தனிமைப்படுத்தல் தண்டனையா?

அப்போது, யாழ்ப்பாணத்தில் அமலில் இருந்த இரவு நேர கொவிட்-19 பெருந்தொற்றுக்கால ஊரடங்குச் சட்டத்தையோ, முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையினரின் ஆலோசனையையோ தாம் மீறவில்லை என்றும் தம்மோடு வருவோர் தனித்தனி வாகனங்களில் வருவதால் தாமோ அவர்களோ, சமூக இடைவெளி தொடர்பான ஆலோசனையையும் மீறவில்லை என்றும் முதலமைச்சர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பொலிஸார் அதற்குச் செவிசாய்க்கவில்லை.

தனிமைப்படுத்தல் என்பது, பொலிஸாரின் ஆலோசனையை பின்பற்றாததற்கான தண்டனையல்ல; அது, ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு ஒரு நோய் பரவாதிருக்கும் பொருட்டு, மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். தனிமைப்படுத்தலுக்காக ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்க வேண்டும். அல்லது, தொற்றாளர் ஒருவருடன், அவர் அண்மைய நாள்களில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அல்லது, அவ்வாறு தொடர்பு கொண்டதாகச் சந்தேகிக்கப்பட வேண்டும். அதுபோன்ற எவ்வித காரணமும் இன்றி, ஒருவரைத் தனிமைப்படுத்துவதாக இருந்தால், அது தனிமைப்படுத்தல் அல்ல; எதேச்சாதிகார பலாத்காரமாகும். அவ்வாறானதொரு சம்பவம், இப்போதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இலங்கை ஆசிரியர் சங்கமும் முன்னணி சோஷலிஸக் கட்சியும் இணைந்து, நாடாளுமன்ற சந்தியில் கடந்த எட்டாம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். அப்போது, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், முன்னணி சோஷலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் அன்றே அவர்கள் ஆஜர் செய்யப்பட்டதோடு, பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த அவர்களை, பொலிஸார் பலாத்காரமாக பஸ்களில் ஏற்றி, தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவுக்கு அழைத்துச் சென்றனர். இப்போது, மேற்படி சட்டத்துக்கான ஆர்ப்பாட்டத்துக்குப் புறம்பாக, பொலிஸாரின் இந்தப் பலாத்காரத்துக்கு எதிராகவும் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதன் ஓர் அம்சமாக, திங்கட்கிழமை (12) முதல், இணையவழி கற்பித்தல் நடவடிக்கையை, ஆசிரியர் சங்கங்கள் பகிஷ்கரித்து வருகின்றனர். அதேவேளை, ஸ்டாலின், துமிந்த நாகமுவ ஆகியோரை விடுதலை செய்யாவிட்டால், நாடளாவிய வேலை நிறுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கப் பிரிவின் தலைவர் கே.டி. லால் காந்த தெரிவித்து இருந்தார். எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறது.

ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்வதாக, சில நாள்களுக்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், அதற்குப் பின்னர் அவர் வெளியிட்ட சுகாதார வழிகாட்டல்களில் அது குறிப்பிடப்படவில்லை.

அது குறிப்பிடப்பட்டு இருந்தாலும், தற்போதைய நிலையில் அது தர்க்க ரீதியாக அமையவில்லை. ஏனெனில், இறுதியாக வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம், சந்தைகள், வீதியோர வியாபாரம், சமய ஸ்தலங்கள் போன்றவை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண வைபவங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக பிரயாணிகள் நிரம்பிய நிலையில், பஸ்ளை வீதிகளில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறானதொரு நிலையில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, இதுவரை காலமும் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்வதாக இருந்தால், அது சுகாதார காரணங்களின் அடிப்படையிலன்றி, அரசியல் காரணங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

அந்த உத்தரவு சரியானது என்று ஏற்றுக் கொண்டாலும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் சட்டமூலத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரை, பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, நீதிவான் அவர்களைப் பிணையில் விடுதலை செய்தார். அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என அவர் கட்டளை பிறப்பிக்கவில்லை.

அதேவேளை, ஆர்ப்பாட்டங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டு இருந்தால், அவர்களைப் பிணையில் விடுதலை செய்தாலும் தனிமைப்படுத்த வேண்டும் என பொலிஸார், நீதிவானிடம் கோரிக்கை விடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யாது, பொலிஸாரே அதனை முடிவு செய்யலாமா? ஆர்ப்பாட்டக்காரர்கள் சமூக இடைவெளியைப் பேணவில்லை என்றுதான், தாம் அந்த நடவடிக்கையை எடுத்ததாகப் பொலிஸார் கூற முடியாது. ஏனெனில், பொலிஸார் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வரும் வரை, அவர்கள் சமூக இடைவெளியைப் பேணியே நடந்து கொண்டார்கள் என்பதை, தொலைக்காட்சி மூலம் மக்கள் கண்டார்கள்.

அவர்களைக் கட்டிப் பிடித்து, பொலிஸார் இழுத்துச் செல்ல முற்பட்டதாலேயே சமூக இடைவெளி மீறப்பட்டது; முகக் கவசங்கள் கழன்றன. இதுவே, அவர்களைத் தனிமைப்படுத்தக் காரணமாக அமைந்தது என்றால், அதேகாரணத்துக்காக அங்கு வந்த பொலிஸாரையும் தனிமைப்படுத்த வேண்டும். பொலிஸார் பாதுகாப்பு உடைகளை அணிந்து இருந்தாலும் அவர்களது முகம் மூடப்பட்டு இருக்கவில்லை. கொரோனா வைரஸ் கண், மூக்கு, வாய் மூலமாகவே பரவுகிறது.

