தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சமரம் மூலம் தீர்க்கப்படுவது சிறந்தது

மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் பற்றிய கூட்டு ஒப்பந்தப் பிரச்சினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சமரம் மூலம் தீர்க்கப்படுவது நல்லது. சமரசம் காண முடியாதவிடத்து மனுவில் பெயர் குறிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் அடுத்துவரும் அமர்வில் ஆட்சேபணைகளை பதிவு செய்ய வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்திருந்த ரிட் மனு 08.05.2017ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் சம்பள கூட்டு ஒப்பந்தம் தொழிற் சட்டத்திற்கும், இயற்கைநீதிக்கும், எற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளுக்கும் எதிரானது என்பதை மக்கள் தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டி தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீது தமது ஆட்சேபனைகளை தெரிவிக்க எதிராளிகள் மேலும் கால அவகாசம்  கோரியநிலையில், குறித்த மனு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தாக இருப்பதானாலும் காலம் தாழ்த்தாது சமரசத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா குறிப்பிட்டார்.

இவ் வழக்கை மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தாக்கல் செய்திருந்ததுடன் அவரே முன்னிலைப்பட்டு வாதங்களை முன்வைத்தார்.

அந்த வகையில், 08.05.2017ஆம் திகதியில் இருந்து நான்கு வார காலத்திற்குள் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பில் தொழில் அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளருடன் கலந்துரையாடி மனுதாரனின் மனுவில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டு ஒப்பந்தத்தை தொழில் ஆணையாளர் 2016 ஒக்டோபர் 16ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் வெளியிட்டமை சட்டத்திற்கு முரணானதா என்பது பற்றிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் இது சட்ட முரணானதெனில் அந்த திகதியிலிருந்து இரண்டு வாரத்திற்குள் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடனும் கம்பனிகளுடனும் கலந்துரையாடி இப்பிரச்சினையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் சமரசமாக தீர்க்க முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்ட நீதியரசர் எஸ். துரைராஜா, எதிர்வரும் யூலை 4ஆம் திகதி மேற்படி கலந்துரையாடல்கள் பற்றியும், சமரச தீர்வு எட்டப்படமுடியுமாயின் அது பற்றியும் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டார்.

இது சமரசமாக தீர்க்கப்படாவிட்டால் தீபாவளி பண்டிகை நெருங்கும் போது தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வீதிகளுக்கு இறங்கி போராடுவர். இது ஆரோக்கியமாக இராது என்றார்.

இவ்வழக்கு யூலை 5ஆம் திகதி நீதிமன்றத்தில் அழைக்கப்படுமெனவும். சமரசத் தீர்வு இருப்பின் அன்று அது பற்றி மன்றுக்குபிரதிவாதிகள் அறிக்கை செய்ய வேண்டும் என்றும் சமரச தீர்வு இல்லையெனில் பிரதிவாதிகள் அவர்களது ஆட்சேபனையை அன்று பதிவு செய்ய வேண்டுமென்றும் ஆட்சேபனையை பதிவு செய்ய மேலும் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும்நீதியரசர் குறிப்பிட்டார்.

தகவல்: சட்டத்தரணி இளையதம்பி தம்பையா
071-4302909