தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 17)

(Thiruchchelvam Kathiravelippillai)
தம்பலகமத்திலிருந்து மக்கள் அச்சம் காரணமாக கிண்ணியாவிற்கு இடம்பெயர்ந்த போது அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று தமது ஆதரவை முஸ்லிம் மக்கள் வழங்கினர்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் கிண்ணியாவில் சுரங்கல், கச்சக்கொடித்தீவு, அரைஏக்கர், காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, முனைச்சேனை ஆகிய ஊர்களில் அதிகளவிலும் மஹாமம்மாதிரிக்கிராமம், சின்னக்கிண்ணியா, பெரிய கிண்ணியா போன்ற ஊர்களிலும் அடைக்கலம் புகுந்தார்கள். இதற்கான காரணம் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே அக்காலத்தில் மிக நெருங்கிய தொடர்புகள் , உறவுகள் இருந்தமையாகும்.

முஸ்லிம் மக்கள் தங்கள் வீடுகளின் ஒரு பகுதியினை தமிழ் மக்கள் வசிப்பதற்கு வழங்கினார்கள் அல்லது அவர்களது காணிகளில் தற்காலிக குடிசைகள் அமைத்து வசிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்து கொடுத்தார்கள்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் வீடுகளில் குடியிருந்த இச்சந்தர்ப்பத்தினை ஈரோஸ் அமைப்பு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி முஸ்லிம் இளைஞர்களை தமது அமைப்பில் அதிகளவில் சேர்த்துக்கொண்டார்கள்.
ஈரோஸ், புளொட், அமைப்பின் உறுப்பினர்கள் ஆயுதமின்றியே பொதுவாக நடமாடுவார்கள். ஏனைய அமைப்புகள் ஆயுதங்களின்றி நடமாடுவது மிகக்குறைவு. அந்நாட்களில் ஆயுதம் தமது அமைப்புகளிற்கான ஆட்களை கசர்ச்சிகாட்டி சேர்க்கின்ற மிகப்பெரிய ஆயுதமாக பாவிக்கப்பட்டது. அமைப்புகளுக்கு செல்லுகின்ற இளைஞர்கள் பலர் கொள்கை அடிப்படையில் இணையவில்லை. அவர்களது சுழ்நிலைக்கேற்ப எவரது அமைப்பு முந்துகின்றதோ அல்லது யாருடைய கவர்ச்சியான போக்கு அவர்களுக்கு பிடிக்கின்றதோ அவ்வமைப்புகளில் சேர்ந்தார்கள்.
அவ்வாறு சேர்வதற்கு முக்கிய காரணங்களாக இருந்தது அரச படையினரே. அரச படையினரின் அடாவடித்தனங்களும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளும் தமிழ் இளைஞர்களை தமிழ் விடுதலை அமைப்புகளில் சேர்வதற்கு நிர்ப்பந்தித்தன.
ஆனால் முஸ்லிம் இளைஞர்கள் ஈ.பீ.ஆர்.எல்.எஃப், புளொட் அமைப்புகளின் கொள்கை ஈர்ப்பாலும் நடைமுறை ரீதியாகவும் இணைந்தார்கள்.
ஈரோஸ் அமைப்பின் பரப்புரைகள் இஸ்லாமிய புரட்சிகர சிந்தனையுள்ளவர்களால் பெரிதும் கவரப்பட்டமையினால் தான் ஈரோஸ் அமைப்பில் அதிகளவான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்தார்கள்.
பல இளைஞர்கள் ஈரோஸ் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டமை ஆட்சியாளர்களுக்கு உவப்பான செயற்பாடுகளாக இருக்கவில்லை. கிண்ணியாவில் பசீரின் தலைமையில் இயங்கிய மறைமுகப்படையும் ஊர்காவல்படையும் சுரேஸ்காசிமின் வழிகாட்டலில் முஸ்லிம் இளைஞர்கள் தமிழ்விடுதலை அமைப்புகளில் முஸ்லிம் இளைஞர்கள் சேர்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைகளில் இறங்கினர்.
தமிழ் விடுதலை அமைப்புகளில் இணைந்த இஸ்லாமிய இளைஞர்களின் விபரங்கள் திரட்டப்பட்டன. அவர்களது வீடுகளுக்குச் சென்று அவர்களது உறவினர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். விடுதலை அமைப்புகளிற்குச் சென்றவர்களை “மீண்டும் தம் வீடுகளுக்கு அழைத்துவருமாறும் இல்லாவிட்டால் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்புகள் வரும்“ என அச்சமூட்டினர். சிலரை துன்புறுத்தியும் உள்ளனர்.
ஆனால் கிண்ணியாவிலிருந்து விடுதலை அமைப்புகளிற்குச் சென்ற இஸ்லாமிய இளைஞர்கள் எவரும் அமைப்புகளிலிருந்து தம்வீட்டிற்குத் திரும்பவில்லை என்பது முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகிறது. கிண்ணியாவிலிருந்து ஈரோஸ் அமைப்பிலேயே அதிகளவான இளைஞர்கள் இணைந்திருந்தனர்.
தம்பலகமத்திலிருந்து இடம்பெயர்ந்து கிண்ணியாவில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள் அடிக்கடி சுற்றிவளைப்புகளுக்கு உள்ளாகின. சில இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறான சுற்றிவளைப்புகள் முஸ்லிம் மக்களுக்கு தொல்லையாக இருப்பதாக படைத்தரப்பு மூலமாக பரப்பப்பட்ட பரப்புரைகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..
தம்பலகமம் மக்கள் தாமாக தம்பலகமத்திற்கு வீடு திரும்பும்வரை கிண்ணியா மக்கள் யாரையும் தமது வீடுகளுக்குச் செல்லுமாறு கோரவில்லை.
கிண்ணியாவிலிருந்து தான் தமிழ்பேசும் மக்களது பிரிவினையும் ஆரம்பித்தது என்பதனை முன்னர் பார்த்தோம். அதற்கான காரணம் இருதரப்பும் ஆட்சியாளர்களின் திட்டமிட்ட செயற்பாடுகளை அறியாது பலியாகியமையேயாகும். மீண்டும் கிண்ணியாவிலிருந்தே ஒற்றுமைக்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதே சிறப்பாகும்.