நேற்று பிரித்தானியா; இன்று அவுஸ்திரேலியா

(ப. தெய்வீகன்)

பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையை தொடர்ந்து உலகெங்கும் பாரிய பொருளாதார அதிர்வுகள் பரவும் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. இதன் பின்னணியில், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இரட்டை தேர்தலானது மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது. பிரித்தானிய விடயங்களில் இருந்த முற்றிலும் வேறுபட்ட காரணங்களினால் குழப்பநிலையில் காணப்பட்ட அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்ற அதிகார சமநிலையை நேர் சீராக்குவதற்காக இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடைபெற்று எட்டு நாட்களாக ஒரு முடிவை காணமுடியாமல் தேர்தல் திணைக்களம் திணறிக்கொண்டிருந்தது.

கடந்த சனிக்கிழமை, இனிமேலும் பார்த்துக் கொண்டிராமல் நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து, வெளிவந்த முடிவுகளின்படி கூட்டிக்கழித்துப் பார்த்துவிட்டு, ஒரு பதிலை கூறவேண்டும் என்ற கடப்பாட்டுடன் – இன்னமும் ஆறு தொகுதிகளின் முடிவு எண்ணாத நிலையிலேயே தமது தோல்வியை ஒப்புக்கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டன். வாக்கு எண்ணும் பணி ஆரம்பித்த தேர்தல் நாளன்று இரவே இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் அருகருகே ஓடி வந்துகொண்டிருந்ததால், இது எங்கு கொண்டு சென்று விடுமோ என்ற அச்சத்தில், எண்ணும் பணியை மெதுவாக்கிய தேர்தல் திணைக்களம் சில தொகுதி வாக்குகளை மீளவும் எண்ணியது; மீண்டும் மீண்டும் எண்ணியது. இது நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில்தான் எதிர்க்கட்சித் தலைவர் தனது அறிவிப்பை விடுத்திருந்தார்.

ஐம்பது வருடங்களுக்கு பிறகு அவுஸ்திரேலியா இப்படியொரு பெருங்குழப்பத்துக்குள் அகப்பட்டது குறித்து அரசியல் தரப்பினர் மாத்திரமல்ல வெளிநாடுகளும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றன.

தேர்தல் முடிவுகள் மாத்திரமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அவர்களின் வரலாறு சொல்லும் செய்திகள் ஆகியவையும்கூட அவுஸ்திரேலியாவின் அரசியல் எதிர்காலத்துக்கு சவால்விடுபவையாக அமைந்துள்ளன.

இதில் மிகமுக்கியமாக, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வன் நேஷன் கட்சியின் தலைவி போலின் ஹான்சனின் தெரிவு அவுஸ்திரேலிய அரசியல் தரப்புக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முறையீகளில் ஈடுபட்டார் என்று தொண்ணூறுகளின்போது இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிறை சென்றவர். அதன் பின்னர் அரசியலுக்கு முழுக்கு போட்டவர். தற்போது இருபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘கபாலி’ போல வந்து நாடளுமன்ற ஆசனத்தை பிடித்திருக்கிறார்.

இவரது கட்சியான வன் நேஷன், அதி தீவிர வலதுசாரி கொள்கையை கொண்டது. எங்களது மொழியில் ‘நிறவெறி பிடித்த துவேசக்கட்சி’ என்றும் கூறலாம். இதிலும் பார்க்க சுருக்கமாக கூறுவதனால், டொனால்ட் ட்ரம்பின் ‘தோஸ்து’ கட்சி என்றும் கூறலாம். ‘நாம் வெள்ளையர் கட்சி’ அல்லது இங்கேயும் ஒரு பொதுபல சேன எப்படியென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

இவர் 96 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று நாடாளுமன்றம் சென்றபோதே அங்கு ஆற்றிய தனது கன்னி உரையில், ‘அவுஸ்திரேலியா ஆசிய நாட்டவர்களால் நிரம்பி வழிகிறது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்’ என்று பேசியிருந்தார். இந்த பேச்சினால், ஆசிய நாடுகள் முழுவதிலுமிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயங்கர சிக்கல்கள் உருவாயின. அப்போதைய பிரதமர் ஜோன் ஹவார்டை அழைத்த ஆசிய நாடுகளின் தலைவர்கள் தங்களது கடுமையான கண்டனத்தை முன்வைத்தார்கள்.

அதற்குப்பிறகு, இந்த அம்மணி தனது கட்சியை போலி ஆவணங்கள் கொடுத்து பதிவு செய்து பல்லாயிரக்கணக்கான டொலர்களை தேர்தல் மானியமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைசென்றார்ƒ வெளியே வந்தார். சுமார் எட்டுத் தேர்தல்களில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். தற்போது வெற்றியை சாதகமாக்கியிருக்கிறார்.

இம்முறை தேர்தலில் இவர் கூறியுள்ள விடயங்களை பார்த்தால்-

அ) அவுஸ்திரேலியாவுக்கான முஸ்லிம் மக்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும்.

