நூற்றாண்டு தமிழ் சினிமாவில் கிராம சித்தரிப்புகள்

(அஜயன்பால)

70 – பதுகளில் இந்தியா முழுக்க எதிரொலித்த பேர்லல் சினிமா காலக்கட்டத்தில் இந்து வங்காளம் மலையாள மொழிப்படங்களில் கம்யூனிச கருத்துள்ள படங்களே அதிகம் வந்தன. அதே தமிழில் அந்த பேர்லல் இயக்கம் பதினாறுவயதினிலேவுக்குப் பிறகு தோன்றிய போது அது அழகியல் உறவு சிக்கல்கள் மற்றும் எதார்த்த சித்தரிப்புகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை முற்போக்கு கருத்தியலுக்கு அல்லது கதையாடலுக்கு வழங்க தவறியது.

தண்ணீர் தண்ணீர் , கண் சிவந்தால் மண் சிவக்கும், ஏழாவது மனிதன் , க என ஒரு சில படங்களுக்கிளேயே அது நின்று போனது.

கால மாற்றத்தில் அதுவும் நக்சலைட்டாக சித்தரிக்கப்பட்டு இறுதியில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்படுபவனாக முடிந்தது மவுன ராகம் துவங்கி குருதிப்புனல் வரை ஒரு துன்பியல் தருணம்

2000-க்கு பின் சில மாறுதல்கள் உண்டானது குறிப்பாக அது இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் எனும் சித்தாந்தத்தை முழுமையாக கைக்கொண்ட கலைஞனால் இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களால் மக்களின் அரசியல் முன்னெடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றது

குறிப்பாக பேராண்மை படத்தில் நாயகன் ஜெயம் ரவி மூலமாக மனித உழைப்புக்கும் மனிதனுக்குமான விகிதாச்சராத்தையும் முதலாளித்துவம் மனித வளத்தை எப்படி சுரண்டுகிறது என்ற அயோக்கியத்தனத்தையும் நேரடி வசனமாக துணிச்சலாக அமைத்த காட்சிகள் தமிழ்சினிமாவின் சித்தாந்த சாதனை என்றே கூறலாம்

நடுகல் தொட்டு பிம்ப வழிபாட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்கும் நம் மிகை உணர்ச்சி சமூகத்தில் கம்யூனிஸம் போன்ற உயர்ந்த தத்துவங்கள் பேசி மக்களிடையே கைதட்டல் பெறுவது அத்தனை சாதாரண விடயமில்லை .

அவர் தொடுத்த பாதையில் மக்கள் அரசியலை சுசீந்தரன், ரஞ்சித், ராஜூ முருகன், கோபி நயினார் போன்ற இயக்குனர்கள் செயல்படுவது போற்றுதலுக்குரியது.

இதில் ஜோக்கர் மற்றும் அறம் போன்ற திரைப்படங்கள் தமிழ் அரசியல் படங்களில் மிகபெரிய சாதனை என்றே கூறலாம் .

அதே சமயம் தமிழ் சினிமா சில பண்பாட்டு சாதனைகளையும் செய்து வந்திருப்பது மறக்க முடியாதது.

உலகம் முழுக்க வணிக சினிமா பெரும்பாலும் நகர வாழ்க்கை சித்தரிப்புகளையே மையமாக கொண்டு இயக்குகின்றன. கிராம சினிமாக்கள் பெரும்பாலும் கலைபடைப்பாக இருக்கிறதே ஒழிய வணிக சினிமாக்களில் அவை பயன் படுத்தப் பட்டதில்லை.

ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும்தான் தொடர்ந்து கிராமத்து வாழ்க்கைக்கும் கிராமத்து மனிதர்களும் வணிக சினிமாவில் சித்தரிக்கப் பட்டு வருகின்றனர்.

மலையாள வணிக சினிமாக்கள் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கினாலும் அவை பெரிதும் நாயர் மேனன் என உயர் குடும்ப மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டே இயங்கியது .

அவ்வகையில் தமிழ் சினிமா கிராமப் படங்கள் மூலமாக தொடர்ந்து தன்னை பண்பாட்டு சிதைவுக்கு ஆளாக்காமல் மக்களை போராடி காத்து வருவதும் குறிப்பிட்ட சாதனை .

உண்மையில் தமிழ் சினிமா என்றாலே கிராம சினிமாக்கள் தான்.

தமிழ் சினிமாவின் கிராமங்கள்

1954-பராசக்திக்கு முன்பான தமிழ் படங்கள் பெரும்பாலும் புராண இதிகாச படங்களின் ஆதிக்கத்திலேயே இருந்தன . தமிழ் பண்பாட்டிலிருந்து விலகி கர்நாடக சங்கீதம் பிராமண பாஷை என குறிப்பிட்ட சமூகத்தின் ரசனையை மட்டுமெ பெரிதும் பிரதிபலித்தன.

சுதந்திரத்திற்குப் பின் திராவிட இயக்க எழுத்தாளர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வரவு தான் சமூக வாழ்வையும் தமிழர் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக அமைந்தன. வேலைக்காரி ,ஓர் இரவு . பராசக்தி , ரத்தக்கண்ணீர் ஆகிய படங்களின் வெற்றிமூலம் வசனம் தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் பெற துவங்கியது. .

சமூக படங்கள் என்றால் அவை நகர வாழ்க்கையை பிரதிபலித்தாலும் தமிழரின் கிராம மனோபாவ அடிப்படையிலிருந்து அவை பிசகியதில்லை.

தேவர் பிலிம்ஸ் எம்.ஜி.ஆரின் இன் த வரிசை படங்களாகட்டும் பீம்சிங் சிவாஜியின் ப வரிசை படங்களாகட்டும் கிராம மனோபாவ நிலௌடமை சித்தரிப்பு கதைகளே பெரிதும் விளங்கின.

குறிப்பாக பாசமலர், தெய்வ மகன், புதிய பறவை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் அனைத்தும் வேற்று மொழியில் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதும் நாம் கவனிக்கத்தக்கது.

