காலகட்டத்தில் அது வகித்த பாத்திரத்தை சரியாகப் பார்த்தாலே ‘விளையும் பயிரை முளையில் தெரியும்’ என்பது போல ஆரம்ப காலத்திலேயே அது சோசலிஸ விரோதக் கொள்கைகளைக் கொண்டிருந்ததைக் காண முடியும்.

ஜே.வி.பி. நா.சண்முகதாசனை பொதுச்செயலாளராகக் கொண்டு செயல்பட்ட ‘சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி’ என்று அழைக்கப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய ரோகண விஜேவீர என்பவரால் 1965 மே 14இல் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கமாகும். இந்த இயக்கம் தனது உறுப்பினர்களுக்கு ஆரம்ப காலத்தில் நடத்திய ஐந்து அரசியல் வகுப்புகளில் ஒன்றின் தலைப்பு “இந்திய விஸ்தரிப்புவாதம்” என்பது.

இந்த இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற விடயம் குறித்து புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிஸ – லெனினிஸ அடிப்படையிலான கண்ணோட்டம் ஒன்று நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. ஆனால், அதைத் தனது கைகளில் எடுத்த ஜே.வி.பி. இந்திய ஆளும் வர்க்கம் பற்றிக் குறிக்கும் அக்கொள்கையைத் திரிபுபடுத்தி, அந்தக் கொள்கைக்குரியவர்கள் இலங்கையில் ஆகக் கூடுதலாக சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கமான மலையகத் தோட்டத் தொழிலாளர்கள்தான் என விளக்கம் கொடுத்தது. ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல ஜே.வி.பியின் ஆரம்பமே இந்திய வம்சாவழித் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கான எதிரான இனவாதமாக அமைந்துவிட்டது.

ஜே.வி.பியின் இந்த மலையக மக்கள் விரோத நிலைப்பாட்டினையும் அதன் இதர கொள்கைகள் வேலைத்திட்டங்களையும் ஆராய்ந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி, ஜே.வி.பி. அது தன்னை அழைத்துக் கொள்வது போல ஒரு சோசலிச இயக்கமோ அல்லது குறைந்தபட்சம் ஒரு இடதுசாரி இயக்கமோ அல்ல, அது ஒரு குட்டி முதலாளித்துவ, சிங்கள தேசியவாத, எதிர்ப்-புரட்சிகர இயக்கம் என்ற முடிவுக்கு வந்து, அந்தக் கருத்தைப் பிரச்சாரமும் செய்தது. அதன் உண்மைத்தன்மையை ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சி நிதர்சனமாக உறுதி செய்தது.

இதை விளங்கிக் கொள்வதற்கு முதலில் ஜே.வி.பி. 1971 ஏப்ரலில் ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்த காலகட்டத்தை எடுத்துப் பார்க்க வேண்டும். 1970 பொதுத்தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி என்பனவும் இணைந்த ‘மக்கள் முன்னணி’ மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்திருந்தன. மக்கள் அந்த முன்னணிக்குப் பெரும்பான்மை கொடுத்ததின் அர்த்தம் அந்த முன்னணியில் அபரிமிதமான நம்பிக்கை வைத்தபடியால்தான். மக்கள் முன்னணி அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்ததை உள்நாட்டுப் பிற்போக்கு சக்திகளும், வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளும் சகிக்க முடியாமல் அவதிப்பட்டன. எனவே அந்த ஆட்சியை வன்முறை மூலம் தன்னும் அகற்றிவிட வேண்டும் என அவை திட்டமிட்டன.

இந்தச் சூழ்நிலையில் ஜே.வி.பி. அந்த அரசுக்கெதிரான ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்த நேரம் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டே நிறைவடைந்திருந்தது. அதன் அர்த்தம் அந்த அரசாங்கம் இன்னமும் மக்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கவில்லை என்பதே. ஒரு புரட்சியைச் செய்வதானால் புரட்சிக்கான சூழ்நிலைகள் முதிர்ச்சியடைந்து மக்களும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். இது மார்க்சிஸத்தின் அடிப்படை அரிச்சுவடி. ஆனால் அப்படியான ஒரு சூழ்நிலை உருவாகாத நிலைமையிலேயே ஜே.வி.பி. தனது ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தது. ஜே.வி.பியின் கிளர்ச்சி முற்போக்கானதா அல்லது பிற்போக்கானதா என்று விவாதிப்பதற்கு முன்னால், நிலைமைகள் சாதகமாக இல்லாத சூழலில் ஜே.வி.பி. தனது தாக்குதலை ஆரம்பித்ததெ அவர்களது தோல்விக்கான முதலாவது காரணம்.

