தமிழ் நாட்டில் இருக்கும் அகதிகளின் கதை தெரியுமா?

(கருணாகரன்)

தமிழ்நாடு திருச்சியில் வாழவந்தான் கோட்டையில் 10க்கு 10 அளவில் அமைக்கப்பட்ட குடிசையில், இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ விதிக்கப்பட்டிருக்கிறது முனியாண்டியின் குடும்பம். பெயர்தான் வாழவந்தான கோட்டையே தவிர, வாழ வந்தவர்கள் அத்தனை பேரின் வாழ்க்கை என்னவோ, பிச்சைப் பாத்திரத்தில்தான் தாளம் போட்டுக்கொண்டிருக்கிறது. மழை வந்தால், ஒழுகும் நிலையில் இருக்கிறது முனியாண்டியின் குடிசை.

முனியாண்டியின் குடிசை மட்டுமல்ல, அவரைப்போலிருக்கும் வேறு சில அகதிகளின் குடிசைகளும் ஒழுகும் நிலையில்தான் உள்ளன. இறுதியாகத் திருத்தம் செய்து, நான்கு ஆண்டுகளாகி விட்டன. “நீங்கள்லாம் உங்க ஊருக்குப் போகத்தானே போறீங்க. பிறகெதுக்குப்பா, நல்ல வீடு இங்க வேணும்?” என்று கேட்கிறார்கள், அகதிகளுக்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரிகள்.

அவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கோணம், ஒரு வகையில் சரியானதுதான். ஏனென்றால், எப்போதும் இலங்கைக்குத் திரும்ப வேண்டிய – திரும்பக் கூடிய நிலையில் இருக்கும் அகதிகளுக்கு, எதற்கு நிரந்தர வீடும் வசதிகளும்? என்றுதான் அவர்களுக்குத் ​ேதான்றும். ஆனால், நிலைமையும் யதார்த்தமும் அப்படி இலகுவாக இல்லை. இந்தா நாளை போகலாம், அடுத்த வாரமோ அடுத்த மாதமோ போய்விடலாம் என, இப்படியே இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்திருக்கிறதே.

யுத்தம் முடிந்து விட்டது. இனியும் எதற்குத் தாமதம்? மூட்டையைக் கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதானே! என்று யாரும் எண்ணலாம். ஆனால், எதுவும் அவ்வளவு எளிதாக இல்லை. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த அகதிகளின் நிலை இங்கும் பெரிய முன்னேற்றமாக இல்லை. இலங்கைக்குத் திரும்பிய அகதிகள், இலங்கையிலும் அகதி நிலையில்தான் ஏறக்குறைய வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்டவர்கள், இந்தியாவுக்கு அகதிகளாகப் போனவர்கள்தான். ஆகவேதான், இலங்கைக்குத் திரும்புவதற்கு விரும்பினாலும் வரத் தயாரில்லாத நிலையில், அங்கேயே இன்னும் பல குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. இருந்தும், இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு எல்லாமே கடின நிலைதான்.

மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திலிருந்து, 1995இல் அகதியாகப் படகேறி இந்தியாவுக்குப் போனது முனியாண்டி குடும்பம். தமிழ் நாட்டில், இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் மண்டபம் முகாம் முனியாண்டியை வரவேற்றது. அந்த வரவேற்பே அவருக்கு இனிக்கவில்லை. ஆனாலும், என்ன செய்ய முடியும்? வேறு வழி எதுவுமே இல்லை. திரும்பிப் படகேறிக் கடல் வழியாக பண்டிவிரிச்சானுக்குப் போக முடியுமா? அதைவிட மரணக்களத்துக்குப் போய்விடலாம்.