70-துகளில் இந்தி சினிமாக்கள் ஷோலேவுக்கு பிறகு ஹம் கிஸிசே கம் நகி, குர்பானி , ஷான் , டான் என அகண்ட திரையில் நகர பாவத்துக்கும் பகட்டான அரங்க அமைப்புக்கும் மாறியபோது கூட தமிழ் சினிமா கிராமத்தை நோக்கி தீவிரமாகியது.

அன்னக்கிளி. பதினாறு வயதினிலே போன்ற படங்கள் அந்த தடத்தை அழுத்தமாக ஊன்றசெய்தன

பதினாறு வயதினிலே

பதினாறு வயதினிலே-யில்தான் நிலவுடமை மனோபாவம் தாண்டி வாழ்க்கை சித்தரிப்பு நிலவியல் பரப்பு ஆகியவை முதன்மைப்படுத்தப்பட்டன .அதுவரையிலான கிராமப் படங்களில் பண்ணையார் இருப்பார் அவளுக்கு ஓரு மகன் அல்லது மகள் இருப்பார் என துவங்கி நில பிரபுத்துவ குணங்களை இறுதியில் காப்பாற்றுவதாக முடியும்.

விவசாயமில்லாத வேட்டை சமூகத்தின் கிராம வாழ்வு இதில் புலப்பட்டது. கிராமத்தின் எளிய மனிதர்கள் மைய பாத்திரங்களாக உருமாற்றமாகினர்.

ஆனால் அதன் பிறகு அவரே கூட அசலான கிராமத்தை மண்வாசனையிலதான் மீட்க முடிந்தது.

இடையில் வந்த படங்களில டவுன் எனப்படும் சிற்றூர்கள் தான் அதிகம் கி போ ரயில். ,புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை ஆகியவை கிராமத்துப் படமாக இருந்தாலும் அவற்றின் பாத்திரங்கள் வழக்கமான சினிமா பாணி கதைகளை சார்ந்திருந்தன.

பதினாறு வயதினிலே தவிர மற்ற கிராமத்துப் படங்கள் அனைத்துமே நிலப்பரப்பை தொலைத்து வழக்கமான நிலவுடமை வகையறாப் படங்களாக கணக்கிடலாம்.

பதினாறு வயதினிலேவுக்கு பிறகு வந்த மகேந்திரனின் உதிரிப்பூக்கள் பாலு மகேந்திராவின் அழியாதகோலங்கள் ஆகியவை கூட நகரத்து மனிதர்களின் பார்வையிலான கிராமங்களாகவே இருந்தன.

பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் முற்போக்கான கிராமப் படமாக இருந்தபோதும் இயல்பிலேயே அதிலிருந்த நாடகத்தன்மை மற்றும் சமூக அரசியல் ஆகியவை அதன் எதார்த்த தன்மையிலிருந்து விலக்கிவைத்தன.

தமிழ் சினிமாவில் ஏ.வி.எம்மின் சகலகாலாவல்லவன் பல வகையில் தமிழ் சினிமாவில் பல வகையில் பண்பாட்டுப் புரட்சி ?!யை உண்டாக்கிய திரைப்படம் .

டிஸ்கோ நடனம் முதற்கொண்டு பள பள அரங்க நிர்மானம் தொடர்ந்து ஜட்டி பிராவுடன் கிளப் நடனம் ஆகியவை மசாலா அயிட்டமாக மாறின சில்க், அனுராதா ,டிஸ்கோ சாந்தி போன்றவர்கள் தமிழ்ர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாகிப்போயினர் . இதில் சில்க் உண்மையில் தமிழர்களின் அக்காலத்தின் கலாச்சார பிம்பமாக மாறிப்போகும் அளவுக்கு தமிழர்களின் வாழ்க்கையில் அங்கமாகிப் போனார். தமிழர்களின் செக்ஸ் வறட்சியை போக்க வந்த வாராது வந்த மாமணி அவர்.

தொடர்ந்து இக்காலத்தில் ரஜினி கமல் படங்களுக்கு இயக்குனர் எஸ் பி முத்துராமன் இந்த மசாலாவை உற்பத்தி செய்வதில் விற்பன்னராக இருந்தார். அவரும் புவனா ஒரு கேள்விக்குறி , உள்ளிட்ட பல படங்களை இயக்கி நல்ல பெயர் எடுக்க விரும்பினார் ஆனாலும் அந்த காலகட்டத்தில் மசாலாவை உற்பத்தி செய்வதில் அவரை விட விற்பன்னர் யாரும் வராத காரணத்தால் அவருக்கு அதுவே சிறந்த பணியாகவும் வாய்க்கப்பட்டது .

பிற்பாடு ராஜசேகர் அந்த இடத்தை நிரப்பினாலும் சொற்ப காலத்திலேயே அவர் மரணித்தும் போனார்.

இந்த காலாத்தில் மோகன் நகர நாகரீகத்தை ஓரளவுக்கு மைக் பிடித்து மென்னுணர்வுகளை காப்பாற்றி வந்தார்.

இந்த நகர நாகரீகத்துக்கு முடிவு கட்ட ஒருவர் உதயமானார் அவர்தான் ராமராஜன்

ராமராஜன் யுகம்

80-பதுகளில் ரஜினி கமல் படங்கள் பெரும்பாலும் நகரத்துப் படங்களாக இருந்த காரணத்தால் 90 சதவீத கிராமத்து மனோபாவம் கொண்டரசிகர்கள் ஏக்கத்தில் தவித்த காரணத்தினால்தான் டவுசருடன் ராமராஜன் அசலான கிராமத்தவனாக ஒடி வந்தபோது மக்கள் அள்ளிக்கொண்டனர் அதனாலேயே அவர் மக்கள் நாயகன் அந்தஸ்தைபெற்றார்.

நகரத்து சினிமா ரசிகர்களால் ராமராஜனின் திடீர் வெற்றியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்ஸை. பலர் கேலிசெய்தனர்.ஆனால் தமிழ் நாட்டின் அசலான கிராம மனோபாவம் அவரை உச்சத்துக்கு அழைத்துச்சென்றது.

