தூத்துக்குடிப் படுகொலைகள்: நின்றும் அன்றும் கொல்லுதல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஜனநாயகம் தன் உண்மை முகத்தைக் காட்டும் போது மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். எதை ஆண்டாண்டு காலமாக, ஆதரித்துக் காத்து வந்தார்களோ, அதுவே அவர்களைக் குறிவைக்கும் போது, பாரபட்சமின்றிக் கொன்றொழிக்கும் போது, மக்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்தத் திகைப்பிலிருந்து அவர்கள் வெளிவரும் முன்னர், அவர்களது எண்ணங்கள் மடை மாற்றப்படுகின்றன. அதிகாரத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் மக்கள் சிந்திப்பது ஆபத்தானது. மக்கள் சிந்திப்பதையும் செயற்படுவதையும் ஒன்றிணைவதையும் அனுமதிப்பதன் விளைவுகளை அவர்கள் அறிவார்கள். இதனால்தான், அறிவால் அல்லது ஆயுதத்தால் மக்களது சிந்தனைக்கும் செயலுக்கும் அவர்கள் தடைபோட முனைகிறார்கள். இது என்றென்றைக்குமானதல்ல.

கடந்தவாரம், இந்தியாவின் தூத்துக்குடியில் அமைந்துள்ள ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது, துப்பாக்கிச்சூடு பிரயோகிக்கப்பட்டு 13 பேர் கொல்லப்பட்டார்கள். இவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டவர்கள் தற்செயலாகக் கொல்லப்படவில்லை.

மாறாக, இப்போராட்டத்தை முன்னின்று நடாத்தியோரை, பொலிஸ் திட்டமிட்டுக் குறிவைத்துக் கொன்றிருக்கிறார்கள். இது, தமிழ்நாடு மக்கள் மத்தியில், பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவை ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு’ என நம்பியிருந்த சமானிய இந்தியத் தமிழர்களால், இக்கொலைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவர்களைச் சுற்றியிருந்த பொதுப்புத்தி மனோநிலை, திடீரென்று சுக்குநூறாய் நொருங்கிவிட்டது. இந்தியா பற்றியும் சட்ட ஒழுங்கு பற்றியும், ஊடகங்களும் புத்திஜீவிகளும் கட்டியெழுப்பியிருந்த ‘ஜனநாயக மாயை’ காணாமல் போய்விட்டது.

தூத்துக்குடியில் நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் துறைமுக நகரமான தூத்துக்குடியில், ‘ஸ்டெர்லைட்’ உருக்குத் தொழிற்சாலை 1996 இல் தொடங்கப்பட்டது. தூத்துக்குடி நகரமானது தொழில்மயமாகத் தொடங்கியதன் ஒரு பகுதியாக, ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

இந்தத் தொழிற்சாலை சுற்றுச்சூழலை விஷமாக்கி வருகிறது என்றும், அதற்கான மறுக்கவியலாத ஆதாரங்களை வைத்துக்கொண்டும், தொடக்கம் முதலே தூத்துக்குடிவாசிகள் அதை எதிர்த்து வந்துள்ளனர். இந்திய அதிகாரிகள், இந்த எதிர்ப்புகளைப் புறக்கணித்து விட்டு, அதைத் தொடர்ந்து செயற்பட அனுமதித்தனர்.

நச்சுக்கழிவுகளைக் காட்டி, தொழிற்சாலையை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்ட போதெல்லாம், அரசாங்கம் அதை விரைவிலேயே மீண்டும் திறக்க அனுமதித்தது.

சமீபத்திய போராட்டங்களின் அலை, பெப்ரவரியில் தொடங்கியது. அந்தத் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர்சனிக் இரசாயனம், ஈயம், சல்பர் ஒக்சைட் உட்பட நச்சுக்கழிவுகள் நிலத்தடி நீரை விஷமாக்கி, உயிருக்கு ஆபத்தான உடல்நலக் கேடுகளைத் தோற்றுவித்திருந்தன. இந்நிலையில், நீர் விஷமாகிவருவதைக் கருத்தில் கொண்டு, அதை நிரந்தரமாக மூடுமாறு அங்கே வசித்தவர்கள் கோரினர்.

போராட்டம் 99 நாட்கள் அமைதியாக நடந்தது. அரசு உட்பட யாரும் அம்மக்களின் போராட்டத்துக்குச் செவிசாய்க்காத நிலையில், 100ஆவது நாள் மாவட்ட ஆட்சியாளரிடம் மனுவொன்றைக் கொடுப்பதற்கு போராட்டக்காரர்கள் முயன்றார்கள்.

