தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் சந்தர்ப்பம்

அரசியலும் ஒரு வகையான யுத்தம்தான். அதில், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும், உருவாகும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதும், அந்த வாய்ப்புகளைத் தமக்கேற்றவாறு பயன்படுத்துவதும்தான் மிகச் சிறந்த அரசியல் தந்திரோபாயமாகும்.

2009 யுத்த முடிவுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலின் பேரம் பேசும் சக்தி என்பது, கணிசமாக வீழ்ச்சி கண்டிருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்களால்த்தான், தமிழ்த் தேசிய அரசியல் பெருமளவுக்குத் தங்கியிருந்தது. 

அதன் விளைவாக, தமிழ்த் தேசிய அரசியல் தனது அபிலாஷைகளை அடைந்துகொள்வதில், எந்தப் படிமுறை முன்னேற்றத்தையும் அடைய முடியாததொரு சூழலையே எதிர்கொண்டிருந்தது. 

2015-2019 ‘நல்லாட்சி’யின் போது, தமிழ்த் தேசிய அரசியலுக்கு நல்லதொரு பேரம் பேசும் சக்தி கிடைக்கும் வாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக, 2018 டிசெம்பருக்குப் பிறகு, தமிழ்த் தேசிய அரசியல் குறிப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கதொரு கட்சியாக மாறியிருந்தது. ஆனால், அதன் பலன், தமிழ் மக்களுக்கு வந்து சேரவில்லை. மாறாக, ஒரு வருடத்துக்கு உள்ளாகவே, அரசியல் களம் முற்றாக மாறிவிட்டிருந்தது.

2019இல் கோட்டா ஜனாதிபதியானது முதல், தமிழ்த் தேசிய அரசியல், மீண்டும் பேரம் பேசும் பலம் குறைந்து, அரசியல் பின்னரங்கில் ஒதுங்கிப்போனது. ‘நல்லாட்சி’ காலத்தில், ஆளும் அரசாங்கத்தோடு செல்வாக்குக் கொண்டிருந்தும், அதன் பலனை, தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்காததன் விளைவை, 2020 பொதுத் தேர்தலில், த.தே. கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் உணர்த்தியிருந்தனர். 

2015இல் 515,963 வாக்குகளை மொத்தமாகப் பெற்று, 16 ஆசனங்களைப் பெற்றிருந்த த.தே. கூட்டமைப்பு, 2020 பொதுத் தேர்தலில் 327,168 வாக்குகளைப் பெற்று, 10 ஆசனங்களையே பெற்றுக்கொண்டது. 2015 பொதுத் தேர்தலில், வேறெந்த தமிழ்த் தேசிய கட்சியாலும் ஓர் ஆசனத்தைக் கூட வெல்ல முடியாத நிலை இருந்தது. 

ஆனால், 2020 பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு ஆசனங்களையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன. இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை இழப்பின் எதிரொலி ஆகும். 

ஏனென்றால், கூட்டமைப்பு 2015-2019 காலப்பகுதியில், ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. மஹிந்தவை தோற்கடித்து, மைத்திரி ஜனாதிபதியாகியதின் பின்னணியில் உழைத்த எதிர்க்கட்சிகளில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முக்கியமானது.

ஆகவே, அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி, த.தே.கூட்டமைப்பு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளில் ஒருசிலவற்றையேனும் நிறைவேற்றுவதற்கு முயலும் என்ற தமிழ் மக்களின் நம்பிக்கை, பொய்த்துப்போனதுதான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 2020 தேர்தலில் 188,795 வாக்குகளை இழக்கக் காரணமாகும்.