நம்ம ஊரு , நல்ல ஊரு எங்க ஊரு பாட்டுக்காரன், , செண்பகமே செண்பகமே போன்ற படங்களின் தொடர் வெற்றி அவரை திரையுலகில் ரஜினி கமல் ஆகியோருக்கு இணையாக வைத்து பேசப்படும் அளவுக்கு கொண்டு போனது .

இதற்கு முக்கிய காரணாம் தமிழ் சினிமாவின் கிராமத்து மனோபாவம் . அக்காலத்தில் மேற்கத்திய வரவான் டிஸ்கோ இசை கொடிகட்டி பறந்த காலம், சுசுகி யமஹா போன்ற பைக்குகள் மூலம் உலக மயமாக்களின் முதல் காற்று வீசத்துவங்கிய காலம் உலகமே நகர வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் ராமராஜனின் வெற்றியை வெறும் சினிமாவோடு மட்டுமே வைத்து அளவிட முடியாது

தமிழர்களின் நெஞ்சங்களில் ஊறிக்கிடந்த பண்பாட்டு அடையாளங்களின் பிம்பம் ராம ராஜன்

டவுசர் போட்டுக்கொண்டு மாடுமேய்த்த ஞாபகத்திலிருந்து தமிழன் மீளவில்லை தன் அடையாளங்களை தன் நிலப்பரப்புககளை இதன் மூலம் தன் வாழ்க்கையை உறவுகளை மீண்டும் திரையில் பார்க்க விழைந்த போது ராம ராஜன் மூலமாக அது நிகழ மக்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர்.

இந்த கொண்டாட்டத்தின் உச்சமே கரகாட்டக்காரன்.

கரகாட்டக்காரன்

கங்கை அமரனின் கிராமத்துப் படங்கள் வழக்கமான பண்ணையார் மைய நிலபிரபுத்துவ படங்களே. அவை பாரதிராஜாவினுடையது போல அழுத்தமான நிலப்பரப்பு மற்றும் அடையாளங்களைக் கொண்டிரா விட்டாலும் அதே சமயம் அதுவரை காண்பிக்கப்படாத வித்தியாசமான கிராமத்து மனிதர்கள் பார்க்க முடிந்தது அவரது வெற்றிக்கு முக்கிய காரணம். கரகாட்டக்காரனில் சமூகத்தின் இன்னொரு மனிதர்களின் வாழ்க்கை சித்தரிப்பு அழகாக சொல்லப்பட்டதின் காரணமாகவும் தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் தொன்மங்களில் ஊறிக்கிடந்த இசையை மீட்டு புத்துருவாக்கம் செய்த காரணங்களுக்காகவும் அது வணிக படம் என்பதை தாண்டி தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.

படத்தின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தது இளையராஜாவின் இசை . அதில் வரும் துடும்பு உடுக்கை நையாண்டி மேளம் போன்ற தமிழரின் ஆழ் மனங்களில் உறங்கிக்கிடந்த இசை புதைந்துகிடந்த தொன்மங்களை கிளறி பூதகரமாக கிளப்பிவிட்டது . அந்த இசை ஒவ்வொருவர் உடலையும் அசைத்தது தியேட்டரில் இறுதிகாட்சிக்கு பலரும் சாமியாடினர் . அதற்குகாரணம் பலரும் பக்தி என தவறாக நினைத்துக்கொண்டனர் .அனைவரையும் ஆட வைத்தது அவர்களது ஆதி வேரின் ஞாபகங்கள் . இளையராஜாவின் இசை அவர்களது உடலுக்குள் ஊடுருவி மூதாதையர்களை வெளிக்கொணர்ந்தது என்றும் கூறலாம்

நகர சினிமாக்களின் எழுச்சி

கிராமத்துப் படங்கள் கோலேச்சி வந்த இந்த காலக்கட்டத்தில் நகரத்து ரசனையும் புதிய வழிகளுடன் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. புன்னகை மன்னன் ,விக்ரம் போன்ற படங்களின் வழி ஓரளவு மாறுதலை உண்டக்க நினைத்து அவை பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை இளையராஜாவின் இசையமைப்பு மட்டும் கொஞ்சம் புதுசாக இருந்தது அதில் உதவியாளராக பணியாற்றிய ரகுமானின் பங்கு புதிய இசைக்கு காரணம் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இந்த படங்களால் உருவாக்க முடியாத வெற்றியை திரைப்படக்கலூரி மாணவர்களின் ஊமை விழிகள் மணி ரத்னத்தின் மவுன ராகம் நாயகன் ஆகிய படங்கள் சாதித்தன.. ஆனாலும் அப்போது கிராமத்துப் படங்களின் ரசனை உச்சத்தில் இருந்த காரணத்தால் இந்த அலை பெரிதாக எடுபடவில்லை . இத்தனைக்கும் அக்னி நட்சத்திரம் இதயத்தை திருடாதே போன்ற நகரப் படங்கள் புதிய தொழில் நுட்பம் மற்றும் காட்சியமைப்புகளுடன் மக்களை வசிகரித்த போதும் பெரிதாக எடுபடவில்லை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களே கூட செந்தூரப்பூவே போன்ற கிராமத்து பின்னணிப் படங்களைத்தான் பிரம்மாண்டமாக எடுத்தனர். பிற்பாடு 1992- ல் ஷங்கர் வந்துதான் மணிரத்னம் படத்தின் தொடர்ச்சியாக நகரத்து படங்களை எடுக்கத் துவங்கினார்.

நகரத்து படங்களில் இதயம் குறிப்பிடத்தகுந்த படம் ஆனால் இதிலும் நாயகன் பாட்டுபாடுபவன்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பாட்டு பாடுபவன் மேல் அந்த காலத்தில் அப்படி ஓரு மோகம் இருந்தது.

