தோழர் விசுவானந்ததேவன் நூல் பற்றிய எஸ்.கே. விக்னேஸ்வரனின் குறிப்புகளுக்கு, பா.பாலசூரியனின் எதிர்வினை

ஏப்பிரல் மாதம் 25ந் திகதி தங்களது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ‘எதுவரை’ இதழ் 21 இல், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகிய ‘1952-1986 தோழர் விசுவானந்ததேவன்’ நினைவு நூல் பற்றி எஸ்.கே.விக்கினேஸ்வரன் எழுதிய எதிர்வினைக் குறிப்புகளைப் படித்தேன்………..

தோழர் விசுவானந்தேவனின் நினைவு நூல் வெளிவந்து முதல் 6, 7 மாதங்களிற்குள்ளான காலப்பகுதிகளில், பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் அறிமுக வெளியீட்டு விழாக்களிலும் ஏராளமான கருத்துக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நூலைப்பற்றியும், விசுவானந்ததேவன் என்ற தனிமனிதன் நாங்கள் எல்லோரும் நினைப்பதற்கு அப்பால் எவ்வளவு பிரமாண்டமான மக்கள் போராளியாக வாழ்ந்து மறைந்தார் என்பது குறித்தும், நூலிற்கு அப்பால் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்ட கால அரசியலை ஒட்டியும் பலரால் கருத்துக்கள் சொல்லப்பட்டன………………

ஆனால் நூல் வெளிவந்து 20 மாதங்களுக்கு பின்னர், ஊடகமொன்றில் பிரசுரமான, நூல் பற்றி முதன்முறையாக முற்றுமுழுதாக எதிர்மறையாக எழுதப்பட்ட குறிப்புகள் எஸ்கே.வியினது மாத்திரந்தான் என்று தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல் வெளியீட்டுக் குழுவினர் கருதுகிறார்கள். ……………. அதேபோல இந்த எதிர்மறைக் குறிப்புகளும் எவ்வளவு பேரது கவனத்தை ஈர்த்திருக்குமோ என்பதும் தெரியவில்லை. இதனால் இந்த எதிர்மறைக் குறிப்புகளை முற்றாகப் புறக்கணித்து விடலாமா, அல்லது இதற்கு பதில் எழுத வேண்டுமா, அவ்வாறு பதில் எழுதுவது பிரயோசமானதா போன்ற கருத்துப்பரிமாற்றங்களும் நினைவு நூல் வெளியீட்டுக்குழுவினரிடையே நிகழ்ந்தன. முடிவில், இந்த எதிர்மறைக் குறிப்புகளை பிரசுரிக்க முன்வந்த எதுவரை இணையத்திற்கு பதிலொன்றினை அனுப்பி வைப்பதே சரியானதெனக் கருதி இது எழுதப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————————————————————————————–

விசுவா உருவாக்கிய அமைப்புகளில் அங்கம் வகித்த தலைமைக்குழுவினர் மற்றும் உறுப்பினர்களிலிருந்து ஆதரவாளர்கள் வரை கணக்குப்பார்த்தால் மொத்தமாக ஒரு சில நூறு பேர்கள்தான் ஒரு காலகட்டத்தில் (1985 ஆம் ஆண்டளவில்) இருந்திருப்பார்கள். அவர்களில் மரணித்தவர்கள் போக, மிகுதியாயுள்ள பெரும்பாலானவர்கள் அரசியலை விட்டு முற்றுமுழுதாக ஒதுங்கிவிட, இன்று விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே சமகால சமூக, அரசியல் நிலவரங்களில் அக்கறை செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். எனினும் இவர்களிடையேயும் அரசியல் சார்ந்து தத்துவார்த்த ரீதியாகவும், நடைமுறை ரீதியிலும், தந்திரோபாயங்களிலும் மற்றும் சாதாரண இன்னோரன்ன பிற விடயங்களிலும் கருத்தொற்றுமைகள் கிடையாது. கருத்துவேற்றுமைகளுக்கு இலங்கை சமூகங்கள் சார்ந்த புறநிலமைகள், நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள குறுந்தேசியவாதம் அல்லது பிற்போக்குத் தேசியவாதம், வர்க்க நிலைகள் போன்றன தீர்மானகரமான பங்கை வகிக்கின்றன.

கருத்தொற்றுமைகள் இல்லாவிடினும் பரவாயில்லை, குறைந்தபட்சம் தொடர்பாடல்களையாவது பேணியிருக்கலாம். அவ்வப்போது கூடிக் கதைத்திருக்கலாம். ஆனால் எதுவுமே இல்லை. அதனால் விசுவா தனியொருவராக அணிதிரட்டி உருவாக்கிய தமிழ் மக்களின் தேசிய விடுதலையை முன்னிறுத்திய இரு அமைப்புகளுக்கும் இதுவரைக்கும் தொடர்ச்சி என்பது கிடையாது. (ஆனால் இதேபோன்று 1980 களில் தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காக ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் பெரும்பாலானவை உடைந்தும், அரசியல் பிறழ்வுகளுடனும், கருத்து வேற்றுமைகளுடனும் ஏதோ குறைந்தபட்ச தொடர்ச்சிகளைப் பேணுகின்றன) வெளியிடப்பட்ட விசுவாவின் நினைவு நூலின் கட்டுமானங்களை, உள்ளடக்கங்களை ஆராய முற்படுபவர்கள், இந்தப் பின்னணிகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விசுவாவின் பின் அணிதிரண்டு அரசியல் கற்று, அவர் உருவாக்கிய அமைப்புகளில் சில வருடங்களேனும் வேலை செய்து, இப்போது வேறுபட்ட கருத்துக்களுடன் இன்னமும் சமூகஞ்சார்ந்த குறைந்தபட்ச அக்கறைகளுடன் வாசிப்புத்தளத்தில் இயங்கி, விசுவாவின் நினைவு நூல், அதற்களிக்கப்பட்ட வரவேற்பு, ஆரோக்கியமான விமர்சனங்கள், மற்றும் கல்லெறிகளை பின்தொடருபவர்கள், எஸ்.கே.வியின் எதிர்வினையையும் கண்ணுற்றிருக்கலாமென நம்புகிறேன். அவர்களில் இந்த எதிர்வினையைப் பார்த்து அதிருப்தி அடைபவர்கள் போலவே, இதனை வரவேற்று இரசிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த இருபகுதியினரும் அமைப்பின் கடந்தகால நடவடிக்கைகள் பற்றி எதுவுமே சொல்லாது வெறுமனே மௌனமாக இருக்காமல், முன்னே வாருங்கள்! மீண்டும் மக்கள் முன் தோன்றுங்கள்!! நேருக்கு நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ, கணனி வாயிலாகவோ இதயசுத்தியுடன் ஒருவருக்கொருவருடன் மனந்திறந்த உரையாடலொன்றை ஆரம்பியுங்கள்!!!

000000

1989 ஆண்டு பிற்பகுதிகளிலிருந்து தோழர் விசுவா உருவாக்கிய அமைப்புகளில் அங்கம் வகித்த தோழர்களை புலிகள் கடத்தத்தொடங்கிய காலப்பகுதிகளிலிருந்து, தனக்கும் அந்த அமைப்புகளுக்கும் எந்தவித சம்பந்தமில்லாதவாறு இருந்த எஸ்.கே.வி, இந்த நூல் வெளிவந்ததின் மூலம் இப்போதாவது தலையை வெளியே காட்டியிருப்பது வரவேற்கப்பட வேண்டியதே. இந்த நூல் எஸ்.கே.வி போன்று, மேலும் பலரை விழிப்படைச் செய்யும் பணியினைப் புரியுமாயின், அது மென்மேலும் வரவேற்கத்தக்கதோடு, அது இந்த நூலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியுமாகும்.

