தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் வாய்ப்புகள் அதிகம்

(வாசுகி சிவகுமார்)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியாகப் பெயர்மாற்றம் பெற்றிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் பின் பத்மநாபா அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அதனை ஏற்றுக்கொள்ளும், இணைந்த வடக்கு−கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள், அது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக் கூறுகிறார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வி…

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியாகப் பெயர்மாற்றம் பெற்றிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் பத்மநாபா அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாக வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மை என்ன?

நாங்கள் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என்பதுதான் உண்மை. ஆனால் அது தொடர்பிலான இறுதி முடிவு இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பக்கத்தில் இருந்து வரவில்லை. இருந்தாலும் எங்களையும் இணைத்துக் கொண்டு செயற்படுவதற்கான விருப்பத்தை நேரடியாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அந்தவகையில், அது எங்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியே. அதனைவிடவும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் மற்றும் கூட்டமைப்பில் உள்ள புளொட் மற்றும் ரெலோ அமைப்புகளின் தலைவர்களுடன் நாங்கள் நட்புறவு பேணி வந்திருக்கின்றோம். எங்களையும் இணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என்று தாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாகவும் புளொட் மற்றும் ரெலோ அமைப்புகளின் தலைவர்கள், எங்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். தமிழரசுக்கட்சியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அது பற்றிச் சொல்லியிருக்கின்றது. நாங்களும் தமிழரசுக்கட்சியுடன் பேசிவருகின்றோம். இன்னமும் அது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆனால் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.

தேர்தல் காலங்களில் உருவாகும் கூட்டணிகள் பெரும்பாலும் மக்களின் வாக்கு வங்கிகளைக் குறிவைக்கின்றனவே அன்றி அக்கூட்டணிகள், சமூக அக்கறை கொண்டவையாக இல்லையென்ற விமர்சனங்கள் தற்போது பெருமளவில் முன்வைக்கப்படுகின்றனவே?

இதில் உண்மை என்னவெனில், தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைக் குறிவைத்து கூட்டணிகளை உருவாக்குவதில் தவறில்லை என்பதுதான். ஏனெனில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஜனநாயக நடைமுறைகளில் வாக்குகளின் மூலம் தான் மக்களது அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. தேர்தல்கள் மூலம்தான் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இணைந்து செயற்படுவதானது தேர்தல்களை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. தமிழ் மக்களது அரசியல் தீர்வு, சமூக, பொருளாதார விவகாரங்கள், மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், சமூகநீதி நிலைநாட்டப்படல் போன்றனவற்றை சமூக ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுப்பதற்காக ஒரு கூட்டமைப்பாக வலிமையுடன் செயற்படுவதையே நாங்கள் விரும்புகின்றோம். தேர்தல் காலங்களை இலக்காகக் கொண்டு கூட்டணிகள் உருவாக்கப்படலாம். உருவாக்கப்பட்டும் உள்ளன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கான எமது விருப்பம், அவ்வாறான ஒரு குறிக்கோளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அரசியல், சமூக, பொருளாதார ரீதியிலான முற்போக்கான முன்னேற்றங்களை இலக்கு வைத்ததாகவே எங்களது செயற்பாடுகள் அமையும்.

புலிகளால் சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முன்னாள் எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்து கொண்டமையே ஈ.பி.ஆர்.எல்.எப் சுரேஷ் அணியாகவும், நாபா அணியாகவும் பிளவடையக் காரணமாய் அமைந்ததாகச் சொல்லப்படுகின்றதே?