நகரத்துப் படங்களில் மோகன், முரளி ஆகியோர் மைக்கைப் பிடித்துக்கொள்ள கிராமத்து படங்களில் ராமராஜன் கார்த்தி பிரபு ஆகியோர் பாட்டு பாடி கதாநாயகியரையும் ரசிகர்களை மயக்கி கஸ்டடியில் வைத்திருந்தனர்.

ராமராஜன் படங்களுக்குப் பிறகு மீண்டும் கிராம சினிமாக்கள் ஆதிக்கம் தமிழ் சினிமாவை ஆக்ரமிக்க துவங்கியது. அவற்றில் கார்திக்கின் பாண்டி நாட்டுத்தங்கம்.(1989) கிழக்கு வாசல்..(1990)மற்றும் பிரபுவின் சின்னத்தம்பி (1991)ஆகியவை மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தாலும் அவையும் பண்ணையார் மைய கிராமங்களாகவே இருந்தன.

மூன்றிலுமே கதாநாயகன் பாட்டு பாடுபவன் ..

இதனால் இவர்களின் பெருமை அனைத்தும் ஓருவகையில் இளையராஜாவையே சேரும் நடைமுறை வாழ்க்கையில் இது போல யாராவது வீட்டு முன் பாட்டு பாடினால் கல்லைவிட்டெறிவார்கள்.

பண்ணையார் வில்லனும் பாட்டு நாயகனும் என்ற புதிரான காம்பினேஷன் அல்லாமல் வந்த சில படங்களில் ராஜ்கிரண் நடித்து கஸ்துரி ராஜா இயக்கத்தில் வெளியான என்னை பெத்த ராசாவும் கணேஷ்ராஜ் இயக்கத்தில் வெளியான சின்னத்தாயி ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க படங்கள். இரண்டில் என்னை பெத்த ராசா ஓரு கிராமத்து சண்டியரை பற்றின கதை . தமிழின் முதல் சண்டியர் வகையறா படம் என அடையாளப்படுத்தலாம் என்றாலும் பிற்பாடு வந்த அருவா கலாச்சாரம் இல்லாமல் குடும்பக்கதையாகவும் கணவன் மனைவி கதையாகவும் இது அமைந்தது சிறப்பு. மேலும் ஹீரோவுக்கான இலக்கணங்களை முறியடித்த முதல் படம் என்றும் வகைப்படுத்தலாம்.

சின்னத்தாயி

சின்னத்தாயிதான் பதினாறு வயதினிலேவுக்கு பிறகு எதார்த்த கிராம பின்புலன் கொண்ட வாழ்வியல் படம். நெல்லை நிலப்பகுதி அடையாளப்படுத்தப்பட்டு அம்மக்களது வாழ்வியல் மற்றும் பேச்சு மொழி ஆகியவை இதில்தான் தமிழில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. இளையராஜாவின் மிகச்சிறந்த பத்து திரைப்பாடல்களில் ஓன்றாக இடம்பெறக்கூடிய நான் ஏரிக்கரை மேலிருந்து பாடல் இதில் இடம் பெற்றிருந்தது சிறப்பு விக்னேஷ் நாயகனாக நடித்திருந்த இப்படம் சென்னையில் பெரிதாக வெற்றிபெறவில்லை . நெல்லை வழக்கு மொழி மதுரையைபோல கமர்ஷியலாக எடுபடவில்ஸை.. .

இதே காலத்தில் விக்னேஷ் நடிப்பில் கிழக்குசீமையிலே , கருத்தம்மா போன்ற படங்களும் பாரதிராஜாவின் இயக்கத்தில் வழக்கமான தேனி உசிலம்பட்டி பின்புலத்தில் வந்த முக்கியமான படங்கள்.. தரத்தில் பதினாறு வயதினிலே அளவுக்கு இல்லாவிட்டாலும் இரண்டும் வழக்காமான இதர தமிழ் கிராம படங்களைவிட கூடுதல் தகுதியுடனே இருந்தன.

கிழக்குச்சீமையிலே தென்பகுதி தமிழர்களின் உறவுப்பற்றினையும் கலாச்சார பந்தத்தினையும் மையமாக கொண்டிருந்தது சிறப்பு . சிறந்த வாழ்வியல் பதிவு . காட்சியை விட வசனங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்த காரணத்தால் பதினாறு வயதினிலேவின் எதார்த்தம் பின்னுக்கு போய் பாத்திரங்கள் முன்னிலை பெற்றன. ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் நன்றாக புதுமையாக இருந்தாலும் நிலப்பகுதிக்கு அந்நியத்தன்மை இருந்ததையும் மறுப்பதிற்கில்லை.

கருத்தம்மா அன்றைய முக்கிய பிரச்சனையாக இருந்தப் பெண் சிசுக்கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தேசிய விருதும் பெற்றது.

கட்ட பஞ்சாயத்து படங்கள்

1992ல் வெளியான . சின்ன கவுண்டர் ,தேவர் மகன் மற்றும் 1993-ல் வெளியான நாட்டாமை மூன்றுமே மிகப்பெரிய வெற்றிபெற்ற கிராமத்துப்படங்கள்..

இந்த மூன்று படங்கள் தான் முதன் முதலாக தமிழ் சினிமாவில் சாதியை நேரடியாக அறிவித்தபடி வந்த படங்கள்.

மூன்றுமே பண்ணையார் டைப் படங்கள் என்றாலும் இவற்றின் முக்கிய அம்சம் என்னவென்றால் காலம் காலமாய் வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட பண்ணையார்கள் அல்லது நாட்டாமைகள் இந்தப் படங்களில் தான் முதன் முதலாக நாயக அந்தஸ்தை பெறுகிறார்கள்.. .பண்ணையாரே நாயகன் என்றால் வில்லன் யார் .. பங்காளிகள்தான்

தலைப்பிலேயே சாதியைச் சொல்லி தவறான பாதைக்கு வழிவகுத்த படங்கள் சின்னகவுண்டர் மற்றும் தேவர் மகன்.