1981 ஆம் ஆண்டளவிலிருந்தே எனக்கு எஸ்.கே.வியைத் தெரியும். நன்கு நட்பாகப் பழகக்கூடியவர் என்ற எண்ணத்தை எவருக்கும் ஏற்படுத்தக்கூடிய சிறப்பான தன்மை அவரிடம் இருந்தது. அவருடைய அறிமுகம் என்னைப் போன்றவர்களுக்கு தோழர் விசுவாவின் அரசியல் தொடர்புகளினூடாகவே கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு நான் இலங்கையை விட்டு வெளியேறும் வரை தனிப்படவும், குழுக்களாகவும் சமூக, அரசியல், கலை, இலக்கிய கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபட்டதோடு, அரசியல் வகுப்புகளில் வேறு பலருடன் சேர்ந்தும், எஸ்.கே.வியுடன் விரல்விட்டு எண்ணக்கூடிய கலந்துரையாடல்களிலும் பங்கு பற்றியுமிருக்கிறேன். அன்றிலிருந்தே எஸ்.கே.வி ஓர் அதிதீவிர இடதுசாரி நிலைப்பாடுடையவர் என்ற திட்டவட்டமான கருத்தே என்னிடம் இருந்தது. ……..அப்போதைய அரசியல் கலந்துரையாடல்களின் போது, மார்க்சிய மூலவர்களின் புத்தகங்களில் பாவிக்கப்படும் சொற்பதங்களை அடிக்கடி பிரயோகிக்கும் வரட்டுப்பார்வை கொண்டவர்களாகவே, எஸ்.கே.வியும் இன்னும் ஒரு சிலரும் எனது ஞாபகங்களில் இன்னமும் இருக்கிறார்கள்.

தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT) இரண்டாக உடைந்து, தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT) என்ற புதிய அமைப்பு தோன்றுவதற்கு, தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் தலைமைப்பீடத்தில் முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தவர்களில் எஸ்.கே.வியும் ஒருவர் என்பதே விசுவாவினதும் அவருடன் சேர்ந்து புதிய அமைப்பைத் தோற்றுவித்த ஏனைய தோழர்களினதும் திட்டவட்டமான கருத்தாக இருந்தது. இந்தத் தோழர்களில் விசு உட்பட அன்ரன் மற்றும் றமணன் போன்றவர்கள் இன்று உயிருடனில்லாவிடினும், ஏனையவர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களிடம் இப்போதும் தாராளமாகக் கேட்டுப் பார்க்கலாம். யாழ் குடாநாட்டில் நடந்த அமைப்பின் உட்கட்சிப் போராட்டத்தில் பங்குபற்றி விட்டு 1986 ஆம் ஆண்டு முற்பகுதியில் சென்னைக்குத் திரும்பிய தோழர்கள், எஸ்.கே.வியும் அமைப்பின் வேறு சில முன்னணி நபர்களும் தோழர் விசுவானந்ததேவனுடன் உட்கட்சி விவாதங்களின்போது பொருதிய தருணங்களை, விசுவானந்ததேவன் எள்ளி நகையாடப்பட்ட விதங்களை எனக்கு விலாவாரியாக விபரித்தும் இருந்தனர். தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் அக்காலகட்டத்துக் கருத்துக்களுடன் ஒருபோதுமே சேர்ந்து வேலை செய்ய முடியாதென்பதே, தோழர் விசுவாவினதும் சென்னையில் தங்கியிருந்த ஏனைய தோழர்களினதும் தீர்க்கமான கருத்தாக அப்போது இருந்தது.

அமைப்பு உடைந்த பின்னர் எஸ்.கே.வியை நான் 1986 ஆம் ஆண்டு சென்னையில் இறுதியாகச் சந்தித்தேன். புதிய அமைப்பான தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியின் கருத்துக்களை ஆதரிப்பவர்களை மீண்டும் தமது பக்கம் வென்றெடுக்கும் முயற்சியில் அப்போது எஸ்.கே.வி ஈடுபட்டிருந்தார் என்று நினைக்கிறேன். என்னுடனான அந்த இறுதிச் சந்திப்பும் அந்த மாதிரியான நோக்கங்கொண்டதே. முற்பகல் நேரத்தில், மாம்பலம் ரயில் நிலையத்தில் எஸ்.கே.வியையும் இன்னொருவரையும் சந்தித்து பனகல் பார்க்வரை நடந்துவந்து, அங்கிருந்தே உரையாடினோம். அந்த உரையாடல் தத்தமது தரப்பு கருத்துக்களை முன்வைப்பது அல்லது ஒரு பரஸ்பரக் கருத்துப்பரிமாற்றம் என்பதை விட, அது ஒரு சிநேகபூர்வமான, அதேநேரத்தில் சிலவேளைகளில் ஒரு சூடான விவாதமாகவும் இருந்ததென்றே எனது நினைவில் உள்ளது.

அன்று நடந்த உரையாடலில் கணிசமான பகுதியை மோகனைத் (தோழர் விசுவானந்ததேவனைத்) தனிப்பட்ட முறையில் குறை கூறுவதிலையே எஸ்.கே.வி எடுத்துக்கொண்டார். மோகன் என்ற தனிநபரே (தோழர் விசுவாவே) அமைப்பு உடைந்ததிற்கான முழுக்காரணம் என்பதே எஸ்.கே.வியின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அவர் சொல்வதையெல்லாம் முழுமையாக கிரகிக்கும் நிலையில் நான் இருக்கவில்லை. ஏனெனில் அமைப்பு உடைவதற்கு முன்னரே, நான் விசுவா தரப்பினர் முன்வைத்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டவன் மாத்திரமின்றி, அமைப்பினுள் உருப்பெற்றிருந்த அதிதீவிர இடதுசாரிக்கருத்துகள் தொடர்பான தெளிவான பார்வையும் எனக்கு இருந்தது. அரசியலுக்கு அப்பால், விசுவா பற்றி அமைப்பு உறுப்பினர்களிடையே அமைப்பின் உடைவுக்காலகட்டங்களில் பரப்பப்பட்ட சில விடயங்களில், குறிப்பாக ஏகாதிபத்திய உளவு ஸ்தாபனத்துடன் தொடர்புபட்ட ஓர் அவதூறு பற்றி நான் கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு எஸ்.கே.வி தெரிவித்த சில கருத்துக்கள் இப்போதும் எனது நினைவில் உள்ளன. ஆனால் அவற்றினை வெளியே தெரிவிப்பதற்கு இது பொருத்தமான தருணமில்லை.

