திசைவழிகளை திசைகாட்டல்

கடந்த காலத்தின் சுமைகளையும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளையும் தன்னகத்தே உள்வாங்கிச் சிரித்து, விருட்சமாய் வளர்வதற்காகப் புதிய காலங்களையும் புதிய கோலங்களையும் உருவாக்கிச் செல்ல 2020 காத்திருக்கிறது. இதை எவ்வாறு விளங்குவது, எவ்வாறு விளக்குவது? என்ற இரு கேள்விகளும் எல்லோருடைய மனத்தில் இருந்தாலும், எதிர்வு கூறல்களைச் செய்வதில் ஒரு சுவாரசியம் உண்டு. அதையே இக்கட்டுரையும் செய்ய விளைகிறது.

கடந்துபோன 2019ஆம் ஆண்டு, 2020ஐ கோடு காட்டிச் சென்றுள்ளது. அந்த வழித்தடத்திலேயே இவ்வாண்டும் பயணிக்கும் என்பதில் ஐயங்கள் இல்லை.

அவ்வகையில், நான்கு முக்கியமான திசை வழிகளை அனுமானிக்கக் கூடியதாக இருக்கிறது. அந்த நான்கும், 2020 தீர்க்கமான திசை வழிகளாக இருக்கக்கூடும். அவையே, 2020ஆம் ஆண்டில், உலக அரசியல் அரங்கில், முக்கியமான நிகழ்வுப் போக்குகளுக்கு வழிகாட்டுவதாக அமையும்.

பொருளாதார மந்தநிலையின் புதுவடிவம்

2008ஆம் ஆண்டு ஏற்பட்ட, மிகப்பெரிய பொருளாதாரச் சரிவிலிருந்து, மெதுமெதுவாகக் கடந்த பத்தாண்டுகளில் உலகம் மீண்டு வந்துள்ளது. ஆனாலும், உலகம் பழைய நிலைக்கு இன்னமும் திரும்பவில்லை என்பதை, கடந்த ஆண்டு நிகழ்வுகள் காட்டுகின்றன.

அதனிலும் மேலாக, இவ்வாண்டு இன்னும் ஒரு பொருளாதாரச் சரிவை நோக்கிய பாதையில், உலகப் பொருளாதாரம் பயணிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கடந்த ஆண்டு மட்டும், ஐரோப்பிய வங்கிகள் 50,000 பேரை வேலையில் இருந்து அகற்றி இருந்தன. இத்தொழில் வெட்டுகள், அதிலும் குறிப்பாக, வங்கித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலை இழப்புகள், முக்கியச் செய்தி ஒன்றைச் சொல்கின்றன.

உலகில் மிகப்பெரிய வங்கிகளும் அமெரிக்க, ஐரோப்பிய வங்கித் துறைகளும் 2008ஆம் ஆண்டுக்குப் பின்னரான, மிகவும் மோசமான ஆண்டாக 2019 குறிக்கின்றன. இது, உலக நிதியியல் நிலைமைகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை விளக்குவதற்குப் போதுமானது.

இன்றைய பொருளாதார முறைமையானது, வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் மய்யப்படுத்தியே இயங்குகிறது. இந்த வங்கிகள் வேலைக் குறைப்புச் செய்தமையும் வட்டி வீதங்களை மிகக்குறைவாகப் பேணுகின்றமையும் உலகப் பொருளாதாரம் வலுவற்ற நிலையில் உள்ளதைச் சுட்டுவதற்கான குணங்குறிகள் ஆகும்.

உலகளாவிய ரீதியில், தொழிற்றுறைசார் விருத்தி குறைவடைந்துள்ளது. நுகர்வோரின் கொள்திறன், பாரிய சரிவைக் கண்டுள்ளது. வேலையிழப்புகளும் வேலையில்லாப் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் மீண்டும் சரிவை நோக்கிச் செல்லுகின்ற உலக பொருளாதாரத்தின் குறிகாட்டிகள்.

உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் ஒவ்வொன்றும், பொருளாதார மந்த நிலையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, உற்பத்திசார் தொழிற்றுறையின் சரிவின் காரணமாகவும் உலகளாவிய ‘ஓட்டோ மொபைல்’ விற்பனையின் சரிவு காரணமாகவும் பொருளாதார மந்த நிலையை நோக்கியுள்ளது.

பிரெக்ஸிட்’ காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை, பிரித்தானியாவின் பொருளாதாரத்தில், பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2012ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில், முதன்முறையாக, கடந்தாண்டு பிரித்தானியப் பொருளாதாரம், பாரிய அளவு சுருங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின், நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடான இத்தாலி, உற்பத்திக் குறைவு, அதிகரித்துச் செல்லும் வேலையின்மை, பாரிய அளவிலான கடன், அரசியல் ஸ்திரமின்மை போன்ற காரணங்களால், கடந்த ஆண்டு பொருளாதாரச் சரிவை எதிர்நோக்கியது. இது, இவ்வாண்டு இன்னும் மோசமடையும் போது, இத்தாலியுடன் பொருளாதார உறவுகளை வைத்திருக்கின்ற நாடுகளை மோசமாகப் பாதிக்கும்.