சின்னக்கவுண்டர் தான் முதன் முதலாக சாதிப்பெயரை முதுகில் சுமந்து வெளியான முதல் படம் . என்னதான் படம் ஆர்.செல்வராஜின் சிறந்த திரைக்கதையமைப்புக்காக அனைவராலும் பாராட்டப்பெற்றாலும் பல மோசமான முன்னுதாராங்களுக்கு இப்படம் வழி வகுத்தது. அடுத்து அதே ஆண்டு வெளியான தேவர் மகன் .

நாயகனுக்கு பிறகு வெளியான உருவாக்கத்தில் த்ரமான ஓரு தமிழ் படம் என்று தேவர் மகனை சொல்லலாம். ஆனால் இந்தப் படமும் குறிப்பிட்ட ஒரு சாதியை போற்றி பாடியதும் இளையராஜாவின் குரலால் அந்த பாடல் ஒலிக்கப் பெற்றதும் ஒரு நகை முரண்.

படம் வெளியான போது சாதிபெயர்கள் குறித்து விமர்சனங்கள் எழும்பாவிட்டாலும் சமீப காலமாக இணையம் மூலம் பரவி வரும் புதிய விமர்சன பார்வைகளில் இவ்விரு படங்களின் மீதும் குறிப்பாக தேவர் மகன் மீது கடுமையான குற்றசாட்டுகள் விழுகின்றன.

.நாட்டாமை இன்னொரு கவுண்டர் புக ழ்பாடும் பட்மாக அமைந்தது

இந்த மூன்றுப் படங்களது வெற்றிக்குப் பின் பல தமிழ் சினிமாக்கள் சாதி பெயரைத் தாங்கி வெளியான போதும் அவற்றின் படு தோல்வி காரணமாக தொடர்ந்து சாதியின் பிடியில் சிக்காமல் தமிழ் சினிமா காதல் கோட்டை வெற்றி மூலமாக காதலில் விழுந்து தப்பித்துக்கொண்டது

தமிழ் சினிமாவில் நாயகன் உயர் சாதி அல்லது இடை நிலை சாதியனாக இருந்தானேயொழிய ஓரு தாழ்த்தப்பட்ட. சமூகத்தைச் சார்ந்தவனாக இது வரை இருந்ததில்லை . பாரதி கண்ணம்மா. வாட்டாக்குடி, இரணியன் இரண்டும் அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திருப்பம் என்று கூட கூறலாம்.