கசப்பை விழுங்கியபடியே, விசாரணைகளை எதிர்கொண்டு, பதிவுகளை முடித்து, விதிக்கப்பட்ட இடத்தில், பெட்டி படுக்கையோடு குடும்பத்தைத் தங்க வைத்தார் முனியாண்டி. அன்றிலிருந்து இன்று வரை, இருபத்தைந்து ஆண்டுக்கு மேலாக இப்படித்தான், இரண்டு இடங்களில் மாறி இருக்கிறார். வாழ்க்கையில் மாற்றமோ முன்னேற்றமோ ஏற்படவில்லை. விதி மாறவும் இல்லை. இன்னும் அகதியாகவே இருக்கிறது குடும்பம்.

இந்தளவு, காலத்தில் பிரான்ஸிலோ, லண்டனிலோ, கனடாவிலோ முனியாண்டியின் குடும்பம் இருந்திருந்தால், குடியுரிமை கிடைத்து, பிள்ளைகளின் படிப்பு, வாழ்க்கை முறை எல்லாமே மாறியிருக்கும். முனியாண்டியும் மாறியிருப்பார். ஏன், குடும்பத்தின் கதையே மாறியிருக்கும். இப்போது இலங்கையில் வீடும் சொத்தும் கூட வாங்கப்பட்டிருக்கும். அந்நிய தேசமாக இருந்தாலும், பிறத்தியாராக இருந்தாலும் வெளியாருக்கிருக்கும் அக்கறையும் மனிதர்களை மதிக்கிற சட்ட ஏற்பாடுகளும், அரசாங்க அ​ைமப்பும், நம்மவர்களிடம் இல்லை.

அதனால்தான், இப்படிக் கிடந்து அலைக்கழிய – உழல வேண்டியிருக்கிறது. இவ்வளவுக்கும் முனியாண்டிக்கு, இரண்டுமே தாய் நாடுகள். இந்தியா அவருக்குப் பூர்வீக நாடு. முனியாண்டியின் தாத்தா, பாட்டி எல்லாம் திருநெல்வேலிக்காரர்கள். அங்கேயிருந்து பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்குத் தொழிலுக்காகக் கொண்டு செல்லப்பட்டவர்கள். முனியாண்டி பிறந்ததும் வளர்ந்ததும் இலங்கையில். ஆகவே, அவருக்கு இரண்டு நாடுகளும் ஏதோ ஒருவகையில் உரித்துடையவை. ஆனால், இரண்டு நாட்டிலும் அவர் இன்றிருக்கும் நிலை அகதியே. அகதி என்றால், ஆதரவற்ற நிலையே.

முனியாண்டியைப் போல இந்திய வம்சாவழித் தொடர்ச்சியுள்ளவர்களும் இலங்கையின் பூர்வ குடிகளைச் சேர்ந்தவர்களுமாக, இப்பொழுது தமிழ்நாட்டில் அகதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை, சுமார் 60 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரத்துக்குள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. முறையான கணக்கெடுப்பைச் செய்ய முடியவில்லை. இந்த எண்ணிக்கை முகாம்களில் இருப்போருடையது. முகாம்களுக்கு வெளியிலும் அகதிப் பதிவோடு இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதையும் சேர்த்தால், ஏறக்குறைய ஒரு இலட்சம் வரையானவர்கள் உள்ளனர். முன்பு, மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருந்தனர். அவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளுக்கும் கனடா, அவுஸ்தி​ேரலியா போன்ற தொலைநாடுகளுக்கும் சென்று விட்டனர். ஒரு தொகுதியினர் இலங்கைக்குத் திரும்பி விட்டனர். கட்டம் கட்டமாக, மிகச் சிறிய தொகையினர் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனை நாளைக்குத் தான், இரவல் தாய் நாட்டில் இருப்பது என்று. இரவல் கோடிக்குள் இருப்பதும் இரவல் தாய் நாட்டில் இருப்பதும் ஒன்றுதான். அந்நியத்தன்மை ஆளைக் கொன்று விடும் என்கிறார், நாடு திரும்பிய அகதியொருவர்.