சுகாதார வழிகாட்டல்களை மதியாது, வெளியே செல்வோரைப் பொலிஸார் கைது செய்கின்றனர். கடந்த வருடம் முதல் இதுவரை, பொலிஸார் 49,449 பேரை சுகாதார வழிகாட்டல்களை மீறியதற்காகக் கைது செய்துள்ளதாகவும் அவர்களில் சுமார் 41,000 பேருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் ஏனையோருக்கு எதிராகவும் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, ஞாயிற்றுக்கிழமை (11) ஊடகங்களுக்குத் தெரிவித்து இருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சுமார் 50,000 பேரில், எவரையாவது பொலிஸார் தனிமைப்படுத்தவில்லை. ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களும் அதே சுகாதார வழிகாட்டல்களைத் தான் மீறினார்கள் என்றால், ஆர்ப்பாட்டக்காரர்களை மட்டும் ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? இது அரசாங்கத்தின் அடக்கு முறைக் கொள்கைக்கு, சுகாதார துறையினரும் பொலிஸாரும் துணைபோவதையே காட்டுகிறது.

இந்த விடயத்தை, கடந்த வருடம் யாழ்ப்பாண நீதிவான் மிகத் தெளிவாக விளக்கியிருந்தார். முள்ளிவாய்க்கால் நாளை அனுஷ்டித்தமைக்காக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் ஏனைய 10 பேரையும் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த பொலிஸார், அவர்களை 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்துமாறு கோரினர். அதை ஏற்ற நீதிவான் பீட்டர் போல், அவர்களை 14 நாள்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், மறுநாள் அவர்களது சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், நோய் பரவுவதைத் தடுப்பதே தனிமைப்படுத்துவதன் நோக்கம் என்றும் அஞ்சலிக் கூட்டங்களில் கலந்து கொண்ட எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியதாக பொலிஸார் ஆதாரங்களை முன்வைக்காத நிலையில், இந்த 11 பேரும் தனிமைப்படுத்தப்படத் தேவையில்லை என்று எடுத்துரைத்தனர். சந்தேக நபர்களில் எவரும் தொற்றுக்குள்ளானதற்கான ஆதாரத்தை, பொலிஸார் முன்வைக்காத காரணத்தால் நீதிவான் அவர்களை விடுதலை செய்தார்.

கடந்த எட்டாம் திகதி, ஆர்ப்பாட்டக்காரர்களை மிக மோசமாகவே பொலிஸார் நடத்தினர். பொலிஸார் அவர்களை இழுத்துச் செல்லும் போது, அவர்களிடையே இருந்த சில பெண்களின் உடைகள் கிழிந்தன. அவர்களுக்கு மாற்று உடைகளைப் பெற்றுக் கொள்ளவாவது அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விடயத்தைப் பற்றி, நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இதற்கு முன்னர் ஒரு மொடல் அழகிக்கு, அந்த வசதியைச் செய்து கொடுத்ததற்காகத் தாம் விமர்சிக்கப்பட்டதாகவும் இம்முறையும் ஸ்டாலினுக்கு சலுகை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்படக் கூடாது என்பதற்காக, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அந்த வசதி வழங்கவில்லை எனவும் கூறினார்.

இவை சலுகையல்ல; பொதுமக்களின் உரிமைகளாகும். மேற்படி மொடல் அழகிக்கு, மாற்று உடை பெற்றுக் கொள்ள வசதி செய்து கொடுத்ததற்காக எவரும் அமைச்சரைக் குறைகூறவில்லை. ஏனையோருக்கும் அந்த வசதி செய்து கொடுக்கப்படுவதில்லை என்பதே, பலரது விமர்சனமாக இருந்தது. தனிமைப்படுத்தப்படுவோருக்கு ஓர் அமைச்சரின் விரும்பினால் மட்டும் தான், வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றால், அது உரிமை அல்ல; சிறப்புரிமையாகி விடுகிறது. இந்த வசதிகள், மனிதனின் அடிப்படை உரிமைகள்.

தற்போது தனிமைப்படுத்தலானது, ஒரு தண்டனையாகவும் அரசியல் கருவியாகவும் அடக்குமுறையின் அம்சமாகவும் மாறியிருப்பதையே, இவை அனைத்தும் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கையின் மனித உரிமை நிலைவரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலையிலேயே இவை இடம்பெறுகின்றன.

இலங்கையில் மனித உரிமைகள், தொழில் உரிமைகள் மிக மோசமாக இருப்பதாக, ஜூன் மாதம் 10 ஆம் திகதி, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஒன்றிலும் கூறப்பட்டு இருந்தது. அதனை அடுத்தே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தப் போவதாக, நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், இது போன்ற அடக்குமுறைகள் இடம்பெறும் போது, உரிமைகள் விடயத்தில் அரசாங்கம் இதயசுத்தியோடு நடந்து கொள்வதாக ஐ.நாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகமே!