தன் நவரச நடிப்பால் எம் மனதில் நிறைந்த மரிக்கார் ராமதாஸ்!

எழுபதுகளின் கால் பகுதியில் கொழும்பில் கல்லூரி படிப்பை தொடர்ந்த எனக்கு கிடைத்த சுதந்திரம் [ உறவினர் தொல்லையற்ற சுதந்திர வாழ்க்கை ] பல நண்பர்களின் உறவை பலப்படுத்திய போது, அறிமுகம் ஆனார் என்னுடன் கல்லூரி நாடக விழாக்களில் கலந்து எனது ‘’பைத்தியங்கள் பலவிதம்’’ எனும் நாடகத்தில் சைவ பைத்தியமாக நடித்த நவநீதன் நேமிநாதன். ஆம் அவர்தான் அன்றைய திருமலை பாராளுமன்ற உறுப்பினர் நேமினாதனின் ஒரே தவப்புதல்வன். என்னைவிட பல வயது இளையவன். அவன் என் வகுப்பு தோழன் அல்ல. உருவத்தில் மிக பருமனானவன். அன்று இளைஞர் பேரவை, ஈழவிடுதலை இயக்கம், ஈரோஸ், ஈ பி ஆர் எல் எப் என தன் பங்களிப்பை செய்த, இன்று அனைவராலும் மறக்கடிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும், ஒரு காலத்தில் கிளிவெட்டி தங்கத்துரை அண்ணனின் [ 1997ல் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட திருமலை பாராளுமன்ற உறுப்பினர் ] வலதுகரமாக செயல்ப்பட்ட தங்கமகேந்திரன் அவர்களை, மட்டக்களப்பில் அடித்து ஒய்ந்த சூறாவளி புனர்வாழ்வு வேலைத்திட்டத்தில் சந்தித்த போது, நான் கேட்ட கேள்விக்கு அவர் நகைச்சுவையாக ஒரு பதில் கூறினார்.

1970ல் திருமலையில் தமிழரசு கட்சியில் போட்டியிட்டு வென்ற நேமினாதனுக்கு, 1977 தேர்தலில் போட்டியிட இடம் கொடாது அதனை சம்மந்தருக்கு வழங்கினார் அமிர்தலிங்கம். அதற்கான காரணம் என்ன என தங்கமகேந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறிய பதில் நேமிநாதன் இரண்டு யானை குட்டிகள் வளர்க்கிறார் அதனால் அவர் யு ஏன் பி ஆதரவாளர் ஆகிவிட்டார் அதனால் அமிர்தலிங்கம் அவருக்கு ஆசனம் கொடுக்கவில்லை என்பதே [யானை யு என் பி சின்னம்]. உள்நோக்கம் கொண்ட அந்த தவிர்ப்பு பற்றி எழுதினால் அது அமிர் பற்றிய தூற்றல் ஆகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன். நேமினாதனின் மகன் நவநீதன், மகள் நிகிலா என்ற இரு குழந்தைகள் அதீத ஊட்ட சத்து உணவுடன் பராமரிக்கப்பட்டு ‘”எந்தக்கடையில நீ அரிசி வாங்கிறாய்’’ என நடிகர் பிரகாஸ்ராஜ் தயாரிப்பில், பாலசந்தரின் நெறியாள்கையில் வந்த ‘’டுயட்’’ படத்தில் வரும் பாடலில் நடிகர் பிரபுவை பார்த்து பெண்கள் கேலியாக பாடுவது போல, சற்று உருண்டு திரண்ட உடல்வாகு கொண்டவராக குட்டி யானைகள் தோற்றத்தில், பலரின் கண்ணூறுக்கு உட்பட்ட காலதின் விமர்சனம் அது.

கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி சுற்றுலாவில் தான் நவநீதன் எனக்கு அறிமுகமானான். நாபாவை சந்திக்கு முன் நான் சந்தித்த முதன்மையானவருள் முதலிடம் அவனுக்கு தான். காரணம் தான் ஒரு எம் பி யின் மகன் என்ற இறுமாப்பு இன்றி, என்னை உயர்வாய் மதித்து என்னோடு உறவாடியது மட்டுமல்ல, அதுவரை நான் இயலாது என்று நினைத்ததையும் நிஜமாக்கியவன்.

