தோழர் கவிஞர் சுபத்திரன்

(தோழர் ஜேம்ஸ்)
 
(சம உரிமை இயக்கம் நடாத்தும் வருடாந்த ஒன்று கூடல் வழமை போல் இவ்வருடமும் கனடாவில் டிசம்பர் 22 மாலை 6 மணிக்கு ரொரன்ரோவில் நடைபெறுகின்றது. இந் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிஞர் சுபத்திரனின் கவிதைகளில் சிலவற்றை தேர்தெடுத்து அவற்றின் சில பகுதிகளை இணைத்து இசையமைத்து பாடலாக பாடுகின்றனர். இந்த நிகழ்விற்கு கவிஞர் சுபத்திரன் பற்றிய என் முகவுரை. இதனைத் தயாரிப்பதற்கு எனக்கு தகவல்கள் தந்துதவிய தோழர் மணியம் அவர்களுக்கு எனது நன்றிகள்)

1960 களின் பிற்கூற்றில் எமது தாயகத்தில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் எழுச்சிக்கான உணர்வுக் கவிதைகளை படைத்து இந்த போராட்டத்தில் தானும் ஒரு பங்காளியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் தங்கவடிவேல் என்ற சுபத்திரன். பிறப்பிடமாக 24, அங்கிள் வீதி, மட்டக்களப்பு நகரை கொண்டவர். கற்பித்தலை தொழிலாக கொண்டவர். இந்த நூறு ஆண்டில் வலிமை பெற்று பல ஒடுக்கு முறைகளைத் தகர்த்தெறிந்த இந்த தீண்டாமைக்கு எதிரான போராட்ட வரலாற்றை கவிஞர் சுபத்திரனத் தவிர்த்து எழுதவே முடியாது.

இலங்கைத் தமிழர்களின் கடந்த 100 வருட வரலாற்றில் முன்னோக்கி நகர்ந்த போராட்ட வெற்றிகளைத் தந்த இந்த வரலாற்றின் கவிநாயகன் சுபத்திரன் என்றால் மிகையாகாது. ஆயுதப் போராட்டங்கள் பெற்று தராத பல முன்னேற்றங்களை இந்தப் பேனாப் போராளியின் கவித்துவம் மக்களை அணி திரள வைத்து….. நிச்சாமம் என்ற கிராமத்தில் தட்டிவிடப்பட்ட பொறி…… இன்றுவரை இவரின் கவிதைகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
அது:
 
“சங்கானைக்கென் வணக்கம்
சரித்திரத்தில் உன் நாமம்
மங்காது யாழகத்து
மண்ணில் பல காலம்
 
எச்சாமம் வந்து
எதிரி நுழைந்தாலும்
நிச்சாமக் கண்கள்
நெருப்பெறிந்து நீறாக்கும்
 
குச்சுக் குடிசைக்குள்
கொலுவிருக்கும் வீரத்தை
மெச்சுகிறேன் சங்கானை
சங்கையிலே நீயானை”
 
அந்த காலத்தில் பிரபலமான திரைப்படப் பாடலான “நாதஸ்வர ஓசையிலே” மெட்டு அமைத்து தீண்டாமை இயக்கம் நடாத்திய போராட்டங்களில் வீதிகளைத் தாண்டி கிடுகு வேலிக்குள் மறைந்திருந்த ஒடுக்கு முறைக்கு உள்ளான பாமர மக்கள் வீதிக்கு இறங்கி வீரம் மிக்க போராட்டதை நடாத்தி முடிக்கும் அளவிற்கு மக்களின் ஆதரவை பெற்றிருந்தது.
 
கவிஞர் சுபத்திரனின் கவிதைகள் தொழிலாளர்கள், விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் அவலங்களையும், அவர்களின் போராட்டங்களையும் மக்கள் மன்றங்களில் முன்னுக்கு கொண்டு வருதற்கான எழுத்துக்களாகவே அமைந்தன. கம்யூனிசம் என்ற அமைப்பு சார்ந்த செயற்பாடுகள் மக்களை அணிதிரட்டி விட்டுக்கொடுப்பில்லாத போராட்டதை நடாத்தி முடிக்க உதவின. இவரின் கவியரங்குகள் இந்த கவிதைப் பிரவாக்கத்திற்குள்ளேயே மூழ்கிக் கிடந்ததை சம காலத்தில் அவருடன் போராட்ட வாழ்வில் ஈடுபட்ட கம்யூனிட்ஸ் பலரும் அறிவர். மக்களும் அறிவர்.
 
