நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியின் தடுமாற்றம்

ஒரு நாள், முன்னாள் ஜனாதிபதியும் 2014ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளாகத் தமது பரம எதிரியாகவும் இருந்தவருமான மஹிந்த ராஜபக்‌ஷவுடன் அவர் கூட்டுச் சேர முயற்சிக்கிறார்.

மறுநாள், அந்த முயற்சிகள் அவ்வாறே இருக்க, ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரத் தயார் எனக் கூறினார். இப்போது, ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இப்போது அவர், குறிப்பிட்ட அரசியல் இலக்கு இல்லாதவரைப் போலவும் நிலைகுலைந்தவரைப் போலவும் தடுமாறுகிறார் என்றே தெரிகிறது. ஒரு வகையில் அவர் விரக்தியுடன் செயற்படுகிறார் என்றும் கூறலாம். இப்போது அவர், தாமே முன்நின்று நிறைவேற்றிய, 19ஆவது அரசமைப்பையும் திட்டுகிறார்.

ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்த ஆரம்ப காலத்தில், மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தில் சிலரையாவது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளின் மூலம் சிறையில் அடைத்து, அவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என அவர் எதிர்ப்பார்த்தார். மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக்க ஹெல உருமய ஆகிய கட்சிகளும் இலஞ்ச ஆணைக்குழு, இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றில், மஹிந்த அணியினருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைச் சமர்ப்பித்து அதற்கு உதவினர்.

ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதனை விரும்பவில்லை. அவர் அதனை வெளியில் காட்டாது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘அவன்ட் காட்’ நிறுவனத்தின் சட்டத்தரணிகளாகச் செயற்பட்ட திலக் மாரப்பனவுக்குச் சட்டம் ஒழுங்கு அமைச்சையும் விஜேதாஸ ராஜபக்‌ஷவுக்கு நீதி அமைச்சையும் கொடுத்தார். எனவே மஹிந்த அணியினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், ஆமை வேகத்திலும் குறைந்த வேகத்திலேயே முன் நகர்ந்தன.

எனவே, மைத்திரியின் நோக்கம் நிறைவேறவில்லை. அத்தோடு கடந்த வருடம், பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், மஹிந்த அணி வெற்றி பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியும் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் படுதோல்வியடைந்தன.

இந்த நிலையில், ராஜபக்‌ஷ குடும்பத்தைச் சிறையிலடைக்கும் நோக்கத்தை மைத்திரி கைவிட்டு, அவர்களுடன் கூட்டுச் சேர முயற்சித்தார். ராஜபக்‌ஷ குடும்பத்தில், ஜனாதிபதி வேட்பாளராவதற்காக இருக்கும் பனிப்போரைப் பாவித்து, தாமே, மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராகலாம் எனக் கணக்குப் போட்டார்.

அந்த நோக்கத்தில், மஹிந்தவைக் கைக்குள் போட்டுக் கொள்வதற்காக, கடந்த நவம்பர் 26ஆம் திகதி, போலி காரணங்களை முன்வைத்து, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்தார். ஆனால், நீதிமன்றம் அவரது நடவடிக்கை, சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளித்தது.

அதேவேளை, தமது ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியை நியமிக்க, பொதுஜன பெரமுனவோ மஹிந்த ராஜபக்‌ஷவோ விரும்பவில்லை; தமக்கு உடல் வலிமை இருக்கும் வரை, ஜனாதிபதியாக இருந்து, பின்னர் தனது மகனுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கத் திட்டமிட்டு இருந்த மஹிந்தவின் அந்தத் திட்டத்தைச் சிதறடித்த மைத்திரிக்கு, மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை மஹிந்த ஒருபோதும் அளிக்கப் போவதில்லை.

அதேவேளை, மஹிந்தவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷவும் களத்தில் குதித்துவிட்டார். அவர், ‘எலிய’, ‘வியத்த மக’ போன்ற பெயர்களில் கருத்தரங்குகளை நடத்தி, அரசியலில் புகுந்து, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைப் பாவித்து, முஸ்லிம் தீவிரவாதத்தை முறியடிக்கத் தாம் ஜனாதிபதியாகப் போட்டியிடுவதாக அறிவித்தார்.

எனவே, மஹிந்த மூலமாக, அவர் உத்தியோகப்பற்றற்ற முறையில் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மைத்திரியின் திட்டம் தோல்வியடைந்தது. மஹிந்த அணியினர், தமக்கு அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கத் தயார் இல்லை என, அவர் உணர்ந்தார்.

எனவேதான், சில வாரங்களுக்கு முன்னர், மீண்டும் ஐ.தே.கவுடன் இணைந்து, எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக, சில சமிக்ஞைகளை அவர் வழங்கினார்.