௦௦௦௦

தோழர் விசுவானந்ததேவனின் நினைவு நூலிற்கு தன்னிடமும், தன்கருத்து சார்ந்தவர்களிடமும் கட்டுரைகள் கேட்டு அணுகப்படவில்லை என்பதின் வெளிப்பாடே எஸ்.கே.வியின் இந்தக் குறிப்புகளுக்கான அடிப்படைக்காரணம் என்பதை வாசிப்பவர்களுக்கு இலகுவில் புரியுமென நான் நம்புகிறேன். எப்படியோ இந்த எதிர்வினைக் குறிப்புகள் மூலம் எஸ்.கே.வி அரசியல் ரீதியாகத் தன்னை யாரென்று தெளிவாக இனங்காட்டியதோடு நின்றுவிடாது, தனது நோக்கத்தினையும் தெளிவு படுத்தியுள்ளார். அத்தோடு ‘ஆய்வகம்’ வெளியீடாக எம்மால் வெளியிடப்பட்ட தோழர் விசுவானந்ததேவனின் நினைவு நூலிற்கு கட்டுரை கேட்பதற்கு எஸ்.கே.வி. பொருத்தமற்றவர் என்பதையும் சந்தேகத்திடமின்றி நிறுவியிருக்கிறாரென நான் கருதுகிறேன்.

எனினும் தோழர் விசுவானந்ததேவனுடன் நெருக்கமாக ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இணைந்து, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி, தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளில் அரசியல் வேலைகளை முன்னெடுத்தவர்களென்ற வகையில், தோழர் விசுவானந்ததேவன் தொடர்பாகக் கருத்துக்கள் சொல்வதற்கும், அவர் தொடர்பான நினைவுக் கட்டுரைகளை மற்றும் நினைவு நூல்களை வெளியிடுவதற்கும் எஸ்.கே.வி. உட்பட ஏனைய தோழர்களும் சகல உரிமைகளையும் கொண்டுள்ளனர் என்பதையும் எவரும் மறுப்பதற்கில்லை. அதனை அவர்கள் சுயமாக சொந்த வெளியீடொன்றின் மூலம் நிறைவேற்றலாம். …………………………..

தோழர் விசுவானந்ததேவன் காணாமற்போய், அவர் உருவாக்கிய அரசியல் அடித்தளமும் அஸ்தமனமாகி, கால் நூற்றாண்டுக்கு மேலாக அதைப்பற்றி எதுவுமே மூச்சுவிடாமல் இருந்துவிட்டு, எஸ்.கே.வி இப்போது இந்த நினைவு நூல் வெளிவந்தவுடன், தானும் விசுவா உருவாக்கிய அமைப்பின் முன்னணி நபர், மாநாடுகளில் பங்குபற்றியிருக்கிறேன், மார்க்சிய – லெனினிசக்கட்சி மற்றும் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியின் மத்திய குழுவில் இருந்தேன், ஆகவே தன்னிடமும் கட்டுரை பெற்றிருக்க வேண்டுமென்று என்று கூறுவதிலும் எதுவித அர்த்தமுமில்லை.

தோழர் விசுவானந்ததேவன் தொடர்பாக நினைவு நூல் வெளியிடுவதற்கு நாங்கள்தான் (தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல் வெளியீட்டுக்குழு) முதற்தடைவையாக முயற்சி எடுத்தவர்கள் என்பது கிடையாது என்ற விடயம் பலருக்குத் தெரியாது. இந்த நினைவு நூலிற்கு கட்டுரை வழங்கியவர்களில் ஒருவராகிய தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களை நான் கட்டுரை கேட்டு அணுகியபோது, பல வருடங்களுக்கு முன்னர் வேறு சிலரும் (அவரை அணுகியவர்களின் பெயர்கள், அவரது நினைவில் இல்லாமற் போய்விட்டது) அவரைக் கட்டுரை கேட்டு அணுகியதாகவும், கட்டுரையொன்றினை எழுதிக்கொடுத்ததாகவும் நினைவு கூர்ந்தார். அவ்வாறு எஸ்.வி.ஆர். அவர்களை அணுகியவர்கள் யார், அவர்களின் முயற்சிக்கு என்ன நிகழ்ந்தது போன்ற விபரங்கள் இதுவரையில் எம்மில் எவருக்குமே தெரியாது. (தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பின் இப்போதும் முன்னுக்கு வந்து சொல்லலாம்)

அதேபோல 01.10.2016 இல் (இந்த நூல் வெளிவந்து சில வாரங்களில்) தமிழகத்திலிருக்கும் தோழர் அ.கௌரிகாந்தன் அவர்கள் ‘நான் ஒரு கட்டுரை கேட்டுக்கொண்டதன் பேரில் அனுப்பிவைத்தேன். அது பற்றி எந்தத்தகவலும் இல்லை’ என்றொரு குறிப்பினை எனக்கு எழுதி அனுப்பியிருந்தார். எனக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை. ஏனெனில் தோழர் விசுவாவின் 30 வருட நினைவாக நூல் வெளியிடும் எமது முயற்சிக்கு சமாந்தரமாக, இன்னொரு முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பது சாடை மாடையாக எனக்குத் தெரிந்து இருந்ததே. அந்த முயற்சியில் நிட்சயமாக எஸ்.கே.வி. உட்பட வேறு சிலரும் பின்னணயில் இருக்கின்றனர் என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியும். பின்னர் அந்த முயற்சி ஏன் கைவிடப்பட்டது என்பதுபற்றியும் எனக்கு இதுவரையில் எதுவும் தெரியாது

(கௌரிகாந்தன் என்னுடன் தொடர்பு கொண்டவுடன், அவருக்கு தோழர் விசுவாவின் நினைவு நூலின் பிரதியொன்று கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தேன். அப்பிரதி அவரின் கையிற்குப்போய் சேர்ந்தவுடன், நினைவு நூல் பற்றிய தனது மதிப்பீட்டையும், விசுவா பற்றி ஏற்கனவே அவர் எழுதிய கட்டுரையினையும் எனக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இவ்விரு கட்டுரைகளையும் அவர் தனது முகநூலிலும் ‘விடியல்’ என்ற தனது சொந்த இணையப்பக்கத்திலும் வெளியிட்டார்)

௦௦௦௦

தோழர் விசுவானந்ததேவனின் நினைவு நூலை வெளியிட்டவர்கள் பாராட்டுக்குரியவர்களென மூன்றாவது பந்தியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் முழு எதிர்வினையையும் படிக்கும்போது நூல் வெளியிட்டார்களின் மீது பலத்த தாக்குதல் நடத்துவதே இந்த எதிர்வினையின், அதாவது எஸ்.கே.வியின், பிரதான இலக்கு என்பது தெளிவாகத் தெரியும். அதேபந்தியில், அடுத்தடுத்த வசனங்களில் இந்த நினைவு நூல் எஸ்.கே.விக்கு ‘அதிர்ச்சி’ தரும் வகையில் இருந்ததாகவும், விசுவானந்ததேவனின் கருத்துக்களை ‘எள்ளல்’ செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளே, மீதியாயுள்ள குறிப்புகளில் எஸ்.கே.வி என்ன சொல்லப் போகின்றார் என்பதைக் கட்டியம் கூறி நின்றன. ஆனால் இந்த நூல் ஏன் ‘அதிர்ச்சி’ அளித்தது, விசுவாவின் கருத்துக்கள் எங்கெங்கே ‘எள்ளல்’ செய்யப்பட்டன என்பது பற்றி சுருக்கமாகவோ அல்லது விரிவாகவோ இந்த எதிர்வினையில் எங்கேயும் சொல்லப்படவில்லை.