ஆம் அவன் எனக்கு தந்த அறிமுகம் தான் என்னை, எட்டாத உயரத்தில் இருந்த மரிக்கார் ராமதாசை பக்கத்தில் இருந்து பார்க்க வைத்தது. இது கனவா நனவா என என் கைகளை கிள்ளிப்பார்க்க கூட இடம் கொடாமல், சர்வமும் என்னுள் அடங்கிய சந்திப்பு அது. நவநீதனின் வகுப்பு தோழன் வெங்கடேஷ். அவனது தாய் மாமன் தான் மரிக்கார் ராமதாஸ் என புகழ் பெற்ற ராமதாஸ். அப்போது நான் எனது வகுப்பு ஆசிரியர் திரு சிங்கராயர் அவர்களின் ஏற்பாட்டில் அவர் வசித்த வெள்ளவத்தை பசல்ஸ் லேன் வீட்டில், நண்பன் சிறீயுடன் ஒரு அறையில் தங்கிய காலம். சீதாபதி ஐயர் வெங்கடேசன் அவர்களின் சொந்த மாடி வீடு இருந்ததும், அதே பசல்ஸ் லேனில் தான். நான் உறங்கல், குளித்தல் மட்டுமே தங்குமிடத்தில். உண்ணல் மைசூர் கபே என இருந்த நிலை. ருசிக்கல்ல பசிக்கு சாப்பிட மட்டுமே மாதா மாதம் மணியோடரில் பணம் வரும் காலம்.

அதை மாற்றிய வினோதம் நிகழ்ந்தது மரிக்கார் ராமதாசை சந்தித்த வேளை. நாடகவிழா பற்றிய கலந்துரையாடலுக்கு என்னை தன் சக வகுப்பு தோழன் வெங்கடேசன் வீட்டுக்கு வலிந்து அழைத்து சென்றான் என் இளவல் நவநீதன். அங்கு நான் நேரில காணமுடியாது என எண்ணிய மரிக்கார் ராமதாசை கண்டேன். களிப்படைந்தேன். பல விடயங்களை பதட்டத்துடன் கேட்டேன். பொறுமையாய் சொன்னார். உணவருந்தும் வேளை வந்தபோது கடை உணவு உண்ண எழுந்து செல்ல முனைந்த என்னை, கரம் பிடித்து அருகமர்த்தி முறுகல் நெய் தோசையை முதல் முதல் முகர மட்டுமல்ல உண்ணவும் வழி சமைத்தார். அதுவரை காலையில் மைசூர் கபே 10 இடியப்பம் சம்பல் சோதி நிறைய சாம்பார் [50 சதம்}. மதியம் வி பொன்னம்பலம் [கம்யூனிஸ் கட்சி] உறவினர் வீட்டில் உணவு [2 ரூபா] இரவு முருகன் லொட்ஜ் தழிசை புட்டு அல்லது காந்தி லொட்ஜ் கோதம்பை மா தோசை நிறைத்த என் வயிற்றுக்கு, மரிக்கார் ராமதாஸ் புண்ணியத்தில் நெய் முறுகல் உளுந்து தோசை கிடைத்தது. அத்தனை எளிமயான, பழகுவதற்கு இனிமையான எந்த கலைஞரையும் அதுவரை நான் கண்டதில்லை. வித்துவ செருக்கில்லாத வினோத பிறவி அவர். கொழும்பு முஸ்லிம் பெருமக்கள் பேசும் வினோத தமிழை, வேடிக்கையாக பேசிய வித்தகன் அவர். ”மாச்சான் பயிப்பிடாத ஏங்கிட்ட சாமானம் இருக்கு” என ஒரு மொட்டை கத்தியை வைத்து கொண்டு அவர் மேடையில் ஆடிய ஆட்டம், எம்மை அடிவயிறு குலுங்க சிரிக்க செய்ததை இன்று நினைத்தாலும் என் தொப்பை வயிறு குலுங்கும்.

