(Saakaran)
எயர் கனடா தனது வழமையான ‘அளவான’ உணவு உபசரிப்புடன் மும்பாய் நகரில் தாமதம் இன்றி தரையிறங்கியது. பம்பாய் என்றிருந்த நகரம் தற்போது மும்பாய் என்று மாறியதில் பல் தேசிய இனங்கள் வாழும் ‘ஜனநாயக’ நாட்டில் ஒரு மதத்தை முன்னிறுத்திய சிந்தனைப் போக்கும் காரணமாக இருந்தது என்பது வரலாறு. 16 ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வணிகத்திற்கு என்று வந்திறங்கிய போத்துக்கீசரால் 7 தீவுகளை இணைத்து பம்பாய் என்று பெயர் சூட்டப்பட்டதாக வரலாறு உண்டு. 1995 ஆண்டு ஆட்சிக்கு வந்த பால் தக்கரே இன் சிவ சேனா கட்சியினரால் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான சுதேசிகளின் அடையாளத்தை முன்னிறுத்த மும்பாய்தேவி என்ற இந்து கடவுகளை அடியொட்டிய இந்துத்துவா சிந்தனையின் வெளிபாடாக இந்த ‘ப’ ‘மு’ இனால் பிரிதியீடு செய்து பெயர் மாற்றபட்டது.
6 மணி நேரம் தங்கி நின்று தாயகத்திற்கான அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு இடையில் விமான தளத்திற்குள் உண்பதற்காக உணவகங்கள் நிறைந்த பகுதியிற்கு சென்றேன். மேற்கத்திய சாப்பாடுகள் தொடக்கம் இந்திய உணவு வகைகள் உட்பட சீன வகை சாப்பாடுகள் என பல வகை உணவங்கள் எனது பசியை தீர்க்க என்னை கண் சிமிட்டி அழைத்தாலும் என்னமோ என்னை கவர்ந்தது இந்திய ‘சுடிதார்’ களே. அதுவும் சேலையின் தாக்கத்திற்கான தென்னிந்திய உணவு வகையான இட்லி தொடக்கம் மெது வடை ஈறாக சிறிய சிறிய அளவில் பலவகை உணவுப் பண்டங்களை தனித்தனியாக பாகம் பிரித்து அமைத்து ஒரு சாப்பாடு தட்டில் பரிமாறிய பிக் மீல்ஸ் ஒன்றை தருமாறு வேண்டிக் கொண்டேன்.
அழகாக ஒழுங்கமைக்கப்பட்ட தட்டில் கத்தி கரண்டி முள்ளுக் கரண்டி தேனீர் கோப்பை உட்டபட பரிமாறிய பெரிய சாப்பாட்டுத் தட்டு வரை யாவும் மரத்தின் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு பிளாஸ்ரிக் பாகங்களையும் காண முடியவில்லை. தேனீரில் சீனியைப் போட்டுக் கலக்க கூட மரத்தினால் ஆன குச்சியை வைத்திருந்தனர். சில தினங்களின் முன்பு உலக அளவில் மதிப்பீடு செய்யப்பட்ட கழிவுப் பொருட்களை மீள் சுழற்சி செய்து பாவிப்பது என்ற வகையில் சுற்று சூழல் மாசடைவதை தடுப்பதற்கான முறமையில் இந்தியா உலக அளவில் முதலிடத்திற்கு அண்மித்து விட்டது என்ற செய்தியை எனக்கு நிஜத்தில் காட்டியது இந்த ‘பிக் மீல்ஸ்(Big Meals)’ நம்ப முடியாவிட்டாலும் நம்பும் வகையிலான ஒரு சோற்றுப் பதம் இது.
ஆனாலும் எனக்குள் கேள்விகள் இல்லாமல் இல்லை எப்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று. இப்போராட்டம் அடிப்படையில் சுற்று சூழல் மாசுபடுதலுக்கு எதிரானது தானே….?