இந்நூலின் அறிமுக வெளியீட்டு விழாக்கள் கிளிநொச்சி, ரொரண்டோ, யாழ்ப்பாணம், இலண்டன் ஆகிய இடங்களில் நடந்துள்ளன. அதைவிட பாரிசில் வாசிப்பு மனநிலை விவாதத்தின் 26வது நிகழ்விலும் இந்நூல் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ரொரண்டோ மற்றும் இலண்டன் நிகழ்வுகளில் நான் நேரடியாகக் கலந்து கொண்டுமுள்ளேன். ஆனால் எஸ்.கே.வி எழுதியிருப்பதுபோல் இந்நூல் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்திருந்தது என்றோ அல்லது விசுவானந்ததேவனின் கருத்துக்கள் எள்ளல் செய்யப்பட்டுள்ளன என்றோ, நான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் எவருமே குறிப்பிடவில்லை. அதேபோலவே நான் கலந்துகொள்ளாத நிகழ்வுகளிலும் அவ்வாறு எவரும் கூறியதாக நான் கேள்விப்பட்டதுமில்லை.

மேலும் தோழர் விசுவானந்ததேவனை விட்டுப்பிரிந்தாலும், அவர் மீது தோழமை, பற்று, பாசம் எல்லாம் கொண்டே இருந்தேன் என்ற பாணியில் எழுதியிருக்கும் ரொரண்டோவை வதிவிடமாக் கொண்டிருக்கும் எஸ்.கே.வி, 19.11.2016 இல் ரொரண்டோவில் நடந்த விசுவானந்ததேவன் நினைவு நூல் அறிமுக வெளியீட்டு நிகழ்விற்கு சமூகமளிக்கவில்லை என்பது இங்கு அவசியமாகக் குறிப்பிட்டே ஆகவேண்டிய விடயம். இந்த நினைவு நூலை முற்றுமுழுதாக பகைமை உணர்வுடன் அணுகியிருக்கும் நபர், நினைவு நூல் அறிமுக வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொள்ளமாட்டார் என்பது எதிர்பார்க்கப்பட வேண்டியதுதான் என்று ஒருவர் கூறலாம். ஆனால் ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால், தோழர் விசுவாவுடன் அரசியல் ரீதியாக இணைந்து வேலை செய்தவர்களில் முன்னணி நபராக தன்னைக் கூறிக்கொள்ளும் எஸ்.கே.வி, அந்த நிகழ்வானது வெறுமனே நினைவு நூலை அறிமுகஞ்செய்து வெளியீட்டு வைப்பதோடு மட்டும் நின்றுவிடாது, தோழர் விசுவானந்ததேவனையும் அவர் ஸ்தாபித்த அமைப்புகளில் பயணித்து உயிர்நீத்த அனைத்துத் தோழர்களையும் 30 ஆண்டுகளின் பின்னர் நினைவுகூரும் வகையிலுமே அமையப்பெற்று இருக்கையில், அந்த நிகழ்வில் எப்படிக் கலந்துகொள்ளாமல் இருக்கமுடியும்?

நினைவு நூல் வெளியீட்டாளர்களுடன் ஒருமித்துப்போக முடியாவிடினும், இந்த நினைவு நூல் வெளியாவதற்கான பின்னணியுடன், அதாவது விசுவாவின் அரசியலுடன் பரீட்சயமுள்ள எவருமே அறிமுக விழாவில் தங்கு தடையின்றி கலந்து கொள்ளலாம். நூல் வெளியீட்டாளர்களையும், நூல் அறிமுக வெளியீட்டு நிகழ்வுகளையும் இரு வெவ்வேறு தளங்களில் வைத்துப் பார்க்க வேண்டும். நூல் வெளியீடுகளை ஒழுங்கு செய்பவர்கள், பொதுவாக வெளியீட்டாளர்களாக இருப்பதில்லை. நூல் வெளியீட்டாளர்களுடன் தனிப்பட்ட கோபதாபங்கள் இருப்பினும், இந்நிகழ்வில் கலந்து கொள்ளாமல் விடுவதற்கு, இந்நிகழ்வானது நூல் வெளியீட்டாளர்களின் தனிப்பட்ட நிகழ்வல்ல. இந்நூலினூடாக ஆவணப்படுத்துப்பட்டு நினைவு கூரப்படும், இவருடன் 4 – 5 வருடங்கள் அரசியல் பயணம் செய்த விசுவா உட்பட சகல தோழர்களுக்குமாகவது சமூகமளித்திருக்கலாமல்லவா?

எஸ்.கே.வியைப் போன்ற ஒரு சிலரைத்தவிர, கனடாவில் வாழும் விசுவா இணைந்திருந்த அரசியல் அமைப்புகளில் சேர்ந்து பணியாற்றிய முன்னணி நபர்களும் ஆதரவாளர்களும் மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோழர்களும் தமிழீழப்போராட்ட இயக்கங்களைச் சேர்ந்த பலதரப்பட்டவர்களும், வேறு இன்னும் பலருமென, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ரொரண்டோ நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். ………….

௦௦௦௦௦

எதிர்வினையின் இரண்டாவது பகுதியில் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியிலிருந்து தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பு உருவானதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் செயற்பாடுகள் மந்தகதியில் இருந்ததினால், அந்த அமைப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, செயல்வேகம் கொண்ட அமைப்பு தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டதாகக் எஸ்.கே.வி எழுதுகிறார். ஆனால் இந்த புதிய அமைப்பு முழுமையாக இரண்டு வருடங்கள் மாத்திரமே செயற்பட்டு, இரண்டாக உடைந்து, பின்னர் சில வருடங்களில் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியும் செயலற்றுப் போனது. தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி மந்தகதியில் செயற்பட்டதாக விமர்சிப்பவர், விசுவாவை ஓரங்கட்டிய பின்னர் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி செயற்படாது போனதற்கான காரணங்களை, தனது எதிர்வினையில் எங்குமே விரிவாக எழுதாமல் எஸ்.கே.வி தப்பித்து நழுவிக் கொள்கிறார். அமைப்பு உடைந்து போனதற்கு எஸ்.கே.வியும் பெரும் பொறுப்பு ஏற்க வேண்டுமென்பதைக் கொஞ்சம் கூடச் சிந்திக்காமல், நினைவு நூலை முற்றுமுழுதாக நிராகரிக்கும் மனோநிலை கொண்டவராகவே இந்த எதிர்வினையில் காணப்படுகிறார்.

