தமிழர் பகுதிகளில் புத்தர் இருந்தாரா?

(ஜெரா)

தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கும் கிழக்கும், மிகவேகமாக பௌத்தமயப்பட்டு வருகின்றன. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும் அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும், இதனை முன்னின்று செய்கின்றனர்; வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற மாதிரியான வரலாற்றுக் “கதைகளை” அவிழ்த்துவிடுகின்றனர். இந்தக் கதையவிழ்ப்புகளின் அடிப்படையில்தான், வடக்கிலும் கிழக்கிலும், நாளாந்தம் பௌத்த விகாரைகள் முளைத்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு வடக்கையும் கிழக்கையும் பௌத்தமயப்படுத்துவதற்கு, பெரும்பான்மையினர் கொடுக்கும் விளக்கம் சரியானதா?

வடக்கில் பௌத்தம் நிலவியது என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் என, வட பெருநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், பௌத்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே, அது சிங்களவருடையது என்கிற சிந்தனை, நம் மத்தியில் உண்டு. அரச மரத்தையும் சாந்த முனியையும் பார்த்தவுடனேயே, ஆக்கிரமிப்பின் அடையாளமாக அவற்றை நோக்கும் மனநிலையை, சிங்கள – பௌத்த அரசியல், நம்மில் திணித்துவிட்டிருக்கிறது. அரச மரத்தின் மருத்துவத் தன்மைகள் குறித்து, பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லாதனவற்றையா, காலத்தால் பிந்திவந்த பௌத்தம் போதித்திருக்கிறது?

எவ்வளவு முக்கியமான தொல்பொருள் தடயமாக இருந்தாலும், அது பௌத்தத் தன்மை கொண்டதாக இருந்தால், அடித்து நொருக்கப்பட வேண்டியது என்கிற மனநிலையைத் தமிழருக்கும், மிகவும் அரிதான பண்பாட்டுத் தடயமாக இருந்தாலும், கிடைக்கின்ற இந்து மத எச்சங்கள் சிதைக்கப்படவேண்டிய ஆதிக்கக் குறியீடுகள் என்கிற மனநிலையை சிங்களவர்களுக்கும், இலங்கையின் அரசியல் கற்பித்துவைத்துள்ளது. ஒரு பெருந் தத்துவம், மதமாகி, தீவிர அரசியல் மயப்பட்டதன் விளைவே இது.

ஆனால், உண்மையில் இலங்கையில் அரசியல் முரணை எதிர்நோக்குகின்ற இரு இனங்களும், இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. இலங்கையில் மதங்களுக்கு மோசமான அரசியல் அடையாளங்கள் இருப்பதன் பின்னணியை விளங்கிக் கொண்டு, அதனை அறிவுசார் தளத்தில் அணுகவேண்டும். வடபாகத்தில் கிடைக்கின்ற பௌத்த எச்சங்களை, சிங்களவர்களும் தமிழர்களும், ஆக்கிரமிப்பின் தடயமாக, நிலம் கவர்தலுக்கான ஆதாரமாகக் கொள்ளாமல், சரியான வரலாற்று – பண்பாட்டுப் புரிதலின் அடிப்படையில் அதை நோக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாகச் செய்யவேண்டியது, எந்தப் பண்பாடு சார்ந்த தொல்பொருட்களைக் கண்டுபிடித்தாலும், உடனேயே இது இத்தனையாம் நூற்றாண்டுக்குரியது, இந்த மன்னருக்குரியது, இந்தச் சமயத்துக்குரியது, இந்த மொழிக்குரியது என்கிற முடிவுக்கு வராமலிருக்க வேண்டும். ஒழுங்கான அகழ்வாய்வுகள், துறைசார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படாது, முடிவுகளாக செய்திகள் அறிவிக்கப்படுகின்றமை, மேலும் மத ரீதியான இன முரண்பாட்டுக் கூர்மையை அதிகப்படுத்தும்.

பௌத்தம் என்றால் என்ன?