கவிதைகளில் காணப்படும் கருத்தாளம் அவர் கவிதையை மேடைகளில் வாசிக்கும் போது கையாளும் மொழி நடையிலும், வீச்சிலும் மக்களை அணி திரட்டுவதில் கணிசமான பங்குகளை ஆற்றியது என்பது அவருடன் போராட்டத்தில் கலந்து கொண்ட சம காலத்து போராளிகளின் வாய் மொழிச் சத்தியங்கள் ஆகும். அவர் போட்டிருக்கும் கண்ணாடியை மீறி தெறித்து வரும் பார்வைக் கூர்மை அனல் பறப்பது போன்ற உறுதியை கொடுத்துக் கொண்டே இருக்கும். கறுத்த முன் வளைந்த உருவமும் சுருள் தலைமுடியும் ஒரு மக்களுக்கான போராட்ட வீரனை நம்பிக்கையுடன் சகாக்கள் பின் தொடர்ந்து நடப்பதற்கான உத்வேகத்தைக் கொடுத்தன என்று இவரது சக கம்யூனிஸ்ட் தோழர்கள் நினைவு கூருகின்றனர்.
மக்கள் போராட்டங்களுக்கு கலை இலக்கியங்கள் எவ்வளவு காத்திரமான பங்களிப்பை செய்ய முடியும் என்பதை அவர் கவியரங்குகளில் தனது கவிதையை வாசிப்பதற்கு முன்னர் பல்லவி போல் பாடும் நான்கு வரிக் கவிதை தெளிவாக வெளிப்படுத்தும். அந்தப் பல்லவி:
 
“ஒரு கோடிக் கவிதைகளால் உலகம் போற்றும்
பெருங் கவிஞன் என நாமம் பெற்றால் அஃது
ஒரு சொட்டு இரத்தத்தை உரிமைப் போரில்
சிந்துபவன் புகழ் முன்னே தூசு தூசு!”
 
வெளிவந்த நூல்கள்:
 
“இரத்தக் கடன்” (கையடக்கப் பிரதி). கவிஞர் உயிரோடு இருந்த காலத்தில் வடக்கில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் உக்கிரமாக நடைபெற்ற 60 பிற் கூறுகளில் வெளிவந்தது.
“சுபத்திரன் கவிதைகள்” (கவிஞர் காலமான பின்னர் அவரது நண்பர்கள் தொகுத்து வெளியிட்டது. இரு வௌ;வேறு பதிப்புகள் வந்துள்ளன. இரண்டும் மட்டு நகரிலிருந்து வெளியிடப்பட்டுள்ளன. இவை தவிர அவரது தொகுப்புகளில் இடம் பெறாத சில கவிதைகளும் உள்ளன.
 
“இரத்தக் கடன்” தொகுப்பில் தீண்டாமை, சாதி அமைப்புக்கு எதிரான பல ஆக்ரோசமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள :”சங்கானைக்கென் வணக்கம்” என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றது. 1966 – 70 காலகட்டத்தில் (சீன சார்பு) கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தலைமையேற்று வட பகுதியெங்கும் நடாத்திய ஆலயப் பிரவேச, தேநீர்க்கடைப் பிரவேச மற்றும் பொது இடங்களில் சமத்துவம் நிலைநாட்டும் போராட்டங்களின் போது சங்கானைப் பகுதியில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த நிச்சாமம் கிராமம் அப்போராட்டங்களில் முன்னணியில் நின்றதுடன், பல வீரங்களையும் தியாகங்களையும் நிகழ்த்தியது.
 
மேலும் 1970 கிளிநொச்சியில் இருந்து வெளிவந்த கழனி பத்திரிகையில் இவரின் இரு ஆளுமை மிக்க கவிதைகள் வெளிவந்திருந்தன. கழனியில் வந்த கவிதைகள் சில பிற்காலத்தில் பெங்களுரில் உள்ள காவியா வெளியீட்டில் வெளிவந்தன. ஆனால் இவை பற்றிய அடிக்குறிப்புக்களை காவியா குறிப்பிடவில்லை.
 