ஆனால் எதிர்வினையின் இறுதிப்பகுதியில் விசு உயிருடனிருந்து, தோழர்களும் புலிகளால் பலியெடுக்கப்படாமல் இருந்தால், இரு அமைப்புகளும் சேர்வதற்கான வாய்ப்புகள் இருந்திருக்குமென, சேர முடியாமைக்கு புறக்காரணிகள் மீது பழியைப் போடுகிறார். அதாவது இரு அமைப்புகளும் சேர்வதற்கான வாய்ப்புகளுக்கு இரண்டு நிபந்தனைகளைப் போடுகிறார்: ஒன்று விசு உயிருடன் இருந்திருக்க வேண்டும், மற்றது ஏனைய தோழர்களை புலி கொன்றிருக்கப்படாது. (ஆகா… இரு அமைப்புகளும் மீண்டும் சேர முடியாமைக்கு எப்படி சப்பைக்கட்டு நிபந்தனைளை அடுக்கியிருக்கிறார்!) இந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் மாத்திரமேதான் இணைப்புச் சாத்தியமாகியிருக்குமா அல்லது இரண்டிலொன்று பூர்த்தியானாலே போதுமானதா என்பதுபற்றி தெளிவாகச் சொல்லாவிடினும், இரண்டிலொன்று பூர்த்தியானால் என்ன நடந்திருக்குமென்ற கேள்வியை ஒருவர் எழுப்புவது நியாயமானதே. விசு 1986 ஆம் ஆண்டே காணாமற்போனார். 1989 ஆம் ஆண்டிற்குப் பின்னரே, அமைப்புத் தோழர்களை புலி கொல்லத் தொடங்கியது. (இது வெள்ளைப் பயங்கரவாதமல்ல, புலிப் பயங்கரவாதம்!) இரண்டு அமைப்புகளும் மீண்டும் இணையவேண்டும் என்ற எண்ணங்கள் எஸ்.கே.விக்கு இருக்குமானால், விசு உயிருடன் இல்லாவிடினும், 1986 இற்கும் 1989 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இணைப்பிற்கான முயற்சியை எடுத்திருக்கலாமல்லவா? ஏன் எடுக்கவில்லை?

தோழர் விசுதான் தனியாகச் சென்று இயங்குவதாக முடிவெடுத்தார் என்று எதிர்வினையின் இறுதிப்பகுதியில், கடைசிக்கு முதல் பந்தியில் எழுதியிருக்கும் எஸ்.கே.வி, தோழர் விசு இல்லாதபோது இரு அமைப்புகளும் சுலபமாக இணைந்திருக்கலாம் என்று ஏன் சொல்லாமல் தவிர்த்தார்? 1990 களின் பின்னர் விசுவுடன் பிரிந்து சென்ற தோழர்களில் அநேகர் புலிகளின் கொலைக்கு அஞ்சி, எஸ்.கே.வி போன்று கொழும்பிலேயே தங்கி இருந்தனர். அந்தக்காலங்களில் அமைப்புகளை இணைப்பது பற்றி உரையாடுவதற்கு அவர்களுடன் எஸ்.கே.வி எப்போதாவது தொடர்பு கொண்டது உண்டா? சரி, இப்போது புலியும் இல்லை. ஏன் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் என்ற பொறுப்புணர்வுடன் செயலாற்றி, தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியின் அரசியலை புனர்த்தாரணம் செய்து, உடைந்த அமைப்புகளை ஒட்ட முயற்சிக்கவில்லை?

விசுவாவிற்குப் பின்னரான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பு குறுந்தேசியவாதப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக, அந்த அமைப்பினை வழி நடாத்துவதற்கு 1983 ஆம் ஆண்டிலிருந்தே தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) ஒன்று உருவாக்கப்பட்டு பின்னணியிலிருந்தது என்பதைத் துணைக்கழைக்கிறார். இக்கட்சியை பகிரங்கப்படுத்துவதில்லை என்று மாநாட்டில் முடிவெடுத்துவிட்டு, அப்போது தானும் ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் இருந்தேன் என்பதை பெருமையுடன் பிரகடனம் செய்வதற்காக, முதன்முறையாக இப்போது பகிரங்கப்படுத்துவதென்பது, அவர் சார்ந்திருந்த முன்னணிக்கும் கட்சிக்கும் எஸ்.கே.வி. இழைக்கும் மகாபெரிய தவறு.

——————-இந்த எதிர்வினையையும், எஸ்.கே.வி ஆசிரியராக கடந்தகால ‘சரிநிகர்’ பத்திரிகை மற்றும் பத்தி எழுத்துக்களையும் வைத்து மற்றவர்கள் அதனை முடிவு செய்வார்களென நான் நம்புகிறேன். ஆனால் கட்சியோ அல்லது அதன் வெகுஜன தேசிய விடுதலை முன்னணியோ முற்றாக அழிந்துவிட்ட போதிலும், தன்னையொரு கட்சியினதும் முன்னணியினதும் முக்கிய நபராகக் காட்டுவதற்காக இந்தமாதிரியான பகிரங்கப்படுத்துவதில்லையென கட்சி முடிவெடுத்த இரகசியத்தை துரும்புச்சீட்டாகப் பயன்படுத்த முடியாது. இவ்வாறு வலிந்து இதனைப் பயன்படுத்துவதிலிருந்தே எஸ்.கே.வி எவ்வளவு வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டார் என்பது புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. கட்சியும் அமைப்பும் சிதைந்த பின்னர், அதனது உயர்ந்தபட்ச இரகசியங்களை போட்டுடைப்பவர்கள், ஓர் அமைப்பிலோ அல்லது அரசியல் கட்சியிலோ இருப்பதற்கு எந்தவிதத்தகுதியும் இல்லாதவர்கள்.

அதைவிட, தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே குறுந்தேசியவாதக் கருத்துக்கள் கொண்டவர்களே பெரும்பான்மையினராக இருந்திருந்தால், தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி எப்படி இடதுசாரிய, மார்க்சிய, லெனினிச, மாவோயிச பாதையை அடியொற்றி நடக்கும்? வெகுஜன முன்னணியொன்றினை கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று வழி நடாத்துமாக இருந்தால், வெகுஜன முன்னணியிலிருந்து செயற்படும் அரசியல் ரீதியாக முன்னேறிய நபர்களைக் கொண்டதாகவே அந்தக் கம்யூனிஸ்ட் கட்சி இருந்திருக்க வேண்டும். வெகுஜன முன்னணி செயற்படாமற் போனாலும் முன்னேறிய நபர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியென்ற அந்தக் கரு எப்போதுமே இயங்கிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியா எஸ்.கே.வி எழுதும் தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) நடந்து கொண்டது? விசு என்கின்ற ‘சிங்கிள் எஞ்சின்’ 1986 இல் அழிக்கப்பட்டவுடன், அப்படி ஒரு கரு இருந்ததிற்கான அடையாளமே உடனடியாக இல்லாமற் போய்விட்டது. அப்படி ஒரு கரு இயங்கு நிலையிலில்லாமல் உறை நிலையில் இருந்து, கருத்து நிலையில் கட்டுக்குலையாமல் உறுதியாக இருந்திருந்தால், தோழர் விசுவாவின் 30 வருடங்களின் பின்னர் வெளிவந்த இந்த நூலினை நிட்சயமாக உச்சி மோர்ந்து வரவேற்றிருப்பார்கள். ஏன், அவர்களே இவ்வாறான நூலை வெளியிடும் பணியில் எங்களோடு தோளோடு தோளாக இணைந்திருப்பார்கள் அல்லது நாங்கள் அவ்வாறனவர்களுடன் இணைந்திருப்போம்.

௦௦௦௦௦

இரண்டாவது பகுதியின் ஏழாவது பந்தியில் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி சாதித்த பெருவாரி விடயங்களாக பிரச்சார வேலைகளும் அது வெளியிட்ட பிரசுரங்களுமே வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இலக்கு மற்றும் தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் சில வெளியீடுகளும் எப்படி, யாரால் அச்சிடப்பட்டது என்பதின் தகவல்களைக்கூட பகிரங்கமாக சரியாகச் சொல்லத் தெரியாமல் எஸ்.கே.வி இருக்கிறார். பல தகவல்களை மறந்து போயிருக்கலாம் என்பதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அமைப்பின் மாநாடுகளிலிருந்து பிரச்சார வேலைகள் வரையான செயற்பாடுகளில் ஈடுபட்டு, அமைப்பின் முன்னணி நபராக இருந்த தொனியில் எதிர்வினையாற்றியிருப்பவர் எப்படி இவற்றையெல்லாம் மறக்க முடியும்? ஒருவேளை பல உண்மைகளை தனது எழுத்தில் வெளிவருவதை வேண்டுமென்றே தவிர்த்துள்ளாரோ?