பெளத்தம் என்பது, வாழ்க்கைத் தத்துவமொன்று; மதமல்ல. மதவாத அரசியல் செய்வதற்கான கருவியுமல்ல. சாதி, சமயம், பொருளாதாரச் சுரண்டல்களால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலையைத் தேடித்தரும் ஆயுதம். போரையும் வறுமையையும் வாழ்க்கைத் துயரத்தையும் இல்லாமலாக்க, சித்தார்த்தன் என்ற பெருமுனியால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்தல் முறையே, பௌத்தம். அஹிம்சை, இதன் பிரதான இயல்பு. ஆனால், இப்போதிருக்கின்ற பௌத்தத்தில், இந்த அம்சங்கள் எதனையும் பார்க்க முடியாது. இப்போது அது, அரசியல் மதம். அரசியல் தத்துவமாகக் கூட இல்லை. இதனால், பௌத்தம் தரம் உயர்ந்ததா அல்லது தரம் தாழ்ந்து சீர்கெட்டுப்போனதா என்கின்ற வாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்றைய பௌத்தத்தின் குரூரமான சாட்சிகளாக, இலங்கையும் மியான்மாரும், உலகத்தவரால் நோக்கப்படுகின்றன.

தமிழ்ப் பௌத்தம்

முதலில் பௌத்தம், இந்தியாவுக்குள்ளேயே பரப்பப்பட்டது. அதன் ஒரு கிளையாக, தமிழகத்துக்கும் பௌத்தம் விரிவடைந்தது. சித்தார்த்தனின் சீடர்கள், அந்தப் பணியைச் சரிவரச் செய்தனர். சங்ககால முதிர்ச்சியில், முடிக்கான முடியாப் போரில் சீரழிந்து சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு ஒத்தடமாக, பௌத்த பிரசங்கங்கள் அமைந்தன. வறுமையும் பிணியும் அரசியல் இருப்பின்மையும் ஒடுக்குமுறையும் கோலோச்சியிருந்த அந்தக் காலத்தில், வாழ்க்கையை நிர்வாணமாகக் காட்டிய பௌத்தம், தமிழகத்தில் பெருமெடுப்புப் பெற்றது; பௌத்த பிக்குகள் பரவலடைந்தார்கள். சமூக விசுவாசம் கொண்ட குறுநிலத் தலைவர்கள், போதியளவு தான தர்மங்களை வழங்கி ஊக்குவித்தார்கள். பதிலீடாக, பகுத்தறிவையும் மருத்துவத்தையும் வாழ்க்கைத் தத்துவத்தையும், தமிழக மக்களுக்கு, பௌத்த துறவிகள் வழங்கினார்கள். அதற்குப் பிராந்தியப் பண்பாட்டை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப பணி செய்வது அவசியமாகியிருந்தது. இதற்கு ஆதாரமாக, தமிழகத்தில் மீட்கப்படும் பௌத்த சமயத் துறவிகளுக்கு வழங்கப்பட்ட கல்வெட்டுகள் சொல்லும் செய்திகளை ஆதாரமாகக் குறிப்பிட முடியும். இவ்வாறு, தமிழக மக்களின் வாழ்வோடு கலந்திருந்த பௌத்தம், பல்லவரின் எழுச்சியுடன் சிதைவடையத் தொடங்கியது. பிராமணிய ஆதிக்கத்தால் ஏற்கமுடியாத கருத்துகளையும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் பௌத்தம் விளங்கியதால், தமிழகத்தைவிட்டு, ஏன் இந்தியாவை விட்டும் கூட, பௌத்தம் அகற்றப்படவேண்டிய ஒன்றாக அது கருதப்பட்டது. அப்படியே, பௌத்த துறவிகள், வாதங்களின் பெயரால் கொலைசெய்யப்பட்டார்கள்; அடித்துவிரட்டப்பட்டார்கள். தமிழ்ப் பௌத்தமும் மெல்லச் செத்தது.