இல்லை. அது தவறான கருத்து. 2001 ஆம் ஆண்டில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானது. அது புலிகளால் உருவானதல்ல. தங்களது முயற்சியால் உருவானது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பலதடவைகள் சொல்லியிருக்கின்றார். அது வேறுவிடயம். ஆனால் அதற்கு முன்பாகவே 1999 ஆம் ஆண்டே சுரேஷ் பிரேமச்சந்திரன் ஈ.பி.ஆர். எல்.எப் ஐ உடைத்து விட்டார். ஈ.பி.ஆர்.எல்.எப் தானாக பிளவுபடவில்லை. அதனை உடைத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தான். அதற்குக் காரணம் புலிகள். அவர் புலிகளின் கட்டுப்பாட்டிலான ஒரு அமைப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைக் கொண்டுசெல்ல முற்பட்டார். அதற்கு வசதியாக அவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை உடைத்தார். அதனாலேயே பத்மநாபா அணியை உருவாக்கிச் செயற்பட வேண்டிய கட்டாயத்துக்குள் நாங்கள் தள்ளப்பட்டோம். இதுதான் வரலாற்றுண்மை.

தற்போது தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பணியாற்றமுடியாதென சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியேற, ஈ.பி.ஆர்.எல்.எப்பின் பத்மநாபா அணி இணைவதன் காரணம் என்ன?

சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழரக்கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடியாதெனக்கூறும் காரணங்கள் சரியா? பிழையா? என்பது பற்றி எனக்குத்தெரியாது. அதைப்பற்றி நான் விவாதிக்க வரவில்லை. ஆனால், தமிழரசுக்கட்சியுடன் பதினைந்து, பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக ஈ.பி.ஆர்.எல்.எப் இணைந்து பணியாற்றியிருக்கின்றது. இப்போதும் கூட தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுத்தான் அவர்கள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். கடந்த தேர்தலில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்தார். தனக்கொரு தேசியப்பட்டியல் ஆசனம் தரப்பட வேண்டும் என அவர் கேட்டார். அப்போது கூட வீட்டுச் சின்னத்தில் தான் அதனைக் கேட்டார். ஆகவே, தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடியாதென அவர் சொல்வதில் மக்கள் சார்ந்த பொது நலன் ஏதும் இருப்பதாக எனக்குப் படவில்லை. அவர் வெளியேறியதால்தான் ஈ.பி.ஆர்.எல் எப் பின் பத்மநாபா அணி இணைந்ததெனக் காரணம் சொல்வது சரியானதல்ல. ஏனெனில் ஈ.பி.ஆர்.எல் எப் பின் பத்மநாபா அணியின் பெயர் தற்போது தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்பதாக உத்தியோகபூர்வமாக மாற்றம் பெற்றிருக்கின்றது. நாங்கள் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியாக இருந்தபோதும், தற்போது தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியாக இருக்கின்ற போதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கான பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டுதான் வந்திருக்கின்றோம். எங்களுக்கு ஆதரவாக ரெலோ மற்றும் புளொட் அமைப்புகள் தமிழ்க்கூட்டமைப்புக்குள் இருந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. அதேபோல தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும் அந்த விருப்பத்தை எங்களுக்குத் தெரிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நாங்கள் இணைய முடியாது. ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் இரண்டு பிரிவுகள் ஒரே அமைப்பில் அங்கம் வகிக்க முடியாது என்று பல்வேறு காரணங்களைக் கூறி, நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியாத நிலையை இதுவரை ஏற்படுத்தியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்தான். எனவே அவர் பிரிந்து சென்றதுதானா? அல்லது வேறு காரணங்களா? என்று நான் கூற முடியாது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கட்சி இருந்திருந்தாலும் நாங்கள் இணைந்து பணியாற்றத் தயங்க மாட்டோம்.

நீண்டகால இடைவெளியின் பின்னர் மீண்டும் தீவிர தமிழ் அரசியலில் குதிக்க விருக்கின்றீர்கள். உங்கள் முன்னுள்ள சவால்களாக எவற்றைச் சொல்வீர்கள்?