எஸ்.கே.வி. கொழும்பிலிருந்து வெளிவந்த ‘சரிநிகர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளிவர ஆரம்பித்த இப்பத்திரிகை, ஏறத்தாழ 22 வருடங்கள் வெளிவந்தன. மாற்றுக்கருத்துக்களுக்கான குரல்வளைகள் புலிகளால் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த உச்சக்காலகட்டத்தில் வெளிவர ஆரம்பித்த இப்பத்திரிகையை, யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலகட்டத்தில் அங்குள்ள கடைகளில் அதனை விற்பதற்கு புலிகள் அனுமதிக்கவில்லையெனத் தெரியவருகிறது. எனினும் இது புலிகளால் உத்தியோகபூர்வமாக ஒருபோதுமே தடைசெய்யப்படவில்லை என்பதோடு, 2002 ஆம் ஆண்டிற்கு பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வன்னிப்பிரதேசத்தில் தங்கு தடையின்றி விற்கவும் அனுமதிக்கப்பட்டது. அதாவது புலிகளின் ஜனநாயக விரோத, பாசிச நடவடிக்கைகளை அதிகம் கேள்விக்கு உட்படுத்தாத வகையில், இலங்கை அரசை தமிழ் மக்களின் ஒரேயொரு எதிரியாகவும், இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இனப்பிரச்சனையே எனக்கூறி தமிழீழப்பிரிவினையை ஆதரித்தும், புலிகளின் இராணுவ வெற்றிகளைச் சிலாகித்தும், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பான இந்திய மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சித்தும் கட்டுரைகளையும் செய்திகளையும் தாங்கி இப்பத்திரிகை வெளிவந்ததால், புலிகளுக்கு இப்பத்திரிகையின் கருத்துக்கள் ஒருபோதுமே பிரச்சனையாக இருந்ததில்லை.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ‘சரிநிகர்’ பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலேயே தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி, தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளிலிருந்த தோழர்களையும் புலிகள் கடத்தத் தொடங்கியிருந்தனர். (தோழர் ரமணி 1989 ஆம் ஆண்டிலும் அதன்பின்னர் 16 தோழர்கள் 1990 ஆம் ஆண்டிலும் புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். இதைவிட இரு அமைப்பினதும் சில முன்னணித்தோழர்களும், விசுவுடன் இலங்கை மார்க்சிச – லெனினிசக் கட்சியில் இணைந்து செயற்பட்ட பல தோழர்களும், இக்காலகட்டத்திலும் பின்னரும், புலிகளால் கடத்தப்பட்டு வதை முகாம்களில் வைத்து கொடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டும் உள்ளனர்)

தன்னுடன் ஒன்றாக அமைப்பிலிருந்த தோழர்கள் திடீர் திடீரென்று காணாமற் போவது பற்றிய செய்திகளை தன்னிடம் கைவசமிருந்த ‘சரிநிகர்’ என்ற ஊடகம் வாயிலாக எஸ்.கே.வி வெளிக்கொணர்ந்து இருக்கலாம். அமைப்பின் மீதும் தோழர்கள் மீதும் என்றென்றைக்கும் அரசியல் ரீதியான விசுவாசம் மற்றும் அசைக்க முடியாத பிணைப்புமிருந்தால் ஒருவர் இதனைத்தான் செய்திருப்பார். ஆனால் அவ்வாறு வெளிக்கொணர முடியாமைக்கு அச்சம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதேவேளையில் 17.09.1990 இல் வெளியிடப்பட்ட 3வது ‘சரிநிகர்’ பத்திரிகையில் கு.குகமூர்த்தி என்பவர் கொழும்பில் வைத்துக் காணாமற் போனது பற்றிய செய்தி அட்டைப்படமாக முன்பக்கத்து வலதுபக்க மூலையில் போடப்பட்டுள்ளது. இவரை புலிகளல்ல, இலங்கை அரச தரப்பினரே கடத்தியிருப்பார்களென்று திட்டவட்டமாக தெரிந்தபடியால்தான், அச்சமின்றி கொழும்பிலிருந்து வெளியாகும் ‘சரிநிகர்’ அச்செய்தியைப் பிரசுரித்தது என்பது எவராலும் புரிந்து கொள்ளக் கூடியதே. அதன் பின்னர் 0.7.11.1990 இல் வெளியான ‘சரிநிகர்’ 4வது இதழிலும் ‘குகமூர்த்தி எங்கே’ என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி, தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி அமைப்புத் தோழர்களான ரஜீஸ் (றமணன், அறிவு, ஞானம்) 01.09.1990 இலும் தோழர் விவேகானந்தன் (அன்ரன்) 10.09.1990 இலும் புலிகளால் கடத்தப்பட்டனர். இவர்கள் இருவரும் கடத்தப்பட்ட திகதிகள் திட்டவட்டமாக தெரிந்த காரணத்தினால்தான் இவர்கள் இருவரினதும் பெயர்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது. ஏறத்தாழ இவர்களிருவரும் குகமூர்த்தியும் ஒரே காலகட்டத்தில் இரு வேறு தரப்பினரால் கடத்தப்பட்டு இருந்தும், குகமூர்த்தியின் செய்தியை தனது சொந்த ஊடகத்தினூடாக வெளிக்கொணர்ந்து விட்டு, ஒன்றாகக் கூடியிருந்த தோழர்கள் பற்றி அன்று மௌனம் காத்தவர் எஸ்.கே.வி. அப்படிப்பட்டவர் இப்போது எப்படி அமைப்பின் முன்னணி நபரென்ற தோரணையில், உயிர் நீத்த விசுவா மற்றும் மேற்குறிப்பிட்ட இரு தோழர்கள் உட்பட ஏனையவர்களையும் பற்றி தமிழுலகிற்கு முதன்முதலில் பகிரங்கப்படுத்திய நினைவு நூலுக்கு எதிர்வினையாற்ற முன் வரலாம்? அப்போது மாத்திரமல்ல, இந்த எதிர்வினையை ஓராண்டிற்கு முன்பாக எழுதும் வரைக்கும், அதாவது கால் நூற்றாண்டுக்கு மேலாக விசுவா பற்றியோ அமைப்பு பற்றியோ எஸ்.கே.வி வாய் கூடத் திறக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தோழர் விசுவானந்ததேவனிற்கு மாத்திரமல்ல, அமைப்பிலிருந்து உயிர்நீத்த தோழர்கள் அனைவருக்குமாக எஸ்.கே.வி ஆசிரியராக இருந்த பத்திரிகையான சரிநிகரில் எத்தனை நினைவுக்கட்டுரைகள் எழுதியிருக்கலாம்?, இப்போது ………………………எழுந்துவந்து விசுவிற்காகவும் ஏனைய தோழர்களுக்காகவும் பச்சதாபப்பட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