இலங்கை அகதிகளுக்காக தமிழ்நாட்டில் முன்பு 113 முகாம்கள் இருந்தன. இப்போது இருப்பவை, 107. இதில் மண்டபம் முகாமே முக்கியமானது. இங்குதான் அகதிகளாகச் செல்வோரை அடையாளம் கண்டு பதிவுகளைச் செய்வதுண்டு. இதேவேளை மண்டபம், கொட்டப்பட்டு ஆகியவை இடைத்தங்கல் முகாம்களாக அமைக்கப்பட்டு தற்போது தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. கும்முடிப்பூண்டி, புழல், ஈரோட்டில் உள்ள பவானிசாகர், திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு, வாழவந்தான்கோட்டை, இராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் ஆகிய முகாம்கள் அளவில் பெரிய முகாம்களாக உள்ளன. இந்த முகாம் ஒவ்வொன்றிலும் குறைந்தது 500 முதல் 1,500 குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளன.

இவர்களில் சுமார் 70% மக்கள் இந்திய வம்சாவழியினர் என்பதை காரணம் காட்டி இந்திய குடியுரிமை கோருகின்றனர். மீதம் 20 சதவீத மக்கள் இலங்கை திரும்ப விரும்புகின்றனர். அதுவும் அரசாங்கம் அனுப்பி வைக்கும் பட்சத்தில், 3 சதவீத மக்கள் இலங்கையில் வீடு, காணி நிலம் உள்ளவர்கள் சொந்தங்கள் உதவும் நிலையில் இருந்தால், புறப்பட தயாராக உள்ளனர். மீதமுள்ள 7 சதவீத மக்கள் இலங்கையில் ஏதுமற்றவர்கள். இந்தியாவில் இந்த நிலையில் வாழ விரும்பாதவர்கள். வேறு ஏதேனும் வெளி நாட்டுக்குச் செல்ல விரும்புகின்றனர்.

கொஞ்சம் பொருளாதார வசதியுள்ளவர்கள் தமிழ்நாட்டின் காவல்துறைப் பதிவுடன் முகாம்களுக்கு வெளியே சென்று இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படியானவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை, காவல் நிலையம் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் தங்களது பதிவுகளை அல்லது அனுமதிகளை, புதுப்பித்துக் கொள்ளவேண்டும். இது, ஒரு வகையான சுமையே.

இதனால், தொலைவிடங்களுக்குச் சென்று வேலை செய்வது சிரமமாக உள்ளது என்கின்றனர் அகதிகள். பொதுவாகவே, அகதிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள், கூலி வேலைகளுக்கே அதிகமாகச் செல்கிறார்கள். குறிப்பாக, ஆண்கள் பெயிண்டிங்க் (வர்ணம் புசுதல்), மேசன் மற்றும் தச்சு வேலை, லொறிகளில் பொருட்களை ஏற்றி இறக்குதல் போன்ற வேலைகளுக்குப் போகிறார்கள். சம்பளத்தைப் பேரம் பேசி வாங்க முடியாது.

ஒரு காலம், இலங்கையில் மலையகப்பகுதியில் இருந்தவர்களை, எவ்வாறு பிற சமூகத்தினர் அடிமட்டக் கூலிகளாகப் பயன்படுத்தினார்களோ, அதே நிலையில்தான் இன்று, இலங்கை அகதிகள் இந்தியாவில் நடத்தப்படுகின்றனர். அல்லது, அப்படியான நிலையில்தான் வாழ வேண்டியிருக்கிறது. தொழில், வீட்டு வசதி, கல்வி என எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையே. அரசாங்கத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் என்பது, பத்துக்குப் பத்து அல்லது 12 அடிக்கு 15 அடி என்ற அளவில்தான் அதிகளவுண்டு.

