தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் வல்வெட்டித்துறையின் ஆதிக்கம்….

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் வல்வெட்டித்துறையின் ஆதிக்கம் தொடர்பாக யூலை 7 2009இல் எழுதப்பட்ட VVT Eஆக மாறும் LTTE என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு பெரும்பாலும் அழிக்கப்பட்ட போதும் சர்வதேச வலைப்பின்னல் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. 2007 ஓகஸ்ட்டில் வெளியான Jane’s Intelligence Review, என்ற புலனாய்வுச் சஞ்சிகை விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானத்தை 200 – 300 மில்லியன் டொலர்கள் என மதிப்பிட்டு உள்ளது. அதன்படி Revolutionary Armed Forces of Colombia (FARC), என்ற கொலம்பியாவைச் சேர்ந்த ஆயுதக் குழுவிற்கு அடுத்தபடியாக எல்ரிரிஈ செல்வந்த இயக்கம் என்ற நிலையில் இருந்தது. சர்வதேச கப்பல் வர்த்தகத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தல் வரை எல்ரிரிஈ உடைய வியாபாரம் பல்வகைப்பட்டது என்று Jane’s Intelligence Review, தெரிவிக்கின்றது.

200 – 300 மில்லியன் வருமானத்தை ஈட்டும் அமைப்பினுடைய வர்த்தகப் பெறுமதி – அவ்வமைப்பின் அசையும் அசையாச் சொத்துக்களின் பெறுமதி ஒரு பில்லியனுக்கும் அதிகமானது என மதிப்பிடப்படுகிறது. எல்ரிரிஈ தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்ததால் இந்தச் சொத்துக்கள் அனைத்தும் தனிநபர்களின் பெயர்களிலேயே பதிவு செய்யப்பட்டு இருந்தன. சர்வதேச நிதி விடயங்கள் நீண்ட காலமாக கே பி இன் கட்டுப்பாட்டில் இருந்த போதும் சமாதான காலத்தில் பொட்டம்மானின் உளவுத்துறையால் கே பி ஓரம்கட்டப்பட்டு கஸ்ரோவிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கே பி அனைத்து கட்டுப்பாடுகளையும் இழந்து தற்காலிகமாக ஓய்வுபெற்றார்.

வே பிரபாகரன் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டதால் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலங்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டனர். நம்பகமானவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலும் அந்த குலக் குழுமமாகவே புலிகள் இயக்கம் இயங்க முற்பட்டுள்ளது.

(Chandru Siva)