௦௦௦௦

நினைவுக்கட்டுரைகள் எப்படியிருக்க வேண்டுமென மூன்றாம் பகுதியில் எஸ்.கே.வி எழுதியுள்ள ஆலோசனைகள் எங்களுக்கோ ஏனைய கட்டுரையாளருக்கோ அவசியமற்றவை. அந்த ஆலோசனைகளை தான் சொந்தமாக வெளியிடும் நூலில் எஸ்.கே.வி அமுல்படுத்தலாம். இந்தப்பகுதியில் நினைவுக் கட்டுரைகளின் உள்ளடக்கம் பற்றியும் வியாக்கியானம் புரிவதற்காக எஸ்.கே.வி மேலெழுந்தவாரியாக நான்கு நினைவுக்கட்டுரையாளரின் சில பந்திகளை, வரிகளை தேர்ந்தெடுத்து, எதிர்வினையும் ஆற்றியுள்ளார். இந்தக்குறிப்புகள் தொடர்பாக அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியினர் தொடர்பான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத பக்குவமற்ற நிலையில் எஸ்.கே.வி இங்கே தென்படுகிறார். இந்தக் குறிப்புகள் தொடர்பாக உரிய பதில்கள் எழுதுவதற்கு எனக்கு எந்தவித சிரமமுமில்லை. அதேபோலவே ஏனைய கட்டுரையாளர்களிடமிருந்தும் பதில்களை எடுத்து இதில் இணைக்கலாம். ஆனால் அப்படி ஒவ்வொன்றிற்கும் பதில் எழுத வெளிக்கிட்டால், இக்கட்டுரை இன்னும் பல பக்கங்களைத் தின்றுவிடும். அதனால் நான்கு பேரினதும் நினைவுக்கட்டுரைகளை மீண்டும் ஒரு தடவைப் படித்தாலே, அவற்றுள் எஸ்.கே.வியின் இந்த எதிர்வினைகளுக்கான பதில்கள் பொதிந்திருப்பதைக் காணலாம் என்பதைத்தான் பதிலாகக் கூறலாம்.

நல்லையா தயாபரனின் கட்டுரை வரிகளுக்கு நகைக்காமல் இருக்க முடியவில்லையென எஸ்.கே.வி எழுதியுள்ளார். இது உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத எஸ்.கே.வியின் நகைப்பா அல்லது பொய் சொல்வதற்கு முன்னர் தவழும் நகைப்பா என்பது தெரியவில்லை. தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிற ஆயுதக் குழுக்களிலிருந்து வெளியேறி தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைவதற்கு ஆர்வங்காட்டியவர்களை உள்வாங்குவதற்கு, அமைப்பின் தலைமையிலிருந்த பெரும்பான்மை தயக்கம் காட்டியதோடு, அவ்வாறான முன்னெடுப்புகளுக்கு விசுவானந்ததேவனிற்கு முட்டுக்கட்டைகளும் போடப்பட்டன என்பதைக் காலங்கடந்து மறுத்து, எஸ்.கே.வி பொய் உரைக்கிறார் என்பதை என்னால் திட்டவட்டமாகச் சொல்ல முடியும். ‘பிற ஆயுதக்குழுக்களிலிருந்து வெளியேறுபவர்களில் எவரெவர் கரங்களில் இரத்தக்கறைகள் படிந்திருக்கின்றனவோ தெரியாதென (“அமைப்புக்குள்”) சொல்கிறார்கள்’ என விசு எனக்கும் சொல்லியிருக்கிறார். ஆனால் விசு உயிருடன் இல்லாத போது யாரும் எதையும் சொல்லலாமென எஸ்.கே.வி சொல்லலாம். விசு உயிருடனில்லை என்பதற்காக விசு சொன்னவைகளை என்னால் நினைவுபடுத்தாமலும் இருக்க முடியவில்லை. முட்டுக்கட்டைகளுக்கு மேல் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதின் விளைவே அமைப்பு நகர முடியாமல் உடைந்ததென்பதே வரலாறு.

அமைப்பு உட்கட்சிப் போராட்டங்களின் பின்னர் உடைந்து, விசுவா தலைமையில் புதிய அமைப்பு உருவாகையில், தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைமையிலிருந்தவர்களால் 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ‘லெனினிஸ்ட்’ என்ற அரசியல் தத்துவார்த்த ஏட்டைப் படித்தால், தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியின் அன்றைய அரசியலை முழுமையாகப் புரிய முடியும். (இந்த ஏட்டினை http://padippakam.com/document/NLFT/nlft0021.pdf என்ற இணைப்பில் பார்வையிடலாம்) இந்த ஏட்டில் வெளியான ‘சனநாயகவாதிகளுக்கு ஒரு கடிதம்’ (பக்கம் 59-65) என்று விசுவா பிரிவினரைக் குறிவைத்து எழுதப்பட்ட கட்டுரையைப் படித்தால், அமைப்பு உடைவதென்பது அத்தியாவசியமானது, விசுவானந்ததேவன் எடுத்த முடிவு அரசியல் ரீதியாகச் சரியானது என்பதை எல்லோராலும் உணர முடியும்.

1983, 1986 ஆம் ஆண்டுகளில் தோழர் விசுவானந்ததேவனால் உருவாக்கப்பட்ட இரண்டு முன்னணிகளும் முற்றாகச் சிதைந்துபோய், கால் நூற்றாண்டுக்கு மேலாக ஸ்தாபன மற்றும் அரசியல் ரீதியான தொடர்ச்சிகளற்றும், அதில் அங்கம் வகித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியலிருந்தே முற்றாக ஒதுங்கியும்போக, எஞ்சியிருந்தவர்களில் பலர் விசுவானந்ததேவனின் அரசியல் பாதையிலிருந்து 180 பாகை பல்டியும் அடித்ததினால், நினைவுக்கட்டுரைகளில் தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியினர் தொடர்பான கறாரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதென்பது தவிர்க்க முடியாததே. மேலும் 30 வருடங்களுக்குப் பின்னர் ஒருவரைப்பற்றி நினைவுக்கட்டுரை எழுதுவதற்கு, அவரது அமைப்புகளின் முழு ஆவணங்களையும் அமைப்புகளிலிருந்து ஒதுங்கிப்போனவர்களையும் தேடிக்கண்டு பிடிக்க முடியாத கட்டுரையாளர்கள், உசாத்துணையாக முன்னணிகளின் வெளியீடுகளை மாத்திரமன்றி ஏனையவர்களின் கட்டுரைகளிலிருந்தும் மேற்கோள்களை எடுப்பதில் எந்தத் தவறுமில்லை.

