தமிழகத்தைத் தாக்கிய ‘தூத்துக்குடித் துயரம்’

(எம். காசிநாதன்)
தனியார் தொழிற்சாலைக்கு எதிரான 23 வருடகாலப் போராட்டம், இப்போது 13 பேர் உயிரிழந்த துயரமான துப்பாக்கிச்சூட்டில் வந்து நிற்கிறது. இந்தச் சோகத்தின் பிடியில், ‘முத்து நகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடி சிக்கித் தவிக்கிறது. ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையை எதிர்த்து, இது ஒரு நூறு நாள் போராட்டம் என்றாலும், 99 நாட்கள் உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று நடைபெற்ற போராட்டம் 100 ஆவது நாளில், ‘ஸ்டெர்லைட் தொழிற்சாலை முற்றுகை’ என்ற ஆவேசப் போராட்டமாக மாறியபோது, தமிழகப் பொலிஸ்துறை, அதைச் சமாளிக்க முடியாமல் திணறிப்போய் விட்டது.

கலவரம் நடக்கப் போகிறது என்று மாநில உளவுத்துறை, அரசாங்கத்துக்கு எட்டுக்கும் மேற்பட்ட அறிக்கைகளைக் கொடுத்து விட்டதாகத் தகவலறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆகவே சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்வது போன்றோ, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போலவோ, இது மாநில உளவுத்துறையின் தோல்வி அல்ல.

அதைவிடப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் துண்டுப்பிரசுரங்களைப் பார்த்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், “போராட்டம் அமைதியாக நடைபெறும் என்று தெரியவில்லை” என்று அரசாங்கத்துக்கு முன்னெச்சரிக்கை விடுத்து, 144 தடையுத்தரவு போட உத்தரவிட்டார்கள். ஆகவே, உயர்நீதிமன்றம் இந்தப் போராட்டம் திசை மாறக்கூடும் என்று எச்சரித்து விட்டதை, யாரும் மறுக்க முடியாது.

ஆகவே, உளவுத்துறையும் உயர்நீதிமன்றமும் எச்சரித்த போராட்டத்தில், இப்படியொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று, மனித உயிர்கள் பலியாகக் காரணம் என்ன?

போராட்டம் நடைபெற்ற தினத்தில், அங்கு பொலிஸாரின் எண்ணிக்கை தேவையானளவு இல்லாததும், போராட்டம் கலவரமாக மாறிய பிறகு, அங்கு நின்ற பொலிஸாருக்கு, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க உயரதிகாரிகள் கொண்ட, முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட ‘செயின் ஒப் கொமாண்ட்’ என்பது காணாமல் போய்விட்டது என்பவையே மிக முக்கிய காரணம் என்று பொலிஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அதனால்தான், பல அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக பாதுகாப்புப் போட்டியிருந்தால், இந்தத் துப்பாக்கிச் சூட்டைத் தடுத்திருக்க முடியும் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

அதேநேரத்தில், துப்பாக்கிச் சூடு பற்றி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர் அதிர்ச்சியடைந்தார் என்றே, தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இப்படியொரு மோசமான, துப்பாக்கிச் சூடு நடத்தி, தனக்கு அரசியல் ரீதியாகப் பின்னடவை ஏற்படுத்தி விட்டார்களே என்ற கலக்கம், அவருக்கு இருந்ததாகவே தெரிகிறது.

அதனால்தான் அடுத்தடுத்து அவர், ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலைக்கு மின் இணைப்புத் துண்டிப்பு, தண்ணீர் இணைப்புத் துண்டிப்பு, ஒதுக்கப்பட்ட நிலம் திரும்பப் பெற்றது என்று உத்தரவிட்டு, இறுதியில் ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையை மூட அரசாணை பிறப்பித்தார்.

அந்த அரசாணை அவசரமாக பிறப்பிக்கப்பட்டதால், நீதிமன்றத்தில் நிற்காது என்று எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடைபெற்றவுடன், மானியக் கோரிக்கைகளை விவாதிப்பதற்கான சட்டமன்றக் கூட்டம், கடந்த செவ்வாய்க்கிழமை (29) தொடங்கியது.

சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் பங்கேற்ற தி.மு.க, “முதலமைச்சர் இராஜினாமாச் செய்ய வேண்டும். டி.ஜி.பி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது, வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்றெல்லாம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இறுதியில், ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையை மூடுவதற்கு, அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி, அரசாங்க ஆணை வெளியிட வேண்டும். அதுவரை நாங்கள் சட்டமன்றத்துக்கு வரமாட்டோம்” என்று கூறிவிட்டு, சட்டமன்றத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

வெளியேறியவர்கள் புதன்கிழமை (30) தி.மு.க தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் மாதிரிச் சட்டமன்றம் நடத்தியிருக்கிறார்கள். அங்கே, துப்பாக்கிச் சூடுக்கு அ.தி.மு.க அரசாங்கமே காரணம் என்று, விரிவான விவாதம் நடத்தியிருக்கிறார்கள். இவ்வாறான ‘மாதிரிச் சட்டமன்றம்’ திருநெல்வேலியில் ஜூன் ஐந்தாம் திகதியும் திருச்சியில் ஜூன் எட்டாம் திகதியும், சேலத்தில் ஜூன் 12 ஆம் திகதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான சட்டமன்றம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க, ‘மாதிரிச் சட்டமன்றம்’ மாநிலம் முழுவதும் நடைபெறுவது, தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் முதன்முறை.

