தோழர் முகுந்தன்- முருகநேசன்

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாக கொண்ட தோழர் முருகநேசன் இலங்கை விவசாய பீடத்தின் அனுராதபுரம் மகா இலுப்பள்ளமையிலும் பின்னர் பேராத…னை பல்கலைக்கழகத்திலும் ஆசிரியராக கடமையாற்றியவர். மகா இலுப்பள்ளமையில் கற்பிக்கும் போதே அவர் எமது இயக்கத்திற்கு வந்தவர். அவருடைய மாணவரும் தோழருமான மானிப்பாய் பாஸ்கரன் ஊடாகவே அவருக்கு இயக்கத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது. பல்கலைக்கழக வகுப்புக்களுக்கப்பால் மாணவர்களுடன் சினேகிதமான இளம் மாணவ ஆசிரியர். ஓய்வு நேரங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு கராத்தே உட்பட உடல் உளப்பயிற்சிகளில் மாணவர்களுடன் சேர்ந்து ஈடுபட்டவர்
ஈழப்போராட்டத்தில் ஈபிஆர்எல்எப் இன் வித்தியாசமான அணுகுமுறை பற்றிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர் மானிப்பாயிலும் வட்டுக்கோட்டையிலுமாக எம்முடன் பல கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபட்டவர். தேசியம் சோசலிசம் ஜனநாயகம் நவீன முறையில் விவசாயம் உள்ளிட்ட வளங்களை கையாள்வது உட்பட பல விடயங்களை அவருடன் கலந்துரையாடியிருப்போம்.

அநீதியற்ற ஏற்றத்தாழ்வற்ற சமூக முறை பற்றிய எமது கருத்து செயற்பாடு அவரை பெரிதும் ஈர்த்ததெனலாம். ஆழ்ந்த சிந்தனையூடன் மனதில் ஆயிரம் கேள்விகளுடன் அவர் ஈபிஆர்எல்எப் இல் இணைந்து கொண்டார். கும்பகோணம் கோமளவல்லிப்பேட்டை சிவபுரம் முகாம்களில் நிகழ்ந்த பயிற்சிகள் சேலம் உட்பட நிகழ்ந்த கருத்தரங்குகள் பயிலரங்கங்களில் அவர் ஆட்களை செம்மைப்படுத்தும் பணியைச் சிறப்புற ஆற்றினார். உயர்ந்த உடல்வாகும் ஆழுமையும் எளிமையும் ஆழ்ந்த சிந்தனையும் எதையூம் ஆய்ந்தறிந்துசெய்யும் போக்கும் நிகரற்ற தோழமையும் அவரிடம் காணப்பட்டன.

மாற்றுடைகள் ஒன்றிரண்டையே அவர் எப்போதும் வைத்திருந்தார். காந்தியடிகளின் எளிமை அவரிடம் இருந்தது. எந்த ஊதாரித்தனமும் அவரிடம் இருக்கவில்லை. சாதாரண தோழர்களின் வாழ்க்கைமுறையை விட பிரத்தியேகமாக எதையும் அவர் கொண்டிருக்கவில்லை. கும்பகோணம் அதன் சுற்றாடல் சேலம் பகுதிகளில் அப்பிரதேசங்களின் இயற்கை சமூகம் உள்ளிட்ட தொழில் துறைகள் பற்றிய அறிவைப்பெறுவதற்கான ஓயாத தேடலில் ஈடுபட்டார்.

சமூக மற்றும்- இயற்கைவிஞ்ஞானியின் குண இயல்புகளுடனேயே வாழ்ந்தார். நான் சிறையில் இருந்த காலத்தில் அவர் இத்தகைய முறையில் செயல்பட்டதை நான் அறிவேன். எளிமையும் கம்பீரமும் நேர்மையும் அமைதியும் தன்னடக்கமும் அவரைப்பார்த்த உடனேயே புரிந்து கொள்ள முடியும். ஒரு சிறந்த படிப்பாளி. நூல்களை அவர் எப்போதும் சேகரித்துக் கொண்டிருந்தார் .படித்துக் கொண்டிருந்தார்.. வேலைசெய்துகொண்டிருந்தார். இயக்கம் தடைசெய்யப்பட்ட பின்னான நெருக்கடி மிகுந்த சூழலிலும் நம்பிக்கையூட்டினார்.

இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தோழர்களுடன் கடல் வழியாக இலங்கைக்கு வந்து இந்திய அமைதிகாப்புபடையின் பிரசன்னம் இருந்தாலும் புலிகள் சுதந்திரமாக உலாவிய காலம் மன்னார் வவுனியா என பணிகளை ஆரம்பித்தார். இயக்கம் தடைசெய்யப்பட்டு ஏறத்தாழ ஒருவருட இடைவெளியின் பின்னர் இயக்கத்தை மீள் கட்டியமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

மயிலிட்டியில் ஒருவீட்டில் இரவு துங்கும் போது சாளரத்தினூடாக நடத்தப்பட்ட தாக்குதலில் காயமுற்று பின்னர் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயம் ஆறிய பின் மீண்டும் பணிகளை ஆரம்பித்தார். வவுனியாவில் இரவில் அவர் காரியாலயத்தின் கொல்லைப்புறத்தில் தூங்கும் போது பாம்பு தீண்டி வவுனியா மருத்துவமனையில் சிலநாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

வவுனியாவில் பல்கலைகழகத்தில் அவரை காதலித்த அவருடைய சகாவான பெண் அவரை சந்திப்பதற்கு காரியாலயத்திற்கு வந்திருந்தார்.
அவர்கள் இணைந்து வாழ முடியாத சூழல் நிலவியது. தற்போதைக்கு தாம் ஒன்றாக வாழமுடியாத நிலையையும் அவகாசத்தையும் கேட்டிருந்தார் அந்த பெண் கலங்கிய கண்களுடன் காரியாலயத்திலருந்து சென்றது இன்னும் ஞாபகம்.
தோழர் முகுந்தன் தனது வேதனையை துயரங்களை காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் அனுபவித்த வலியைப் புரிந்து கொள்ள முடிந்தது.

வவுனியாவில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் காய்கறி வியாபாரிகளிடம் பேசி கழித்துவிடப்படும் ஓரளவூ சேதமடைந்த காய்கறிகளை வாங்கி வந்து தோழர்களுக்கு உணவளித்தார்.
மாகாண சபையில் அவர் ஒரு அங்கத்தவராக முதலமைச்சரின் யாழ் மாவட்ட இணைப்பாளராகவூம் பணியாற்றியவர்.

தோழர்களில் ஒருபகுதியினரின் அராஜகச்செயல்கள் பற்றி அவர் மிகுந்த கவலையூம் விசனமும் கொண்டிருந்தார். இயக்க நடவடிக்கைளை நேர்சீராக்குவதன் ஒரு கட்டமாக அவர் இவர்களிடமிருந்த ஆயுதங்களைப் பறிமுதல்செய்தார்.
அவர் இவற்றை செய்து கொண்டிருக்கும் காலத்தில் ஜனநாயக உணர்வு கொண்ட தோழர்கள் மத்தியில் தோழர் முகுந்தனின் நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
ஆனால் இந்த சீர்திருத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இந்திய அமைதிகாப்பு படையின் வெளியேறுதல் ஆரம்பமாகியது.

இந்திய அமைதிகாப்பு படையின் அதிகாரிகள் பலர் தோழர் முகுந்தனில் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். அமைதிகாப்பு படை வெளியேற்றத்துடன் ஈபிஆர்எல்எப் உம் விலக வேண்டியது தவிர்க்கமுடியாததாகியது. ஒரு புறம் பிரேமதாச அரசு மறுபுறம் புலிகள் இடையில் எந்த இடைவெளியும் இருக்கவில்லை. கடலூடாக தோழர்கள் குடும்பங்களுடன் மிகவும் அவலமாக பாக்குநீரிணையைக் கடந்தனர்.