வட பாகத்தில் பௌத்தம்

தமிழகமும் இலங்கையின் வடக்கு – கிழக்கு பாகங்களும், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் வரலாற்றுக் காலத்திலும், மிக முக்கியமான பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியிருந்தன. தமிழகத்திலிருந்து, நேரடியான பண்பாட்டுப் பரிமாற்றங்களைப் பெற்றுக்கொண்ட இடங்களாக மாதகல், கந்தரோடை, மாந்தை, வல்லிபுரம் முதலான இடங்கள் காணப்படுகின்றன. அங்கிருக்கின்ற பௌத்த எச்சங்கள், இதனை நமக்கு உறுதிப்படுத்தும். தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் மிக அண்மையான பகுதியில், இலங்கையின் வடக்கு – கிழக்குப் பாகக் கடற்கரைகள் காணப்படுவதால், சிறுபடகுகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும், இந்தப் பகுதிக் கடற்கரைகளைத் தொட வாய்ப்பிருக்கிறது. அத்துடன், ஆழம் குறைந்த கடற்கரைகள் என்பதும் இன்னொரு விடயம். எனவே, இலங்கையில் முதல் பௌத்தம் தொட்ட இடமாக, வடக்கு – கிழக்குப் பாகங்கள் இருந்திருக்கின்றன.

ஏன் அவற்றால் நின்றுபிடிக்க முடியவில்லை?

இலங்கைத் தமிழர்களது பண்பாடு, தமிழகத்திலிருந்து பரவலடைந்திருந்தாலும், புவியியல் இடைப்பிரிப்பு, சில தனித்துவங்களை வழங்கியிருக்கிறது. உணவு, கலாசார நடைமுறைகள், மொழி, இயற்கை மருத்துவ அறிவியல், புராதன வழிபாட்டு மரபுகள் என, சில தனித்துவங்கள் இங்குண்டு. தமிழக இந்து மதமும் சாதியமும், பிரமாண்டத் தன்மைகொண்டன. ஆனால், இலங்கைத் தமிழரின் இந்து மதமும் சாதியமும், நுண்தன்மைகொண்டது. அதனால், இவையிரண்டும் இந்தப் பிராந்திய மக்களின், ஆள்பவர்களின் நுண் அரசியலோடு கலந்தவை. எந்தப் பண்பாட்டாலும் அகற்றப்படமுடியாதவை. முதற்கட்டமாக, இந்தத் தனித்துவத்தோடு மோதி, பௌத்தம் தோல்வியுற்றது என்றே குறிப்பிட வேண்டும். மற்றையது, வடக்கில் உள்ளாகவும் புறமாகவும், என்றுமே சாதிய அரசுகளே எழுச்சிப் பெற்றிருந்தன. அவை, நுண்ணிய ஒடுக்குமுறைகளில் கைதேர்ந்தனவாக இருந்தன. ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமலே, ஒடுக்கப்படுதல் நிகழ்ந்துகொண்டேயிருந்தது; நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே பலமான ஒடுக்கும் பண்பாடு நிலவுகின்ற சூழலில், அதற்கெதிரான பௌத்தத்தால், நின்று பிடிக்கமுடியவில்லை. அத்தோடு, தான – தர்மம் யார் கொடுப்பது?

பௌத்தம் வடக்கில் நின்றுபிடிக்க முடியாமல் போனமைக்கு, பிறிதொரு காரணமும் உண்டு. பௌத்தம் பரவிய காலத்து பௌத்த துறவிகள், இந்தக் காலத்து துறவிகள் போல இருக்கவில்லை. இனவாதம் பேசுவதிலும் அரசியல் செய்வதிலும் ஏனைய மதத்தினருக்கு எதிராக மத வன்முறைகளில் ஈடுபடுவதிலும் சுகபோகங்களை அனுபவிப்பதிலும், கவனமற்று இருந்தார்கள். பௌத்தமும், சரியான துறவியாக வாழ்வதையே அவர்களுக்குப் போதித்தது. எனவே அவர்களின் தங்குமிடங்கள், வனாந்தரங்களாகவும் காடுகளாகவும் குகைகளாகவும் இருந்தன. மக்கள் கொடுக்கும் தானத்தில் உண்டு, உடுத்தி வாழ வேண்டும். அது இல்லாதவிடத்து, இயற்கையில் கிடைக்கும் காய், கிழங்கு, கனிகளை உண்டு, மக்கள் பணி செய்யவேண்டும். இதற்கான இயற்கை அமைவுகள் வடக்கு – கிழக்கில் இல்லாமலிருந்தமை, பௌத்த பிக்குகளையும் அந்த மதத்தினரையும், தெற்கு நோக்கி இடம்பெயர வைத்தது.

