தட்டு, குவளை, துணிப்பை!

(ம.செந்தமிழன்)

நண்பர்களே வணக்கம்.

நெகிழிப் பயன்பாடு அபாயக் கட்டத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த நொடியிலிருந்து நெகிழிப் பயன்பாட்டினை மனிதர்கள் நிறுத்திவிட்டாலும், இதுவரை சேர்ந்த நெகிழிக் குப்பைகளால் நேரப்போகும் அழிவுகளைத் தடுப்பது இயலாது. ஆனால், மனிதகுலம் நெகிழிப் பயன்பாட்டினை நாளுக்கு நாள் உயர்த்திக்கொண்டுள்ளதே தவிர, குறைக்கும் சிந்தனை கூட இல்லாதிருக்கிறது.

ஆனந்த விகடனில் வெளியாகும் ‘ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி’ தொடரில் இந்தச் சிக்கல் குறித்து நான் ஏற்கெனவே எழுதியிருந்தேன். வாய்ப்புள்ளோர் அதைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நெகிழிகளைக் குறைப்பதற்கான செயல்களில் நாம் அனைவரும் களமிறங்க வேண்டிய காலம் இது. முதலில் உணவகங்களில் உள்ள நெகிழிப் பயன்பாட்டினை நாம் தவிர்க்கத் துவங்குவோம்.

பெரும்பாலான உணவகங்களில் நெகிழித் தட்டுகள், குவளைகள், நெகிழித் தாள்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இவை வீசப்படும் இடத்தைப் பாருங்கள். சூழலையும் மனித வாழ்க்கையையும் சிதைக்கும் பொருட்கள் உணவுக் கூடங்களில் குவிந்துகொண்டிருக்கின்றன. பல கடைகளில் நெகிழிப் பைகளில் சூடான தேநீர் வாங்கிச் செல்கின்றனர் மக்கள்.

உணவுகளை சுடச் சுட நெகிழித் தாளிலும் தட்டிலும் வைத்து உண்டால், உடலின் உள்ளே செல்லும் நஞ்சின் கொடுமை அளக்கவியலாததாக இருக்கும். தேநீர் குவளைகள், குடிநீர் குவளைகள், பழச்சாறுக் குவளைகள் எனப் பலவகையான உணவுப் பொருட்களின் கொள்கலன்கள் நெகிழியில் உள்ளன. பல கடைகளில் இவற்றுக்கு மாற்றாக காகிதக் குவளைகளை வைக்கிறார்கள். கோடிக்கணக்கான மரங்களை அழித்துத்தான் காகிதக் குவளைகள் செய்யப்படுகின்றன.

ஒரேஒருமுறை உறிஞ்சிவிட்டு வீசி எறியும் குவளைகளுக்காக இவ்வாறான அழிப்புப் பணிகளில் ஈடுபடுவது இந்தக் காலத்து வெறித்தனத்தின் வெளிப்பாடு.

உலோகக் குவளைகள், மண் குவளைகளை வைத்திருந்தால் அவற்றைக் கழுவ வேண்டும் என்ற அருவருப்பும் சோம்பலும்தான் மேற்கண்ட சிக்கல்களின் மூலகாரணம்.

இவர்கள் அனைவரையும் திருத்துவதைவிட, நம்மை நாமே திருத்திக்கொள்வது மிக எளிதானது.
இனி நம் பயணங்களில் தட்டு, குவளை, துணிப்பை ஆகிய மூன்றையும் உடன் எடுத்துச் செல்வோம். நெகிழிப் பயன்பாடு உள்ள கடைகளில் நம் தட்டில் உணவு உண்டு நம் குவளையில் நீர் பருகுவோம். பொருட்கள் வாங்க நம் பைகளைப் பயன்படுத்துவோம். இலையிலும் பிற இயற்கைப் பொருட்களிலும் உணவு வழங்குவோரை மனதாரப் பாராட்டி வாழ்த்துவோம்.

இந்த மூன்று பொருட்களையும் நாம் சுமந்தால், நம் அன்னை பூமியின் சுமை குறையும்.
இக்கருத்தில் உடன்பாடுள்ளோர் தட்டு, குவளை, பையுடன் ஒளிப்படம் எடுத்து சமூக வலைத் தளங்களில் வெளியிடலாம். இத்தோடு நில்லாமல், இப்பொருட்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். இப்பொருட்களைப் பற்றி கேள்வி எழுப்பும் மக்களிடம் நமது நோக்கங்களைப் பொறுமையாக எடுத்துக் கூறுங்கள்.

நாம் இயற்கையின் பிள்ளைகள், செம்மாந்த மரபின் தொடர்ச்சிக் கண்ணிகள். புவியில் உள்ள சகல உயிர்களோடும் இயைந்து வாழ்ந்து அவற்றைக் காக்கும் பொறுப்பு மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலைச் சிதையாமல் காப்பதுதான் இறைக் கட்டளை.

எளிமையான இப்பணியிலிருந்து நமது பொறுப்புகளை நிறைவேற்றத் துவங்குவோம் வாரீர்.
குறிப்பு: நெகிழி என்பது பிளாஸ்டிக் என்பதைக் குறிக்கும்
(Senthamizhan Maniarasan)