நூற்றுக்குமேற்பட்ட தோழர்கள் குடும்பங்கள் பாக்கு நீரிணையில் கொல்லப்பட்டார்கள். கர்பபிணிப்பெண்களும் அடக்கம். புலிகள் சூழ்ந்து நின்று சகட்டு மேனிக்குச் சுட்டார்கள் .வங்க கடலில் அவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்கவில்லை . அரசு-கடற்படை உட்பட அனைத்து ஆசீர்வாதங்களும் இருந்தது. தகவல் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன. சூழ்ச்சி சூழ்ந்த போது தோழர் முகுந்தன் தனக்குத் தானே கைத்துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றபோதும் சன்னம் அவரது நெற்றியை உராய்ந்து சென்றது.

புலிகளால் அவர் உயிருடன் கைதுசெய்யப்பட்டு கடத்தப்பட்டடார்.
சில குடும்பங்கள் ஒருவரும் இல்லாமலே அழிந்தன. உற்ற சுற்றமென சில குடும்பங்களில் 10- 12 பேர் உயிரிழந்தார்கள். இதில் உயிரைக்கையில் பிடித்துக் கொண்ட கடலைக்கடந்தவர்களே கடத்தப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். கடத்தப்பட்டவர்கள் அனேகமாக எல்லாருமே கொல்லப்பட்டுவிட்டார்கள்.
இன்னும் சிலரை கடற்படையினர் கொண்டுசென்றார்கள் . கடலில் ஓருமனிதப்பேரவலம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போதுதான் வங்ககடல் பெருமளவிற்கு செங்கடலாகியது. கடல் மனித இரத்தத்தில் குளித்தது.

இதனை எந்த அரச சார்பற்ற நிறுவனமும் மனித உரிமை மீறல் என்று சொல்லவில்லை. இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சில பதிவுகளைச் செய்திருக்கிறது.

பின்னர் புலிகளின் வதைமுகாமிலிருந்து அபூர்வமாக தப்பி தற்போது கனடாவில் வதியும் தோழர் ஒருவர் எழுதிய ‘வன்முறை மனநோயாளிகள்’ பற்றிய குறிப்பில் தோழர் முகுந்தனை எப்படி நடத்தினார்கள் என்பதைபற்றிய செயதியொன்று காணப்படுகிறது.
புதிய கைதிகளின் முன்னால் அவரைப்பேச சொல்லியும் அவர் தயங்கி நின்றபோது அவரது தலையில் கதிரையால் தூக்கி அடித்ததாகவும் அவர் குறிபிட்டிருந்தார்.

சித்திரவதைகளால் பலவீனமாகி ஒரு நாஸி வதைமுகாம் கைதியாக முருகநேசன் நின்றிருந்ததார். மார்க்ஸ் லெனின் ஹோசிமின் சே இவற்றையும் தேசம் ஒடுக்குமுறை சுதந்திரம் இவற்றையும்- இயற்கை விஞ்ஞான அறிவையூம் ஊட்டிய அறிவொளி வீசும் கண்கள் கொண்ட தாகமான அந்தமனிதரின் இறுதி நாட்கள் இப்படித்தான் கழிந்தன. இறுதியும் இறுதியுமாக என்ன நடந்ததென்று தெரியாது.

சொந்த வாழ்க்கையை அமைத்திருந்தால் அவர் எங்கேயோ வெற்றிகரமாக வாழந்திருப்பார். சொந்த வாழ்க்கையை உற்ற சுற்றத்தை தன்வாழ்வைத் துறந்த அமரத்துவமான மனிதர் அவர். எமக்குள் இருந்த நிகரற்ற ஒரு சமூக- இயற்கை விஞ்ஞானியை நாம்தொலைத்திருக்கிறோம்.