நீண்ட காத்திருப்பு: சீரழியும் நாட்டின் கதை

இப்படி எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நாடு, ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பிரச்சினைகளை காட்சிப்படுத்தி வருகின்றது. அவை, இன்னும் இன்னும் நாட்டை மோசமாக முடக்கும் கட்டத்தை நோக்கி நகர்த்தி வருவதற்கான சான்றுகளாக இருக்கின்றன.

எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால், நாட்டின் தொழிற்றுறை, நிர்வாகத்துறையின் முடக்கம் என்பது, தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாடசாலைகளுக்கு வலிந்து விடுமுறை விடும் நிலை ஏற்பட்டு விட்டது. வீட்டில் சமைப்பதற்கு எரிவாயு பிரச்சினை என்று, வெளியில் உணவகங்களை நாடினால், உணவகங்களில் பெரும்பாலனவை அதே எரிவாயு தட்டுப்பாட்டால் மூடப்பட்டு கிடக்கின்றன.

நகரம், கிராமம் என்ற வித்தியாசம் இன்றி, முழு நாடுமே நாட்கணக்கில் எரிபொருளுக்காகவும் சமையல் எரிவாயுவுக்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றது. இலங்கையில் நீதிக்காகத்தான், நீண்ட காத்திருப்பு தொடர்ந்து வந்திருக்கின்றது. இப்போது, அத்தியாவசிய தேவைகளுக்காகவும் நீண்ட காத்திருப்பு என்பது வழக்கமாகிவிட்டது.

ஆனால், இலங்கையில் அநீதியும் முறைகேடுகளும், எப்போதுமே தன்னுடைய கோரத்தண்டவத்தை நிகழ்த்திக் கொள்வதை நிறுத்தியதில்லை. இப்போதும் நிலைமை அப்படித்தான் இருக்கின்றது.

மக்கள் சந்தித்து நிற்கும் நெருக்கடியை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தங்களது கஜானாக்களை நிரப்பும் முயற்சியில், பதுக்கல் வியாபாரிகளும் முதலாளிகளும் அரச ஆதரவு தரகர்களும் ஈடுபடுகிறார்கள். அரசாங்கமோ, மீண்டும் மீண்டும் தன்னுடைய கையாலாகாத்தனத்தைத் காட்டி நிற்கின்றது.

பிரித்தானிய கொலனித்துவத்தில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற போது, நாட்டின் பொருளாதாரம் ஆசிய அளவில் முதன்மையான நாடுகள் பட்டியலில் இருந்தது. ஆனால், பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனை கொண்ட ஆட்சியாளர்கள், ஆட்சிக்கு வந்த 75 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்தை ஒவ்வொரு நாளும் படுமோசமாகப் பலிகொடுத்து வந்திருக்கிறார்கள்.

தங்களின் ஆட்சி அதிகார போதைக்காக, இனவாதத்தையும் மதவாதத்தையும் வளர்ப்பதிலேயே சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரும் குறியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை அடைவதற்காக, எவ்வாறான முறைகேடானா வேலைகளையும் செய்வதற்குத் தயாராக இருந்தார்கள்.

சிறுபான்மைச் சமூகங்களை அடக்கி ஒடுக்கி, அதன் மூலம் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நிலைப்பாட்டை ஒரு தொழில்முறையாகவே சிங்கள ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் கைக்கொண்டார்கள்.

இதன் விளைவு, மீள முடியாத பொருளாதார சிக்கலுக்குள், நாடு இன்றைக்கு வந்திருக்கின்றது. இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீள்வது என்பது, சில ஆண்டுகளுக்குள் நிகழ்த்தும் அளவுக்கு எல்லாம் இல்லை. மாறாக, சரியான திட்டமிடலோடு நாட்டைக் குறித்து சிந்தித்து செயலாற்றினால், இன்னும் இரண்டு மூன்று தசாப்தங்களில் மீளலாம் என்பதுதான் உண்மையான நிலை.

ஆனால், நாடு இவ்வளவு நெருக்கடிக்குள் இருந்தாலும், பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனையை வளர்த்தெடுக்கும் வேலைகளை,  தென் இலங்கையின் ‘சதி பீடங்கள்’ நிறுத்துவதாக இல்லை.

குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, புத்தர் சிலையை வைக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றது. அதுபோல, வடக்கு – கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில், தமிழ் அடையாளங்களைச் சிதைத்து, பௌத்த சிங்கள அடையாளங்களை வலிந்து திணிக்கும் வேலைகளை மும்முரமாக்கிக் கொண்டு இருக்கின்றது.

நாட்டின் நிதிக் கையிருப்பு என்பது, பூச்சியத்தைத் தாண்டி மறைப்பெறுமானத்தில் சென்று கொண்டிருக்கின்றது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கே மாதாந்தம் ட்ரில்லியன் கணக்கில் ரூபாயை அச்சடிக்கும் நிலை வந்திருக்கின்றது. டொலர் கையிருப்பு என்பது, வங்கிகளில் இல்லையென்ற நிலை வந்துவிட்டது.

இறக்குமதியை வலிந்து கட்டுப்படுத்தி, டொலர் வெளியேற்றத்தைத் தடுத்து, ரூபாயின் பெறுமதியைப் போலியாகப் பேணும் வேலைகளில் திறைசேரி ஈடுபடுகின்றது.