அடுத்ததாக, ஒரு சோசலிசப் புரட்சி என்பது அடிப்படையில் தொழிலாளர்கள், விவசாயிகள், புரட்சிகரப் புத்திஜீவிகள், தேசிய முதலாளி வர்க்கத்தினர் போன்ற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவது. ஆனால் ஜே.வி.பியடம் இந்தப் பிரிவினரின் ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட எந்த அமைப்பும் அன்றைய காலகட்டத்தில் இருக்கவில்லை. அவர்கள் வெறுமனே இளைஞர்களை மட்டும் கொண்டு புரட்சியை நடத்திவிடலாம் என எண்ணினர். (எந்த தொழிலும் அற்ற இளைஞர்களுக்கு வர்க்க அடிப்படை இல்லாததால் அவர்கள் பெரும்பாலும் குட்டி முதலாளித்துவ சிந்தனையுடையவர்களாகவே இருப்பர்) அதுமட்டுமல்லாமல், பின்னர் தமது தாக்குதல் தோல்வியடைந்ததிற்கு காரணம் தலைநகர் கொழும்பை கைப்பற்றுவதாகச் சொன்ன இராணுவத்தின் ஒரு பிரிவினர் அதைச் செய்யாததே என்றனர். இது ஒரு வேடிக்கையான காரணம். ஏனெனில், ஒரு முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் அங்கமான இராணுவம் எவ்வாறு இவர்களது ‘சோசலிஸப் புரட்சி’க்கு ஆதரவளித்திருக்க முடியும்?

இன்னொரு பிரச்சினை, இலங்கை பல்லினங்கள் வாழும் ஒரு நாடு. ஆனால் ஜே.வி.பி. சிங்கள இளைஞர்களைத் தவிர, சிறுபான்மை இனங்களான வடக்கு கிழக்கு தமிழர்கள், முஸ்லீம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் என எவரையுமே தமது இயக்கத்தில் அணிதிரட்டியிருக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு தேசிய சிறுபான்மை இனங்கள் பற்றிய ஒரு கொள்கையோ நம்பிக்கையோ இருக்கவில்லை. (இன்றும் கூட)

தவிர, இலங்கையின் ஆயுதப் படைகளின் கைகளுக்கு உலகின் நவீனரக ஆயுதங்கள் ஏற்கெனவே வந்து சேர்ந்திருந்தன. இந்த நிலைமையில் ஜே.வி.பியிடம் இருந்த சில நாட்டுத் துப்பாக்கிகளையும், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளையும் கொண்டு அரச படைகளைத் தோற்கடிப்பது என்பது சிறுபிள்ளைத்தனமான நினைப்பு. அத்துடன், அரசாங்கத்திடம் இருந்த புலனாய்வு வலையமைப்பு பலமானதாக இருந்ததால், ஜே.வி.பியின் தாக்குதல் திட்டத்தை அரச படைகள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதை முறியடிக்கத் தயாராகவும் இருந்துள்ளன.

ஆனால், இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமான விடயம் ஜே.வி.பிக்கு தெரிந்தோ தெரியாமலோ, இலங்கையின் பிற்போக்கு வலதுசாரி சக்திகளும், அவர்களது அந்நிய எஜமானர்களும் ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சியை வழிநடத்தும் நிலையில் இருந்துள்ளன என்பதுதான். அதற்குப் பல சான்றுகள் உள்ளன.
இலங்கையில் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கம் பதவிக்கு வருவதை உள்நாட்டு – வெளிநாட்டுப் பிற்போக்கு சக்திகள் ஒருபோதும் விரும்பியது கிடையாது. அதையும் மீறி 1956இல் பண்டாரநாயக்கவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, 1959இல் அவரைப் படுகொலை செய்தன. பின்னர் பண்டாரநாயக்கவின் மனைவி 1960இல் பதவிக்கு வந்தபோது, 1962இல் இராணுவச் சதி ஒன்றின் மூலம் அவரது அரசைக் கவிழ்க்க முயன்றன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் 1964இல் லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை தேசியமயமாக்கும் மசோதாவை சிறீமாவோ அரசு கொண்டுவந்தபோது, அவரது கட்சியிலிருந்த சிலரை விலைக்கு வாங்கி அந்த மசோதாவைத் தோற்கடித்து அவரது அரசைக் கவிழ்த்தன. அவை போலத்தான் 1970இல் சிறீமாவோ தலைமையில் ‘மக்கள் முன்னணி’ ஆட்சிக்கு வந்தபோது அதைக் கவிழ்க்க சந்தர்ப்பம் பார்த்திருந்தன.