அப்போது, பொலிஸ் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இதைத் தொடர்ந்து எழுந்த கண்டனத்தை எதிர்கொள்ள முடியாமல், தமிழ்நாடு அரசாங்கம் தள்ளாடுகிறது.

இன்றுவரை, துப்பாக்கிச்சூடு நடாத்த அனுமதி கொடுத்தது யார் என்ற, வினாவுக்கான விடை கிட்டவில்லை. குறிப்பாகக் குறிபார்த்துச் சுடும் ‘ஸ்னைப்பர்’ துப்பாக்கிகள் ஏன் பயன்படுத்தப்பட்டன, கலவரம் அடக்க அவை ஏன் கொண்டுவரப்பட்டன. கலவரம் நடந்ததா அல்லது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா போன்ற கேள்விகளுக்குப் பதில் எதுவும் இல்லை.

ஆனால், ‘பயங்கரமான ஆயுதங்களை ஏந்திய சமூக விரோதிகள் பத்தாயிரம் பேர், கையில் பெட்ரோல் குண்டுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தார்கள். சுமார் 400 ஆண்களும் 100 பெண்களும் கையில் பெட்ரோல் குண்டுகள், தீப்பெட்டிகள், உருட்டுக்கட்டைகளுடன், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அருகில் உள்ள பொலிஸ் குடியிருப்புக்குள் நுழைந்து, பொலிஸாரைத் தாக்கத் தொடங்கியதால், துப்பாக்கிச்சூடு நடத்த நேர்ந்தது’ என்று முதல் தகவல் அறிக்கையில் பொலிஸ் விளக்கியிருக்கிறது.

வழமைபோலவே, தீவிரவாதிகள் நுழைந்துவிட்டார்கள்; மாவோவிஸ்ட்டுகள் செல்வாக்குச் செலுத்துகிறார்கள் போன்ற கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இன்னொரு வகையில், ‘பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்’ என்ற பெயரில், தமிழ்நாட்டில் அடக்குமுறை அரங்கேறுகிறது.
இதன் மூலம், மக்கள் போராட்டங்களுக்கு அரசாங்கம், ஆயுதங்கள் மூலம் பதிலளிக்கிறது.

‘வேதாந்தா’: வில்லங்கத்தின் கதை

இச்சம்பங்களின் மையப்புள்ளி ‘வேதாந்தா’ நிறுவனம் நிறுவியுள்ள ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலையும் அதன் விரிவாக்க முயற்சிகளுமாகும்.

‘வேதாந்தா’ நிறுவனம் பிரித்தானியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பல்தேசியக் கம்பெனியாகும். உலகில் உள்ள ஏனைய பல்தேசியக் கம்பெனிகள் போலவே, இலாபத்தை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும்.

பாட்னாவைச் சேர்ந்த ஒரு ‘மார்வாடி’யான அனில் அகர்வால் ‘வேதாந்தா ரிசோர்சர்ஸ்’ இல் 71 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள இந்திய பில்லியனர் என்பது தவிர, இந்தியாவுக்கும் ‘வேதாந்தா’வுக்கும் சம்பந்தமில்லை.

‘வேதாந்தா ரிசோர்சஸ்’ சர்வதேச அளவில், சுரங்கம் மற்றும் கனிம உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ‘பகாசுர’ நிறுவனங்களில் ஒன்றாகும். அது செப்பு, அலுமினியம், துத்தநாகம், ஈயம், இரும்புத்தாது போன்றவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியா, சாம்பியா, தாய்வான், தென்கொரியா ஆகிய நாடுகளில் செயற்படுகிறது.
2010இல் இதன் சொத்து மதிப்பு 23,887 பில்லியன் டொலர்கள். 2010இல் இதன் வருவாய் 7,873 பில்லியன் டொலர்கள்; அதன் இலாபம் 598 பில்லியன் டொலர்கள். ‘வேதாந்தா’ சுரங்கத் தொழிலில் உலக அளவில் 10ஆவது இடத்தில் உள்ள நிறுவனமாகும்.

‘வேதாந்தா’ பிரிட்டனின் மிகப் பெரும் ஏகபோக நிறுவனங்களில் ஒன்று என்பதுடன், உலக அளவில் சுரங்கத் தொழிலைக் கட்டுப்படுத்தும் பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்று.

