(சாகரன்)
தென்னிலங்கை மக்களுக்கான நிவாரணங்களில் இணைவோம் மனிதாபிமானத்துடன் கூடிய சகோதரத்துவத்தை வளர்போம் நாம் நாகரீகமான சமூகத்தின் அங்கம் என்பதை நிறுவி நிற்போம்.
இலங்கையின் தென்பகுதியில் மழையினால் ஏற்பட்ட அனர்த்தம் பொது மக்களின் இயல்பு வாழ்வை பாதித்திருப்பதற்கு அப்பால் பலரின் மரணங்களுக்கும் காணாமல் போவதற்கும் காரணமாகியிருக்கின்றது. அந்தப் பிரதேசங்களை சார்ந்த கங்கை(ஆறு) கள் பெருக்கெடுத்து மேலும் அழிவுகளை எற்படுத்தும் நிலமைகளை ஏற்படுத்தி வருகின்றது. அபாய சூழல் இன்னும் கட்டுக்குள் வந்ததாக இல்லை. இந்தப் பகுதிகளின் பெருமான்மையான சிங்கள சகோதரர்கள் வாழ்ந்துவருவதும் மேலும் இலங்கை முழுவதும் பரந்து வாழும் முஸ்லீம் சகோதரர்களும் மலையக மக்களும் அதிகம் இந்தப் பகுதிகளில் வாழ்வதினால் இவர்களும் அதிக பாதிப்புக்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
ஒரு மனிதக் குழுமத்தின் வாழ்வு நிலை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் போது உதவுவதற்கு முன்வருதல் என்பது எப்போதும் சகோதரத்துவத்தை வளர்க்க உதவும் ஒரு சூழலை ஏற்படுத்தும். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனுதாபங்களும், ஆறுதல்களும், உதவிகரங்களும் மனித நேயத்தை எடுத்துக்காட்டும் ஒரு அடையாளமாகவும் சமூகங்களால் பார்க்கப்படும். மேலும் இது சகோதரத்துவத்தை வளர்க்கவும் உதவும். சிங்களச் சகோதர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சனைகளை மேலும் செவிமடுக்க இந்த சகோதரத்துவ உணர்வு நிச்சயம் உதவும்..
சுனாமி காலகட்டத்திலும், வித்தியாவின் படுகொலை நிகழ்ந்த போதும், ஏன் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் குளப்பிட்டிச் சந்தியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் கொல்ப்பட்டது போன்ற நிகழ்வுகளுக்கு சிங்கள் சகோதரர்கள் தமது நிவாரண, போராட்ட செயற்பாடுகள் மூலம் தமது மனிதாபிமானத்தை காட்டி நிற்கும் சூழலில் வடக்கு கிழக்கு மக்கள் இன்று வெள்ள அனர்த்தங்களால் பாதிகப்பட்ட மக்களுக்கான உதவிக்கரங்களை நீட்டுதல் அவசியம் ஆகின்றது. வாருங்கள் சகோதர்களே நாம் எமது மனிதாபிமான செயற்பாட்டினாலும் சகோதரத்துவத்தை வளர்ப்போம். கூடவே நாம் பெருமையுடன் கூறும் நாகரீகமான சமூகத்திற்கான அடையாளங்களை எமது நிவாரண அணுகுமுறை மூலம் நிறுவியும் நிற்போம்.
(May 28, 2017)