அவர்களது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கருவியாக அவர்களுக்குக் கிடைத்ததுதான் இடதுசாரிப் போர்வையிலிருந்த ஜே.வி.பி. என்ற இயக்கம். இது ஒரு நீண்டகாலத் திட்டம். இந்தத் திட்டம் 1970 தேர்தலுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அதாவது, 70ஆம் ஆண்டுத் தேர்தலின் போது ஜே.வி.பி. சுமார் 40 தொகுதிகளில் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்காக ஒரு திட்டமிட்ட நோக்கத்தின் அடிப்படையில் தேர்தல் வேலை செய்தது. அதன் மூலம் சுதந்திரக் கட்சி இளைஞர் அணியில் இருந்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை ஜே.வி.பி. தனது அமைப்பில் சேர்த்துக் கொண்டது. அதேபோல, நா.சண்முகதாசன் அவர்களைப் பொதுச்செயலாளராகக் கொண்டு செயற்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தலைமை மீது கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியைப் பயன்படுத்தி அவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டது. உதாரணமாக, அக்கட்சியின் வாலிபர் சங்க சம்மேளனத்தின் தலைவர் டி.ஏ. குணசேகரவே ஜே.வி.பியில் இணைந்து கொண்டார்.

இது ஒருபுறமிருக்க, ஐ.தே.க. இரண்டு வழிகளில் ஜே.வி.பிக்குள் ஊடுருவியது. ஓன்று நேரடியாகவே தனது கட்சி இளைஞர்களை ஜே.வி.பிககுள் அனுப்பி வைத்தது. இன்னொரு வழி என்னவென்றால், 1965இல் டட்லி தலைமையில் ஆட்சிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கம் நாடு முழுவதும் ‘விவசாயப் படை’ என்ற பெயரில் தமக்குச் சார்பான இளைஞர்களைக் கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள் இதில் சேர்ந்தனர். இராஜாங்கனையில் தலைமையகத்தைக் கொண்டிருந்த இந்த விவசாயப்படைக்கு ஐ.தே.கவுக்கு சார்பான ஓய்வுபெற்ற இராணுவ கப்டன் செனவிரத்ன என்பவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

1970 பொதுத் தேர்தலுக்கு சற்று முன்னர் இந்த விவசாயப் படை அமைப்பை ஐ.தே.க. அரசாங்கம் கலைத்துவிட்டது. கலைக்கும்போது அதில் இருந்த ஒவ்வொருவருக்கும் தலா 500 ரூபா பணம் கொடுத்து தென்னிலங்கையில் ஐ.தே.கவுக்கும், வட பகுதியில் தமிழ் காங்கிரசுக்கும் தேர்தல் வேலை செய்யும்படி கூறி அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இந்த வேலையற்ற இளைஞர்களை ஐ.தே.க. கப்டன் செனவிரத்ன ஊடாக ஜே.வி.பிக்குள் அனுப்பி வைத்தது. எனவே ஜே.வி.பி. தனது ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய பொழுது, அதன் உறுப்பினர்களில் அரைவாசிப் பேர் ஐ.தே.கவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இந்த விடயத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் சுட்டிக்காட்டுவது அவசியமானது. அதாவது, இளைஞர்களை ஜே.வி.பிக்குள் இணையச் செய்து அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் ஐ.தே.க. தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஏப்ரல் 1ஆம் திகதி உரையொன்றை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர், “நான் இன்று ஒரு இளைஞனாக இருப்பேனானல் ஜே.வி.பி. இயக்கத்தில்தான் சேருவேன்” எனக் கூறினார். இந்த உரையை ஐ.தே.கவுக்கு சார்பான ‘டெயிலி நியூஸ்’ பத்திரிகை ஏப்ரல் 2ஆம் திகதி பிரசுரித்ததுடன், ஜே.வி.பி. கிளர்ச்சி நடந்த 5ஆம் திகதிக்கு ஒருநாள் முன்னதாக 4ஆம் திகதியும் மறுபிரசுரம் செய்தது. இது ஒரு தற்செயலான நிகழ்வல்ல. (அதனால்தான் ஜே.ஆர். 1977இல் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக சிறையில் இருந்த ஜே.வி.பி. தலைவர் ரோகண விஜேவீரவையும் ஏனையவர்களையும் நிபந்தனை ஏதும் இன்றி விடுதலை செய்தார்)

ஜே.வி.பியின் இந்தக் கிளர்ச்சியின் பின்னால் வேறு சில நோக்கங்களும் இருந்தன. அதாவது, இந்தக் கிளர்ச்சி நடந்தவுடனேயே ஐ.தே.கவுக்கு சார்பான சக்திகள் இந்தக் கிளர்ச்சியுடன் சோசலிச நாடுகளான சீனாவுக்கும் வட கொரியாவுக்கும் தொடர்புண்டு எனப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டன. அந்த நேரத்தில் சீனாவின் அன்பளிப்பான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வேலைகள் ஆரம்பித்திருந்தபடியால், அதன் கட்டிடப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட தளபாடங்களுடன் சீனாவிலிருந்து ஜே.வி.பிக்கு ஆயுதங்களும் கொண்டு வரப்பட்டதாக அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