1996 இல் ‘வேதாந்தா ரிசோர்சர்’ஸின் உருக்குத் தொழிற்சாலை தூத்துக்குடியில் இயங்க ஆரம்பித்ததிலிருந்து, அதிலிருந்து வெளியேற்றப்பட்ட சல்பர் டை ஒக்சைட், ஈயம், ஆர்சனிக் மற்றும் இதர நச்சு இரசாயனங்களின் ஆபத்துகளுக்கு எதிராகத் தூத்துக்குடி மக்களும் தென்கிழக்கு தமிழ்நாட்டின் மீனவர்களும் போராடி வந்துள்ளனர்.

இருப்பினும், அவர்களின் கோரிக்கைகளும் கவலைகளும் தொடர்ச்சியாக, அதிகாரிகளால் முற்றிலும் அலட்சியப்படுத்தப்பட்டு வந்துள்ளன. இத்தொழிற்சாலை ஆண்டொன்று 4,38,000 தொன் செப்பை உற்பத்தி செய்ய வல்லது, அதாவது, நாளொன்றுக்கு சராரியாக 1,200 தொன் உற்பத்தி செய்யப்படுகிறது.

இத்தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 10 சதுர கிலோமீற்றர் அளவுக்குள், எட்டு நகர்ப்புறங்களும் 27 கிராமங்களும் உள்ளன. நான்கு இலட்சத்து 60 ஆயிரம் மக்கள் இப்பகுதிக்குள் வசிக்கிறார்கள். இவர்கள் தொடர்ச்சியாகச் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள்.

இந்தியாவின் மூன்று மாநிலங்களில், ‘வேதாந்தா’ நிறுவனம் தனது தொழிற்சாலையை நிறுவ முயன்ற போதும், மக்களின் எதிர்ப்புக் காரணமாக அம்மாநிலங்களில் காலூன்ற முடியவில்லை.

இதைத் தொடர்ந்து இவ்வாலை தமிழ்நாட்டுக்கு வந்தது. தூத்துக்குடியிலுள்ள ‘சிப்காட்’ தொழிற் பூங்காவில் தான், ‘வேதாந்தா’வின் தாமிர உருக்காலை முதலில் தொடங்கப்பட்டது.

தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகளின் பின்னர், 2006ஆம் ஆண்டு, சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகள் வந்தன. ‘வேதாந்தா’ நிறுவனம், தன்னுடைய தாமிர உருக்குத் தொழிற்சாலையின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அனுமதியை 2009ஆம் ஆண்டில் முதலில் கோரியது.

சுற்றுச்சூழல் அமைச்சு, சுற்றுச்சூழல் அனுமதியை அந்நிறுவனத்துக்குக் கொடுத்தது. ஆனால், அந்தச் சுற்றுச்சூழல் அனுமதி, ஐந்தாண்டுகளில் காலாவதியாகிப் போனது. மீண்டும் 2013ஆம் ஆண்டு அனுமதியை நீட்டிக்க முனைந்தது ‘வேதாந்தா’ நிறுவனம். ஆனால், சுற்றுச்சூழல் அமைச்சகம் கால நீட்டிப்பை, இம்முறை 2014 ஆம் ஆண்டு மே மாதம் மறுத்து விட்டது. ஆனால், ‘வேதாந்தா’ நிறுவனத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியை, 2018 டிசெம்பர் மாதம் வரை நீடிக்கப் புதிதாகப் பதவியேற்ற நரேந்திரா மோடி தலைமையிலான அரசாங்கம், 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனுமதித்தது.

இதைத் தொடர்ந்து, ‘வேதாந்தா’ நிறுவனமும் விரிவாக்கத்தைத் தொடங்கியது. இதை எதிர்த்து, மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்நிலையில், ‘வேதாந்தா’வின் பிரதான பங்குதாரரான அனில் அகர்வால், “ஆலைகளுக்கு எதிராக இந்தப் பிரசாரமானது, இந்தியா இறக்குமதிகளைச் சார்ந்திருக்குமாறு செய்வதற்கான ஒரு வெளிநாட்டுச் சதி” என்றார். அதன் மூலம், தொழிற்சாலைகளை எதிர்ப்பவர்களுக்கு எதிராக, இந்தியத் தேசியவாதத்தைக் கிளறினார்.