சேரன். தங்கர்பச்சான்

பாரதிராஜாவுக்குப் பிறகு கிராமத்து வாழ்வியலை சினிமாவுக்கு கால மாற்ற பதிவுகளுடன் கொண்டு வந்த இயக்குனர்களில் சேரன், தங்கர்பச்சான் இருவருமே குறிப்பிடத்தகுந்த படைப்பை கொடுத்தவர்கள். அவ்வகையில் தமிழின் மிகச்சிறந்த படங்களுள் ஓன்றாக சேரனின் இயக்கத்தில் பாரதி கண்ணம்மா வெளியானது. காதல் படமாக இருந்த போதும் ஆண்டைகளை மையப்படுத்தியே வந்த கிராமத்து படங்களில் தாழ்த்தபட்ட சமுகத்தைச் சேர்ந்தவனை நாயகனாக்கிய முதல் சினிமா என கருதலாம். படம் வெளியானபோது சேரனை அடுத்த பாரதிராஜா என ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து சமூகமும் கொண்டாடியது . அதன் அழுத்தமான க்ளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட க்ளைமாக்ஸ் இருக்க வேண்டும் என்ற அவசியத்தையும் நெருக்கடியையும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு உருவாக்கியது. அவரது அடுத்தடுத்த படங்களான பொற்காலம், தேசியகீதம், வெற்றிக்கொடிகட்டு போன்ற சமூக அரசியல் படங்கள் தான் சொல்லவந்த கருத்தை அழுத்தமாக பதியவைத்தன. . ஆனால் அவை முழுமையான கிராமத்து வாழ்வியல்படமாக அமையவில்லை அதே சமயம் பிற்பாடு வந்த சேரனின் தவமாய் தவமிருந்து மிகச்சிறந்த வாழ்வியல் பதிவு. தனிப்பட்ட முறையில் சேரன் படங்களில் எனக்கு மிகப்பிடித்த படமும் கூட . அதுவும் பாதிக்கு மேல் நகரகாட்சிகளாக அமைந்திருந்தது. பாண்டவர் பூமி குறிப்பிடத்தக்க கிராமத்து படம். நகரமயமாதலின் சிதைவை விவசாயத்தின் பிரச்சனைகளை பேசியபடம் என்ற அளவில் மிக முக்கியமான படம். அதே போல 2004-ல் வெளியான அவருடைய ஆட்டோகிராப் படத்தின் சிறிதளவே இடம்பெறும் கிராமத்து காட்சிகள் உலகத்தரமான படைப்பாக்கமாக மிளிர்ந்தது. இப்பகுதியில் மிளிர்ந்த ஓளிப்பதிவு ,ஒலிப்பதிவு, படத்தொகுப்பு காட்சி அமைப்பின் ஓத்திசைவு தமிழ் சினிமாவின் உன்னதமான தருணம் என்று கூட சொலலலாம். சுருக்கமாக சொன்னால் உலகத்தரம் எனபதற்கு அப்படத்தின் முதல் பகுதி கிராமத்து காதல் சரியான உதாரணம். வறண்ட செம்மண் நிலப்பரப்பானது பள்ளிக்கு போகும் மாணவர்களின் முவமாக தமிழகம் அதுவரை அறியாத ஓரு பகுதி மக்களின் துயரத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டதை பலரும் குறிப்பறிந்திருக்க வாய்ப்பில்லை.. அம்மண் வெளிச்சத்தில் வெள்ளை சட்டைகளை நேரடியாக யாரும் பதிவு செய்ய பயப்படுவார்கள். காரணம் சூரிய வெளிச்சம் சட்டையில் பிரதிபலிப்பதால் பதிவு செய்ய முடியாது .மேலும் சைக்கிளில் வருவதால் காமிரா பின்னகர்தல் வேறு. கிளார் கட் பண்ணுவதும் சிரமம் . அப்படியான சிரமமான காட்சியை கவித்துவமாக படம்பிடித்தது.காட்சியின் தரத்துக்கு கூடுதல் ப்ளஸ். படத்தின் இதர காட்சிகளில் இதே தரம் கூடி வந்திருந்தால் தமிழின் ஆகச்சிறந்த படமாக அது மாறியிருக்கும் மேலும் படத்தின் சிறப்பான பால்ய காதலுக்கு முன்னோடியாக இன்னொருபடம் இரண்டு வருடத்திற்கு முன்பே வந்திருந்தது. அப்படம் அழகி பதினாறு வயதினிலே ,பாரதி கண்ணம்மா வரிசையில் தனித்தன்மையுடன் வெளியாகி அனைவரது உள்ளங்களிலும் அழியாத கல்வெட்டாய் நின்ற படம் அழகி.. பால்ய கால காதல் தொடங்கி பல்வேறு வயதுகளில் பகிரப்படாத காதலின் அவஸ்தைகளை வட மாவட்ட கிராமத்தின் எளிய மனிதர்களைக் கொண்டு சித்தரிக்கபட்ட காவியம். படத்தில் நகரகாட்சிகள் அதிகம் இடம் பெற்றபோதும் கிராமங்களின் ஆன்மாவே அதிலும் இடம்பெற்றதால் முழுமையான கிராமத்து வாழ்வியலாகவே அப்படம் அமைந்திருந்தது. குறிப்பாக சிறு வயது காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதிய தாக்கத்தை உண்டாக்கியது. தொடர்ந்து சிறு வயது குறும்புகளை வைத்து வணிகரசிகர்களை திருப்திபடுத்த முடியும் என இயக்குனர்களுக்கு நம்பிக்கையூட்டிய படம் . ஓளிப்பதிவு படத்தொகுப்பு இசை என அனைத்து தொழில்நுட்பங்களின் ஆகச்சிறந்த கலவையுடன் படம் ஆக்கம் கொண்டிருந்த காரணத்தால் .தமிழ் கிளாசிக்குகளின் வரிசையில் இடம் பிடித்தது. நீண்ட காலம் கழித்து பிளாட்பாரத்தில் தன் பழைய காதலியை சந்திக்க நேரும் நாயகன் சந்திக்கும் தருணம் சிறந்த இயக்கத்திற்கு சான்று. தொடர்ந்து வரும் உன் குத்தமா பாடலின் காமிரா காட்சிக் கட்டமைவு தமிழின் ஓளிப்பதிவு வரலாற்றின் சிறந்த தருணங்களில் ஓன்று. தமிழின் சிறந்த பின்னணி இசை கோர்ப்பு படங்களில் ஓன்றாகவும் அமைந்தது. தங்கர்பச்சான் தொடர்ந்து கிராமத்து மாந்தர்களை சுற்றிய கதைப்படங்களாக எடுத்தபோதும் வாழ்வியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த படங்கள் என சொல்லமறந்த கதை , ஓன்பது ருபாய் நோட்டு ஆகிய படங்களை குறிப்பிடலாம். குறிப்பாக ஓன்பது ரூபாய் நோட்டு மண்ணோடும் மக்களோடுமாய் வாழ்ந்த மாதவ படையாச்சி என்ற மனிதரது வாழ்வையும் சமுக பொருளாதார மாற்றங்களின் காரணமாக சிதிலமாகிப்போன அவருடைய நிலவுடமை பெருமிதங்களையும் பரிவுணர்ச்சியுடன் பார்ப்பதாக அமைந்தது. மகன் வேற்று சாதிப்பெண்ணை திருமணம் செய்ததுதான் தனக்கு நேர்ந்த அவமானமாக அவர் கருதும் போது வழக்கமான நாயக வழிபாட்டு படங்களிலிருந்து எதார்த்த சினிமாவாக உச்சத்தை தொடுகிறது படம். . அதே சமயம் படத்தில் மத நல்லிணக்கம் போற்றும் மனிதன் ஏன் சாதிய நல்லிணக்கத்தை மட்டும் கைக்கொள்ள முடியவில்வை எது அவனை தடுக்கிறது இறுதியில் அவன் எப்படியாக தன் தவறை உணர்கிறான் என்பவை சொல்லப்படாத காரணத்தால் பெரும் வலியை உண்டாக்க வேண்டிய அவரது இறப்பு சாதியத்தை போற்றும் ஓருவரது மரணமாக மட்டுமே பார்வையாளர்க்கு சென்றடைந்தது.

பருத்தி வீரன்

அழகிக்கு பிறகான கிராமத்துப் படம் என்றால் பருத்தி வீரன் தான்

மதுரையை ஓட்டிய தென்பகுதி கிராமத்தின் நிலவியல் கூறுகளை மைய சித்தரிப்பாக கொண்ட தமிழ் வாழ்வியல் படம்.

பருத்தி வீரனுக்கு முன்னோடி படமாக கமலஹாசனின் விருமாண்டி படத்தைக் குறிப்பிடலாம். தொடை தெரிய மடித்துகட்டிய வேட்டியும் முறுக்கு மீசையும் எகத்தாளமான நடையும் கேலியும் கிணடலும் எக்கசக்கமான துணிச்சலும் இரண்டிலும் பொருந்திவரும் குணாம்சங்கள்.

கமல் எனும் சிறந்த இயக்குனருக்கு மிகப்பெரிய தடையே கமல் எனும் நடிகர்தான். விருமாண்டிதான் தமிழில் மிகப்பெரிய இன வரைவியல் படங்களின் துவக்கம். காட்சிபூர்வமாக குறிப்பாக ஓப்பனை, உடை ,அலங்காரம் பின்புல கட்டமைவு ஆகியவற்றில் அப்படத்தில் காண்பித்த தீவிரம் பல இயக்குனர்களை அவரகளது படைப்பாளுமையை கிளறிவிட்டது.