கவிஞர் சுபத்திரனின் அரசியல் செயற்பாடு:
அன்றைய காலத்து தமிழ் இளைஞர்கள் போல் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளனாக இருந்தார். ஆனால் கேரளத்திலிருந்து மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்த இடதுசாரி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக இருந்த தோழர் கே.வி.கிருஸ்ணக்குட்டி அவர்களின் இடதுசாரிப் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக பின்னர் தன்னை மாற்றிக் கொண்டார். தனது அகால மரண காலம் வரைக்கும் இப்பாதையிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை.
கவிதையுடன் கூடிய தனது தாய் மொழிப்பற்று தனது பிள்ளைகளுக்கு வள்ளுவன் என்று பெயர் சூட்டும் அளவிற்கு இருந்தது.
 
சுபத்திரனின் வீச்சுக் கவிதைகளின் தாக்கம் இவர் காலத்திற்கு பின்னான காலத்தில் உருவான பல கவிஞர்களிடத்தில் இருந்தது. மட்டுநகரின் இன்னொரு முற்போக்குக் கவிஞரான காலஞ்சென்ற சாருமதி (கா.யோகநாதன்) சுபத்திரனின் வீச்சுக் கவிதைகளின் தாக்கத்தினால் உருவாகி வளர்ந்த பயிர்தான். இன்னொருவரையும் குறிப்பட்டுத்தான் ஆக வேண்டும். அன்று கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்;தவரும், பிற்காலத்தில் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையின் பொறுப்பாளராக இருந்தவருமான கவிஞர் புதுவை இரத்தினதுரை சுபத்திரனின் தாக்கத்தால் உருவான ஒரு கவிஞர்தான்.
 
சிங்கப்பூரில் தனது தகப்பனாருடன் இணைந்து தேர் ஒன்றிற்கான சிற்பங்கள் செய்த தரித்து நின்ற வேளையில் கிருமிநாசினி குடித்து மரணித்த சுபத்திரனுக்கு இரங்கல் கவிதை ஒன்றை புதுவை இரத்தினதுரை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி இருந்தார். இக்கவிதை அந்நாளில் வீரகேசரி பத்திகையில் வெளிவந்திருந்து. அதில்
“நாற்றுகள் நாமிருக்க நட்டவன் போய் விட்டாயே” என சுபத்தினின் ஆளுமையை அஞ்சலியாக சமர்ப்பித்திருந்தார்.
 
கவிஞர் சுபத்திரன் மரணத்தின் பின்பு ஏறத்தாழ நான்கு தசாப்தங்கள் ஓடிவிட்டாலும், அவரது வலுமிக்க மக்கள் கவிதைகளின் ஓசை காற்றில் தனது பேரிகையை இந்த மேடைவரை முழக்கமிட்டுக் கொண்டே இருக்கின்றன.
 
தற்போதைய மட்டக்களப்பு பஸ் நிலையில் பாட்டாளிபுரம் என்று அழைக்கப்பட்டிருந்த அன்றைய காலத்தில் மட்டுநகர் செல்லும் முற்போக்கு இலக்கியவாதிகள், போராளிகளின் சரணாலயமாக சுபத்திரனின் வீடு அமைந்திருந்தது. பாட்டாளிபுரம் என்றிருந்த இடத்திலேயே கம்யூனிஸ்ட்களின் கூட்டங்கள் நிகழ்வுகள் அதிகம் நடைபெறுவது அந்தக் காலத்து வழமை.
 
பாட்டாளிபுரத்தை பஸ் நிலையமாக மாற்றியமைத்த முன்னாள் அமைச்சர் இராஜதுரையின் செயற்பாட்டினால் இன்று சுபத்திரன் எம்மை விட்டு பிரிந்து சென்றது போல் பாட்டாளிபுரமும் எம்மிடம் இருந்த பிரிந்து சென்று விட்டது. ஆனால் கவிஞரின் கவிதைகளும் பாட்டாளிபுரத்து கருத்தரங்குகளும் ஒன்று கூடல்களும் இதனால் விளைந்த விடியல்களும் இன்றும் எம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
(Dec21, 2017)