தொழிற்சாலையை மூடுதல் என்ற நாடகம்

13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட கொந்தளிப்பைச் சமாளிப்பதற்காக, தமிழ்நாட்டு அரசாங்கம் ஆலையை மூடுவதாக திடீர் அரசாணையைப் பிறப்பித்து, தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்துள்ளது.

இதற்கு முன்னர், தூத்துக்குடியிலும் அதை அண்டிய பகுதிகளிலும் இணைய இணைப்பையும் அலைபேசி இணைப்பையும் துண்டித்து, துணை இராணுவத்தைத் துணைக்கு அழைத்து, மக்கள் போராட்டத்தை நிறுத்த அரசாங்கம் முயன்றது.

அது பயனளிக்காத நிலையில், தொழிற்சாலையை மூடும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், சில செய்திகளை நோக்குதல் வேண்டும்.

‘சூழலை மாசுபடுத்தியதுக்காகத் தொழிற்சாலையை மூடவேண்டும்’ என்று 2010இல், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, 2013 இல் உச்சநீதிமன்றம் சென்று, ‘வேதாந்தா’ முறியடித்து விட்டது.

2013இல் நச்சுப்புகை வெளியானதையொட்டி, இப்போது மூடியதைப் போலவே அன்றைக்கும் தமிழ்நாடு அரசாங்கம் சீல் வைத்தது. ஆனால், பசுமைத் தீர்ப்பாயத்தில் உத்தரவு பெற்று, தொழிற்சாலையை மீண்டும் திறந்து விட்டது ‘வேதாந்தா’.

இப்போது, தமிழ்நாட்டு அரசாங்கம் தொழிற்சாலையை மூடுவதான அறிவிப்பு அரசாங்கத்தின் விருப்பத்தால் வந்ததொன்றல்ல; மாறாக, மக்கள் போராட்டங்களின் விளைவால் உருவானதொன்று.

அரசாங்கம் அறிவித்த 10 இலட்சம், 20 இலட்சம் நிவாரணத்துக்குத் தூத்துக்குடி மக்கள் யாரும் மயங்கவில்லை. துப்பாக்கிக் குண்டு காயம் பட்டு, மருத்துவமனையில் கிடக்கும் மக்கள், “என்றைக்கு ஆலையை மூடுவீர்கள்” என்ற ஒரே கேள்வியை மட்டுமே எழுப்புகின்றனர்.

“ஸ்டெர்லைட்டை மூடினால்தான், இறந்தவர்களின் உடலை வாங்குவோம்” என்கின்றனர்.
நிரந்தரமாக இந்தத் தொழிற்சாலையை மூடவேண்டுமானால், ‘தாமிர உருக்குத் தொழிற்சாலைகளுக்குத் தமிழகத்தில் இடமில்லை’ என்று தமிழக அரசாங்கம், கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

இந்தச் சட்டமன்றக் கூட்டத்திலேயே, ‘ஜல்லிக்கட்டு’க்கு சட்டம் இயற்றியதைப் போல, இதற்கும் தனிச் சட்டம் இயற்றவேண்டும். இவ்வாறு செய்வதுதான் இதற்கு சட்ட ரீதியான தீர்வு என்று சூழலியல் ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் கூறுகின்றனர்.

ஒருபுறம், ‘தொழிற்சாலை விரிவாக்கத்தை எதிர்க்கவே போராடத் தொடங்கினோம். இப்போது தொழிற்சாலையையே மூட வைத்துள்ளோம். எனவே, போராட்டம் பெருவெற்றி பெற்றுள்ளது’ போன்றதொரு கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது போராட்டத்தை, மழுங்கச் செய்யும் வேலையாகும்.
மறுபுறம், ‘அபிவிருத்தி அரசியல்’ என்று கருத்தாக்கத்தின்படி, மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்த தொழிற்சாலையை மூடியதன் மூலம், பலருக்கு வாழ்வாதாரங்களை இப்போராட்டங்கள் இல்லாமல் செய்துள்ளன என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் சீர்கேடு, சமூக அவலத்தை இவர்கள் ‘வளர்ச்சிக்கான விலையாக’ப் பார்க்கிறார்கள். இவை வெற்றிகரமாக போராட்டங்களையும் அதையொட்டி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையும் மழுங்கடிக்கின்றன.

