நல்லது நடக்கட்டும்

(தங்கவேல் மரகதமுத்து)

வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டோருக்கான நினைவுக்கூட்டத்தை ரெலோவினர் யாழ்ப்பாணத்தில் நடத்தியிருக்கினம். இதில விடுதலைப்புலிகளின் சார்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் துளசி, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் பின்னாள் வடிவமான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் வரதராஜப்பெருமாள், ரெலோ செல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் எனப் பலரும் கலந்து கொண்டிருக்கினம்.

இது நல்ல விசயம்தான்.

வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தமிழர்களுடைய விடுதலைப்போராட்டத்தின் முன்னோடிகள். அந்த முன்னோடிகளை மனதிற் கொண்டு வெவ்வேறு அணிகளாகச் செயற்படுவோர் தங்களுடைய வேறுபாடுகளை எல்லாம் கடந்து ஒன்றாக நின்றது சந்தோசமே.

இதைப்போல கடந்த ஆண்டுகளிலும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்றவை நடத்திய தியாகிகள் நினைவு தினம், வீரமக்கள் நினைவு தினம் போன்றவற்றிலும் கட்சி பேதம், இயக்க வேறுபாடு என்றெல்லாம் பார்க்காமல் எல்லோரும் கூடித் தேரிழுக்க முற்பட்டிருக்கினம். இதெல்லாம் நல்ல சங்கதிகள்தான்.

ஆனால், இந்த நிகழ்வுகளில் இப்பிடி எல்லாத் தரப்புகளும் ஒன்று கூடுவதைப்போல பிறகு அரசியல் கூட்டை வைத்துக் கொள்வதில்லை. அதுதான் கவலை. அரசியல் கூட்டு வைக்கும்போது ஏனோ தெரியாது பொருந்தாத தலைகளோடு சம்மந்தம் வைக்கிறார்கள். அதால நல்ல வேலைகளைகச் செய்யக் கூடியவையும் நல்ல ஆட்களும் கூட வீணாகப் பயனில்லாமல் போகினம். தேவையில்லாமல் கெட்ட பேரைச் சம்பாதிக்கினம். இதில கூடுதலான ஆட்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போட சம்மந்தம் (கூட்டு) வைச்சிருக்கினம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில தமிழரசுக் கட்சிதான் தலையாடு. அது செய்யிற பிழைக்கெல்லாம் இந்த முன்னாள் இயக்கக்காரரும் எல்லோ பழியைப் பொறுப்பேற்க வேண்டியிருக்கு.

அதாவது என்ன சொல்ல வருகிறேன் என்றால், இவை இப்பிடித் தியாகிகளுக்காக ஒன்று கூடுவதைப்போல மக்களுக்காக இவை ஒன்று சேரத் தயங்குவது ஏன்? எண்டு.

அப்பிடி மக்களுக்காக இவை ஒன்று கூடிச் செயற்பட்டால் எவ்வளவோ மாற்றங்களை உண்டாக்க முடியும். என்னதான் சொன்னாலும் இயக்கத்தில இருந்து வந்தவைக்கும் அதுக்கு வெளியால மிதவாத அரசியலுக்குள்ளால வந்தவைக்கும் இடையில பெரிய வேறுபாடிருக்கு. மிதவாத அரசியல்காரர் வரம்பில நிண்டு பாப்பினம். இயக்கக்காரர் வயலுக்க இறங்கி வேலை செய்வினம். அவை கரையில கையைக் கட்டிக் கொண்டு சம்மாட்டியைப்போல நிற்பினம். இவை – இயக்கக்காரர் கடலில இறங்கித் தொழில் செய்வினம். இதுதான் இந்த வேறுபாடு.

இயக்கத்தில இருந்து வந்தவைக்கு கொஞ்சமாவது சனங்களில கரிசனை இருக்கும். ஊழல் செய்யக் கூடாது. தங்களால முடிஞ்சதையெல்லாம் சனங்களுக்காகச் செய்ய வேணும். அதுக்காகப் பாடுபட வேணும் என்ற ஒரு ஆவல் எப்பவும் இருக்கும்.

மிதவாதிகளுக்கு சனங்களை வைச்சு என்ன மாதிரிப் பிழைக்கலாம் எண்ட எண்ணமேயிருக்கும்.