ஆனால் ஜே.வி.பியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் சீன ஆயுதங்களோ அல்லது வேறு எந்தவிதமான நவீன ஆயுதங்களோ இருக்கவில்லை என்பதிலிருந்து இது பொய் என்பது விளங்கும். இவர்களது சதி நோக்கத்தைப் புரிந்து கொண்ட சீனப் பிரதமர் சௌ என்லாய், பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவுக்கு எழுதிய கடிதமொன்றில், ஜே.வி.பி. கிளர்ச்சி ஒரு எதிர்ப்-புரட்சி நடவடிக்கை என வர்ணித்ததுடன், சீனாவின் சார்பாக இலங்கைக்கு 15 கோடி ரூபாவை அன்பளிப்பாகவும் வழங்கினார்.

அதேபோல, கொழும்புத் துறைமுகத்துக்கு அந்த நேரத்தில் நல்ல தண்ணீர் எடுப்பதற்காக வந்த வட கொரிய கப்பலில் ஜே.வி.பிக்கு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் இந்தச் சக்திகள் பிரச்சாரம் செய்தன. அதை நம்பிய இலங்கை அரசாங்கம் கொழும்பிலிருந்த வட கொரியத் தூதரகத்தை மூடி அங்கிருந்த அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றியது.

இன்னொரு இலக்கையும் ஜே.வி.பியின் கிளர்ச்சியை வைத்து அடைவதற்கு பிற்பேககு சக்திகள் முயன்றன. அதாவது, சுதந்திரக் கட்சிக்குள் தலைவி சிறீமாவோ இடதோ அலலது வலதோ அல்லாத ஒரு மத்திய பாதைக்காரர். ஆனால் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். ஆனால் சுதந்திரக் கட்சிக்குள் இடது சார்பானவர்களும், வலது சார்பானவர்களும் எப்பொழுதும் இருந்து வந்துள்ளனர். இந்தக் கிளர்ச்சி நடைபெற்ற நேரம் கட்சிக்குள் இருந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க வலது பிரிவினரின் தலைவராக இருந்ததுடன், பலம் பொருந்திய அமைச்சராகவும் இருந்தார்.

எனவே, பிற்போக்கு சக்திகள் பீலிக்ஸ்சை பிரதமராக்கும் பொருட்டு, “இந்த இக்கட்டான நேரத்தில் ஒரு பெண்ணான சிறீமாவோவால் நாட்டை வழிநடத்த முடியாது, எனவே பீலிக்ஸ்சை பிரதமராக்க வேண்டும்’ என்ற பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். ஆனால் அது எடுபடவில்லை.

ஜே.வி.பியைப் பயன்படுத்தி அல்லது ஜே.வி.பியும் இணைந்து 1971 ஏப்ரல் 5ஆம் திகதி நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் நோக்கங்கள் பின்வருமாறு:
சிறுpமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசை ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சி மூலம் தூக்கியெறிந்து வலதுசாரிகளின் ஆட்சியை நிறுவுவது.
அது முடியாமல் போகும் பட்சத்தில், சுதந்திரக் கட்சிக்குள் உள்ள வலதுசாரியான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவை பிரதமராக்கி அவர் மூலம் வலதுசாரி ஆட்சியொன்றை நிறுவுவது.
இலங்கைக்கு தன்னலம் கருதாது எப்பொழுதும் உதவும் சீனா போன்ற சோசலிஸ நாடுகளுடனான உறவைத் துண்டிப்பது.

ஆனால் உள்நாட்டு – வெளிநாட்டுப் பிற்போக்கு சக்திகளின் இந்த சதித் திட்டங்களை சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, நாட்டு மக்களினதும், முற்போக்கு சக்திகளினதும், இந்தியா, சீனா போன்ற நட்பு நாடுகளினதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முறியடித்துவிட்டது. ஆனாலும் ஒன்றுமட்டும் தெளிவானது. 1971இல் ஜே.வி.பி. நடத்திய ஆயுதக் கிளர்ச்சி மட்டும் எதிர்ப்-புரட்சிகரமானது மட்டுமல்ல, ஜே.வி.பி. இயக்கமே எதிர்ப்-புரட்சிகரமானது என்பதுதான் அது. அதை நிரூபிப்பது போல 1971 கிளர்ச்சிக்குப் பின்னர் இன்றுவரை ஜே.வி.பி. எடுத்து வரும் அரசியல் நிலைப்பாடுகள் அமைந்துள்ளன.
இந்த விடயத்தில் 1971 கிளர்ச்சிக்கு முன்னரே புரட்சிகர கம்யூனிஸ்ட்டுகள் ஜே.வி.பி. பற்றி முன்வைத்த விமர்சனங்கள் மிகச் சரியானவை என்பதை காலம் சந்தேகமற நிரூபித்துள்ளது. இது பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.