தரம் ஐந்து புலமைப்பரிசில் மாயையில் இருந்து பெற்றோர் விடுபட்டாக வேண்டும்

த ரம் ஐந்து புலமைப்பரிசில் திட்டம் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடைமுறையில் உள்ளது. படிப்பில் ஆர்வமும் திறமையும் கொண்ட மாணவர்களை பத்து வயதிலேயே இனம் கண்டு, அம் மாணவர்கள் ஏழைகளாக இருப்பின் பண உதவி மூலமாகவும் சிறந்த பாடசாலைகளில் அம் மாணவர்களை சேர்ப்பதன் மூலமும் முழுமையான கற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதன் ஊடாகவும் நாட்டின் எதிர்கால சுபீட்சத்துக்கு பங்களிப்பு செய்யக் கூடிய திறமைசாலிகளான இளைஞர்களை உருவாக்குவதே இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் நோக்கமாகும். எனினும் இருபது ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் இப் புலமைப்பரிசிலை பெற்றோர் ‘நீயா நானா’ போட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை. தமது குழந்தைகள் தேர்ச்சி பெற்றால் மகிழ்ச்சி; தேர்ச்சி அடையாவிட்டால் பரவாயில்லை என்ற மன நிலையிலேயே பெற்றோரும் ஆசிரியர்களும் இருந்தனர்.

இங்கே பெற்றோரும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. எந்தவொரு தேர்வானாலும் அதில் தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கையே அதிகம். தேர்வுகளிலும் போட்டிகளிலும் தோல்வி அடைவோரின் மொத்த எண்ணிக்கையை 75 சதவீதமாகவும் வைத்துக் கொள்ளலாம். இது உலகளவிலும் பொருந்தும். எனினும் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு குடும்பமும் எழுச்சி பெறுவது தேர்வுகளில் தோல்வியடைந்த பெரும்பான்மை மக்களின் முயற்சி, உழைப்பு, சிந்தனை என்பனவற்றினால் தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இலங்கையின் பெரும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களில் பெரும்பாலானோர் தேர்வுகளில் அல்லது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்றவர்கள் தான் என்று கூறிவிட முடியாது. எனவே ஒரு மனிதனின் வாழ்வை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் தேர்வுகள் தீர்மானிக்கின்றன என்றோ, றோயல், டீ.எஸ், தோமஸ் போன்ற புகழ்பெற்ற கல்லூரிகளில் கல்வி பயில்வதன் மூலம்தான் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றோ தீர்மானத்துக்கு வருவது முற்றிலும் தவறான எண்ணம் என்பது வலியுறுத்தி சொல்லப்பட்டாக வேண்டும்.

இன்றைய தேசிய கல்வித் திட்டம் முற்றிலும் வர்த்தகமயமாகி உள்ளது என்பது கவலைக்குரியது. இலங்கை அரசு இலவசக் கல்விக்காக பெருந்தொகை நிதியை செலவிட்டு வருகின்ற போதிலும், கல்விக்காக பெருமளவு பணத்தை பெற்றோர் செலவிட்டு வருகின்றனர் என்பது வினோதமான உண்மை. இலவச சுகாதார, மருத்துவ சேவைகளுக்காக அரசு பெருமளவில் செலவிட்டு வருகின்றபோதிலும் மக்கள் தனியார் ஆஸ்பத்திரி சேவைகளில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பது எப்படி ஒரு தவறான மனப்பான்மையாக இருக்கிறதோ அதேபோலத்தான் இலவசக் கல்வி முறை மீது பெற்றோர் ஒரு தவறான அபிப்பிராயத்தை பரவலான அடிப்படையில் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் தோற்றுவாய் தரம் ஐந்து புலமைப் பரிசில் தேர்வில் ஆரம்பிக்கிறது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். இலவசமாகக் கிடைப்பது தரமற்றது; வெளியில் பணம் செலுத்தி பெறுவதே உபயோகமானது என்ற மனப்பான்மை இலங்கை மக்கள் மத்தியில் கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றே பார்க்கப்பட வேண்டும்.

புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட ஐந்தாம் திகதி தான் கல்வி அமைச்சருடன் பேசியதாகவும் அப்போது, ‘இன்று எத்தனை மாணவர்கள் மிகுந்த அச்சத்துடன் வீடுகளுக்கு செல்லப் போகிறார்களோ தெரியவில்லை, பாவம்’ என்று சித்தியடையாத மாணவர்களுக்காக தான் கவலைப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைபவமொன்றில் உரையாற்றியபோது குறிப்பிட்டதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இப் புலமைப் பரிசில் தேர்வு, மாணவர்கள் மத்தியிலான போட்டி என்றுதான் ஆரம்பத்தில் இருந்தது. இது இப்போது கல்வி வர்த்தகர்களினால் மாற்றப்பட்டு, பெற்றோர்களுக்கு மத்தியில் ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது. அதற்காக தமது பிள்ளைகளை வாட்டி வதைக்கும் ஒரு நிலை வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டிருப்பதே இன்றைய ‘புலமைப் பரிசில் பிரச்சினை’யாக உருவெடுத்துள்ளது.