குதிப்பது என்றால் எங்கிருந்து குதிப்பது? எவ்வளவு உயரத்தில் இருந்து குதிப்பது? என்றெல்லாம் சினிமாவில் ஒரு நகைச்சுவை இருக்கின்றது. நான் மேலே இருந்து கீழே குதிக்கவும் இல்லை. நிலத்தில் இருந்து பள்ளத்தில் விழவும் இல்லை. ஒரு ஜனநாயக் சூழலில் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் காத்திரமான அரசியல் சமூகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது இயல்பாகவே பெரும் சவால்களைக் கொண்ட ஒரு விடயமாகவே இருக்கும். இந்தச் சூழலில் இருந்து குறுகிய காலத்துக்கு வெளியேறியிருந்தால் கூட அது மீன் தண்ணீரை விட்டு வெளியேறியதற்குச் சமனானதாகவே இருக்கும். மீண்டும் அந்தமீன் தண்ணீருக்கு வந்து நீந்துவதற்கு எதிர்கொள்ளும் சவால்களை ஒத்த போராட்டமாகவே என்னுடைய சவால்களும் இருக்கும். நான் பிறந்து வாழ்ந்த சமூகத்தின் மத்தியில் மீண்டும் என்னை அறிமுகப்படுத்தும் பெரும் வேலைத் திட்டம் என்முன் இருக்கின்றது. அதேவேளை, எங்களது காத்திரமான செயற்பாடுகள் எந்தளவுக்கு தீர்க்கதரிசனமாக முன்னெடுக்கப்பட்டன? மாகாண சபையை அமைத்ததில் மாகாண சபையை நடத்தியதில் எங்களது செயற்பாடுகள் எந்தளவுக்கு காத்திரமானவையாக இருந்தன? என்பது பற்றி மக்கள் மத்தியில் ஓர் அபிப்பிராயம் இருக்கின்றது. அவையெல்லாவற்றையும் உள்வாங்கியவர்களாக மக்கள் மத்தியில் செயல்படுவதற்கான பல சவால்கள் இருந்தாலும் அனுகூலமான வாய்ப்புகளும் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

இடைக்கால அறிக்கைக்கு நாடெங்கிலும் பரவலாக எழுந்துள்ள எதிர்ப்பலைகள், புதிய அரசியலமைப்புருவாக்க முயற்சிகளையே முடக்கி விடுமா?

இதுகாலவரையில் 1957 ஆம் ஆண்டின் பண்டா- செல்வா ஒப்பந்தமாக இருந்தாலென்ன? 1965 ஆம் ஆண்டின் டட்லி செல்வா ஒப்பந்தமாக இருந்தாலென்ன? பின்னர் இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தப்படி 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பின் ஒரு பாகமாகவே வந்துவிட்டபின்னரும் கூட அதை நிறைவேற்றுகின்ற பல்வேறுபட்ட விடயங்களிலும், அதன் பின்னர், 2000 ஆம் ஆண்டு சந்திரிகா அவர்கள் ஒரு புதிய அரசியலமைப்புருவாக்க முயற்சியில் ஈடுபட்டபோதும் கூட, பல்வேறு எதிர்ப்பலைகள் தோன்றி அவையெல்லாம் செயலுருப்பெறாதென்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியதையே கடந்தகால வரலாறுகள் சொல்கின்றன. அந்த வரலாறே அவ்வாறான அச்சநிலையை இப்போதும் தேசம் தழுவிய வகையில் தோற்றுவித்திருக்கின்றது. எனவே இடைக்கால அறிக்கை ஏற்படுத்தியிருக்கும் எதிர்ப்பலைகளை வைத்து, அரசியலமைப்பு உருப்பெறுமா இல்லையா என்பதனை இப்போதே உறுதியாகக் கூறமுடியாது. ஒரு அரசியலமைப்பு மாற்றத்தை உருவாக்குவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இது வரைக்கும் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பெரும்பான்மையைக் கொண்டு சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்காக ஒருமுகமாக வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றினால் நிச்சயமாக புதிய அரசியலமைப்பு உருப்பெறுமா பெறாதா என்பதற்கு விடை கிட்டும். புதிய அரசியலமைப்பு வெற்றிகரமாக நிறைவேற்றுவது என்பது, இப்போதைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் எந்தளவுக்கு மக்களை வென்றிருக்கின்றார் என்பதிலேயே தங்கியுள்ளது.