‘நல்லாட்சி’க்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்த காலத்தில், குறைந்தபட்சம் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சுயாதீன விசாரணையும் நீதியும், யுத்தகால அநீதிகளுக்கான நியாயம், இராணுவம் அடாத்தாகப் பிடித்துவைத்திருக்கும் தமிழ் மக்களின் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் இல்லாதொழிப்பு அல்லது மறுசீரமைப்பு, மாகாண சபைகளை அதன் முழுமையான அதிகாரங்களுடன் இயங்கவிடுதல், ஆளுநரின் தலையீட்டை குறைக்கும் மறுசீரமைப்பு ஆகியவற்றையேனும் செய்ய முடிந்திருந்தால், தமிழ் மக்களின் தனிப்பெரும் அரசியல் சக்தியாக, அல்லது அவர்கள் சொல்ல விரும்பும் ‘ஏக பிரதிநிதி’யாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மிளிர்ந்திருக்கக் கூடும். 

ஆனால், ‘நல்லாட்சி’ அரசாங்கத்தைக் காப்பாற்றிக்கொடுத்தும், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது, தமிழ் மக்களை அதிருப்தி அடையச் செய்ததன் விளைவுதான் 2020 தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது.

ஆனால், 2015-2019 ‘நல்லாட்சி’யில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமைக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மட்டும் குறை கூறியும் பயனில்லை. ஏனென்றால், ராஜபக்‌ஷர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டாலும், நாட்டில் அவர்களுக்கான ஆதரவும் அவர்கள் மீதான அனுதாபமும், ‘யுத்த வெற்றியாளர்’கள் என்ற பெருமைமிகு அடையாளமும், பெரும்பான்மை மக்களிடம் தொக்கி நின்றது. 

ஆகவே, தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டவைகள் அநீதிகள் என்பதைக் கூட, ஏற்றுக்கொள்ளும் மனநிலை, இந்நாட்டின் பெரும்பான்மை இனத்திடம் அன்று இருக்கவில்லை. ராஜபக்‌ஷர்களைத் தேர்தலில் தோற்றிருந்தாலும், சிங்கள-பௌத்த தேசியவாதம் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. அதனால், ‘நல்லாட்சி’ அரசாங்கம், சிங்கள-பௌத்த தேசியவாத மனநிலைக்கு எதிராக எதையும் செய்தால், தமது அரசியல் சூனியமாகிவிடும் என்ற அச்ச மனநிலையில் இருந்தனர். 

குறிப்பாக, பண்டாரநாயக்க-ராஜபக்‌ஷ பாசறையிலிருந்து வந்த, யுத்த வெற்றியில், தன்னைப் பங்குதாரராகக் காட்டிக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, சிங்கள-பௌத்த பெரும்பான்மை தேசியவாதத்துக்கு எதிராக நடந்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான், தமிழ் மக்களின் ஆகக்குறைந்த கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை.

டமைக்கென, காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட சில உருவாகின.
ஆனால், 2022 கோட்டாவுக்கு எதிரான மக்கள் அலை கிளம்பிய போது, அது, 2015 அலையைப் போலல்லாது, சிங்கள-பௌத்த பேரினவாதத் தேசியவாதத்துக்கும் எதிரான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதோர் எழுச்சியாகவே அமைந்திருந்தது. 

இன்று, சிங்கள-பௌத்த மக்கள் பலர் மிக வௌிப்படையாக, தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகள் குறித்துப் பேசுகிறார்கள்; கண்டனங்களை முன்வைக்கிறார்கள்; மன்னிப்புக் கோருகிறார்கள். தமிழ் மக்களுக்கு  எதிராக, பெரும் அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்பதை, சிங்கள-பௌத்த மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருப்பதே பெரும் மாற்றம்தான். 

அதுபோல, சுதந்திரகாலம் முதல், இந்நாட்டைப் பீடித்துள்ள இன-மதத் தேசியவாதம்தான் இன்று, நாடு நாசமாகப் போயிருப்பதற்கான காரணம் என்பதை, கணிசமான சிங்கள-பௌத்த மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்; ஆகவே, இன்று அரசியல் களம் என்பது, முற்றாக மாறியிருக்கிறது என்பதை உணரலாம். 

