நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா….

பத்மநாபாவின் தலமையிலான ஆளுமை மிக்க சீரிய நடைபோட்ட ஈழவிடுதலை அமைப்பின் முக்கிய போராளி. ஈழவிடுதலைப் போராட்டத்தை தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் எளிமையாக எடுத்துச் சென்ற பிரச்சர ஆளுமை என்று பலதுமாக செயற்பட்வர் இன்று எம்மிடையே இல்லை.

எம்மைவிட்டு சிந்தனையை நிறுத்திக் கொள்வதற்கு அவருக்கு ஒன்றும் பெரிதாக வயதாகிவிடவில்லை. அவர் ஆற்ற வேண்டிய கடமைகளும் முடிந்துவிடவும் இல்லை… அதனால் இதுவரை அவர் ஓய்வெடுக்கவும் இல்லை. மருத்துவ விஞ்ஞானம் கைவிரித்து அவருக்கு விடை கொடுக்கச் சொல்லி விட்டது…. செய்துவிட்டது.

நூற்றாண்டுகளில் மனத் குலத்தில் பிறப்பெடுக்கும் உன்னத மனிதர்கள்…. போராளிகள்… சிந்தனையாளர்கள்… செயற்பாட்டாளர்கள்… என்று சிலரே உருவாகுகின்றனர். அது அவர்கள் விளம்பு நிலை மக்களுக்காக மட்டும் அல்ல சகல மக்களின் சுபீட்சமான வாழ்விற்காக சிந்தித்துக் கொண்டும்… செயற்பட்டும் கொண்டும் உரையாடிக் கொண்டும் நட்பும்…. உறவும்… தோழமையும்… பாராட்டியபடி எளிமையாக வாழ்ந்து கொண்டு ஒரு மனிதர் தோழர் சகா தோழர் அமீன் என்ற சிவகுமார்.

லேக் கவுசின் பத்திரிக்கையான தினகரன் பத்திரிகைக் குழுமம் தினமுரசு போன்ற பத்திரிகையில் தனது எழுத்தாற்றல் பங்களிப்புகளை வெளிப்படுத்திய ஆய்வாளர்.

கம்பன் கழகத்து மேடைகளில் கவிதையும் கதையாடலும் மேடைப் பேச்சும் என்று எமது புராண இதிகாசஙகளை தனது நுனி நாக்கில் வைத்திருந்து தமிழ் பண்பாட்டின் அடையாளமாக விளங்கியவர்.

கொழும்பில் நடைபெற்ற பல்வேறு கலை பண்பாட்டு மேடைகளில் இவரின் பங்களிப்பு மிக இளவயதில் பலரையும் பிரமிக்க வைத்தன.

அவர் தன்னை அதிகம் பிரபல்யப்படுத்திக் கொண்டவர் அல்ல. ஆனால் அவரின் இலக்கிய ஆற்றல்… எழுத்து ஆற்றல்…. போராடும் ஆற்றல்… ஐக்கியத்தை ஏற்படுத்த பலருடனும் உறவுகளை மேம்படுத்த உழைத்த உழைப்பு என்று பலதுமாக அவர் தவிர்க்க முடியாத சக்தியாக ஆளுமையாக பலராலும் அறியப்படவராக மாறியவர்.

என்றும் மறையாத புன்னகை தன்னம்பிக்கையுடன் எதனையும் எப்போதும் அணுகும் பாங்கு என்று பலதுமாக எதிர்காலம் எங்களுக்கானது… எங்கள் மக்களுக்கானது… மனித குலத்திற்கானது… என்று நம்பிச் செயற்பட்டு உறங்காமல் ஓடிக் கொண்டிருந்து ஒரு மனிதன் உறங்கிவிட்டான்…. சிந்தனையை நிறுத்திக் கொண்டான்….

நெஞ்சம் விம்முகின்றது இந்த விம்மல் உலகின் பல தேசங்களிலும் பல்வேறு அரசியல் இலக்கிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஒலிப்பது அவரின் இழப்பு எவ்வளவு பேரிழப்பானது என்பதை சொல்லி நிற்கின்றது.

ம்….. இதுவும் கடந்து போகும் என்று சாதாரணமாக… இயல்பாக… கடந்து போக முடியவில்லை தோழா. ஒன்றாக பயணித்து வறுமையிலும் செழுமையாக ஈழவிடுதலைப் போராட்டித்திற்காக பயணித்து அந்த நாட்கள் நினைவில் வந்து போகின்றன.

பிள்ளைகளையும் வாழ்க்கை இணையரையும் எம்மிடையே ஒப்படைத்துவிட்டு சென்றதாகவே நாம் உணரும் நீ எங்களின் ஒருவன்

இறுதியாக தாயகத்தில் இயக்கச்சியில் உங்கள் விவசாய முயற்சி இடத்திற்கு அருகாமையில் கண்ட போது ‘….வாங்க தோழா இணைந்தே விவசாயம் செய்வோம்…. எமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வோம் இயற்கையாக முதலில் இங்கு வாருங்கள் பிறகு எல்லாவற்றையும் செய்வோம்…” என்று என் தாயகத் திரும்புதலை ஊக்கிவித்த நம்பிக்கை கொடுத்த அந்த ஜீவன் இனி இல்லை. உன் இழப்பால் ஒரு வெறுமை எம் சூழ்ந்து காணப்படுவதை தவிர்க்க முடியவில்லை.