உலகில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, தொடர்ச்சியாகக் குறைவடைந்து வருகிறது. 2019ஆம் ஆண்டு, 6.6 சதவீதமாக இருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இவ்வாண்டு வெறுமனே 5.5 சதவீதமாக இருக்கும் எனப் புள்ளிவிவர எதிர்வுகூறல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல, உலகின் முக்கியமான பொருளாதார நாடுகள், மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர் நோக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில் துருக்கி, ஈரான், பிரேஸில், மெக்சிகோ, ஆர்ஜென்டினா ஆகியவை பிரதானமானவை.

சர்வதேச நிதி நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, உலக பொருளாதாரமானது, இவ்வாண்டு வெறுமனே, மூன்று சதவீதத்தால் மட்டுமே வளர்ச்சி அடையும். இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, இவ்வளவு குறைவான வளர்ச்சிவீதம், 2020 ஆம் ஆண்டுக்கு எதிர்வு கூறப்படுகிறது.

உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் பொருளாதாரம், கடந்த சில ஆண்டுகளாக மந்த நிலையை அடைந்து வந்துள்ள போதும், இவ்வாண்டு அந்நிலை இன்னும் மோசமடைந்து, அமெரிக்கப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்லும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இவை, உலகளாவிய ரீதியில் மக்கள் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை, எதிர்நோக்க வேண்டிய ஆண்டாக, 2020 இருக்கும் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.

ரஷ்யாவின் அதிகரிக்கும் செல்வாக்கு

உலக அரங்கில், தனக்கெனத் தனியான இடத்தை, கடந்த ஒரு தசாப்த காலத்தில், ரஷ்யா உறுதி செய்துள்ளது. உலகில் முக்கியமான, அரங்குகளில் தவிர்க்க இயலாத அரங்காடியாக ரஷ்யா, தன்னை நிலை நிறுத்தியுள்ளது.

குறிப்பாக, ஈரான் அணுசக்தி விடயத்திலும் சிரியப் போரிலும், ரஷ்யாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவை, உலக விவகாரங்களில் ஒதுக்கித்தள்ள இயலாத ஒரு நாடாகவும் கணிப்பில் எடுத்து, நட்புப் பாராட்ட வேண்டிய ஒரு நாடாகவும் ரஷ்யாவை உயர்த்தி உள்ளன. இது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தொலைநோக்கு, அயலுறவு கொள்கைகளின் விளைவால் ஆனவை ஆகும்.

கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற, முதலாவது ரஷ்ய-ஆபிரிக்க உச்சி மகாநாடு, ஆபிரிக்கா மீதான ரஷ்யாவின் புதிய நாட்டத்தை எடுத்துக் காட்டியது. இதில், 43 ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆபிரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான, புதிய பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவை தொடர்பான கூட்டாண்மையின் தொடக்கமாக, இம்மாநாடு இருந்தது. அடுத்த சில ஆண்டுகளில், 40 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான வர்த்தகத்தை, ஆபிரிக்காவுடன் ரஷ்யா எதிர்பார்க்கிறது. ஆபிரிக்காவில் ரஷ்யாவின் அதிகரித்த செல்வாக்கை, இவ்வாண்டு கண்கூடாகக் காணவியலும். இது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு, அதிருப்தி அளிப்பதாய் இருக்கும். இதனால், அதிகாரப் போட்டியின் புதிய மய்யமாக, ஆபிரிக்கா தோற்றம் பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஏற்கெனவே, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, ஆபிரிக்காவில் நிலவும் அதிகாரப் போட்டி, உச்சத்தை அடைந்து உள்ளதையும் நினைவூட்டல் தகும். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நெருக்கமும் உறவும், இந்த அதிகாரப் போட்டியைத் தரமுயர்த்தும்.

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள ரஷ்யாவின் செல்வாக்கும், தென்னாபிரிக்காவிலும் வெனிசுவேலாவிலும் அணுக்குண்டுகளை வீசக்கூடிய விமானங்களை, இராணுவப் பயிற்சிக்காக ரஷ்ய விமானப்படை பயன்படுத்தியிருப்பதும் ஆபிரிக்காவில் மொசாம்பிக் முதல் மத்திய ஆபிரிக்கக் குடியரசு வரை, ஆட்சியாளர்களுடன் நெருக்கமான உறவுகளை ரஷ்யா பேணுவதும் லிபியாவின் புரட்சிக் குழுக்களுடனான ரஷ்யாவின் நெருக்கமும் உலகெங்கும் தனது கைரேகையை, ரஷ்யா பதித்துள்ளமைக்கான சான்றுகள் ஆகும். இதன் விளைவுகளையும் பயன்களையும் இவ்வாண்டு ரஷ்யா அனுபவிக்கும்.