ஆ) பள்ளிவாசல்களின் உள்ளே கமெராக்களை பொருத்தி, அங்கு நடைபெறுவது அரசியல் பிரசாரமா அல்லது மதப்பிரசாரமா என்று அறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இவரது வெற்றி அவுஸ்திரேலிய அரசியல் மட்டத்தில் பரந்தளவிலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதைவிட வேறுசில குறிப்பிட்டத்தக்க வெற்றிகளை எடுத்துப் பார்த்தால், இம்முறை அவுஸ்திரேலியாவின் முதலாவது முஸ்லிம் பெண் உறுப்பினர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதுபோல, அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடியை சேர்ந்த முதலாவது பெண் உறுப்பினர் நாடாளுமன்றுக்கு தெரிவான வரலாறும் இடம்பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலின்போது தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களைவிட இம்முறை அதிக பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இன்னொரு முக்கிய விடயமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லிபரல் கட்சியின் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டொனி அபொட் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறார். டொனி அபொட்டை பதவி நீக்கியதற்கு லிபரல் கட்சியினாலேயே அப்போது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டிருந்தன. இவரை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டால் லிபரலுக்கு எதிர்காலமே இல்லை என்று தெரிவிக்கபட்டிருந்தது. ஆனால், இம்முறை தேர்தலில் போட்டியிட்ட டொனி அபொட்டை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்துள்ளமை லிபரல் கட்சிக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது.

ஆகமொத்தம், இம்முறை ஆட்சியமைக்கத் தேவையான அரும்பொட்டு ஆசனங்களை லிபரல் கட்சி பெற்றிருந்தாலும் தொழிலாளர் கட்சியே மக்கள் மனங்களில் பெருவெற்றியீட்டியுள்ளது என்று கூறலாம். தான் முன்பிருந்த நிலையைவிட அதிக வலுவுடன் ஆட்சிபுரிவதற்கு மக்களிடம் ஆணையை கேட்ட லிபரல் கட்சிக்கு அந்த ஆணையை வழங்க மக்கள் மறுத்திருக்கிறார்கள்.

கடந்த தேர்தல் காலம் முதல் மிகவும் நலிவான பாதையில் பயணம் செய்துகொண்டிருந்த தொழிலாளர் கட்சி, சுமார் ஒன்பது மாதகாலத்தில் முன்வைத்த 213 விதமான மக்கள் நல திட்டங்கள் மற்றும் நல்லாட்சி ஒப்புதல் வாக்குமூலங்களை மக்கள் ஆதரித்திருக்கிறார்கள். அந்த ஆதரவு ஆட்சியமைப்பதற்குப் போதுமான வலுவை கொடுக்கவில்லையே தவிர, தொழிலாளர் கட்சிக்கு பில் ஷோர்ட்டன் தலைமையில் புத்தூக்கம் கிடைத்திருக்கிறது.

மறுபுறத்தில் கிறீன் கட்சிக்கும் இம்முறை கிடைத்திருக்கும் ஆதரவு மிகப்பெரியது என்று கூறலாம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விக்டோரிய மாநில பிரதிநிதி அடம் பான்ட் இம்முறையும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அவரை விட, இன்னொரு கிறீன் கட்சி உறுப்பினர் மயிரிழையில் தோல்வியை சந்தித்தார்.

வில்ஸ் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட சமந்த ரட்ணம் தோல்வியடைந்திருந்தாலும்கூட, அவரது தொகுதியில் மிகப்பெருமளவு ஆதரவை பெற்றிருக்கிறார். முன்னாள் பிரதமர் கெவின் ரட் அவர்களின் ஆலோசகராக பணியாற்றியவருக்கு எதிராக வில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு 40.6 சதவீதமான வாக்குகளை பெற்றிருக்கிறார். அந்த தொகுதியில் வெற்றியீட்டிய தொழிலாளர் கட்சி உறுப்பினர் 53 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொழிலாளர் கட்சியில் போட்டியிட்ட இலங்கையை சேர்ந்த ஜகத் பண்டார படுதோல்வியடைந்துள்ளார். இவர் மஹிந்த அரசாங்கத்துக்கு மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர் என்று முன்னர் அறியப்பட்டவர்.

தேர்தல் முடிவுகள் ஒருமாதிரி முடிவினை எட்டிவிட்டபோதும் இனிவரும் மூன்று வருடங்களில் தற்போதைய லிபரல் கட்சி எவ்வாறு ஆட்சி நடத்தப்போகிறது என்பதுதான் பெரும் சிக்கலாக எழுந்துள்ளது.

முன்னர் குறிப்பிட்டதுபோல, முன்பைவிட ஸ்திரமற்ற அரசொன்றைத்தான் இந்தத் தேர்தல் பிரசவித்திருக்கிறது. இந்த குறைமாதக் குழந்தை போன்ற நாடாளுமன்றத்தினால் நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய ஆரோக்கியமான முடிவுகள் எதனையும் மேற்கொள்ளமுடியாது. ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படப்போகும் தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கப் போகின்றன. அவற்றை எதிர்த்து நடைபோடுவதற்கு ஆளும் கட்சிக்கு வலுவான சக்தியும் இருக்கப் போவதில்லை.

ஆகமொத்தம், பிரித்தானியாவுக்கு அடுத்ததாக அவுஸ்திரேலியாவில் அரசியல் வெறுமை ஒன்று உருவாகியிருக்கிறது. இது உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டு உறவுகளிலும் பாரிய தாக்கங்களை செலுத்தப்போவது திண்ணம். அடுத்து வரப்போகும் அமெரிக்கத் தேர்தலிலும் இப்படியான ஒரு நிலை உருவாகினால், நடப்பு உலக ஒழுங்கு பாரிய சிக்கலுக்கு முகம்கொடுக்கும். வரலாறு காணாத இந்த ஈடாட்டத்தின் விளைவுகளை வாக்களித்த மக்களே அனுபவிக்க வேண்டிவரும். அதிலிருந்து மீண்டுவருவதற்கு பாரிய கால இடைவெளி தேவைப்படலாம். அவுஸ்திரேலிய தேர்தல் எழுப்பியிருக்கும் பலத்த அசரீரிகள் இவைதான்.