இந்த வீடுகள் ஓடு மற்றும் சிமெண்ட் சீட் எனப்படும் அஸ்பெஸ்ரஸ் மேற்கூரைகளோடு அமைக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் கூரைகளை, மக்கள் தங்கள் வசதிக்கேற்ப மாறியமைத்திருப்பதும் உண்டு. ஆனால், அப்படியான வீடுகள் மிகக் குறைவு. வசதியில்லாதவர்கள், மழைக்கு ஒழுகும் தன்மையுடனே வாழ்கின்றனர்.

பொதுவாகவே, இந்த வீடுகள் சீர்திருத்தப்பட்டு வெகு நாட்களாகி விட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில், ​ெகாங்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அகதிக்குடியிருப்பு என்ற அளவில் மிகச்சிறிய வீடுகள். சில முகாம்களில், பெரிய குடோனில் சீலைகளாலும் பெட்சீட்களாலும் மறைத்து வாழும் நிலையும் இருக்கிறது.

மேலும், தமிழ்நாடு அரசாங்கத்தால் குடும்ப தலைவருக்கு இந்திய ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது. நடுத்தர வயதுடையோருக்கு ரூபாய் 750 படிக்கும் சிறார்களுக்கு ரூபாய் 400 மாதம் ஒன்றுக்கு. இதைத் தவிர, மானிய விலையில் வழங்கப்படும் அரிசி ரூபாய் 0.57 பைசா/கிலோகிராம்.

20 கிலோகிராம், நிவாரண அரிசி. ஆனால், இது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றமாதிரிக் குறையும். குடும்பத்துக்கு 2 கிலோகிராம் சீனியும் வழங்கப்படுகிறது. ஒரு கிலோகிராமின் விலை ரூபாய் 20. மண்ணெண்ணெய் ஐந்து லீற்றர். எரிவாயு இணைப்பு பெற்றிருப்பவர்களுக்கு மண்ணெண்ணெய் இரத்து செய்யப்படும். அடுத்து, அரசாங்க கோ ஆப்டெக்ஸ் மூலம் வருடத்துக்கு ஒருமுறை கதர் துணிகள், பொங்கல் விழா சிறப்பு உதவிகள் கிடைக்கும். இப்படி இன்னும் சில உதவிகள் உண்டு. ஆனால், எல்லாம் யானைப்பசிக்குச் சோளப்பொரி என்ற கணக்கில்தான்.

இதனால், இந்த அகதிகளின் பிள்ளைகளுடைய எதிர்காலமும் நெருக்கடி நிலையில், மிகப் பின்தங்கியே உள்ளது. இதைப்பற்றி அங்கிருக்கும் அகதிகளுக்கான உதவிகளைப் புரிந்து கொண்டிருக்கும் நடராஜா சரவணன் என்கின்ற சமூக நலவாளரிடம் கேட்டேன். “அடிப்படை கல்வியை மட்டும் இலவசமாக, அரசாங்க பள்ளிகளில் கற்கலாம்.

துறைசார் படிப்புகள் சொந்தச் செலவில் தனியார் கல்வி நிலையங்களில் பயில வேண்டும். அரசாங்க வேலைகள் வழங்கப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களில் வேலை செய்தாலும் மாதமிருமுறை ஆட்கணக்கெடுப்பின்போது, ஆஜராக வேண்டும். தவறும் பட்சத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியங்கள் நிறுத்தப்படும். மீண்டும் பெற, சென்னை மறுவாழ்வுத்துறையை அணுக வேண்டும்” என்றார்.

தொடக்கத்தில், இலங்கையில் இருந்து அகதியாக வரும் மாணவர்கள், எந்த வித உரிய ஆவணங்களும் இல்லாமல் பெற்றோர்கள் வழங்கும் உறுதி மொழியின் அடிப்படையில், பள்ளித் தலைமையாசிரியரின் ஒப்புதலுடன், பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆரம்பக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரையில், அரசுப் பள்ளிகளில் இலவசமாக கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடப்புத்தகம், குறிப்பேடுகள், மிதிவண்டி, மடிக்கணினி போன்றவையும் அகதி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. ஆனால், உயர் கல்வியில் மட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டன.