விருமாண்டியில் தொன்ம அடையாளங்களின் பதிவு மற்றும் இனவரைவியல் கூறுகள் அதிகமிருந்தாலும் அதன் கதைப்போக்கு கிராமிய படமாக சொல்லமுடியாத படிக்கு வணிகசித்தரிப்புடனான இறுதிக்காட்சியுடன் அமைந்தது . துரதிர்ஷ்டமாகிப்போனது..

பருத்தி வீரன் மிகப்பெரிய உடைப்பு . டிரெண்ட் செட் செய்த படம் என்று கூட இதை சொல்லமுடியும். மதுரையை சுற்றிய வறண்ட நிலப்பரப்பின் அழகை வாழ்வியலை இது வரை யாருமே காணாத காட்சி மொழியாக பார்வையாளனை அதிர்ச்சியில் உறைய வைத்த படம்.

கார்த்தி உண்மையிலேயே எந்த புதுமுகமும் வெளிப்படுத்தாத நடிப்பை வெளிப்படுத்தி பாத்திரத்தை உயிர்ப்புள்ளதாக மாற்றினார், வசன உச்சரிப்பில் புது பாதையை உருவாக்கியது இப்படம். நாயக பாத்திரம் போலவே தமிழின் சிறந்த பெண் பாத்திரங்களுள் ஓன்றாக ப்ரியாமணியின் பாத்திரம் வடிவமைக்கபட்டிருந்தது.

இறுதிக்காட்சியின் வன்முறையின் தாக்கம் தவிர்க்கப்பட்டிருந்தால் தமிழர் பெருமையை உலகப்படவிழாக்களில் நிச்சயம்புகழ்க்கொடி நாட்டியிருக்கும்.

மாயாண்டி குடும்பத்தார்

தமிழ் சினிமாவில் மாயாணடி குடும்பத்தாருக்கென தனித்துவமான ஒரு இடமுண்டு சில காரணக்களுக்குகாக படம் வெளியான போது பார்க்க முடியாமல் அலட்சியாமாக இருந்தமைக்காக பிற்பாடு தொலைக்காட்சியில் இப் படத்தை பார்த்து வருந்திருக்கிறேன்.

தமிழ் வாழ்க்கையில் பல முறைமைகள் நிலத்துக்கேற்றார் போல் மாறுப்பட்டாலும் சில அழுத்தமான சடங்குகள் தமிழ் மக்களது வாழ்வோடு கலந்தவை.தாய் மாமன் சீர் என்பது தந்தைக்கு அடுத்தபடியாக ஒரு பெண் தாய்மாமனிடம்தான் உரிமைகொண்டாடுவாள். தனக்கு தேவையானவதை கேட்டு வனக்கும் உரிமை உடன் பிறந்த சகோதரனைவிடவும் தாய்மாமனிடம்தான் அவளுக்கு அதிக உரிமை இருக்கிறது. இது போன்ற நுட்பமான இழைகள் கொண்ட தமிழ் வாழ்வை அழகாக பதிவு செய்த படம் மாயாண்டி குடும்பத்தார். இது போன்ற படங்கள் இன்னும் ஒளிப்பதிவிலும் காட்சியமைப்பிலும் கூடுதலான கவனத்தை பெற்றிருந்தால் உலக அங்கீகாரத்தை அவை அடைந்திருக்கும்

வசந்த பாலன் , சுசீந்தரன், பாண்டிராஜ், சற்குணம் , சீனு ராமசாமி

வசந்த பாலனின் வெயில் படம் மதுரையில் வாழும் தமிழ் குடும்பச்சூழலின் அவலத்தை விவரித்தது. படத்தில் இடம்பெற்ற வெயிலோடு விளையாடி கிராம வாழ்க்கையில் சிறு வயது பருவத்தின் மிகச்சிறந்த காட்சி பதிவுகளைக்கொண்ட ஆவணமாக விளங்கியது. தொடர்ந்து பிற்பாடு அவர் எடுத்த அங்காடித்தெரு நகர வாழ்க்கை சித்தரிப்பாக இருந்த போதும் அதில் வரும் மாந்தர்களின் வழியே கிராமத்து மைந்தர்களின் துயரமே பதிவு செய்யப்பட்டிருந்தது.

சுசீந்தரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு.. மற்றும் சற்குணம் இயக்கத்தில் களவாணி ஆகியவையும் முழுமையான கிராமத்து வாழ்வியலை பேசிய படங்கள். வெண்ணிலா கபடிக்குழு பாரதி கண்ணம்மாவுக்கு பிறகு சாதிய கசப்பையும் தலித்துகளின் பிரச்னையையும் பேசிய துணிச்சலான படம் . ஆனால் இப்படமும் பாரதி கண்ணம்மா போல இணையமுடியாத ஜோடிகளின் கையறு நிலையையே இறுதிக்காட்சியாக மாறிப்போனது ஏற்க முடியாததாகத் தான் இருந்தது. என்றாலும் இந்த அளவுக்கு துணிச்சலாக கதை நகர்த்தியதற்கே ஓரு ஹாட்ஸ் ஆப்.

சற்குணம் இயக்கிய களவாணி கறுப்பு வெள்ளை காலத்துக்கு பிறகு மீண்டும் தஞ்சை நிலப்பரப்பு வாழ்வைச்சொன்ன படம். தஞ்சையின் அசலான வார்த்தை உச்சரிப்பு படத்தின் இயல்புக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது..

வாழ்வியல் படம் என்ற வகையில் அந்த குறிப்பிட்ட படம் அந்த குறிப்பிட்ட நிலப்பரப்பை மட்டுமே பிரதிபலிக்க கூடியதாக இருக்கவேண்டும் . வேறு எங்கு வேண்டுமானாலும் அப்படத்தை எடுக்கலாம் என்றாலே அதன் வாழ்வியல் தன்மை அடிபட்டு போகிறது.