அவரின் கைவண்ணத்தில் உருவான ‘’கோமாளிகள் கும்மாளம்’’ வானொலி நாடகம் நீண்டகாலம் ஒலிபரப்பாகி ஒரு கலக்கு கலக்கி பின் படமாக்கப்பட்டது. அதற்க்கான வீட்டு தேர்விற்கு கொழும்பு கட்டுநாயக்கா விதியில், வத்தளை ஹெந்தலையில் இருந்த அடுக்குமாடி ஹோட்டல் தெரிவானது. இன்றும் இலங்கை செல்லும் வேளையில் விமானநிலயத்தில் இருந்து கொழும்பு செல்லும் போது நிலைத்து நிற்கும், அந்த ஹோட்டலை கடக்கும் போது மரிக்கார் ராமதாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், உபாலி சந்திரசேகர், ஐயர் அப்துல் ஹமீட், சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன் நினைவுகள் வந்துபோகும். முஸ்லிமாக ராமதாஸ், ஐயராக அப்துல் ஹமீட், சிங்களவராக உபாலி செல்வசேகரன், யாழ்ப்பாணத்து வடமராட்சி தமிழில் அப்புக்குட்டி ராஜகோபால், செந்தமிழில் சில்லையூர் செவராஜன், கிளி மொழியில் கொஞ்சு தமிழ் பேசும் கமலினி செல்வராஜன் கூட்டில், ‘’கோமாளிகள் கும்மாளம்’’ திரைப்படம் வசூலில் கூட சாதனை படைத்தது. இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் ஆரம்பமாகி, இந்திய பட இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் உள்ளூர் கலைஞர்கள் திரையில் தோன்றிய காலம்.

கட்டிட கலைஞர் வி எஸ் துரைராஜா தயாரித்த ‘’குத்துவிளக்கு’’, காவலூர் ராஜதுரையின் ‘’பொன்மணி’’, மலையக தொழிற்சங்கவாதி வி பி கணேசனின் ‘’நான் உங்கள் தோழன்’’. செங்கையாழியானின் நாவலான ஏ ஈ மனோகரன், பாலச்சந்திரன் நடிப்பில் வந்த ‘’வாடைக்காற்று’’. கிண்ணியா மூதூரில் வைத்தியராய் பணிபுரிந்த வேதநாயகம் தயாரித்து நடித்த ‘’தென்றலும் புயலும்’’, என வரிசைகட்டி வந்த எம்மவர் படைப்பில் கல்லாக்கட்டியது. மரிக்கார் ராமதாசின் ‘’கோமாளிகள் கும்மாளம்’’. உள்ளூர் தயாரிப்பிற்கு ஊக்கத்தொகை இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் கொடுத்தும், பலருக்கு தயாரிப்பு கையை கடித்தபோதும், மரிக்கார் ராமதாஸ் குழு வசூலில் சாதனை படைத்தது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை இந்த கூட்டணி ஆட்சி புரிந்த காலம் அது. அப்துல் ஹமீதின் கண்ணீர் என்ற குரல். அப்புக்குட்டியின் ‘’புகையிலகண்டால விழுந்து முறிவானே’’ என்ற திட்டு, உபாலியின் ‘’மாவு அதுக்கு மேல தேங்காயிட பூவு’’ என புட்டவிக்கும் விளக்கம், தணியாத தாகம் ஒலிபரப்பில் பறை மேளம், கமலினியின் தொடர் அழுகை என எம் காதுகளை ஆக்கிரமித்த காலம் அது.

பாரதியின் ‘’பாதி தின்கின்ற வேளையில் தட்டிப்பறிப்பான்’’ என்ற பாடல் வரிபோல், பேரிடியாய் வந்த 1983 இனக்கலவரம் அத்தனையையும் அற்றுப்போக செய்தது. திக்குக்கு ஒருவராய் திசை மாறிப்போயினர். சில்லையூர் சிவபதம் அடைந்தார். அண்மையில் கமலினியும் அவர்வழி தொடர்ந்தார். அப்புக்குட்டி பிரான்ஸ் பிரஜையானார். அப்துல் ஹமீட் சர்வதேச பறவையானார், ஏ ஈ மனோகரன் இந்திய சின்னத்திரை பிரியரானார். பாலசந்திரன் கனடாவில் காலமானார். இன்று இவர்களுடன் இரண்டற கலந்து, எம்மை அன்று தன் பலதரப்பட்ட நடிப்பால், பேச்சால் மகிழ்வித்த மரிக்கார் ராமதாஸ் மறைந்தார் எனும் செய்தி மன இறுக்கத்தை தருகிறது. ஆழிப்பேரலையில் அள்ளுண்ட தனுஸ்கோடி போலவே, எம் தமிழர் நிலையும் அடையாளம் தேடி அகிலமெல்லாம் அலையும் நிலை என்று மாறும் என்ற ஏக்கம் பிறக்கிறது. மரணத்தின் பின்பும் எம் மனங்களில் வாழும் மரிக்கார் ராமதாஸ் அவர்களுக்கு என் இதய அஞ்சலி.

(Ram)