அண்மையில், அமைச்சரவைக் கூட்டமொன்றின் போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் ஒருவரை, ஐ.தே.க போட்டியில் நிறுத்தினால், தாம் அவரை ஆதரிப்பதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால், அப்போதுகூட அவரது தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டு சேர்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருந்தன. இதை அறிந்த சுதந்திர கட்சிக்காரர்கள், அவரிடம் விளக்கம் கேட்ட போது, தாம், அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்வாறு பேசவில்லை எனக் கூறியிருக்கிறார்.

அதனையடுத்து, சுதந்திர கட்சிக்காரர்கள், இவர் ஐ.தே.க பக்கம் சாயாதிருக்க, சுதந்திர கட்சியின் சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, அவரிடம் கேட்டுக் கொண்டனர். பின்னர் மைத்திரியே, தமது கட்சியின் வேட்பாளர் என, அவர்கள் அறிவித்தனர். மைத்திரி அதனை மறுக்கவில்லை.

அதனையடுத்து, ஜனாதிபதி ஒரு விசித்திரமான அறிவித்தலை, சில நாள்களுக்கு முன்னர் வெளியிட்டார். அவரது சார்பில், சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவே அதனை அறிவித்தார். அதன் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலொன்றை நடத்த, மக்களிடம் ஆணை கோரி, சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த, ஜனாதிபதி திட்டமிட்டு இருந்தார் என்பதாக அந்த அறிவிப்பு இருந்தது.

ஏனெனில், பொதுத் தேர்தலொன்றுக்குப் பின்னர், நாடாளுமன்றம் முதல் முறையாகக் கூடி, நாலரை ஆண்டுகள் செல்லும் வரை (அதாவது அடுத்த பெப்ரவரி மாதம் வரை) நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. எனவே, நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள குழப்ப நிலையைத் தீர்க்கவும் தமது எதிரியாக மாறியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியிலிருந்து வெளியேற்றவுமே அவர் முதலில் பொதுத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டு இருந்தார் என ஊகிக்க முடிகிறது. ஆனால், கடந்த ஒக்டோபர் மாதம், பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், பொதுத் தேர்தலே முதலில் நடைபெற வேண்டும் என்று கூறி வந்த பொதுஜன பெரமுன கூட, ஜனாதிபதியின் புதிய திட்டத்தை ஆதரிக்கவில்லை.

இறுதியாக, கடந்த வாரம் மற்றொரு திட்டத்தை மைத்திரி வெளியிட்டார். ஆனால், அவர் அதனைத் தெளிவாகக் கூறவில்லை. சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற, அக்கட்சியின் மகளிர் அணியின் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, “அடுத்த ஜனாதிபதித் தேர்தல், மும்முனைப் போட்டியாகவன்றி, இரு முனைப் போட்டியாகவே நடைபெறும்” எனக் கூறியிருந்தார். அந்தத் தேர்தலின் போது, கௌரவமானதொரு முடிவைத் தாம் எடுக்கப் போவதாகவும் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், பொதுஜன பெரமுனவும் ஐ.தே.கவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இருமுனைப் போட்டிதான் நடைபெறுமானால், மைத்திரி போட்டியிடப் போவதில்லை என்பதே அர்த்தமாகிறது.

இவ்வாறு, நாளுக்கோர் அறிவித்தலை விடுத்து, தமது நம்பகத் தன்மையை, நாளாந்தம் ஜனாதிபதி இழந்து வருகிறார். அவருக்கென்று, ஒரு பலமான வாக்கு வங்கி இல்லாமையே, இவற்றுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது.

தாமே கொண்டு வந்த 19ஐ தாமே எதிர்க்கும் ஜனாதிபதி

அடிக்கடி, அதிரடி உரைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் அவ்வாறானதொரு குண்டைத் தூக்கிப் போட்டார். அரசமைப்புக்கான 18ஆவது, 19ஆவது ஆகிய இரு திருத்தங்களையும் இரத்துச் செய்ய வேண்டும் என்பதே, இப்போது அவரது கருத்தாகும்.

தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு, 40 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இந்த உரை, அனேகமாக சகல பத்திரிகைகளிலும் முன்பக்கத் தலைப்புச் செய்தியாக, மறுநாள் வெளியிடப்பட்டு இருந்தது.

இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த இரண்டு அரசமைப்புத் திருத்தங்களையும் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் அமைச்சராகவும் பின்னர் ஜனாதிபதியாவும் இருந்த மைத்திரிபால சிறிசேன, பூரணமாக ஆதரித்தார் என்பதேயாகும். ஆனால், 18ஆவது திருத்தம் சர்வாதிகாரமானது என்றும் 19ஆவது திருத்தத்தின் மூலம், நிலையான அரசாங்கமொன்றை உருவாக்க முடியாது என்றும் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 19 ஆவது திருத்தத்தின் பிழையை, ஜனாதிபதி இப்போதாவது உணர்ந்தமையையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் தமது பதவிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தத்தில், எந்தவித பிழையும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
ஆனால், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 18ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து, 19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற, மஹிந்த உள்ளிட்ட அவரது அணியினரின் பூரண ஒத்துழைப்புக் கிடைத்தது. இப்போது, ஏதோ தாமும் தமது அணியினரும் 19ஆவது திருத்தத்தை எதிர்த்தவர்களைப் போல் அவர் பேசுகிறார்.

