தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 20)

இப் போராட்ட காலத்தில் நமது ஊரைக் கேவலப்படுத்தும் விதமாக எங்கோ நடந்த கொலைச் சம்பவங்கள் எல்லாம் மந்துவிலில் கொலை, மந்துவிலில் பயங்கரம் என செய்திகள் போட்டு கேவலப்படுத்தின.இதில் மித்திரன்,வீரகேசரி முன்னணி வகித்தன. எமது ஊரவர்கள் படித்த மட்டுவில் மகாவித்தியாலயம் பல ஊர் மாணவர்களை ஒன்றாக இணைத்தது.நட்பை வளர்த்தது.இதில் கைதடியும் அடங்கும்.1969ம் ஆண்டு கைதடியில் நாடகவிழா நடந்தது. அதற்கு எமது ஊர் மாணவர்களும் போனார்கள்.அந்த நாட்களில் சைக்கிள் பலரிடம் இல்லாத காரணத்தால் பள்ளிக்கூடத்துடன் சம்பந்த மற்ற சைக்கிள் வைத்திருப்பவரகளையும் அழைத்துச் சென்றனர்.இதனால் கொஞ்சம் அதிகமான இளைஞர்கள் நாடகவிழாவுக்குப் போனார்கள்.

அதில் இருவர் மச்சானும் மச்சானும்.ஒருவர் படித்தவர்.மற்றவர் படிக்காதவர்.இருவரும் தனியாக நின்று கடலை வாங்கித் தின்பதும் பெண்களுக்கு எறிவதுமாக இருந்தனர்.ஆனாலும் பெண்கள் தெரிந்தும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.பின்னர் இருவருமாக எழுந்து நடந்துபோகும்போது படித்தவர் கை எதிரே வந்த பெண் மார்பை திட்டமிட்டு தொட அதைக் கண்ட கைதடி இளைஞன் அவரைத் தாக்க இன்னொருவன் பின்புறமாக அவரின் கழுத்தைப் பிடித்து திருகினான்.அவருடன் நின்ற மைத்துனர் கத்தவே எமது ஊரவர்கள் சுற்றி வளைத்து தாக்கினர்.அவரகளின் ஊர் என்பதால் நிறையப்பேர் எமது ஊரவரகளை சூழ்ந்து தாக்கினர்.சம்பந்தப்பட்ட முதல் இரண்டுபேர்கள் தவிர யாருக்கும் என்ன உண்மை என தெரியாமல் சண்டை நீடித்தது. இதில் மட்டுவில் இளைஞர்கள் ஒருவாறாக புகுந்து மந்துவில் இளைஞர்களை வெளியேற்றிவிட்டனர்.எமது ஊரவர்கள் பலத்த காயங்களுடன் திரும்பி மட்டுவில் டாக்டர் எட்வேட் வீடு சென்று சிகிக்கை பெற்றனர்.பின் மந்துவில் திரும்பி ஆயுதங்கள் சகிதமாக கைதடி நோக்கி வந்தனர்.

இதை முன் கூட்டியே யூகித்த எட்வேட் இவர்களை எதிர்பார்த்து மட்டுவில் பிரதான வீதியில் நித்திரை விழித்து காத்திருந்தார்.அவரகளை எட்வேட் மறித்து திருப்பி அனுப்பினார்.அவர் அதோடு நிற்கவில்லை .அவரகள் திரும்பியதும் தன் காரில் சென்று கைதடி பாலத்தில் காத்திருந்தார்.அவரது கணக்கு தவறவில்லை.மாற்று வழியாக எமது ஊரவர்கள் வெறியுடன் பதில் தாக்குதல் நடாத்த சென்றனர்.அதில் அவர்களை வழிமறித்து வாக்குவாதப்பட்டு ஒரு கட்டத்தில் தன்னை தாக்கிவிட்டுப் போங்கள் என்று சொன்ன பின்பே எமது ஊரவர்கள் திரும்பினார்கள்.

எட்வேட் மட்டும் அதை கவனிக்காவிட்டால் மிக பெரிய அனர்தம் ஏற்பட்டிருக்கும் .பத்திரிகைகளின் செய்திகள் உண்மை என ஊர்ஜிதமாக இருக்கும்.ஒரு வைத்தியராக மட்டும் அன்றி சமூத்தின்மீதும் உயிர்களின் மீதும் எவ்வளவு அக்கறையுள்ள மனிதனாக கடமையாற்றி இருக்கிறார்.இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் பின்னாளில் தங்களின் முட்டாள்தனத்தையும் எட்வேட் அவர்களின் பண்பையும் வியந்தார்.

அந்த நாட்களில் மட்டுவிலின் சுற்றயல் கிராமங்களில் ஏழைகளின் குடும்ப வைத்தியர் அவர்தான்.எமது ஊரின் எல்லாப்புழுதி தெருக்களிலும் அவர் காலடிகள் பட்டன.தீண்டாமை ஒழிப்பு போராட்டத்துக்கு தன் மனமுவந்த முழு ஆதரவையும் கொடுத்தவர்.

எட்வேட் பற்றிய இந்த உண்மையை பதிவதில் பெருமை அடைகிறேன்.இன்றுவரை யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)