கல்லூரிக் கல்விக்கு ஆரம்ப காலத்தில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு பொறியியல் கல்வியில் பத்து இடங்கள், மருத்துவ கல்வியில் பத்து இடங்கள், சட்டப் படிப்பில் ஐந்து இடங்கள், வேளாண் கல்லூரியில் ஐந்து இடங்கள், பல்தொழில்நுட்பக் கல்லூரியில், 20 இடங்கள் என அகதி மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

ஆனால் பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து, இந்தச் சிறப்பு இட ஒதுக்கீடுகள் நிறுத்தப்பட்டன. சில ஆண்டுகள் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடர இயலாத நிலை இருந்தது. பிறகு தமிழக அரசாங்கத்தின் உதவியோடு பொறியியல் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் இன்று வரை அரசாங்க மருத்துவக் கல்லூரிகளில் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. ஒரு சில மாணவர்கள் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் இலங்கைத் தமிழ் அகதி மாணவர்களும் பொறியியல் கல்லூரிகளுக்கான பொதுக் கலந்தாய்வில் பொதுப் பிரிவின் கீழ் கலந்து கொள்ளலாம் என்று, தமிழக அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தகுதியுள்ள இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள், பொறியியல் கல்விக்கான பொதுக் கலந்தாய்வில் கலந்து கொண்டு, பொறியியல் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், இது மிகக் குறைந்தளவான நிலையிலேயே உள்ளது.

இதை விட அகதி முகாம்களுக்கு ஏராளமான விதிமுறைகளும் அங்கிருப்போருக்குப் பல கெடுபிடிகளும் உள்ளன. குடிநீரைப் பெறுவதில் இருந்து மரியாதையாக வாழ்வது வரையில் ஆயிரம் பிரச்சினைகள். அகதிகளின் குடியிருப்புகள் பாதுகாப்பு வலயங்கள் போன்றே இன்னுமிருக்கின்றன. ஒவ்வொரு முகாமிலும் காவல்துறை அலுவலர்கள், புலனாய்வுத்துறை அலுவலர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அனுமதி பெற்றே வெளியே செல்ல வேண்டும். மாலைக்குள் இருப்பிடம் திரும்ப வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் முன்பு இறுக்கமாக இருந்தது.

இப்போதும் கூட, இந்த நிலை முற்றாக நீங்கியது என்றில்லை. காலப்போக்கில் கட்டுப்பாடுகள் குறைந்து, அகதிகளும் தமிழக மக்களைப் போன்றே நடமாடும் நிலை ஏற்பட்டிருந்தாலும் கூட, இன்றும் அகதி மக்களை அரசாங்க அதிகாரிகள் தணிக்கை என்னும் கணக்கெடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில் முகாம் வருவாய் ஆய்வாளர் மற்றும் புலனாய்வுத் துறையினரால், அகதி மக்கள் கணக்கெடுப்பு நடைபெறும். இதில் அனைவதும் தவறாது சமூகமளிக்க வேண்டும்.

இன்றும் சில முகாம்களுக்குள்ளேயே புலனாய்வுத்துறை, காவல்துறை போன்றோரின் கண்காணிப்பு உள்ளது. அகதி மக்கள் முகாமினை விட்டு வெளியூர்களுக்கு செல்வதாயின் வட்டாட்சியர் எனப்படும் பிரதேச அதிகாரியிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.

இந்த அகதிகளுக்கு உதவுவதற்காகச் சில தொண்டர் அமைப்புகள் உள்ளன. OFERR, JRS, ADRA INDIA, LIBERA, St. JOSHEPH. தவிர வேறு எந்த தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு, ஒருசிலர் வெளியிலிருந்து உதவி வருகின்றனர். பேரிடர் காலத்தில் உள்ளூர் ஆட்கள் உதவ அனுமதியளிக்கப்படுகிறது. அவ்வளவுதான்.