அதேவேளை, ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள், 200 பில்லியன் டொலர் அளவைத் தாண்டும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்துவதோடு, இரு நாட்டுப் பொருளாதாரங்களுக்கும் வலுவான அடித்தளங்களையிடும்.
ரஷ்யாவின் புதிய வகிபாகம், அதற்கு ஐரோப்பாவிலும் பல நண்பர்களைத் தேடிக் கொடுத்துள்ளது.

ரஷ்யாவுடன் தொடர்ச்சியாகக் கடும் போக்கைக் கடைப்பிடித்து வந்த பல ஐரோப்பிய நாடுகள், இன்று, ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேண விரும்புகின்றன. இதில், பொருளாதார ரீதியாக நெருக்கடியில் உள்ள இத்தாலியும் பிரான்ஸும் முன்னிலையில் உள்ளன. நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் பல நாடுகள், ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேண விரும்புகின்றன. அதில், துருக்கி முதன்மையானது.

இந்த நிகழ்வுகளும் போக்குகளும், ரஷ்யாவைப் பொது எதிரியாக்கியுள்ள அமெரிக்க மய்யக் கோட்பாட்டு உருவாக்கத்தில், பாரிய நெருக்கடிகளை உருவாக்கி உள்ளன. முன்புபோல் இன்றும், ‘ரஷ்ய அபாயத்தை’ கட்டமைக்க இயலாமல், மேற்குலக அதிதீவிர வலது கொள்கை வகுப்பாளர்கள் தடுமாறுகிறார்கள். இதன் தொடர்ச்சியை, இவ்வாண்டும் காண இயலும்.

காலநிலை பழிவாங்கும் போது…

காலநிலை மாற்றம் எவ்வளவு அவசரமானதும் அவசியமானதுமான தீர்வை வேண்டி நிற்கின்றன என்பதை, கடந்த ஆண்டு அமேசன் காடுகள் எரிந்து, படம் பிடித்துக் காட்டின. ஆனால், இவ்வாண்டும் அதே சவால்கள் தொடரும்.

காலநிலை மாற்றம் பற்றி நிறையவே பேசுவார்கள்; மாநாடுகள் நடக்கும்; திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஆனால், நடைமுறையில் எதுவும் செய்யாமல், மனிதகுலத்தின் மரணத்துக்குக் குழிதோண்டியபடியே இவ்வாண்டும் கடந்து போகும்.

புகழ்பெற்ற ‘டைம்’ சஞ்சிகை, 2019ஆம் ஆண்டின் ஆளுமையாகக் காலநிலை செயற்பாட்டாளர் கிரெத்தா துன்பேர்க்கைத் தெரிவு செய்திருந்தது. கடந்தாண்டு, காலநிலைக்கு எதிரான போராட்டத்தில், இவர் முக்கியமான குறியீடாகத் திகழ்ந்திருந்தார். இவ்வாண்டு அவரைத் தாண்டியும் உலகமெங்கும் காலநிலை மாற்றத்தைக் கையாளுவதற்குத் தவறிய அரசுகளைக் குற்றஞ்சாட்டி, உலகின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடக்கும். அதேபோல, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை, இயற்கை தனது சீற்றத்தால், இன்னுமொருமுறை மோசமாக அறிவிக்கும்.

போராட்டங்களின் ஆண்டு

மேற்குறிப்பிட்ட படி, பொருளாதார நெருக்கடியும் காலநிலை மாற்றத்தின் கொடிய விளைவுகளும் மக்களைத் தவிர்க்க இயலாமல் போராட்டத்துக்குள் தள்ளும்.

கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு போராட்டங்களால் நிரம்பும். பல நாடுகளில், எதேச்சாதிகார ஆட்சிகளும் மக்கள் விரோத ஆட்சிகளும் முடிவுக்கு வரும். அரபு வசந்தத்தை ஒத்த, இன்னொரு வகையான மக்கள் போராட்டங்களின் எழுச்சி, மத்திய கிழக்கில் இவ்வாண்டு தோன்றக்கூடும்.

மத்திய கிழக்குக்கு வெளியே, இந்த மக்கள் போராட்டங்கள், குறித்துச் சொல்ல இயலாத பல குழப்பகரமானதுமான முடிவுகளை நோக்கி நகரும். அவை, ஒரு புறம் வெகுஜன ஆதரவு பெற்ற தலைவர்களைப் பதவியிலிருந்தும், வெகுஜன ஆதரவு பெற்ற தேசியவாத அரசியலை முன்வைத்து, சர்வாதிகார தன்மை உள்ள ஆட்சிகளை உருவாக்க வழி அமைக்கும். இவை இவ்வாண்டு எதிர்பார்க்கக் கூடியவை