தமிழகத்தின் திசைவழிகள்

‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலை காலகாலத்துக்கும் மக்களை நின்று கொல்கிறது என்றால், தமிழக அரசாங்கம் தன்மக்களை அன்றே கொன்றது. ‘ஜல்லிக்கட்டு’ப் போராட்டத்துக்கு அடுத்தபடியாக, தமிழகத்தை உலுக்கியது கடந்தவாரம் நடந்த கொலைகள் ஆகும்.

தமிழகத்தின் மூன்றில் ஒருபகுதி இதனால் கொழுந்துவிட்டு எரிகிறது. நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி என தொடர்ச்சியான பரந்த நிலப்பரப்புக் கொதித்துக் கொண்டிருக்கிறது.

‘டெல்டா’ மாவட்டங்கள் காவிரி மற்றும் ஹைட்ரோ கார்பன் பேரழிவுகளை எதிர்கொள்ளும் போராட்டக்களமாக ஆகியிருக்கிறது. கடற்கரை மாவட்டங்கள் அனைத்தும் அணு உலைகளால் கொந்தளிப்பில் உள்ளது. இப்போது தூத்துக்குடி முழுவதையும் ‘ஸ்டெர்லைட்’ உசுப்பி விட்டிருக்கிறது. குமரியில் வரவிருக்கும் வர்த்தகத் துறைமுகத்தால் மக்கள் கோபத்தில் உள்ளனர்.

இப்போராட்டங்கள் அனைத்தும் தன்னெழுச்சியான போராட்டங்கள். இதற்கு ஓர் அமைப்போ இயக்கமோ தலைமை தாங்கவோ வழிகாட்டவோ இல்லை. இவ்வகையான மக்கள் போராட்டங்களை, பல அரசியற்கட்சிகள் தங்களது அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தும்.

இவ்விடத்திலேயே அமைப்புவயப்படுதலின் முக்கியம் உணரப்படுகிறது. இவ்வகையான போராட்டங்கள், திசைதவறுவதற்கும் தோற்பதற்கும் இவை அமைப்புவயப்படாமை ஒரு முக்கிய காரணியாகும்.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் இடையிலான உறவு என்னவென்றும், அடிப்படை என்னவென்றும் விளங்காமல், போராட்டங்கள் தனித்தனியாக முன்னெடுக்கப்படுகின்றபோது அவை பலவீனப்படுகின்றன.

அதைவிட அவை, வெறுமனவே சில கோரிக்கைகளுடன் நின்றுவிடுகின்ற போது, அவற்றின் வெற்றி, களைப்பூண்டுகளின் வேர்களைக் களையாமல், தண்டுப்பகுதிகளை முறித்தெடுப்பது போலாகிவிடுகின்றது.
எனவேதான், சிறு போராட்டங்கள் என்பன, அடிப்படையான பிரச்சினை பற்றிய புரிதலுடன் மேற்கொள்ளப்படாது தனித்தனியாக முன்னெடுக்கப்படுகின்றபோது, அவை பலவீனமடைவது போக, அவற்றின் வெற்றிகளின் பயனை நீண்ட காலத்தில் உறுதிப்படுத்த இயலாது போகின்றது.

எனவே நீதிக்கான போராட்டங்கள், தமது உடனடி ஆதரவுத் தளத்துக்கு வெளியே, பிரசார வேலைகளை முன்னெடுப்பதும் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால், போராட்டங்களின் காரணம் முதலாக, நடைமுறை அனுபவங்களும் விளைவுகளும் எதிர்காலமும் பற்றி ஆராய்வதும் தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதும் முக்கியமாகின்றது.

இந்த இடத்தில், அமைப்பு ரீதியான செயற்பாடு அடிப்படையானதாகின்றது. எந்த வகையிலான அமைப்பு என்பதுதான் போராட்டங்களுக்கு எந்த வகையிலான எதிர்காலப் பயன்கள் உள்ளன என்பதை முடிவு செய்யும்.

சிறு போராட்டங்கள், சிறு துளிகளாகச் சிதறிப் போகாமல், பெருவெள்ளமாக மாறி, அனைத்து அநீதிகளையும் அடித்துச்செல்ல வேண்டுமானால் அது அமைப்பு ரீதியான நெறிப்படுத்தலின் கீழேயே இயலுமாகும்.

இது நிகழாதவரை, ‘பொப்கோன் புரட்சிகள்’ போல, போராட்டங்கள் அங்காங்கு தோன்றி மறைந்தபடியே இருக்கும்.