ஒரு சின்ன உதாரணம், கிழக்கு மாகாணத்தில பிள்ளையானும் வடக்கில விக்கினேஸ்வரனும் செய்த வேலைகள் என்ன எண்டு பார்த்தால்….

பிள்ளையான் ஆயிரம் வேலைகளைச் செய்த ஆள். விக்கினேஸ்வரனோ ஆயிரத்தொரு பேச்சுப் பேசிய தலை.

ஆரோ ஒருதர் எழுதிக் காட்டினதைப்போல, ஊருக்குள்ள வெள்ளம் வந்தால் பிள்ளையான் மண்வெட்டியோட போய் நிண்டு வெள்ளத்தை வெட்டி வடியவைப்பாராம். விக்கினேஸ்வரனோ அரசாங்கம் வெள்ளத்தை ஊருக்குள்ள விட்டதும் போதாதெண்டு அதை வெட்டி வடிய விடுகிறதுக்கு எங்களுக்கு அதிகாரத்தையும் தரேல்ல எண்டு சொல்லுவாராம்.

இதாலதான் கிழக்கு மாகாணத்தில பிள்ளையானுக்கு மதிப்பேறினது.

ஆயிரம் குற்றம் சொன்னாலும் பிள்ளையான் செய்ததில பாதியைக் கூட யாழ்ப்பாண மாகாணசபைக்காரர் செய்யேல்ல எண்டது மறுக்க முடியாத உண்மையே.

ஏனெண்டால் பிள்ளையான் ஒரு போராளியாக இருந்தவர். அதனால சனங்களுக்குள்ள இறங்கி வேலை செய்யிறதுக்கு ஒரு நாளும் பின்னுக்கு நிற்கேல்ல. முன்னுக்கே நிண்டார். அப்பிடி நிண்டதாலதான் பிள்ளையானுக்கு அவ்வளவு மதிப்பு.

பிள்ளையானை விடப் படிச்ச பெருமக்களாக இருந்து கொண்டும் ஒரு பனங்கொட்டையையும் முளைக்கப்போடேல்ல யாழ்ப்பாண மாகாணசபைக்காரர்.

ஆனால், கைதடி வெளியால போகேலாத அளவுக்கு மாகாணசபையின்ரை அமளி துமளி தெருவெல்லாம் கேட்கும்.

எத்தனை பிரகடனங்கள், எத்தனை பிரேரணைகள்.. அப்பப்பா…

இதைத்தான் “அறப்படிச்ச பல்லி கூழ்ப்பானைக்குள்ள விழுந்தது” எண்டு சொல்லுவினம்.

இதுக்கு ஒரு மாற்று வேணும் எண்டால் நல்லவையும் வல்லவையும் ஒண்டு சேருகிறதைப் பற்றி யோசிக்க வேணும்.

இப்ப கடைசியாக ரெலோ நடத்திய வெலிக்கடைச் சிறைச்சாலையில் கொல்லப்பட்டோருக்கான நினைவு கூரலின்போது சிறிகாந்தா ஒரு விசயத்தைச் சொன்னார்.

போராளி இயக்கங்கள் எல்லாம் ஒண்டாச் சேருகிறதுக்கான காலம் வந்திருக்கு. அப்படி வருவதையே தான் விரும்புகிறேன் எண்டு.

சிறிகாந்தா என்ன நோக்கத்தில அப்பிடிச் சொன்னாரோ தெரியேல்ல. ஆனால், அப்பிடி ஒரு ஒன்றிணைவு வந்தால் அது கொஞ்சம் பறவாயில்லை.

அதுக்காக எல்லாம் ஒரே நாளில திருந்தி நாட்டில பாலும் தேனும் ஓடும் எண்டு இங்க சொல்லேல்ல.

இருக்கிற நிலைமையில கொஞ்சம் மாற்றம் வரும். பரவாயில்லை எண்ட மாதிரி. அவ்வளவுதான்.

ஏனெண்டால் இப்ப மிஞ்சியிருக்கிற இயக்கத் தலைமைகளும் நல்லாச் சக்குப் பிடிச்சவை எண்டதையும் நாங்கள் மறக்கப் பிடாது.

ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை எண்டு சொல்லுவினம். அதுதான்.

அதுதான் திரும்பவும் சொல்லிறன்,
அது நல்ல விசயமாக இருக்கும் எண்டது நம்பிக்கை.

நல்லது நடந்தால் எல்லோருக்கும் சந்தோசம்தானே.