இதுதான் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளின் நிலைமை பற்றிய சுருக்கமான விவரம். ஈழத்தமிழர்களுக்காக கவலைப்படவும் கண்ணீர் விடவும், ஆக்ரோஷமாகப் பேசவும், ஆயிரக்கணக்கான பிரமுகர்களும் தலைவர்களும், தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் ஆட்சியில், கருணாநிதியின் தி.மு.க ஜெயலலிதாவின் அ.தி.மு.க என இரண்டு பெருங்கட்சிகள் இருந்திருக்கின்றன.

இடதுசாரி அமைப்புகள் வேறு இருக்கின்றன. சீமான், வைகோ, திருமாவளவன், நெடுமாறன், கொளத்தூர் மணி, பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் என ஆயிரம் ஈழத்தமிழர் அனுதாபிகள் உள்ளனர். இவர்களில் எவருமே, இலங்கை அதிகளுக்கான நியாயமான அடிப்படை உரிமைகளையும் நலன்களையும், பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சித்ததில்லை.

பதிலாக ஒவ்வொரு தரப்பும் ஈழப்பிரச்சினையை வைத்துத் தமது நலன்களை மட்டுமே பார்த்துக்கொள்கின்றன. அதாவது, ஈழப் பிரச்சினையும் ஈழ அகதிகளும், இவற்றுக்குப் பயன்பாட்டுப் பொருட்களே. தமிழக அரசாங்கம், பல தீர்மானங்களை ஈழத்தமிழர்களுக்காக நிறைவேற்றியிருக்கிறது. பதிலாக தன்னுடைய மடியில் இருக்கும் ஈழ அகதிகளைக் குறித்து அது நிதானமாகச் சிந்திக்கவில்லை.

ஆகவே, மிக அடிமட்டச் சமூக வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அகதிகள், இலங்கைக்குத் திரும்பவே விரும்புகின்றனர். ஒரு சிறிய எண்ணிக்கையானவர்கள் இங்கே வர விரும்பவில்லை. அவர்கள் வரப்போவதுமில்லை. ஏனையவர்கள் இங்கே வர விரும்பினாலும், இங்கு ஏற்கெனவே வந்தவர்கள் படுகின்ற சிரமங்கள் வரவிருப்போரைக் கலவரப்படுத்துகின்றன.

இதற்கு, இலங்கையின் மீள் குடியேற்ற அமைச்சும் வெளிவிவகார அமைச்சும், மாகாணசபையும், பொறுப்புக் கூற வேண்டும். அதாவது, இந்த மூன்று தரப்புமே, அங்கிருந்து வருவோருக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால், இந்த அகதிகளுக்கு, இங்கே முறையான எந்த அடிப்படைகளும் இல்லை.

“அகதி வாழ்க்கை போதும். சொந்த ஊருக்குப் போய், மீள்குடியேறி வாழலாம்” என்று எண்ணிக் கொண்டு, மாயழகு குடும்பம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து, ஆறு மாதங்களாகிறது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தமாதிரி, எதுவும் சிறப்பாக நடந்து விடவில்லை. இங்கும் (இலங்கையிலும்) அகதி நிலையில்தான் வாழ வேண்டியிருக்கிறது.

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான சிறப்பு ஏற்பாடு இல்லாத வரையில், இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லை. இதற்கு வாய்ப்பேச்சுக்கும் நியாயப்படுத்தல்களுக்கும் அப்பால், இதற்கான கூட்டுச் செயலணி ஒன்றும் சீரான நடைமுறைகளும் வகுக்கப்படுவது அவசியம்.

இல்லையென்றால், நடுக்கடலில் தவிக்க விட்டிருப்பதைப்போலவே, இந்த அகதிகளின் நிலை இருக்கும்.