பாரதிராஜா, சேரன் ,தங்கர்பச்சான் வரிசையில் தமிழ் கிராமத்து மக்களின் வாழ்க்கையை படைப்பாக மாற்றும் இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தவர் சீனு ராமசாமி

முழுமையான கிராமத்து படமாக உருவான தென்மேற்கு பருவக்காற்று தென் பகுதிமக்களின் உணர்ச்சிகரமான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.. தமிழின் மிகச்சிறந்தப் பெண் பாத்திரங்களில் இதில் நாயகனின் தாயாக வரும் சரண்யாவின் பாத்திரமும் ஓன்று.

200க்கு பின்பு தமிழ் சினிமா சூழ்லை நன்கு கவனித்தால் கிராமம் நகரம் என இரண்டாக பிரிந்து செயல்படுவதை அவதானிக்க முடியும்

இயக்குனர்கள் பாலா, சேரன், தங்கர்பச்சான், அமீர், சசிகுமார் , சமுத்திரக்கனி சுசீந்தரன் பாண்டிராஜ், சற்குணம் சீனு ராமசாமி உள்ளிட்ட இயக்குனர்கள் கிராம வாழ்க்கையை அடியொற்றி தொடர்ந்து தமிழில் குறிப்பிடத்தக்க வாழ்வியல் படங்கள் எடுத்து வரும் அதே நேரத்தில்

மணிரத்னம், ஷங்கர் எஸ் .ஜே சூர்யா ஏ ஆர் முருகதாஸ் ,கவுதம் வாசுதேவ் மேனன், செல்வ ராகவன் ,விஷ்ணு வர்த்தன், ஏ .எல். விஜய் ஆகியோர் நகர பாணி படங்களை எடுத்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்.

முன்னது அதீத கிராம அடையாளம் என்றால் பின்னது அதீத நகர அடையாளம்

உற்று நோக்கினால் உலகமயமாக்களின் விளைவாக அதிகப்படியான வசதிகளுடன் கூடிய பகட்டான நவீன வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இவ்வகை நகரப் படங்களும் அதே உலக மயமாக்களால் சுரண்டப்பட்டு சீர்குலைந்த கிராம வாழ்க்கை தன் அடையாள மீட்புப் படமாக கிராமப் படங்களையும் விளங்கிக் கொள்ள முடியும் .

இந்த இருவகைப்படங்களூம் தமிழில் தொடர்ச்சியாக வெளிவந்து இரண்டும் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெற்றிபெற்றுக்கொண்டிருந்தன என்பதும் கவனிக்கத்தக்கது.

தமிழ்த்திரையில் நடக்கும் இந்த கலாச்சார யுத்தம் குறித்து அவர்களே கூட சிந்தித்திருப்பார்களோ தெரியாது

இந்தத் திரைப்படங்களின் கலாச்சார யுத்தம் குறித்து நாம் பருந்து பார்வையில் பார்த்தால் பன்னாட்டு நிறுவங்களின் ஆதிக்கம் படிப்படியாக நமக்குள் ஊடுருவியிருப்பதையும் அதை தமிழ் மொழியானது தனது மண்ணின் மைந்தர்கள் மூலமாக தொடர்ந்து போரிட்டு தன் அடையாளத்தை மீட்க முயல்வதுமாக புரிந்து கொள்ள முடியும்

தமிழ் மொழி எப்படி பலநூற்றாண்டுகளாக தன்னை தற்காத்துக்கொண்டு வருகிறதோ அது போலத்தான் இந்த மண் சார்ந்த கிராமிய அடையாள படங்களையும் பண்பாட்டு கேடயங்களாக கருத முடியும்

இந்த இரண்டு போக்கிலும் அல்லாமல் இடைப்பட்ட நிலையில் அல்லது இரண்டும் கலந்த தன்மையில் மிஷ்கின் , லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களும் வந்துகொண்டிருந்தன.

நகர வாழ்க்கைப் படங்களின் தொழில் நுட்ப பயன்பாடு பிரமிக்கதக்கதாக இருந்த அதேசமயம் அது மக்களைப் பன்னாட்டு வியாபாரங்களுக்ககான நுகர்வோராக மாற்றுவதில் முனைப்பாக இருந்தது. எளிமையான வாழ்க்கையில் தவறுகளை பெரும் குற்றங்களாக சித்தரித்து அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டது .

அதே போல அடையாள மீட்பு கிராம சினிமாக்களில் சாதிய அடையாளம், வன்முறை போன்ற பிற்போக்குதனங்கள் முக்கியத்துவம் பெற்றன. நாயகன் பெரும்பாலும் லும்பனாக அவன் எத்தனை ஒழுக்க மீறல்களுடன் இருந்தாலும் நாயகி அவனை காதலிப்பவளாக பெண்ணடிமை மனோபாவத்துடன் இருந்ததும் விமர்சனத்துக்குரிய விடயங்கள் குறிப்பாக 2002 முதல் 2010 வரையில் உச்சத்திலிருந்த இந்த திரையுலக கலாச்சார அடையாள யுத்தத்தின் இயக்குனர்களின் பேட்டிகளில் வெளிப்படையாக வெடிக்கவும் துவங்கியது .குறிப்பாக கவுதம் மேனன் தனக்கு சசிக்குமார் படங்கள் பிடிக்காது என்றும் சுஹாசினி நாயகனுக்கு தகுதி என்பதே இல்லாமல் அழுக்கு பரட்டைத்தலையுடன் இருப்பவர்கள் எல்லாம் நாயகனா சகிக்க முடியவில்லை என்றும் பேட்டிகளில் சொல்லி சர்ச்சைகள் உண்டானதை மறந்திருக்க முடியாது

ஆனால் இந்த போட்டிகள் எல்லாம் 2010 வரை தான்

அதன்பிறகு வந்த கிராமபடங்களாகட்டும் நகரபடங்களாகட்டும் இரண்டுமே சுமார் ரகத்தில் இருந்து வருவது கண்கூடு

நன்றி : 2017 தாமரை இதழ்