இப்போது ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையைத் தொடங்க அனுமதி வழங்கியது தி.மு.கவா, அ.தி.மு.கவா என்ற வாதம் சூடுபிடித்துள்ளது. இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டாலும், ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையைத் தொடங்க அனுமதி அளித்து, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றுள்ளார்.

பின்னர், தி.மு.க ஆட்சியில் இரு முறை நீதிமன்ற உத்தரவுப்படியும்
அ.தி.மு.க ஆட்சியில் இருமுறை நீதிமன்ற உத்தரவுப்படியும் இந்தத் தொழிற்சாலை திறக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இரு கட்சிகளுக்குமே ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையைக் கொண்டு வந்ததில் பொறுப்பு இருக்கிறது என்றாலும், முதலில் வித்திட்டது, அ.தி.மு.க ஆட்சி என்பதில் ஐயமில்லை. இதைவிட, அரசாங்கத்துக்கும்- ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையை எதிர்க்கும் மக்களுக்கும் இடையிலான கோபம், அமைச்சர்கள் சென்று பார்வையிட்ட பிறகும் தணிந்த பாடில்லை.

மாநிலத்தின் தொழில் முன்னேற்றம், மிக முக்கியம் என்ற நிலையில், ஆட்சிக்கு வரும் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையை, இப்படி எதிர்ப்பது எதிர்காலத் தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு ஆபத்தாக முடியும் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. இருந்தாலும், இந்தத் தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை, ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

தொழிற்சாலையின் பாதுகாப்புச் சரியில்லை என்று கூறி ஒரு முறை நீதிமன்றம் மூடுவதற்கு உத்தரவிட்டது. அதை, உச்சநீதிமன்றம் இரத்துச் செய்தது. பிறகு ஒரு முறை, மூடப்பட்ட இந்தத் தொழிற்சாலைத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திறக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தொழிற்சாலை திறக்க உத்தரவிட்டதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இந்த ஆலையால்தான் SO2 என்று கூறக்கூடிய விஷவாயு வெளியேறுகிறது என்பதை பல்வேறு முறை நியமிக்கப்பட்ட குழுக்களால் நிரூபிக்க முடியாததேயாகும்.

இந்தத் தொழிற்சாலை மக்களுக்கு ஆபத்தாக இருக்கிறது என்பதற்கான விஞ்ஞான பூர்வமான விவாதங்களை உச்சநீதிமன்றத்திடமும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடமும் தமிழக அரசாங்கத்தாலோ, அல்லது ஆரம்பத்தில் வழக்குத் தொடர்ந்த வைகோவாலோ நிரூபிக்க இயலவில்லை. இதனால்தான், ‘ஸ்டெர்லைட்’ தொழிற்ாலை தொடர்வதற்கான காரணமாகும்.

தூத்துக்குடியில் மாநில பா.ஜ.க போராட்டத்தில், “சமூக விரோதிகள்” என்ற குரலை உயர்த்த, அதைத் தமிழக அரசாங்கமும் கூறியிருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற, சுப்பர் ஸ்டார் ரஜினியும் அதேவாதத்தைச் சொல்லியிருக்கிறார். இந்தக் கருத்தால் சமூக வலைத்தளங்களில் ரஜினியை வறுத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்பது, அனைத்து அரசியல் கட்சிகளுமே ஏற்ற கருத்து. ஆனால், இப்படித் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்பதும், 100 நாட்களாகப் போராடிய மக்களை, “சமூக விரோதிகள்” என்று ரஜினி குற்றம் சாட்டுவதும் யாருக்கும் ஏற்புடையது அல்ல.

‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலைப் போராட்டங்கள் அரசியல்வாதிகளுக்கும், அரசியல்கட்சி தொடங்குபவர்களுக்கும் ஓர் ஆயுதம். ஆனால், தூத்துக்குடி பகுதி வாழ் மக்களை தாக்கும் கொடிய நோய்களுக்குத் தீர்வாகி விடாது. மக்களே நடத்திய போராட்டம்தான், இப்போது தொழிற்சாலை மூடப்பட வேண்டும் என்ற தீர்வைக் கொடுத்திருக்கிறது.

இவ்வாறு மூடிய உத்தரவு, சட்டத்தின் முன் நிற்குமா என்பதே கேள்வி. ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையும் மக்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பை வழங்குவது என்று தெரியாமல், ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளையே நம்பிப் பொழுதை கழிக்கிறது. ஆகவே இந்த ஆலை தொடருவதும் தொடராமல் போவதும் இனி இது போன்ற போராட்டங்களில் இல்லை. நீதிமன்றங்களின் கையில் இருக்கிறது.

தமிழகத்தில் இதற்கு முன்பு துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. ஆனால், இப்போது நடந்ததில் 13 பேர் உயிர் பலியானார்கள். அதில் ஒரு பெண் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானது முதல் முறையாகும்.

எது மாதிரியான தொழிற்சாலைகளை அனுமதிக்க வேண்டும் என்ற ஒரு புதிய கொள்கை முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழக அரசாங்கம் இருக்கிறது. ‘தூத்துக்குடித் துயரம்’ தொடருகிறது…..