இந்த இடத்தில், வடக்கு – கிழக்கு பௌத்த எச்சங்கள் குறித்து, இன்னொரு புரிதலையும் முன்வைக்கலாம். இப்போதும் போலவே, இலங்கையின் வரலாற்றுக் காலம் தொடங்கியபோதும், மாறி மாறி ஆக்கிரமிப்புகள் நடந்தன. அநுராதபுரத்தை (மய்ய அரசை) யார் கைப்பற்றுவது என்கிற போட்டி நிலவியது. காலத்துக்குக் காலம், வடக்கிலிருந்து தமிழ் மன்னர்களும், தெற்கிலிருந்து சிங்கள மன்னர்களும், அதை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள். இவர்கள் பலவீனமடைந்திருந்த காலத்தில், மய்ய அரசையும் தாண்டி, ஏனைய பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டதற்கான சான்றுகளுண்டு. அதன் பின்னணியில், சிங்களவர் கைப்பற்றிக் கொண்ட தமிழரின் இடங்களில், பௌத்த விகாரைகளையும், தமிழர் கைப்பற்றிக் கொண்ட சிங்களவரின் இடங்களில், இந்து ஆலயங்களையும் அமைத்துக் கொண்டார்கள். இது, ஒரு வகையான பண்பாட்டு அடிமைப்படுத்தலாக, காலத்துக்குக் காலம் நிகழ்ந்து வந்திருக்கிறது. இப்போதும் அந்த நிலைமை நீடிக்கின்றமை, அதற்கு மேலுமோர் ஆதாரமாகக் கொள்ளத்தகும். இலங்கையின் வடக்கு – கிழக்கில், காலத்தால் பிந்திய பௌத்த ஆலயங்களும், தெற்கில் இந்து ஆலயங்களும் காணப்படுகின்றமைக்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது. அப்படியே பார்த்தால், பௌத்த எச்சங்கள் காணப்படும் இடங்கள் அனைத்தும் சிங்களவர்களுக்கு அல்லது பௌத்த பண்பாட்டுக்குரிய இடங்கள் எனக் குறிப்பிட்டால், தெவுந்துரமுனையிலும் (தெய்வேந்திரமுனை) இந்துக் கோவில் உண்டு. கதிர்காமத்தில், தமிழ்க் கடவுளரான கந்தன் இருக்கிறார். இவ்விடங்கள் எல்லாம், தமிழர்களுடையது எனவும் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக, கிடைக்கப்பெறும் தொல்பொருட்களுக்கு, உடனடியாக முடிவு அறிவிப்புகளை வெளியிடுவது, அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். சரியான வரலாற்று, பண்பாட்டு, மரபுசார் கலாசார புரிதல்களுடனும் நவீனமயப்பட்ட சிந்தனையுடனும், தொல்பொருட்கள் மீதான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இன்றைய நிலையில் தொல்லியல் ஆய்வுகள், வரலாற்றுப் புத்தகங்களோடு மட்டும் நின்றுவிடும் ஒன்றாக இல்லை. மாறாக, சமூக – பண்பாட்டு நடப்பியலோடும், அவற்றைப் போதிக்கின்ற மானுடவியல், இனவரையியல், மொழியியல், சுற்றுச்சூழலியல் துறைகளோடும் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போதே உண்மைகள் தெரியவர வாய்ப்புண்டு. மிக முக்கியமாக, முடிவை வைத்துக்கொண்டு, அதற்கான எச்சங்களைக் கண்டுபிடிக்கும் ஆய்வுப் போக்கு, உலகின் எந்தப் பாகங்களிலும் இல்லவேயில்லை.

எனவே இலங்கையில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் தொல்லியல் ஆய்வுகளை மட்டும் வைத்துக்கொண்டு, பௌத்த விகாரைகளை நிறுவுவது, புத்திசாலித்தனமானதல்ல. அதுவும், ஒருவகையான மேலாண்மைவாதமே; அதிகாரத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் பண்பாட்டு ஆக்கிரமிப்பே ஆகும்.