நவீன சீதை புலம்பல் [கற்பனை கலந்த நிஜம்]

ஹே ராமா! உப்பரிகையில் நின்ற என்னை நீ நோக்க நானும் நோக்கியபோது நம்பினேன் சிவதனுசை உடைத்து என்னை மணம் முடித்து அயோத்தி அழைத்து சென்று வாழவைப்பாய் என. அனால் நடந்தது என்ன? நால்வகை படைகண்டு பாரெல்லாம் புகழ்பரப்பி தமிழ் ஈழம் மலரும் நாள் நெருங்குவதால் தேவை ஆளணி என பெற்றோர் சம்மதம் இன்றியே பலவந்தமாய் பிள்ளைகளை பிடித்து சென்று மாவிலாறில் நீரை தடுத்து மோதலை தொடங்கி நந்திகடலில் ஈழ தமிழரை முள்வேலிக்குள் சிக்கவைத்த பிரபாகரன் போலவே நீயும் என்னை மரவுரி தரித்து கானகம் ஏகச்செய்தாய்.

அவதார புருசனே! பேதை நான் ஆசைபட்டதும் மாயமானை துரத்தினாய். அதனால் தான் ராவணன் என்னை கவர்ந்து சென்றான். அசோகவனத்தில் நான் இருப்பதை அனுமன் கண்டு சொல்ல சேதுவை அமைத்து என்னை மீட்டு சென்று தீக்குளிக்க வைத்தாய். இதுவும் ஈழ தமிழர் பிரச்சனைக்கு தீர்வை தர நோர்வே செய்த ஏற்பாட்டை குழப்பி தன் வெற்றிக்காக கொட்டிக்கொடுத்த கோடிகளுக்காக வடக்கு மக்களை வாக்களிக்காது தடுத்து மகிந்த ராஜபக்சவை வெல்ல வைத்து பல்லாயிரம் தமிழரை முள்ளிவாய்காலில் கந்தக நெருப்பில் வெந்து சாகவைத்த பிரபாகரன் செயல் போன்றதே.
உன் தந்தைக்கும் அவரின் இரண்டாம் தாரத்துக்கும் ஏற்பட்ட முரண்பாட்டுக்காக என்னை ஏன் கஸ்டத்துக்கு உட்படுத்தினாய். உன்னை நம்மி வாழவந்த என்னை உன் இயலாமையால் தானே கானகம் கூட்டி சென்றாய். இராவணன் கவர்ந்த என்னை மீட்டு வந்தும் என் கற்பை சோதிக்க தீயில் போட்டாய். பிரபாகரனை பிரிந்த கருணா கிழக்கு போராளிகளை தன்னுடன் அழைத்து சென்று பின் வாகரையில் வைத்து பிரபாகரன் படை அணி தம்மோடு முன்பு இருந்தவர் என்று கூட பாராமல் சரணடைந்தவரை கூட பிரிந்து சென்றவர் என துப்பாக்கி நெருப்பில் அவர்களை சுட்டு பொசுக்கியது போன்றதல்லவா உன் செயலும்.

நீ நிதானமாய் இருந்திருந்தால் நாங்கள் கானக வாழ்வு முடித்து அயோத்தி மீண்டிருக்கலாம். பொன்மான் புவியில் இல்லை என்ற யதார்த்தம் அது ஐயோ ராமா ஐயோ லக்ஸ்மணா என கத்திய போது தான் உனக்கு புரிந்திருக்கும். அதற்குள் இராவணன் என்னை தூக்கி சென்றுவிட்டான் இது கூட இந்தியா ஆரம்பித்துவைக்க அமெரிக்கா இங்கிலாந்து என தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாதிகள் என தடை செய்த போதும், அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை அரம்பித்த போதும் உலக ஒழுங்கை புரிந்து கொள்ளாத பிரபாகரன் பின்பு யதார்த்தத்தை புரிந்தகொண்ட போது தமிழ் மக்களை முள்வேலிகள் உள்வாங்கி கொண்டது போன்றதே.

தலைவன் என்பவன் தன்னை மட்டுமல்ல தன்னை சார்ந்தவரையும் துன்பத்தின் நிழல் அணுகாமல் பார்க்கவேண்டும். உன் பிரிவால் உன் தந்தை இறந்தார். நீ கொள்ளி கூட போடவில்லை. உன் தாய் துன்பத்தில் உழன்று இறந்தாள் அவள் சிதைக்கு தீமூட்ட நீ இல்லை. உன் கொள்கை கோட்பாடு உன்னை காவிய நாயகனாக்கினாலும் வாலி வதம் தொடங்கி என்னை தீயில் இறக்கியது வரை உன்மீது வசவுகள் உண்டு. பிரபாகரன் கூட வரலாற்று நாயகனாக சிலரால் போற்றப்பட்டலும் தீராப் பழிகள் பல செய்து தனது தந்தை தாய்க்கு மட்டுமல்ல பல்லாயிரம் தமிழர்களின் ஆறாத்துன்பத்துக்கும் காரணமானவர் என திட்டுவேரும் உண்டல்லவா? ராமா! ராமா!.

[“மீண்டும் மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த போகிறது பேரவை” என்ற செய்திக்கான கட்டுரை]

(மாதவன் சஞ்சயன்)