ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருகின்றோம்…

ஒரு 40 நபர்கள் சேரும், ஞாயிற்றுக்கிழமை என்ன மாறுதல்கள் கொண்டு வரும்? வயல்வெளிகள் நிறைந்த கிராமத்தில், கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமையும் தன்னார்வலர்கள் இணைந்து, குளம் பராமரிப்பு பணிகள் செய்து வருகின்றோம்.

05/06/2016

 

முதல் நாள், குளத்திற்கு சென்றபொழுது குளம் எது கரை எது என்றே தெரியாத சூழல்…. 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம், சராசரியாக 6 அடி ஆழம் கொண்டது. நீரால் நிறைந்து இருந்தது… மேற்ப்பரப்பு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்பட்டது. (காண்க. படம்-1) ஒரு JCB இயந்திரம், 30 தன்னார்வலர்கள் குழு பணியில் இறங்கினோம். சிறுக சிறுக ஆகாயத்தாமரை செடிகளை கரைகளை நோக்கி தள்ள, JCB இயக்குபவர், இயந்திரத்தால் அள்ளி எடுத்து கரையில் இடுவார்.. ஒரு நாள் பகல் முழுதும் இயங்கி, குளத்தில் பாதி அளவு செடிகளை அப்புறப்படுத்த முடிந்தது.
12/06/2016

இரண்டாம் நாள், குளத்திற்கு சென்ற பொழுது, நடுப்புறம் இருந்த ஆகாயத்தாமரைகளும், காற்றில் அசைந்து கரையோரம் வந்திருந்தது. நம் பணிகள் கொஞ்சம் எளிதாக இருந்தது. 40 தன்னார்வலர்கள் கொண்ட குழு பணிகள் செய்தோம்.

ஆச்சரியமாய், ஒரு தன்னார்வலர் தனது மனைவி மற்றும் கை குழந்தையுடன் வந்திருந்தார். அருகில் வயல்வெளி நடுவில் இருந்த மாமரத்தில் குழந்தைக்காக ஒரு தொட்டில் கட்டப்பட்டது. அற்புதமான தம்பதிகள். சென்னை சூளைமேட்டில் இருந்து வந்திருந்தனர்.

ஒரு நாள் கிராமத்து வாழ்க்கை… நல்ல காற்று… அற்புதமான சூழல்… வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு நாள் முழுவதும், ஒன்றாய் பணி செய்து, வயல் வரப்பில் அமர்ந்து மதிய உணவு உண்டு… அந்த குழந்தை உட்பட, எல்லோருக்கும் ஆன புத்துணர்ச்சி…

 

எங்கள் பணியின் இரண்டாம் நாளின் இறுதியில், பெரும் பகுதி ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டிருந்தன. (காண்க. படம்-2)

இன்னும் மீதம் இருக்கும் பணிகள் வரும் வார இறுதியில் முடிவடைந்துவிடும்… அந்த ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருகின்றோம்…

(ஆண்டனி சாமி)