இந்தக் கட்டுப்பாடு நீங்கினால், டொலரின் பெறுமதி 450 ரூபாயைத் தொடும் நிலை இன்று இருக்கின்றது. இதுதான் நாட்டின் நிதிக் கையிருப்புப் பற்றிய உண்மை. ஆனால், இவ்வாறான நெருக்கடி நிலை இருந்தாலும், வடக்கு – கிழக்கை நோக்கி மில்லியன்களில் பணத்தைச் செலவு செய்து, பௌத்த சிங்கள பேரினவாத ஆதிக்கத்தை செய்யும் வேலைகளை அரசாங்கமோ, அதன் துணை நிறுவனங்களோ நிறுத்தவில்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றவுடன், வெளிநாடுகள் எல்லாமும் ஓடிவந்து உதவும் என்றும் நாட்டின் பொருளாதார பின்னடைவு ஓரளவுக்கு சரி செய்யப்பட்டு விடும் என்றும் தென் இலங்கையின் தரப்புகள் சில நம்பின. ரணிலை நாட்டின் மீட்பராகவே கொண்டாடின.

ஆனால், ராஜபக்‌ஷர்களின் ஆட்சி அதிகாரம் தொடரும் வரையில், இலங்கைக்கு உதவுவது என்பது நிகழ வாய்ப்பில்லாத ஒன்றாக, மீண்டும் பதிவாகியிருக்கின்றது. மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ராஜபக்‌ஷர்கள் ஆட்சி அதிகாரப் பொறுப்புகளில் இருந்து விலகினாலும், கோட்டாபய ராஜபக்‌ஷ இன்னமும் ஜனாதிபதியாக இருக்கிறார்.

அவர், ரணிலை அழைத்து பிரதமர் பொறுப்பை வழங்கினாலும், அரச நிர்வாகம் என்பது தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு ஜனாதிபதி இயங்கி வருகிறார். ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகள், போதைப் பொருள் வர்த்தகம் என்று கொடி கட்டிப் பறந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்களை எல்லாம் அழைத்து வந்து, அரச நிர்வாகக் கட்டமைப்பில் தாக்கம் செலுத்தும் பதவிகளை, கோட்டா வழங்கி வருகிறார்.

இது, ‘மஹிந்த’ என்ற முகத்துக்குப் பதிலாக, ‘ரணில்’ என்ற முகத்தை மாற்றிவிட்டு, கோட்டா தன்னுடைய வழக்கமான வேலையைச் செய்து வரும் காட்சிகளாகும். இதனால், மேற்கு நாடுகளும் அந்த நாடுகளின் ஆளுகைக்குள் இருக்கும் உதவி வழங்கும் நிறுவனங்களும் இலங்கைக்கு உதவுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டன.

நெருக்கடி நிலையில் இருக்கும் நாட்டை மீட்ட தலைவர் என்ற பெயருடன், கடந்த காலத்தில் தன்னால் அடைய முடியாத ஜனாதிபதி பதவியை பிடிப்பதற்கான சந்தர்ப்பம், தற்போது ஏற்பட்டிருப்பதாக நம்பிக் கொண்டு, பிரதமர் பதவியை ரணில் ஏற்றார். ஆனால், அவர் எதிர்பார்த்த மாதிரியான காட்சிகள் நகரவில்லை.

மாறாக, நாட்டின் அவலத்தை மக்களிடம் திரும்பத் திரும்ப எடுத்துக்கூறும், அவல அறிவிப்பாளராக மாத்திரமே ரணிலால் செயற்பட முடிந்திருக்கின்றது. அவர் பிரதமராக பதவியேற்ற நாளில் இருந்து, இன்று வரையில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை மீட்பதற்கான மாற்றுத் திட்டங்கள், அதன் அடைவுகள் குறித்து சொல்லிக் கொள்ளும் படியாக எதுவுமே நிகழவில்லை. மாறாக, உணவுப் பஞ்சம் பற்றிய அச்சுறுத்தல்களை விடுப்பதையே அவர் ஒரு சாதனை போல செய்து வந்திருக்கிறார்.

கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மாதிரியான நிலையொன்றை நாட்டில் அமல்படுத்துவது குறித்து, அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கி இருக்கின்றது. அதன் ஒரு கட்டமாகவே, அரச ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்யுமாறு கோரியுள்ளமையும், ஆசிரியர்களை பக்கத்து பாடசாலைகளுக்கு சென்று கடமை செய்யுமாறு கேட்டுக் கொண்டமையும் ஆகும்.

இந்த நிலை, எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட நிகழ்வுகளில் முக்கியமானது. போக்குவரத்து வசதிகள் முடங்கும் எந்த நாடும், பொருளாதார முன்னெடுப்புகளில் முன்னேறிச் செல்ல முடியாது. ஏனெனில், அனைத்துத் தொழிற்றுறையும் எரிபொருள் தேவையில் தங்கியிருப்பவை. அது சரி செய்யப்படாதவிடத்து, முடக்கம் என்பது மீள முடியாத பின்னடைவாக மாறும்.

அந்த நிலையை நோக்கி நகர்வதற்கு முதல், சற்றேனும் விளித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இனவாத மதவாத அரசியல் மோகத்தால் சீரழிந்த நாட்டின் வரலாறு என்ற ஒன்று மாத்திரமே, இலங்கையின் அடையாளமாக இருக்கும்.