இதேவேளை, 19ஆவது திருத்தத்தில் எவ்வித பிழையும் இல்லை என்றும் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருவேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டமையே 19ஆவது திருத்தத்தால் குளறுபடிகள் ஏற்படக் காரணமாக உள்ளது என்றும் சுஜீவ சேனாசிங்க போன்ற ஐ.தே.க தலைவர்கள் கூறுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட நிலைமையில் மட்டும், வெற்றிகரமாகச் செயற்படும் அரசமைப்பொன்று, வெற்றிகரமான அரசமைப்பு என்று கூற முடியாது. அது, பொதுவாக எந்த நிலையிலும் நீண்ட காலமாக, வெற்றிகரமாகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.

ஜனாதிபதியும் பிரதமரும் இருவேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையில், 2001ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையிலும் நிலையற்ற நிலைமை உருவாகியிருந்தது. அப்போது, 18ஆவது திருத்தமோ 19ஆவது திருத்தமோ இருக்கவில்லை. 19ஆவது திருத்தம் நாட்டுக்குப் பொருத்தம் இல்லை என்பது, தற்போதைய அரசாங்கத்தின் மூலம் தெளிவாகிறதுதான் அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம், ஏறத்தாழச் சமமாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே பிரிந்து சென்றமையே, அதற்குக் காரணம் ஆகும்.

19ஆவது திருத்தத்தின் மூலம், பிரதமர் தமது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொண்டார். அவரிடம் கேட்காமல், அமைச்சர்களை நியமிக்கவோ, பதவிநீக்கம் செய்யவோ ஜனாதிபதியால் முடியாது. அவருடன் கலந்துரையாடாமல், அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றவும் முடியாது. ஜனாதிபதியை எதிர்த்து, பிரதமர் செயற்பட்டாலும் அவரைப் பதவிநீக்கம் செய்யவும் முடியாது. அவ்வாறான நிலைமையில், ஐந்தாண்டு கால நாடாளுமன்றப் பதவிக் காலத்தில், நாலரை ஆண்டுகள் செல்லும் வரை, நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் முடியாது.

இது, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து, ஜனாதிபதி மைத்திரிபால நீக்கி, மஹிந்த ராஜபக்‌ஷவை அப்பதவிக்கு நியமித்ததை அடுத்து, ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது தெளிவாகியது. ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி பதவி நீக்கம் செய்தமையும் நாடாளுமன்றத்தைக் கலைத்தமையும் சட்ட விரோதமானது என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் நிலவிய, ‘காட்டு தர்பார்’ காரணமாக, 19ஆவது திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் அதிகாரங்கள் இவ்வாறு குறைக்கப்படும் போது, நாட்டில் பெரும்பாலானவர்கள் அதனை ஆதரித்தனர்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையையே இரத்துச் செய்து, தாம் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதி பதவியில் இருப்பேன் எனக் கூறிப் பதவிக்கு வந்த மைத்திரியும் அதனை எதிர்க்கவில்லை; எதிர்த்திருக்கவும் முடியாது.

சிலவேளை, அவர் நேர்மையாகவே அப்போது அவ்வாறு கூறியிருக்கவும் கூடும். அதேவேளை, பிரதமர் ரணிலை அவர் பூரணமாக நம்பினார். தமது அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டு, தம்மைப் புறக்கணித்து ரணில் நடந்து கொள்வார் என, மைத்திரி நினைத்திருக்க மாட்டார்.

எனினும், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், நாட்டுக்குப் பல ஜனநாயக உரிமைகள் கிடைத்தன. பொலிஸ், நீதிமன்றம், அரச சேவை ஆகியன பெருமளவில் சுயமாக இயங்கக் கூடிய நிலைமை உருவாகியது. தகவல் அறியும் உரிமை, மக்களுக்குக் கிடைத்தது. எதிர்கால அரசமைப்புத் திருத்தங்களின் போது, இந்த உரிமைகள் பறிக்கப்படுமேயானால், அதனால் நாடு பெருமளவில் பாதிக்கப்படும்.

18ஆவது திருத்தத்தில் எவ்வித பிழையும் இல்லை என மஹிந்த கூறுகிறார். அதாவது, ஏதோ ஒரு முறையில், எதிர்வரும் தேர்தல்கள் மூலமாக, மஹிந்த அணியினர் பதவிக்கு வந்தால், மீண்டும் சர்வாதிகார ஆட்சி உருவாகும் என்று அவர் கூறுகிறார் போலும்.