இப்பகுதியில் 24 பேர்களின் கட்டுரைகளே இடம்பெற்றுள்ளன, 25 பேர்களினதல்ல என்று நூலின் கட்டுமானத்தில் தேவையில்லாமல் எஸ்.கே.வி மூக்கை நுழைத்துள்ளார். விசுவானந்ததேவனின் 20 வருட நினைவு அஞ்சலிக்குறிப்பு, இந்நூலிற்காகவல்லாது 10 வருடங்களிற்கு முன்னர் எழுதப்பட்டதாயினும் அதுவும் விசுவானந்ததேவன் பற்றிய ஒரு நினைவுக்கட்டுரையே. (கடந்த 30 வருடத்தில் வேறு எவராது நினைவுக்கட்டுரைகள் எழுதியிருந்து, அந்தக்கட்டுரைகளின் உள்ளடக்கமும் நூல் வெளியீட்டுக்குழுவிற்கு ஏற்புடையதாக இருந்திருப்பின், அவைகளையும் உள்ளடக்கியே இந்த நினைவு நூல் வெளிவந்திருக்கும்) அதனை பல தோழர்கள் சார்பில் ஒருவரே எழுதி, சம்பந்தப்பட்ட தோழர்களால் சரி பார்க்கப்பட்டு, அப்போது வெளியிடப்பட்டது. எனவே நூலில் 25 பேர்களின் 25 நினைவுக்கட்டுரைகளே இடம்பெற்றுள்ளன. இதனையும் ஒரு பிழையாகக் ‘கண்டுபிடித்து’ சுட்டிக்காட்டியுள்ளார்.

௦௦௦௦௦

விசுவானந்ததேவன் என்ற மனிதன் இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் முக்கியமானவர்களில் ஒருவர். அதேபோல இலங்கை மார்க்சிய – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்து தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காக போராடியவர்களிலும் மிகவும் முக்கியமானவர். அதற்காக அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளுக்கும் தேசிய விடுதலை முன்னணிகளுக்கும் மாத்திரமே அவர் சொந்தக்காரன் என்பது கிடையாது. அவரது உலகம் பரந்து விரிந்தது, பன்முகத்தன்மை வாய்ந்தது. அதனால்தான் எல்லா வகையான தரப்பிடமிருந்து கட்டுரைகள் கோரப்பட்டு நூலில் இடம்பெற்றுள்ளன.

எஸ்.கே.வியிடமும் எஸ்.கே.வி பிரஸ்தாபிப்பவர்களிடமும் (“தேசிய விடுதலைப் போராட்டத்தில் விசுவுடன் இணைந்து செயற்பட்டவர்கள், கருத்து விவாதங்களில் ஈடுபட்டவர்கள், மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்களாக இருந்து உயிருடன் இருக்கும் தோழர்கள், உடைவின் போது, மொத்தமாக அரசியலை விட்டு ஒதுங்கிய தோழர்கள்”) கட்டுரைகள் பெற்றிருந்தால் மாத்திரமே விசுவின் ‘மறுபக்கம்’ தெரியுமென்றால், அல்லது ஓர் ‘ஆரோக்கியமான ஆவணமாக’ அவரது நினைவு நூல் உருப்பெற்றிருக்கும் என்றால், எஸ்.கே.வியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அந்தப்பணியினை இப்போதும் தாராளமாகச் செய்யலாம். அதாவது ஏற்கனவே ஆரம்பித்து நின்றுபோன விசுவாவிற்கு நினைவு நூல் வெளியிடும் முயற்சியை மீண்டும் தூசு தட்டலாம். உண்மையிலேயே நினைவு நூலொன்றிற்கு எதிர்வினையென்ற பெயரில் எதிர்மறைக் கருத்துக்கள் எழுதுவதற்கு பதிலாக, அமைப்பு பற்றி அக்கு வேறு ஆணி வேறாக ‘அனைத்து’க் கருத்துக்களும் தெரிந்தவர், மத்தியகுழு பிரமுகர், அதன் ‘உண்மைத்தன்மை’யை வெளிப்படுத்தும் வகையில் விசுவானந்ததேவனுக்காக ஒரு நினைவுக்கட்டுரையோ அல்லது தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் முழு வரலாற்றையோ எழுதியிருக்கலாம்?!

௦௦௦௦

இன்று உலகளாவிய ரீதியில் கம்யூனிஸ்ட் இயக்கம் வீழ்ச்சி அடைந்த நிலையிலும், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சரியான முற்போக்கான அரசியல் கருத்தை முன்னிறுத்திய ஸ்தாபன ரீதியான செயற்பாடுகளுக்கு துளியளவும் செல்வாக்கு இல்லாத நிலையிலும், இலங்கையின் உள்நாட்டு யுத்தம் பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்டு, இறந்துபோன ஓர் உயிருக்கு மரியாதை என்பதே கிடையாத நிலையிலும், பொதுவாக எல்லாராலும் மறக்கப்பட்ட, பிரபல்யமற்ற ஓர் அப்பழுக்கற்ற கம்யூனிஸ்ட் போராளியைப்பற்றி நினைவுக்கட்டுரை ……….எழுதி பலரின் கவனங்களை ஈர்க்கலாம், பிரபல்யம் அடையலாமென நினைக்கும் கனவான்களே, அவரைப்பற்றி ஒன்றல்ல, நூறல்ல, ஆயிரம் கட்டுரைகள் எழுதுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். ஆனால் விசுவாவிற்கு விசுவாசமாய், நேர்மையாய், உண்மையை எழுதுங்கள்.

தோழர் விசுவானந்தேவனின் ஆரம்பகால வாழ்க்கையையும், அவரது அரசியலையும், அவரது பன்முகத்தன்மையினையும் நினைவு கூருவதோடு, அவர் உருவாக்கிய அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களால் உள்வாங்கப்பட்டும் வழிநடாத்தபட்டதுமான தோழர்களின் உயிர்த்தியாகங்களையும் ஆவணப்படுத்துவதும் என்ற நோக்கிலேயே, தோழர் விசுவானந்ததேவன் காணாமற்போய் 30 வருடங்களின் பின்னர் இந்நூல் வெளியிடப்பட்டது. மாறாக, எவரையும் புண்படுத்தும் நோக்கில் அல்லது இழிவுபடுத்தும் எண்ணத்தில் இந்நூல் வெளியிடப்படவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நினைவு நூலை வெளியிட்டவர்கள், கட்டுரை கேட்டு தங்களை அணுகப்படவில்லையென எஸ்.கே.வியினதும் மற்றும் விசுவா உருவாக்கிய முன்னணிகளுடன் தொடர்புபட்டவர்களின் மனங்கள் புண்பட்டிருந்தால், அவர்கள் தாங்கள் கால்நூற்றாண்டாகக் கடந்து வந்த பாதைகளையும், தற்போது வந்தடைந்திருக்கும் அரசியல் நிலைப்பாடுகளையுந்தான் நோகவேண்டும். அதாவது தங்களைத்தாங்களே மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

கார்ல் மார்க்ஸின் 200வது பிறந்தநாள் கொண்டாடும் நாளான இன்று (2018 ஆம் ஆண்டு மே 5ந் திகதி) இதனை எழுதி முடிக்கையில், இறுதியாக, ‘மனிதர்களின் உணர்வு நிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை. அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வு நிலையை நிர்ணயிக்கிறது’ என்ற மார்க்சின் கூற்றோடு முடிக்கிறேன்.

தோழர் விசுவானந்தேவன் நினைவு நூல் வெளியீட்டுக்குழு சார்பாக,

பா.பாலசூரியன்

00000

இந்த விவாதம், அரசியல் ரீதியாக ஆரோக்கியமாக நடைபெற வேண்டுமென “எதுவரை” ஆசிரியர் குழு விரும்புவதால், எதிர்வினையின் இடையில் , சில சொற்கள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன. எதிர்வினையாளர்களின் மையக் கருத்துக்கு நாம் இதில் ஊறுவிளைவிக்கவில்லையென நம்புகிறோம்!