எல்லாவற்றையும் மீறி புதிய அரசியலமைப்பொன்று உருவாகினால் அதில் வடக்கு, கிழக்கு இணைப்புக்கோ சமஷ்டிக்கோ சாதகமான எந்தக் கூறுகளும் இருக்காது என்றே சொல்லப்படுகின்றதே?

வடக்கு- கிழக்கு இணைப்பென்பது இன்றைக்கு கிழக்கு மாகாண மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு, அனுசரணை, உடன்பாடு என்பன இல்லாமல் சாத்தியப்படாதது என்பது உங்களுக்குத் தெரியும், எனவே வடக்கு, கிழக்கினை இணைப்பது தொடர்பிலான உடன்பாட்டை பெரும்பான்மையான தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப்பெற்ற தமிழ்த் தலைவர்களும் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற தலைவர்களும், ஆற அமர ஆலோசித்து, விட்டுக் கொடுப்புக்களின் அடிப்படையில் பேச்சு வார்த்தைகளை நடத்தினால் சாத்தியமாக்கலாம். வடக்கு, கிழக்கு இணைப்பென்பது, வெறுமனே வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கின்ற விடயமல்ல. அதில் உள்ளடங்கியுள்ள பல்வேறு விடயங்களுக்கும் சாதகமான தீர்வுகளைக் கண்டால் இவ்விரு மாகாணங்களையும் எதிர்காலத்தில் இணைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படலாம். இப்போதுள்ள புதிய அரசியலமைப்பில் அதற்கான சாத்தியங்கள் இல்லை. ஏனெனில், வடக்கினையும் கிழக்கினையும் இணைப்பது தொடர்பில் தமிழ், முஸ்லிம் தலைவர்களிடையே உடன்பாடில்லாத நிலைமையே தற்போது காணப்படுகின்றது. இரண்டாவது விடயம் சமஷ்டி, அதையொரு குறிக்கோளாக வைத்து தமிழ்த் தலைவர்கள், தமிழர் இயக்கங்கள், கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் உடனடியாக ஒரே பாய்ச்சலாக சமஷ்டிக்கான சூழலை ஏற்படுத்துவதென்பது, அரசியலமைப்பில் அதனை உள்ளடக்குவதென்பது இன்றைய சூழலில், அல்லது இலங்கையோடு இருக்கக்கூடிய சர்வதேச அரசியல் சூழலில் சாத்தியப்படாது. சர்வதேச நாடுகள் இலங்கையிடம் கொண்டிருகின்ற எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலும், அவ்வாறு சமஷ்டி அரசொன்று ஏற்படுவதற்கான வாய்ப்பினை இன்றைக்கு இலங்கை கொண்டிருக்க வில்லை. ஆனால் இந்தப் புதிய அரசியலமைப்பானது ஒரு முற்போக்கானதாக, முன்னோக்கி நகர்வதற்கான அடித்தளத்தைக் கொண்டதாக இருந்தால், எதிர்காலத்தில் தமிழ், சிங்கள மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகள், சமஷ்டியை நோக்கிய கோரிக்கைகளாக இருக்கும். ஏனெனில் சமஷ்டியென்பது வெறுமனே தமிழர்களின் கோரிக்கை மாத்திரமல்ல சிங்களத் தலைவர்களும் அதனைப் பல்வேறு காலகட்டங்களில் கோரி வந்திருக்கின்றார்கள். இப்போதுள்ள மாகாண சபைகளில் பெருமளவான முதலமைச்சர்களும் மாகாணசபைகள் நிறைந்த அதிகாரம் கொண்டவையாக இருக்கவேண்டுமென்ற கோரிக்கையோடு இருக்கின்றார்கள். ஆகவே சமஷ்டி என்ற சொல்லாடலை நோக்கி உடனடியாக பாயமுடியா விட்டாலும் அதைநோக்கிய பாதையில் விடயங்கள் நகர்கின்றன. நகரும் என்ற நம்பிக்ைகயைத் தரும் வகையில் புதிய அரசியல் யாப்பில் ஏற்பாடுகள் அமைந்தால் அதுவே போதுமானதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.