இலங்கையின் பெரும்பான்மையின மக்களிடையே 2015இல் ராஜபக்‌ஷ எதிர்ப்பு மட்டுமே, கணிசமானளவில் ஏற்பட்டது. சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம் உயிர்ப்போடிருந்தது. ஆனால் 2022இல், ராஜபக்‌ஷ எதிர்ப்போடு, இன-மதத் தேசியவாதத்துக்கு எதிரான எதிர்ப்பலையும், இலங்கையின் பெரும்பான்மையின மக்களிடம் ஏற்பட்டுள்ளதன் சமிக்ஞைகள் மிகத்தௌிவாகத் தெரிகின்றன. 

இதுதான் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், தமிழ் மக்களுக்குமான அரிய வாய்ப்பு. இன்று ஆட்சியில் உள்ளவர்களோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, தமிழ் மக்களின் சில முக்கிய கோரிக்கைகளையேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கான அரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைச் செய்ய, தமிழ்த் தேசிய கட்சிகள் முன்வரவேண்டும்.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சுயாதீன விசாரணையும் நீதியும், யுத்தகால அநீதிகளுக்கான நியாயம், இராணுவம் அடாத்தாகப் பிடித்துவைத்திருக்கும் தமிழ் மக்களின் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் இல்லாதொழிப்பு அல்லது மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு பெரும்பான்மை மக்களிடையே ஆதரவு இருக்கக்கூடிய நிலையில், இதைச் செய்வதற்கு ஆட்சியில் உள்ளவர்களை ஊக்கப்படுத்த இதைவிட வேறுவாய்ப்பு இருக்க முடியாது. 

இன்று, மேற்சொன்னவற்றுக்கு பெரும்பான்மை மக்களிடமிருந்து பெருமளவு எதிர்ப்பு வராது. வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்யும் ஒரு நடவடிக்கையாக, இவை முன்னெடுக்கப்படலாம். இதைச் செய்வதற்கு ரணில் விக்கிரமசிங்க போன்றதொரு ஜனாதிபதிதான் தேவைப்பட்டார். 

ஆனால், சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம், அவற்றைச் செய்வதற்கு இதுவரை அனுமதிக்கவில்லை. இன்று காலத்தின் கோலமாக, ஒரு விபத்தாக, ரணில் ஜனாதிபதியாகி இருக்கிறார். ஆகவே, இது ஓர் அருமையான வாய்ப்பு. 

ஆனால், இவற்றை இலகுவாகச் செய்துவிடவும் கூடாது. மிகுந்த ராஜதந்திரத்துடன், நல்லுறவையும் நல்லெண்ணத்தையும் முன்வைத்து, தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் அடையப்படவேண்டியவை ஆகும். 

 2015இல் இருந்த களநிலவரத்தைவிட, இன்றைய களநிலவரம் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு சாதகமானதாகவே இருக்கிறது. ஆகவே, தேசிய அரசியலின் முரண்பாடுகளுக்குள்ளும், தனிநபர் பிரச்சினைகளுக்குள்ளும் தேவையில்லாமல் சிக்கிக்கொள்ளாமல், இன்றுள்ள அரசாங்கத்திடமிருந்து, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றையேனும் நிறைவேற்றிக்கொள்ளுதல் தான் புத்திசாலித்தனமான அரசியல்.

ஒட்டோ வொன் பிஸ்மார்க் சொன்னது போல, “அரசியல் என்பது சாத்தியமானவற்றின் கலை”. 

எந்தப் பயனுமில்லாமல் ரணிலை எதிர்ப்பதை விட, ரணிலைப் பயன்படுத்திக்கொண்டு, சாத்தியமான ஒன்றிரண்டையேனும் அடைந்துகொள்வதுதான் மக்களுக்குப் பயன்தரும் அரசியலாக இருக்கும். இதுபோன்ற வாய்ப்புகள் எப்போதும் அமைவதில்லை. பயன்படுத்திக்கொள்வார்களா தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள்?