என் குழந்தை சித்தி பெறாததில் எனக்கு பிரச்சினை இல்லை. வெட்டுப் புள்ளியை விட பத்து புள்ளிகள் தானே குறைவு? அது பரவாயில்லை. எனது பிரச்சினை, எப்படி ஏனைய பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் முகம் கொடுப்பது என்பதுதான் என்று பல அன்னையர் கூறியிருக்கிறார்கள் என்பதில் இருந்தே, கல்வி கற்றல் என்பது எவ்வளவு தவறான அளவீடுகளுக்குள் சிக்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது ஒரு நெருக்கடியாக உருவெடுத்துள்ளது என்பதை ஜனாதிபதி புரிந்து வைத்திருப்பதால்தான், புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளிவருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே பாடசாலைகள் சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து, பிளைகளுக்கு ஏற்படும் தோல்விகளை நிர்வகிப்பது எவ்வாறு என்பது குறித்தும் தமது நெருக்கடி மிகுந்த மனநிலைக்கு அப்பாவிக் குழந்தைகளைத் தண்டிப்பதன் ஊடாக வடிகால் தேடும் பெற்றோரின் வழிமுறையை குறைப்பதற்கு வழிகாண உதவ வேண்டும் என்ற ஒரு யோசனையை கல்வி அமைச்சரிடம் முன்வைத்துள்ளார்.

ஒரு மாணவரின் திறமையை அளவிடுவதற்கான மிகச்சரியான அளவுகோல் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்வேயாகும் என்ற மாயையில் இருந்து பெற்றோர் விடுபட வேண்டும். ஏனெனில் இந்த மனப்பான்மை, கல்வியை வெறும் வர்த்தகமாகப் பார்க்கும் ‘டியூஷன்’ ஆசிரியர்கள், புலமைப் பரிசில் வழிகாட்டி நூல்களை எழுதி வெளியிடுவோர், அச்சிடுவோர், விற்பனை செய்வோர் ஆகியோருக்கு கோடிக்கணக்கான ரூபா வருமானத்தை ஒவ்வொரு வருடமும் பெற்றுத் தருகிறது என்பதால் புலமைப் பரிசில் தேர்வு மீதான மாய எண்ணங்கள் மேலும் அழுத்தமாகத் தொடர்வதையே இவர்களும் விரும்புகிறார்கள். ஏனெனில் இது பலகோடி ரூபா வர்த்தகம். அது போலியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைப் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். புலமைப்பரிசில் தேர்வில் வெற்றி பெறாத எத்தனையோ மாணவர்கள் தமது க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர தேர்வுகளில் சிறப்பாக சித்தியடைந்திருக்கிறார்கள். அறிவாளிகளாகவும், தொழிலாண்மை மிக்கவர்களாகவும், சிந்தனைத் திறன் கொண்டவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இந்த உண்மைகள் எல்லாம் பெற்றோருக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

கல்வி கற்றல் தொடர்பாக இப்பந்தியில் இன்னொரு விஷயத்தையும் கோடிட்டு காட்ட விரும்புகிறோம். பெரும்பாலான பெற்றோர் வாசிப்பை ஊக்குவிப்பதில்லை. பாட நூல்களுக்கு அப்பால் வாசிப்பு என்பது அவசியமற்றது; நேரத்தை வீணடிப்பது என்ற கருத்து பரவலாக பெற்றோரிடம் காணப்படுகிறது. குடும்பங்களில், நூல்களை விடுங்கள், வாரப் பத்திரிகைகள் கூட வாங்கி வாசிக்காத தன்மையையே இன்று பார்க்க முடிகிறது. வாசிப்புக்கு பணத்தையும் நேரத்தையும் செலவிடுவது வீண் என்ற எண்ணம் படித்த பெற்றோர் மத்தியிலும் காணப்படுகிறது. வாசிப்பின் மூலம் அறிவும் சிந்தனைத் திறனும் தூண்டப்படுவதோடு, அதன் மூலம் ஒரு மாணவன் தெரிந்து வைத்திருக்கும் பல்வேறு விஷயங்கள் அவனது பாடசாலைக் கல்விக்கு உசாத்துணைத் தகவல்களாக அமைகின்றன என்பது பொதுவாகவே புரிந்து கொள்ளப்படுவதில்லை. பல பாடசாலைகளில் நூல்களற்ற அல்லது பெயரளவிலான நூலகங்களே உள்ளன என்பதோடு மாணவர்களுக்கு அவை திறந்து விடப்படுவதுமில்லை. பல ஆசிரியர்களும் அதிபர்களுமே வாசிப்பு பழக்கமற்றவர்களாக இருக்கும் மற்றும் வாசிப்பு மக்கள் மத்தியில் அருகி வரும் சூழலிலேயே கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் சகல பாடசாலைகளுக்கும் நூலகம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். ஒரு மாணவனுக்கு மூன்று நூல்கள் என்ற அளவில் பாடசாலை நூலகங்கள் நூல்களைக் கொண்டதாக விளங்க வேண்டும் என்ற கொள்கை அமைச்சரால் வகுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் படி வருடமொன்றுக்கு நூறு நூல்களை வாசித்து முடிக்கும் ஒரு மாணவனுக்கு பிளாட்டின விருதும் அதற்குக் குறைவான நூல்களை வாசிப்போருக்கு தங்க, வெள்ளி, வெண்கல விருதுகளும் வழங்கப்பட விருப்பதாக அறிய முடிகிறது. இத் திட்டத்துக்கு பெற்றோர் தமது மாயைகளில் இருந்து விடுபட்டு ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

(Thinakaran)