(தமிழ்)ஈழப்போர் நடந்த காலத்தில் (வர்க்கப் )பிரச்சினை இருக்கவில்லை

ஈழப்போர் நடந்த காலத்தில் வர்க்கப் பிரச்சினை இருக்கவில்லை என்று பாசாங்கு செய்வோரின் கவனத்திற்கு: இதோ ஒரு நேரடி சாட்சியம். இந்த வீடியோவில் காணாமல்போன பிள்ளையின் தாய் சொல்வதைக் கேளுங்கள். இதை நாங்கள் சொன்னால் “இடதுசாரி” என்று திட்டுவார்கள். தேசிய உணர்வை உடைப்பதாக தமிழ்த் தேசியவாதிகள் சண்டைக்கு வருவார்கள். ஆனால், ஈழத்தின் யதார்த்தம் அவர்களது கனவுலகிற்கு முரணாகவே உள்ளது.

போர் நடந்த காலம் முழுவதும் ஏழைகளே அதிகளவில் பாதிக்கப் பட்டனர். வசதிபடைத்தோரும், பணக்காரர்களும், வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள். பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம். சிங்கள அரசும், சிங்கள இராணுவமும், எத்தகைய கொடுமையான இனவெறியர்களாக இருந்தாலும், காசைக் காட்டி மயக்க முடிந்தது. இறுதிப் போரில் தப்பிய புலிகளின் முக்கிய உறுப்பினர்களை கூட, காசு வாங்கிக் கொண்டு விடுதலை செய்திருக்கிறார்கள். இராணுவ அதிகாரிகளே, விமான நிலையம் வரை கூட்டிச் சென்று வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ஈழப்போர் நடந்த காலம் முழுவதும், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டாலும், சில நாட்களில் பெருந்தொகைப் பணம் கொடுத்து வெளியே வந்தார்கள். சிறிலங்கா இராணுவம், காவல்துறைக்கு இலஞ்சம் கொடுக்க வசதியில்லாத ஏழைகளின் பிள்ளைகள், இன்று வரைக்கும் சிறை வைக்கப் பட்டுள்ளனர். கடுமையான சித்திரவதைகளை அனுபவிப்போராக உள்ளனர். பலர் கொல்லப் பட்டு விட்டனர் அல்லது காணாமல் போகச் செய்யப் பட்டுள்ளனர்.

இதோ காணாமல்போன தன் பிள்ளையை இன்னமும் தேடிக் கொண்டிருக்கும் தாயொருவரின் வாக்குமூலம்:
“பணக்கார வீட்டுப் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள். ஏழைப் பிள்ளைகளை அடைத்து வைத்திருக்கிறீர்கள்”

ஐ.நா. செயலாளர் பான் கி மூன், யாழ் நகர் சென்றிருந்த நேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வீடியோ: https://www.youtube.com/watch?v=kJeblNa2Pz4

(Kalai Marx)